Recent Comments

    பார்க்கின்சன் நோயைத் தடுக்க அருந்துங்கள் தேநீர்!

    drinkteaநாங்கள் தினசரி குடிக்கும் கோப்பியிலும் தேனீரிலும் உள்ள கபேய்ன்(caffeine) எனப்படும் இரசாயனப் பொருள் பார்க்கின்சன் நோயைத் (Parkinson’s disease) தடுக்கக் கூடியது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வழமையாக கோப்பி, தேநீர் அருந்துவோருக்கு நரம்பு ரீதியான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை முன்பு ஆய்வாளர்கள் கண்டறிந்திருந்தனர். இப்போது கனடிய ஆய்வாளர்கள் கபேய்ன் பார்க்கின்சன் நோயாளிகளில் ஏற்படுத்தும் பாதிப்பைக் கண்டறிவதற்காக அறுபது நோயாளிகளைத் தெரிவு செய்தனர். அவர்களுக்கு ஆறு வாரங்களுக்கு தினசரி பாதிப்பேருக்கு கபேய்ன் வில்லைகளை கொடுத்தும் பாதிப் பேருக்கு கொடுக்காமலும் அதன் விளைவுகளை கண்காணித்தனர். கபேய்ன் வில்லைகளை உட்கொண்டவர்கள் தங்கள் உடலை அசைத்துக் கொள்வதில் பெரிதும் சிரமப்படவில்லை. மற்றவர்களின் உடல் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. மொன்றியல் மக்கில் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வு ஒரு திருப்பமாகக் கருதப்படுகிறது. பார்க்கின்சன் நோயானது உடலின் அங்க அசைவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு பங்களிக்கும் டோப்பமீன் என்ற இரசாயனத்தை சுரக்கும் மூளையில் உள்ள கலங்கள் இறப்பதால் ஏற்படும் நோயாகும். இந்தக் கலங்கள் இறப்பதால் டோப்பமீன் சுரப்புக் குறைய, இந்த நோயாளிகள் உடலை அசைப்பது கஷ்டமான செயற்பாடாக இருக்கும். சிலருக்கு கைகளில் நடுக்கமும் நடக்கும் போது உடல் ஆடும் இயல்பும் அதிகமாகும். கபேய்ன் மருந்துச் சாலைகளில் வில்லைகளாகக் கிடைக்கும். ஆனால் இதில் பணம் சம்பாதிப்பதற்கு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் கபேய்ன் போன்ற இரசாயன இயல்புடைய வேறு மருந்துகளைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. காப்புரிமை பெறக் கூடிய மருந்துகளை தாங்கள் தயாரிப்பதன் மூலம் பெரும் பணம் சம்பாதிப்பதற்கு இந்த நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. இந்த வில்லைகள் பற்றி கவலை ஏதும் இல்லாமல் வழமை போல நாங்கள் குடிக்கும் தேநீரையும் கோப்பியையும் அதிகளவில் குடிப்பதால் பார்க்கின்சன் நோயின் பிடியில் இருந்து தப்பிக்க வாய்ப்புகள் உண்டு. எதற்கும் இந்த பானங்களில் சீனியைக் குறைப்பது நல்லது. பார்க்கின்சன் நோயைத் தவிர்க்கிறேன் பேர்வழி என்று அதிகமாய் தேநீர் குடிக்கப் புறப்பட்டு சலரோகப் பாதிப்புக்குள் உள்ளாக வேண்டாமே!

    Postad



    You must be logged in to post a comment Login