Recent Comments

    நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை

    thayagam featured-Curious உண்மை பேசி உத்தமனாய் வாழ்! காந்தித் தாத்தா படத்தில் பெரிதாய் போட்டிருக்கும். இதை யாழ்ப்பாணத்துச் சோற்றுக்கடைகளிலும், சிகையலங்கார நிலையங்களிலும், ஏன் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள். மில்க்வைட்காரர் உபயத்தில் இ.போ.ச பஸ்களிலும் கண்டிருப்பீர்கள். (பலசரக்குக் கடைகளில் மட்டும் 'இன்று ரொக்கம், நாளை கடன்') எப்போதுமே உண்மை பேசுவதாக இருந்தால் உத்தமனாக என்ன, நிம்மதியாக வாழ முடியுமா? 'ஸ்வாமி, நான் சமைத்த கத்தரிக்காய்க் கறி சுவையாக உள்ளதோ? சொல்லுங்கள்' என்று அபிதகுஜாம்பாள் ஆவலாகக் கேட்டால்... 'நீ அடுப்பில வைச்சிட்டு போனில நிக்க, கருகிப் போன கத்தரிக்காயிலை, நான் என்ன பல்லுத் தீட்டுறதோ?' என்ற உண்மையைப் பேசினால்... அடுத்த நாலு வாரத்திற்குப் பட்டினி. இதற்குத் தான் இந்தச் சமூகம் சொல்லிக் கொடுத்திருக்கிறது. பொய் சொன்ன வாய்க்குப் பொரியும் கிடைக்காது! உண்மையைப் பேசித் தொலைக்க வேண்டியது தான். 'மணியாயிருக்குது. கள்ளி, உன்ரை கை பட்டாலே... அந்த மாதிரித் தான்!'. உண்மையான உண்மையை அல்ல, கேட்க விரும்பும் உண்மையை! தலைவர் எரித்திரியாவில் இருந்து விமானப்படையோடு வருவார் என்ற உண்மையைப் போல! கியூறியஸின் மாபெரும் வாழ்க்கைத் தத்துவமே... 'எப்போதும் உண்மை சொன்னால் எதையும் நினைவில் வைத்திருக்கத் தேவையில்லை' என்பது தான். சில நேரங்களில் ராஜதந்திரக் காரணங்களுக்காக, உண்மைகளைச் சொல்வதைத் தவிர்ப்பதுண்டு. சங்கடங்களிலிருந்தும், ஆபத்துக்களிலிருந்தும் தப்பிக் கொள்வதற்காகவும், (ஆபத்துக்கு பாவமில்லை என்பதனால்), மனங்களைப் புண்படுத்தக் கூடாது என்பதற்காயும் கேள்விகளுக்கான பதிலாக சில சிறு பொய்களைச் சொல்வதுண்டு. மற்றும்படி ஏமாற்றுவதற்காகவோ, மற்றவர்கள் தன்னைப் பற்றி பெரிய அபிப்பிராயத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டுமென்றோ, பொய்யைச் சொல்லி, பின்னாளில் மாட்டுப்படுவதில்லை. கியுறியஸ்க்கு ஞாபக சக்தி கொஞ்சம் அதிகம் என்பது தெரியாமல், தாங்கள் முன்னர் சொன்னதை மறந்து திரும்ப புதுக்கதை சொல்லும்போது, 'என்ன அண்டைக்கு அப்பிடிச் சொன்னியே' என்று முகத்தை முறிக்க முடிவதில்லை. மனதுக்குள் சிரித்துக் கொண்டே கேட்க வேண்டியது தான். தன்னைப் புத்திசாலி என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால் மற்றவனை முட்டாள் என்று நினைப்பவர்களை என்ன செய்ய முடியும்? இவ்வாறாக, இறுதி யுத்தக் காலத்தில் சாமத்திய வீடொன்றில் சந்தித்த போது, 'தேசியத் தலைவருக்கு ஆயுள் 52 வரை தான் என ஒரு சோதிடர் சொன்னதாக' மிகவும் கவலையோடு சொன்ன ஒருவர், பின்னர் கொஞ்ச நாளில் கியூறியஸ்க்கு சொன்னதை மறந்து 'ஒரு சாத்திரியார் அவற்ரை சாதகத்தைப் பாத்திட்டு அடிச்சுச் சொன்னவர் 'இவரை 92 வயது வரைக்கும் ஆரும் அசைக்கேலாது' என்று புதுக்கதை சொன்னார், இன்னொரு 31ம் நாள் கொண்டாட்டத்தில். 