Recent Comments

    கணவன்மார் உயிரை வாங்கும் மனைவியர்

    fightமனைவியருக்கு பிராணசகி என்று நம் முன்னோர் பெயர் வைத்தது, சகிக்க முடியாதபடிக்கு கணவன்மாரின் பிராணனை வாங்குவதாலோ என்னவோ என்ற நமது மூளையைக் குடைந்த நீண்ட நாள் சந்தேகத்தை நிவர்த்தி செய்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். சதா நச்சரிக்கும் வாழ்க்கைத் துணையைக் கொண்ட கணவர்களின் வாழ்க்கை பத்து வருடங்களுக்குள் முடிவதற்கான சந்தர்ப்பம், அன்பான வாழ்க்கைத் துணையைக் கொண்டவர்களை விட இரண்டரை மடங்கு அதிகமானது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். மனைவிமாருடன் வாக்கு வாதங்;கள், சண்டைகள், நச்சரிப்புகள் காரணமாக ஏற்படும் கவலையால் கணவன்மார் விரைவில் இறக்க நேரிடலாம் என்கிறது இவர்களின் ஆய்வு. வருடாந்தம் இறப்பவர்களில் சராசரி ஒவ்வொரு லட்சத்திற்கும் 315 பேர் பெண்களின் தொல்லையால் இறக்கிறார்களாம். டென்மார்க் கொப்பன்காகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் இந்த தொடர்பை அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். வழமையில், மன அழுத்தம் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, இருதய நோய் ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கிறது. அத்துடன் உடற்பயிற்சி செய்யாமை, சத்தில்லா உணவு உண்ணல் போன்றவற்றையும் ஊக்குவிக்கிறது. ஆண்களில் மன அழுத்தம், உடல்நலக் குறைவுடன் சம்பந்தமான கிறிஸ்டோல் என்ற ஓமோனை அதிகளவில் சுரக்க வைக்கிறது. இதைவிட, ஆண்களுக்கு நண்பர்கள் தொகை குறைவாக இருப்பதால், அவர்களின் வாழ்க்கைத் துணை அவர்களுக்கு முக்கியமானது. அந்தத் துணையின் நச்சரிப்பினால் மன அழுத்தம் அதிகமாக ஏற்பட்டால், அவர்களால் ஆறுதல் தேட முடியாமல் போகிறது. இந்த மன அழுத்தமே இவர்களின் இறப்புக்கு காரணமாகிறது. அத்துடன் இந்த ஆண்கள் வேலை அற்றவர்களாகவும் இருந்தார்கள் என்றால், மரண வீதம் இன்னும் அதிகமாக இருக்கிறதாம். நச்சரிப்புக்குள்ளாகும் வேலையற்ற ஆண்களின் இறப்பு வீதம் ஒரு லட்சத்திற்கு 830 ஆகும் என கணிப்பிடப்பட்டுள்ளது. சமூகத்தின் ஆண் சம்பாதித்துக் குடும்பத்தைப் பார்க்க வேண்டிய நிலையில் இருப்பதால், வேலையில்லாததால் ஏற்படும் மன அழுத்தம் இந்தப் பிரச்சனையை அதிகரிக்கிறது.அதிலும் அடிக்கடி வாக்குவாதங்;களில் ஈடுபடுவது தான் ஆண்களின் உடல் நலத்திற்குக் கேடாகிறது என்கிறது இந்த ஆய்வு. Journal of Epidemiology & Community Health என்ற சஞ்சிகையில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 36 முதல் 52 வயதான பத்தாயிரம் ஆண்களையும் பெண்களையும் அவர்களுடைய தினசரி சமூக உறவுகளையும் குடும்பப் பிரச்சனைகளையும் பற்றிக் கேட்டறிந்து அவர்களின் வாழ்வு பத்து வருடங்;களாக அவதானிக்கப்பட்டது. இதில் மனைவி, பிள்ளைகளின் கவலைகள், தொந்தரவினால் இறப்பவர்களின் விகிதம் ஐம்பது வீதம் அதிகமாகக் காணப்பட்டது. ஆனால், பெண்கள் இவ்வாறான விடயங்களால் பாதிக்கப்படவில்லை என்பதும் இந்த ஆய்வின் இன்னொரு முக்கிய முடிவு. இந்த ஆய்வின்படி பார்த்தால், ஒன்பது தடவை காப்பி குடிக்காமலும், எண்பது ரூபா புடைவை கேட்காமலும், வகையில்லாப் பொருளை எண்ணி கணவனுடன் வாதம், பிடிவாதம், வம்பு பண்ணாமலும் இருந்தால், ஐம்பது ரூபா சம்பளக்காரன்கள் நீண்ட ஆயுளுடன் வாழவும், பெண்சாதிகள் தீர்க்க சுமங்கலிகளாக வாழவும் சந்தர்ப்பம் உண்டு போலும். ஆண் மேலாதிக்கக் கருத்தில் படுபிற்போக்கான செய்தி வெளியிட்டதாகக் குற்றம் சாட்டி, விளக்குமாறு, துடைப்பக்கட்டை, முறம் போன்ற கனரக ஆயுதங்களுடன் போராட்டத்திற்குத் தயாராகும் பெண்ணியவாதிகள், முந்தானையில் தொங்கும் புத்திஜீவிகள் தங்கள் ஆட்சேபனைகளை எழுதி அனுப்புவார்களாக... டானிஷ் மொழியில்! கொப்பன்காகன் பல்கலைக்கழகத்திற்கு நாமே அனுப்பி வைப்போம். (மனைவி, துணைவி என்று இரண்டு பேரை வைத்துக் கொண்டு, சொத்துச் சண்டை, வாரிசுச் சண்டை, அரசியல் சண்டை என்றெல்லாம் தலைக்கு மேலால் பிரச்சனைகளையும் வைத்துக் கொண்டு, எண்பது வயதையும் தாண்டி கருணாநிதியால் வாழ முடிகிறது என்ற விவகாரம் ஏன் தான் கொப்பன்காகன் ஆய்வாளர்களுக்குத் தெரியாமல் போனதோ என்பது தான் இப்போது நமது மண்டையைக் குடையும் கேள்வி.)

    Postad



    You must be logged in to post a comment Login