Recent Comments

    பூப்பு நீராட்டு விழா -சமூகத் தேவையா?

    Puberty (யாழ்ப்பாணத் தமிழில் “சாமத்தியச் சடங்கு” என்பது தமிழ் நாட்டில் “பூப்பு நீராட்டு விழா” என்றும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படலாம். இளம் வயதிலேயே, இந்தச் சடங்குகள் கலாசாரக் கம்பளியால் காக்கப்படுகின்ற போலித்துவம் என்பதும், இவை பெண்களின் சமூக அடிமைத்துவத்தை நிறுவுவன என்றும் கருதினேன். எந்தக் கலாசாரமும் எந்தெந்த வழிகளால் அடிமைத்துவத்தை நிறுவும் முறைகள் எதிர்க்கப்படவேண்டும். “பூப்பு" ஓர் உடல் இயலின் பதிவு. இது ஓர் கொண்டாட்ட கலாசாரமாகக் கூடாது. “பூப்பு” என்பது அடிமைத்துவத்தின் இயல்பு அல்ல. தா.பெ. அ. தேன்மொழி எழுதிய “பூப்பு நீராட்டு விழா -சமூகத் தேவையா?” எனும் கட்டுரையை எனது இனிய நண்பரும் தோழருமான பா.செயப்பிரகாசத்தால் அனுப்பப்பட்டபோது, வாசிப்பின் பின் ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் வாசித்தல் காத்திரமானது எனக் கருதுகின்றேன். இக்கட்டுரையை எழுதியவர் தேன்மொழி. இவரது தாய் - தமிழுலகம் நன்கு அறிந்த போராளி தாமரை அம்மையார். இவரது தந்தை தமிழறிஞர், மொழிப்போராளி பாவலரேறு பெருஞ்சித்திரனார். தேன்மொழியின் துணைவர்.. சொல்லாய்வறிஞர் ப. அருளியார். இவர்களின் பெயர்களால், நான் பெண் என்பதால் இந்தக் குமுக அடையாளப் படுத்தப்பட்ட நிலையை , நான்காண்டுகளாக நான் நடத்திவரும் குமுக - பெண்ணிய - அரசியல் இதழ் தழலால் என்னைத் 'தழல் தேன்மொழி' என்று அடையாளப் படுத்திக் கொண்டேன்” என்கிறார். இளம் அறிவியல்(பூதியல்) கற்றார் ; பின்னர் முதுகலை(தமிழ்) முடித்தார். ; 'பூப்பு நீராட்டு விழா - குமுகத் தேவையா'?, 'திருமணம்'?, 'விளைவு' (பா - நூல்)என்ற நூல்களை எழுதியுள்ளார் . ”நம் மானம்”? என்ற இவரது நூல் அச்சில் உள்ளது. மேலும் பல இதழ்களுக்கும் கட்டுரைகள், பாக்கள் எழுதி அறிவுத் தளச் செயற்பாடுகளுடன், சமூகச் செயற்பாட்டாளராகவும் இருக்கிறார் என்பதற்கு நடைமுறைச் சான்று- அனைத்து மூடத் தனங்களையும் சுட்டெரிக்கும் பகுத்தறிவுப் பெண்ணாகவும், தாலி மறுப்பு, - சாதிமறுப்புத் திருமணங்களையும் நடத்தி வருகிறவராகவும் வாழுகிறார் என்பதே. ! (https://ta-in.facebook.com/thenmozhi.tpa) கட்டுரையை “தாயகம்" இணைய இதழுக்காக மீள் பிரசுரத்துக்குத் தந்ததிற்காக தேன்மொழிக்கு நிறைய நன்றிகள். க.கலாமோகன்)

    பூப்பு நீராட்டு விழா - சமூகத் தேவையா?