52 வயது வரைதான் என்ற சோதிடரைப் பிடித்து கியூறியஸ் தனது குறிப்பைக் கொடுக்கலாம் என்றால், இவரிடம் போய் 'என்ன அண்டைக்கு அப்பிடிச் சொன்ன சாத்திரியாற்ரை போன் நம்பர் எடுக்கலாமோ?' என்று எப்படிக் கேட்பது? ஹ்ம்... உண்மை ஒரு double-edged sword. இரண்டு பக்கத்தாலும் வெட்டித் தொலைக்கிறது. உண்மை பேசினால் உத்தமனாய் வாழலாம் என்று வெறும் அறிவுறுத்தலாக இல்லாமல், உலகில் வேறெங்கும் இப்படியாக உண்மை பேச வேண்டும் என்று ஊரெங்கும் எழுதி, மிரட்டியதாகத் தெரியவில்லை. தமிழர்களுக்கு மட்டும் அப்படி என்ன உண்மை மேல் அவ்வளவு அக்கறை? இதற்கு, தமிழன் உண்மை பேசுவதில்லை என்பது தான் காரணமாக இருக்க வேண்டும். ஒட்டுமொத்தச் சமூகமுமாக வாயைத் திறந்தாலே பொய் என்கின்ற நிலைமையில், அரசாங்கச் சட்டம் போல, 'உண்மை பேசி உத்தமனாய் வாழ்' (இல்லாட்டி நடக்கிறதே வேற, நான் மனிசனாய் இருக்க மாட்டேன்!) என்று சுவரொட்டி ஒட்டத்தானே வேண்டும். முழுச் சமூகமும் உண்மை பேசாவிட்டாலும், சமூகத்தில் உண்மை பேசுகின்றவனுக்கு மதிப்பு இருக்கும் என்றால் கூட, இந்த அறிவுறுத்தல் தேவைப்பட்டிருக்காது. சமூகமே அயோக்கியர்களும், கொலைகாரர்களும் நிறைந்ததாக மட்டுமன்றி, அவர்களே சமூகத்தின் தலைவர்களாகவும் வரும் நிலையில், உண்மை என்பது காணக் கிடைக்காத ஒன்றாகத் தானே இருக்கும். இந்த அயோக்கியர்களுக்கும் கொலைகாரர்களுக்கும் தாங்கள் உண்மை பேச வேண்டிய தேவை இல்லாவிட்டாலும், மற்றவர்கள் உண்மை பேச வேண்டிய கட்டாயம் உண்டு. இதனால் தான் இந்த 'உண்மை பேசி உத்தமனாய் வாழ்'. ஊருக்குத் தான் உபதேசம், எங்களுக்கில்லையடா தம்பி! இல்லை, நாங்கள் வாய்மை தவறாத அரிச்சந்திரன் பரம்பரை என்று சொல்பவர்கள் தங்கள் அகதிக் கோரிக்கை விண்ணப்பக் கதையை வாசித்துப் பார்த்தால் தெரியும். யுத்த காலத்தில் இராணுவப் புலனாய்வுத் துறையும், சமாதான காலத்தில் புலிகளின் புலனாய்வுப் பிரிவும் தங்களைத் தேடுவதாகச் சொன்ன உண்மைகள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். கண்களைக் கட்டிக் கொண்டு ஒரு கையில் வாளும், மறுகையில் தராசுமாக காணப்படும் நீதி தேவதையின் முன், எந்த விதச் சந்தேகமும் இன்றி, (beyond reasonable doubt) குற்றவாளி என நிருபிக்கப்படும் வரைக்கும் அப்பாவி (innocent untile proven guilty) என்று உரைத்து, ஒருவனுடைய வாய்மையில் நம்பிக்கை கொண்டு, 'நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை' என்ற சத்தியத்தின் பின்னால் குறுக்குவிசாரணை செய்வது நாகரிக உலகிற்கானது. இது சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்திலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டு, சித்திரவதையின் போது 