Recent Comments

    பயன் பெறுங்கள்! நூலகங்களில் இலவச வகுப்புகள்

    ரொறன்ரோ நூலக வலைப் பின்னலில் எப்படி நூல்களைப் பெறுவது என்பது பற்றி முன்னைய சுவடிகளில் அறிந்திருப்பீர்கள். இந்த நூலகங்கள் வெறுமனே நூல் கடன் வாங்கும் நிலையங்கள் அல்ல. குழந்தைகள் முதல் முதியோர் வரைக்கும் பயன்தரக் கூடிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரே இடத்தில் நடைபெறுவதில்லை, வேறு வேறு கிளைகளில் நடைபெறுகின்றன. இங்கே புதிதாய் தொழில் தொடங்குவது, வேலை தேடும்போது கையளிக்கும் resume பத்திரங்களை எழுதுவது எப்படி என்பது முதல் யோகாசனம் வரைக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் இலவசமாக நடைபெறுகின்றன. குழந்தைகளுக்கான வீட்டுப் பாட உதவிகள், இணையத் தளம் வடிவமைப்பு, கணனியில் படங்களை மாற்றம் செய்வது பற்றிய தொழில்நுட்ப, விஞ்ஞான விடயங்கள், வர்த்தகர்கள் கணக்கு வழக்குகளைப் பதிவு செய்வது, எதிர்கொள்ளக் கூடிய சட்டப் பிரச்சனைகள் போன்ற வியாபார விடயங்கள், உயில் எழுதுதல் போன்ற தனியார் நிதிநிர்வாக விடயங்கள், வேலை தேடுபவர்களுக்கான உதவிகள், புதுக் கனடியர்களுக்கான ஆங்கில வகுப்புகள், ஆங்கில உரையாடல் திறனை வளர்க்கும் வகுப்புகள், யோகாசனம், தியானம் போன்ற உடலையும் மனதையும் வளர்க்கும் பயிற்சிகள் என நூற்றுக்கணக்கான பயிற்சி வகுப்புகள் நூலகங்கள் எங்கும் நடைபெறுகின்றன. www.torontopubliclibrary.ca/programs-and-classes/ என்ற இணையத் தளத்தில் முழு விபரங்களையும் நீங்கள் பெறலாம். இந்த வகுப்புகளில் பல சில மணி நேரங்கள் மட்டுமே நீடிக்கும். தினசரியோ, வாராந்தமோ தொடர்ந்து போக வேண்டிய கட்டாயமும் இல்லை. சில வகுப்புகளுக்கு நீங்கள் முன்னரே பதிவு செய்ய வேண்டும். பலவற்றுக்கு நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் போய் பங்குபற்றலாம். உங்களுக்கு அருகில் உள்ள நூலகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றி, அங்கு சென்று அச்சிட்ட பிரசுரங்களைப் பெற்று தகவல் பெறுங்கள். உங்கள் நகர வரிப்பணத்தில் செயற்படும் இந்த நூலகங்களால் இலவசமாக வழங்கப்படும் சேவைகளைப் பயன்படுத்தி, உங்கள் வரிக்கான முழுமையான பயனைப் பெறுங்கள். அவ்வாறில்லாமல், கனடா வந்த நாள் முதல் இந்த நாள் வரை சமூக உதவிப் பணத்தில் தான் வாழ்க்கை என்றாலும், சதா விஜய் டிவியைப் பார்த்து மூளை மழுங்குவதை விட, நாலு விடயத்தை அறிந்து கொண்டு ஒரு நல்ல வேலையைத் தேடிக் கொண்டால், வீடு வாங்கி நகர வரி கட்டும் அளவுக்கு உயர்வதற்கு வாய்ப்பு உண்டே. 24 மணி நேரமும் வானலைகள், பத்திரிகைகள் மூலமாய் திணிக்கப்படும் புரட்டுகளையும் புரளிகளையும் விழுங்குவதை விட, நாங்களாகவே அறிவைத் தேடிக் கொண்டால் சில நேரம் தமிழினம் முன்னேறுவதற்கு சந்தர்ப்பமும் உண்டு.

    Postad



    You must be logged in to post a comment Login