    தா.பெ. அ. தேன்மொழி

    ஒவ்வோர் ஆணும் பெண்ணும் எவ்வகை வேறுபாடுமின்றிக் கருவுற்று உருவடைந்து பிறக்கின்றனா்! உருவாக்க நிலைக்கும் பிறப்பு நிலைக்கும் ஒரே சமநிலையைப் பெற்ற ஆணினமும் பெண்ணினமும் உடலில் சில மாற்றங்களைப் பெற்றுள்ளன. அவ்வாறான மாற்றங்கள் ஆண் பெண் வாழ்வியல் நிலையில் இன உருவாக்கம் செய்யும் வகையில் வேறுபட்டு அமைந்துள்ளன. அவை தேவையான பருவங்களில் இருபாலருக்கும் நிகழ்கின்றன. ஆனால் வளா்ச்சியும் மாற்றமும் பெண்களுக்கு மட்டுமே நிகழ்வதாக எண்ணி, அதை வெளிப்படுத்தும் பல சடங்கு நிகழ்வுகளில் அறிவுத் தெளிவின்றி நடத்துகின்ற ஒன்று தான் பூப்பு நீராட்டு விழா என்பதுவாகும். ஆண்பிள்ளை பெண்பிள்ளை என்ற வேறுபாடின்றி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், ஒரு பருவத்தில் பெண்பிள்ளைகள் தன் மகிழ்வுத்துள்ளலை நிறுத்திக் கொள்கின்றனா். தம் உள்ளம் குழந்தைமயமான நிலையிலும், ஆனால் சிறிதே அறிய முற்படுகின்ற ஆா்வ நிலையில் ஏன் எப்படி எதற்கு என்ற வினா துளிர்க்கும் நிலையில் உள்ளபோது, தம் உடலில் ஏற்படும் இயற்கையான பருவ மாற்றங்கள் சிலவற்றைக் கண்டு அதிர்ச்சியும் வியப்பும் அடைகின்றனா். எவரிடமும் வினவமுடியாத முதல் மனஅதிர்வைப் பெற்றதன் விளைவாகக் குழப்பத்துடன் உலவுகின்றனா். அவ்வாறான மனநிலையை இருபாலினமும் அடைந்தாலும் “பூப்படைதல்” என்னும் உடலியல் பருவமாற்றம் பெண்களை அச்சமுறச் செய்து, தன் பெற்றோரிடமோ உறவினரிடமோ கூறுகின்ற நிலையை உருவாக்குகிறது. Pubertywomenஇந்தப்பருவ நிகழ்வை அறிந்தவா்கள் உடனே அந்தப் பெண்ணைத் தனிமைப்படுத்தி அமரவைத்து, அந்நேரத்திற்கு உடலுக்குத் தேவையான சிறப்பு உணவை அளித்து மகிழ்வடைகின்றனா். ஆனால் அவள் மனத்துக்குள் உருவாகும் வெளிவரவியலா மெலிதான ஒரு வினாவிற்கு உறுதிதரும் விடையளிக்க எவருக்கும அறிவிருப்பதாகத் தெரியவில்லை. அப்பெண்ணின் இயல்பை மாற்றி, இயற்கையான மனக்போக்குகளையும் கட்டாயப்படுத்தித் தடைப்படுத்துகின்றனா். அவ்வாறான காலங்களில் உறவினா்களுள் ஆண்கள் முகத்தையும் பார்க்கக்கூடாதென்றும், அதற்குப் பல மூடத்தனமான காரணங்களையும் சொல்லி அவளை ஊமையாக்கி வைத்திருப்பதும் நடக்கின்றது! இந்தச் சமுதாயம் கல்வியறிவற்ற பெண்களை உருவாக்கியுள்ளமையும் இந்நிலைக்கான பல காரணங்களுள் ஒன்றெனக் கருதலாம். ஆனால் கல்வியறிவுள்ள பெண்கள் பலரும் ,பகுத்தறிவற்ற மூடா்களாய் வழி