'உண்மையைச் சொல்லு, உன்னை விட்டுடுறம்' என்று ஆசை வார்த்தை காட்டி, சித்திரவதை தாங்காமல், பொய்யை உண்மையாகச் சொல்லி, வன்னிக்காட்டுக்குள்ளும் சவுக்குத் தோப்புகளுக்குள்ளும் கொன்று புதைக்கப்பட்ட உண்மைகள் எத்தனை? மின்கம்பத்தில் மரண தண்டனையைப் பார்த்து 'உவர் ஏதோ காட்டிக் குடுத்தபடியால் தானே போட்டிருப்பாங்கள்' என்று தண்டனையின் பின்னால் நீதி வழங்கிய சமூகம் இது. பகுத்தறிவோடு செயற்படாத முட்டாள்களின் கோமாளித்தனத்திற்கு விளக்கம் தேடிய மது உரைஞர்களைக் கொண்ட பூமி இது. உண்மை பேசாத சமூகத்தில் நீதி எப்படிக் குடியிருக்கும்? நீதி இல்லாத சமூகத்தில் உண்மை எப்படி வெளிவரும்? சமுகத்தில் உண்மை பேசுபவனை, கும்பலோடு கோவிந்தா போடும் பக்தர் கூட்டம், துரோகி என்று முத்திரை குத்தி, ஒதுக்கி அழித்து விடும் நிலைக்கு சமூகம் வந்து விட்டது. ஒருவனின் திறமையையும் வெற்றியையும் கண்டு பொறாமைப்பட்டு, அவதூறு பரப்பி அவனை விரட்டுவதில் இந்த சமூகத்திற்கு அக்கறை அதிகம். உண்மை பேசுவதற்கு நேர்மையாளர்களுக்குப் பயம் வரும் போது என்ன நடக்கும்? மனச்சாட்சியை விற்க மறுக்கும் அவர்கள் மெளனமாகிப் போவார்கள். குள்ளநரிகளான மரண வியாபாரிகளும், சுயநலப் பிழைப்புவாதிகளும் என்ன செய்வார்கள்? சமூகம் கேட்பதற்குப் பிடித்தமான, தலைமையைக் குஷிப்படுத்தி, தலைக்கும் பங்கம் வராத பொய்களைச் சொல்லிக் கொண்டே சமூகத் தலைவர்களாகத் தலைதூக்குவார்கள். எரியும் டயர்களுக்குள் பிள்ளைகளைத் தூக்கி எறிந்தால், Thirst asks nothing more என்று இரத்த தாகம் கொண்டவர்களுக்குக் கொக்கா கோலா கொடுப்பார்களே தவிர, இவர்களும் எங்கள் பிள்ளைகள் தானே என்று கேட்க மாட்டார்கள். ஒருபுறத்தில் வாயைத் திறந்தால் பொய் என்ற நிலையில் உள்ள சமூகம், மறுபுறத்தில் உண்மையைச் சொன்னால், உயிருக்கு ஆபத்து என்கின்ற தலைமை. யார் உண்மை பேசுவார்? தலைமையைச் சுற்றி இருப்பவர்களும் சரி, உண்மையைச் சமூகத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய ஊடகங்களும் சரி, இந்தப் பொய் பேசும் சமூகத்திலிருந்து வந்தவர்கள் தானே? தலைமை கேட்க விரும்பியதை சுற்றி இருந்தவர்களும், சமூகம் கேட்க விரும்பியவைகளை ஊடகங்களும் அள்ளி வழங்கினர். உண்மை என்பது, ஊரோடு ஒத்தோடுவது என்றாகி விட்டது. வால் பிடிப்பதே உண்மை, அந்த 'உண்மையின் முன்னால் நடுநிலை என்பது இல்லை' என்பது எழுதாத சட்டமாக்கப்பட்டது. சொல்பவருக்கும் கேட்பவருக்கும் சொல்லப்படுவது பொய் என்பது நன்றாகத் தெரியும். ஆனால் உண்மை போலவே நடிக்கப் பழகி விட்டார்கள். இதன் விளைவு, நாங்கள் சொன்ன பொய்களையே நாங்கள் நம்பும் அளவுக்கு வந்து விட்டோம். உண்மை எது, பொய் எது என்று பிரித்துப் பார்க்க வேண்டிய தேவை இல்லாமல், நம்ப விரும்புபவற்றைக் கேட்க