Recent Comments

    பச்சைப் பசேல் என்று நமக்கென்றோர் புல்வெளி!

    Mowiகாணி நிலம் வேண்டும் பராசக்தி என்று காணி நிலத்தோடு வீடு வாங்கியவர்களுக்கு எல்லாம் வாரா வாரம் முற்றத்திலும் கொல்லைப்புறமாயும் உள்ள புல் வெட்டுவது என்பது ஒரு நித்திய கடமையாகி விடும். குளிர் காலம் எல்லாம் பனி நிறைந்து, பின்னால் கோடை வந்ததும் ஆரம்பிக்கும் இந்த தலையிடி, அக்டோபர் வரையும் இழுபடும். எப்போதுமே பக்கத்து வீட்டுக்காரனின் புல்வெளி மட்டும் எங்களை விட, பச்சைப் பசேல் என்று இருக்கும். கோல்ப் விளையாட்டு மைதானம் போல் பசுமையாக இருக்க, நம் வீட்டுப் புல் வெளி மட்டும் மொட்டையாய் நரைத்துப் போய் காணப்படும். கவலை வேண்டாம். உங்கள் பசும்புல் வெளியும் பச்சைப் பசேல் என்று இருக்க சில ஆலோசனைகள்… வாரம் ஒன்றுக்கு ஒரு அங்குலம் அளவான நீர் விட்டாலே போதும். வழமையில் சிலர், உச்சி வெயிலில் தானாகவே நீர் பாய்ச்சும் கருவியை திறந்து விட்டு, நீர் பாய்ச்சுவர். ஆனால் உண்மையில் புல்லுக்கு இறைக்கும் இந்த நீர், காற்றிற்குத் தான் நீர் பாய்ச்சுகிறது. இதில் பெரும்பாலான நீர் புல்லின் வேரையடையும் முன்னாலேயே ஆவியாகி விடுகிறது. காலையிலோ, பொழுது படும்போதோ நீர் பாய்ச்சுவது நீரைச் சேமிக்க உதவும். கொதிக்கும் வெயில் மாலைப் பொழுதில் நீர் பாய்ச்சினால் நீர் விரயம் ஆவது தான் மிச்சம். ஒரு அங்குலத்திற்கும் குறைவாக நீர் பாய்ச்சினால், வேரை அடைவதற்கு முன்னாலே சூரியன் நீரை உறுஞ்சி விடும். எனவே நீர் பாய்ச்சும் போது ஒரு வெறும் கிளாசை புல் தரையில் வைத்து, அது ஒரு அங்குலம் நீர் நிறையும் போது, பாய்ச்சுதலை நிறுத்தலாம். மழை பெய்யும் நாட்களில் நீர் பாய்ச்சுதலைக் குறைத்துக் கொள்ளலாம். புல் வெட்டும் போது, மிகவும் கட்டையாக வெட்டக் கூடாது. கட்டையாக வெட்டிய புல் வெளி அழகாக இருக்கும். மீண்டும் வெட்டும் அளவுக்கு வருவதற்கு நாள் பிடிக்கும் தான். ஆனால், இந்தக் கட்டையான புல்வெளி விரைவில் காய்வதுடன், களைகளுடன் போட்டி போட முடியாததாக இருக்கும். எனவே குறைந்த பட்சம் இரண்டரை அங்குல உயரத்தில் புல்லை வெட்டுங்கள். புல்லுக்கு அளவான உரம் இடுங்கள். வெட்டுகின்ற புல்லை கட்டி குப்பைக்குள் போடுகிறீர்களா? வேண்டாம். வெட்டிய புல் அந்தத் தரைக்கே பசளையாகும்படிக்கு அப்படியே விடுங்கள். அது தானாகவே உக்கி உரமாகும். வேகமாகக் கரையும் உரத்தை புல்தரைக்கு வீசினால் அது மழையில் கரைந்தோடி விடும். எனவே மெதுவாகக் கரையும் உர வகைகளைப் பயன்படுத்துங்கள். அது மெதுமெதுவாக சத்துப் பொருட்களை வேருக்கு செலுத்தும். செழிப்பான புல் களைகளை அமுக்கி விடும். மழை பெய்தவுடன் ஈரமண்ணில் களைகளை அகற்றுங்கள். வருடா வருடம் வந்து துன்புறுத்தும் டன்டலியோன்கள் போன்ற களைகளை வேரோடு பிடுங்கா விட்டால் அவை மீண்டும் வளரும். களைகள் பூத்து விதைகள் கொட்டுவதற்கு முன்னால் பிடுங்குங்கள். அப்போ… பக்கத்து வீட்டு பசும்புல் தரை பச்சைப் பசேல் என்று இருக்கக் காரணம்…? அட, அதெல்லாம் உங்க தலைக்குள் இருக்கும் விசயம். எல்லாமே அக்கரைப் பச்சை தானே!

    Postad



    You must be logged in to post a comment Login