வழி வரும் பழக்கவழக்கங்களுக்கு அடிமைகளாகி ஏன் எப்படி எதற்கு என்று வினாவெழுப்பும திறனறிவற்று வளா்ந்து வரும் நிலைதான் இம்மூடப் பழக்கங்கள் வளர மேலும் ஏதுவாகின்றது. பெண்கள், ஒவ்வொன்றையும் அறிகின்ற ஆா்வம் செலுத்தினால்தான், அறிந்தவற்றுள் சரியானது எது? சரியற்றது எது? என்று பகுத்தறியக்கூடிய வாய்ப்பு உருவாகும்! அப்போது தான் எதை ஏற்பது?எதை ஏற்காமல் ஒதுக்குவது என்ற அழுத்தமான நுண் அறிவும் ஏற்படும். அவ்வாறான தெளிவும், பகுத்தறிவும் அறிவுநிலையும் தான் சரியற்றதை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று போராடக்கூடிய மனத்திண்மையை அளிப்பனவாகும். “உலகத்தோடு ஒட்ட ஒழுகல்” என்பதைக் காரணங்காட்டி நாம் வாயை மூடிக்கொண்டு, எதற்கும் மூடத்தனமான நிகழ்வுகளைத் தொடா்ந்து செய்து வருவத பல வாழ்வியல் சிதைவுகளையும் மனச்சிதைவுகளையும் அளிக்கும என்பதை இன்னும் அறியாத பெண்கள் பலா் இருப்பதால்தான் பூப்பு நீராட்டு விழாவை இந்த அறிவியல் காலத்திலும் நாம் ஏற்று நடத்தி இழிவுபட்டுக் கொண்டுள்ளோம்! ஒரு பெண் பூப்பு அடைகிறாள் என்றால் என்ன? அந்தப் பருவம் அடையும் நிகழ்வை உலகிற்கு அறிவிப்பதற்கான காரணம் என்ன? ஆணும் அவ்வாறான பருவநிலையை எய்துவதை இந்தச் சமுதாயம் ஏன் வெளிப்படுத்துவதில்லை? ஆண் – பெண் இருவருமே, உடலில் வளா்சிதை மாற்ற இயக்கம் என்ற அறிவியல் நோக்கில் பார்க்கும்போது பருவமெய்துகின்றனா். ஆனால் பெண்களின் பருவமெய்துகை மட்டிலும் அனைவராலும் கருதப்படும் இவ்விடத்திலிருந்தே பெண்ணை அடிமைப்படுத்தும்நிலை தொடங்கப்படுகிறது. மேலும் பெண்ணுக்குத் திருமணம் செய்ய வேண்டும், ஆணின் கையில் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்ற கருத்தும் கூடவே உருவாகிறது. இவற்றை முடிவு செய்வதாகிய நெடுநாளைய மூடவழக்கத்தைப் பெரும்பாலான கல்வியாளா்களும் தவிர்ப்பதில்லை! கல்வியறிவும் பட்டறிவும் ஏன் பகுத்தறிவும கூட, பிறப்பியத்தின் (சாதகத்தின்) காலில் விழுவதைப் பார்த்து அதிர்வடைகின்றோம்! எந்தப் பிறப்பியமும்(சாதகம்) ஆணின் பருவமடையும் நேரத்தைப் பற்றிக் கேட்பதுமில்லை! கணக்கில் எடுத்துக் கொள்வது மில்லை! பருவமடைந்த பெண் என்று வேறுபடுத்தி இழிவுப்படுத்தப்படுவதும் துயருறுத்தப்படுவதும் போல் எந்த ஆணுக்கும் நோ்வதில்லை. எல்லா இழிவுகளையும் ,வாழ்வில் ஏற்படும் அனைத்துக் குறைபாடுகளையும பெண்களின் மீதே