விரும்புகிறோம். யாருடைய கோபத்துக்கும் ஆளாகாமல், தந்திரமாக நம்புவது போல நடிக்கப் பழகி விட்டோம். மற்றவன் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறான் என்பதிலேயே தன் வாழ்வை அமைத்துக் கொள்ளும் இனத்திற்கு பொய் சொல்ல வேண்டியது கட்டாயம். பொய் சொல்லியாவது உயர்ந்த அபிப்பிராயங்களை ஏற்படுத்தியே ஆக வேண்டும் என்றால் கூசாமல் பொய் சொல்ல வேண்டும். பின்னால் உண்மை பேசினால் உயிராபத்து என்ற நிலை வந்ததும், இனத்தின் இயல்பான பொய் சொல்லும் பழக்கம், அங்கீகரிக்கப்பட்ட சட்டமாகி விட்டது. உண்மையைச் சொன்னால் மட்டுமல்ல, சொல்கின்ற பொய்யை நம்பாவிட்டால் கூட துரோகி என்ற நிலைமை வந்த பின்னால், பிறகென்ன open season தான். இதனால் இன்று தமிழ் ஊடகங்கள் தொடக்கம் அரசியல்வாதிகள் வரைக்கும் வாய் கூசாமல் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு எது கேட்கப் பிடிக்குமோ அதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கும், தங்களுக்கு எதைக் கேட்கப் பிடிக்குமோ அதைச் சொல்லிக் கொண்டிருப்பவர்களையே பிடிக்கிறது. இப்படி முழுச் சமூகத்திற்குமே உண்மை கசந்து போய், பொய் இனிக்கிறது. அதற்கு ஊடகங்களும் சமூகத் தலைவர்களும் இனிப்பு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல... கியூறியஸ் உண்மையைப் பற்றிப் பேசுவதற்குக் காரணம் இல்லாமலா இருக்கும். கொஞ்சக் காலத்திற்கு முன்னால், ஆடிய காலும் எழுதிய கோலும் சும்மா இருக்காது என்பது போல... தாயகம் ஆசிரியர் புதிய வெளியீடு ஒன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். 'இனிமேல் உந்த அரசியல் எல்லாம் எழுதிப் பலன் இல்லை, புத்தி இருப்பவன் தான் சிந்திக்க முடியும்' என்று வெறுத்துப் போய், பயன்படக் கூடிய தகவல்களைப் போட்டு ஒற்றைத் தாள் வெளியீடு ஒன்றைக் கொண்டு வருவோம் என்று தகவல்களைத் தொகுத்து, இதழ் ஒன்றைத் தயாரித்தார். உப்புச் சப்பில்லாமல் வெறுமனே தகவல்களாக இல்லாமல், சுவாரஷ்யமாக இருக்கட்டுமே என்று கௌரவ எழுத்தாளராக கியூறியஸிடமும் எழுதி வாங்கி! தன் நெருக்கமான நண்பர் ஒருவரிடம் இதழைக் காட்டிய போது, அவர் கியூறியஸ் எழுதியதைப் பார்த்து விட்டு, வழங்கிய ஆலோசனை இதுதான். 'இதைப் பார்த்த உடனேயே, இவர்கள் உன்னை முத்திரை குத்தி, உன்னை discredit பண்ணும் முயற்சியிலேயே ஈடுபடுவார்கள். இது புத்திசாலித்தனமான திட்டம் அல்ல'. முத்திரை குத்துபவர்கள் மாவீரர்கள் மட்டுமல்ல, மாற்றுக்கருத்து முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் தமிழ்த்தேசியவாதக் கும்பலும் தான். அதே கும்பல் மறுபுறத்தில், இவன் வியாபாரத்துக்காக கொள்கையை விற்று விட்டான் என்று கூடச் சொல்லும். அந்த ஆலோசனையை ஏற்று, கியூறியஸின் அறு(சு)வை நிராகரிக்கப்பட்டது. உடைந்த கியூறியஸின் உள்ளம் ஒட்டுப்பட