Recent Comments

    ஜாக்கிரதை! உங்கள் பூவுடல் பூதவுடலாகலாம்!

    Flushotகுளிர் காலம் தொடங்குகிறது. சரியான தடுப்பு முறைகளைக் கைக் கொள்ளாவிட்டால், காலநிலை மாற்றத்திற்கு உங்கள் பூவுடல் ஈடு கொடுக்க முடியாமல் போக, வைரஸ் தொற்றி காய்ச்சல் பீடித்து பூவுடல் பூதவுடலாகும் அபாயம் உண்டு. குளிர் காலத்தில் மூடிய வீட்டுக்குள் சூடாக்கியைச் செயற்படுத்துவதால், வளியில் உள்ள ஈரப்பதன் குறைந்து உடலில் வைரஸ் பெருகுவதால், வீட்டுக்குள் ஈரப்பதன் குறையாமல் தடுப்பது பற்றிய விபரங்களை பழைய சுவடிகளிலோ, தாயகம் இணையத்தளத்திலோ தேடிப் பார்க்கலாம். குளிர்காலத்தில் பரவி வரும் காய்ச்சல் பீடிக்காதபடிக்கு நோய்த்தடுப்பு ஊசி மருந்துகளைப் பெறுவதன் மூலம் குளிர்காலம் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஒவ்வொரு குளிர்காலத்திலும் ஐந்து முதல் இருபது வீதமான மக்களுக்கு இந்தக் காய்ச்சல் பீடிக்கிறது. இந்தக் காய்ச்சலால் வயோதிபர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், தொய்வு மற்றும் இதய நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தோருக்கு மரணங்களும் சம்பவிக்கலாம். வருடாந்தம் 3500 கனடியர்கள் இந்தக் காய்ச்சலால் இறப்பதுடன், சுமார் 12 ஆயிரம் பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பயன் உண்டோ எனப் பலரும் கேட்கக் கூடும். கனடாவில் இந்த வைரஸ் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நவம்பர் முதல் மார்ச் வரை தொற்றிப் பரவுகிறது. இவ்வாறாக உலகம் சுற்றும் இந்த வைரஸ் சிறிது காலத்தின் பின் மருந்துகளால் அழிக்கப்பட முடியாதபடிக்கு மாற்றம் அடைவதால், ஒவ்வொரு வருடமும் நீங்கள் இந்த நோய்த்தடுப்பு ஊசியைப் பெற வேண்டும். இந்த வருடம் தொற்றக் கூடும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கும் வைரஸ் வகைகள் சிலவற்றின் வீரியத்தைக் குறைத்து, உங்களுக்கு ஊசி மூலமாக செலுத்துவதன் மூலம் உங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது. ஆனாலும், விஞ்ஞானிகள் எதிர்பார்த்தபடியான வைரஸ்கள் தவறிப் போய், புதிய வைரஸ்கள் தொற்றிக் கொண்டால், தடுப்பு ஊசி பெற்றும் பயனில்லாமல் உங்களுக்கு காய்ச்சல் வரலாம். ஆறு மாதக் குழந்தைகள் முதல் அதற்கு கூடிய வயதுடையவர்கள் Flu Shots எனப்படும் இந்த காய்ச்சல் தடுப்பு ஊசிகளைப் பெற வேண்டும். இதில் சிறார்களுக்கு ஊசியை விட, மூக்கின் மூலமாக விசிறிச் செலுத்தும் spray களும் உண்டு. இந்த ஊசி பெறுவதன் மூலம் உங்களுக்கு காய்ச்சல் வராது எனினும் ஓரிரு நாட்களுக்கு உடம்பு நோ, ஊசி போட்ட கையில் நோ இருக்கக் கூடும். ஊசி போட்டாலும், அது உங்கள் உடலில் போதியளவு நோய் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்த சுமார் இரண்டு வாரம் வரையிலான கால அவகாசம் தேவை. எனவே வருமுன் காப்பதற்காக, முன்னரேயே இந்த ஊசியைப் பெற வேண்டும். வந்த பின் காக்கும் முயற்சியில், நோய் வந்த பின்னால் இந்த ஊசி பெறுவதில் பயனில்லை. இதற்காகவே தற்போது அக்டோபர் மாதம் அளவில் அந்த ஊசியைப் பெறுமாறு வற்புறுத்துகிறார்கள். கனடா, அமெரிக்கா போன்ற இடங்களில் செலுத்தப்படும் ஊசியில் உள்ள வைரஸ் வகைகள், ஆசியா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற இடங்களில் நோய் எற்படுத்தும் வைரஸ் வகைகளை விட வேறானவையாக இருப்பதால், அந்தப் பிரதேசங்களுக்கு பயணம் செய்யும் எண்ணம் இருந்தால் அவற்றுக்கான ஊசியையும் உங்கள் மருத்துவரிடம் கேட்டுப் பெறலாம். இதையும் விட, அடிக்கடி சவர்க்காரம் போட்டுக் கைகளைக் கழுவுவதன் மூலமும், தும்மும்போது கைகளால் வாயை மூடிக் கொள்வதன் மூலமும் இந்த வைரஸ்கள் உங்களுக்கோ, உங்களால் மற்றவர்களுக்கோ தொற்றுவதைத் தடுக்கலாம். சரியான சத்துள்ள மரக்கறிகள், பழங்கள் போன்றவற்றை உண்ணுவதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள். குளிர்காலத்தில் உடம்பை சூடாக வைத்திருக்கக் கூடிய சரியான ஆடைகளை அணியுங்கள்.
    அதுசரி, உங்களுக்கு தொற்றியிருப்பது தடிமலா? காய்ச்சலா? என்று எப்படி அறிந்து கொள்வது?
    இரண்டுமே மூக்கால் சளி வடிதல், இருமல், தும்மல், களைப்பு ஆகிய குணங்குறிகளைக் கொண்டிருந்தாலும், அவற்றுக்கான வேறுபாடுகளை அறிந்து வைத்திருத்தல் மருத்துவ உதவி நாடுவதற்கான தேவையை நிர்ணயிக்கும். இருமலும், களைப்பும் அதிகமாயும், உடல் வெப்பம் மிகவும் அதிகமானதாயும் உடல் முழுவதும் நோவாகவும் இருந்தால் அது பெரும்பாலும் காய்ச்சலே. மூன்று நாட்களுக்கு மேலாக வெப்பநிலை அதிகமானதாக இருந்தாலோ, சுவாசிப்பதில் சிரமம், சுவாச இழுப்பு, வாந்தி போன்றவை இருந்தால் மருத்துவ உதவியைப் பெறுங்கள். சுவடி ஐப்பசி 2015

    You must be logged in to post a comment Login