எக்கச்சக்கமான காலம் எடுத்தது. அந்த வெளியீடு வெளியாகி பெரும் வரவேற்புப் பெறுவது இன்னொரு கதை! கியூறியஸ் எழுதியதோடு வெளிவந்திருந்தால், மாவீரத் தணிக்கை அதிகாரிகளால் கடைகளின் குப்பைக் கூடைக்குள் வீசப்பட்டிருக்கவும் கூடும்! வன்னியில் கோல் ஓச்சிய காலத்திலேயே, பயப்படாமல் உண்மையைத் தேடியவர்கள் இன்றைக்கு தங்கள் உபாயங்களை மாற்றக் காரணம் என்ன? (ஜெயலலிதாவை ஆதரித்ததற்காக, திராவிடக் குழு ஒன்று 'எங்கள் தந்திரோபாயத்தில் தான் மாற்றமே அன்றி, மூலோபாயத்தில் அல்ல' என்று கூறியது போல!) பொய் கோல் ஓச்சும் சமூகத்திற்குள் உண்மை பேசுபவர்களுக்கும், உண்மையைத் தேடுபவர்களுக்கும் என்ன வேலை? பேசாமல் வாயை மூடிக் கொண்டு இருந்தால்... வாழ்க்கை நிம்மதியாக ஓடும். சமீபத்தில் தமிழர் போராட்டத்திலே நீண்ட நாள் பங்கு கொண்ட ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. போராட்டம் என்றால், ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள்வதற்காக நடத்திய போராட்டம் அல்ல. அடக்கப்பட்ட தமிழர்கள் சமத்துவம், சமூக நீதி கேட்டு, தமிழ்க் கோயில்களிலும் தேநீர்க்கடைகளிலும் நுழைவதற்கு, ஆண்ட தமிழ்ப் பரம்பரையிடம் அனுமதி கேட்டு நடத்திய போராட்டத்தில் பங்குபற்றியவர். 1986ல் நடந்த சம்பவம் பற்றி... அவர் விபரித்தார். உரும்பிராயில் புகையிலைக் கன்றுகளுக்கு நடுவில் மறைந்திருந்த டெலோ சிறி சபாரத்தினத்தைக் கொலை செய்த கிட்டு, உரும்பிராய்ச் சந்தியில் சடலத்தைக் கொண்டு வந்து வீசி விட்டு, 'சிறியனைப் போட்டுட்டன், எல்லாரும் வந்து பாருங்கோ' என்று அறிவிக்கிறார். நம்ம ஊர்க் காட்டு வைரவருக்கு வெட்டப்பட்ட கடாவிலிருந்து வந்த இரத்தம் போல, இரத்தம் காய்ந்து கிடக்கிறது. இலையான்கள் போல மக்கள் மொய்த்துப் பார்க்கிறார்கள். அதில் எங்களுக்குத் தெரிந்த பொதுமகன் ஒருவர் சத்தமாக 'அவனைக் கொல்லிறதுக்கு உனக்கு ஆர் அதிகாரம் தந்தது?' என்று கேட்கிறார். கிட்டுவுக்கு கேட்டு விடக்கூடாது என்பதற்காக, இவர் அந்தக் கேள்வி கேட்டவரைத் தள்ளி அப்பால் கொண்டு போய் விடுகிறார். நல்ல காலம், கிட்டுவுக்குக் கேள்வி காதில் படவில்லை. பட்டிருந்தால், 'காட்டிக் கொடுத்த துரோகி ஒருவனுக்கு தளபதி கிட்டு உரும்பிராய் சந்தியில் மின்கம்பத்தில் கட்டி, மண்டையில் போட்டு, மரண தண்டனை வழங்கினார்' என்று வரலாறு பூரிப்படைந்திருக்கும். 'துரோகியைப் போடத் தானே வேணும்' என்று இன்றைக்கும் கனவில் புலம்புபவர்களோடு பேசிப் பயனில்லை. ஒரு சமூகத்திலே நல்லவன் ஒருவன் உண்மை பேசப் பயப்படுகின்றான் என்றால்... அன்றைக்கே அந்தச் சமூகத்தின் அழிவு ஆரம்பிக்கிறது. துப்பாக்கிக்குப் பயந்து உண்மை பேசப் பயந்ததிலிருந்து... எங்கள் இனத்தின் அழிவும் ஆரம்பித்தது!

    Postad



    You must be logged in to post a comment Login