சுமத்திவிட்டு ஆண்களில் பெரும்பான்மையானவா்கள் பொறுப்பின்றி பெருமிதமாகத் தள்ளி நிற்கின்றனா்! ஆனால் ஆணும் பெண்ணும் சமம் என்று சமுதாயம் வெட்கமின்றி உரக்கக் கூவி அங்கலாய்க்கிறது! பருவமடைந்த பெண் தனக்கேற்பட்டுள்ள நிலைபற்றி அறியாத குழப்பநிலையில் உள்ளபோது ஒவ்வொரு தாயும் அவளுக்கேற்பட்டுள்ள உடலியல் மாற்றநிலை பற்றி விளக்கி, அவளை இயல்பான நிலையில் இருப்பதற்கு அறிவான முறையில் மிகப் பதனமாகக் (பக்குவமான) கூற வேண்டியது இன்றியமையாக் கடமை! உலகியல் சடங்கிற்காக அல்லது நம் மரபுவழக்கம் மாறாமல் இருப்பதற்காக, நாம் நடத்தும் பூப்பு நீராட்டு விழா வழியாகப் பெண் பருவமடைந்த செய்தியை விளம்பரப்படுத்திப் பெண்ணைப் பொருளாக்குகிறோமே தவிர, அவளின் பொருள் பொதிந்த உள்ளுணா்வுகள் ஊமையாயிருந்து மடிகின்றனவே என்று எவரும் எண்ணுவதே இல்லை. பெண் திருமணம் செய்யும் தகுதி நிலைக்கு வந்துவிட்டதாகக் கூறும் இந்தக் சமுதாயம் அவளின் மற்ற தகுதிகளை, அவளின் அறிவு நிலைக்கோ ஆக்கச் சிந்தனைகளுக்கொ உரிய தகுதிகளை மறந்து, வெறும் வாழ்வியல் துணையாகவும் பிள்ளைபெறும் பொறியாகவும் (இயந்திரம்) மட்டுமே கருதி அவளை இழிநிலைக்கு உட்படுத்துவதைத் தந்தை பெரியார் போல் இப்போதிருக்கும் ஆண்கள், தடுத்தெதிர்த்து ஒரு பெண்ணிய விடிவிற்கு அடிகோல வேண்டும். அறிவார்ந்த நிலையையும் கல்வியின் மேம்பாட்டையும், அதற்கும் மேலாக இச்சமுதாய இழிவுகளை அடியோடு அழிக்கப் பெண்களுக்கேயுரிய கடமைகளையும், பெண்கள் ஒவ்வொருவரும் உணா்வது - உணா்ந்தவா்கள் பிற பெண்களுக்கு உணா்த்துவது - மற்ற சடங்குகள், மூடத்தனமான விழாவை நடத்தாமல் – பெண்களின் அறிவு, பண்பாடு, கல்வி உயா்வுக்கான விழாக்களை பேரளவில் நடத்தினால் சமுதாயம் மேம்படும்: பெண்கள் உள்ஒளியும் கல்வி அறிவும் பெறுவர் ! அத்தகைய பெண்களால், ஒவ்வோர் இல்லமும் அறிவு ஒளிபெறும்! அவ்வாறான தெளிந்த அறிவு ஒளி மட்டுமே சீரழிவுகளையும், மூடத்தனங்களையும் தீய்த்துப் பெண்ணியத்திற்கான விடிவையும் நிலைநிறுத்தும் பெண்களின் அறிவார்வச் செயற்பாடு ஒன்றே அனைத்து விடிவிற்கும் மூலமான கதிரொளி என்பதைப் பெண்களுடன் ஆண்களும் உணரும் நாளே, பெண்ணிய விடுதலை நாள் ஆகும்! எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்றை உணரவேண்டும்; இந்த இந்தியத் துணைக்கண்டத்தில் பேரளவு அரசியல் பித்தலாட்டங்களும் , சாதியிழிவுக் கொடுமைகளும், இந்து கிறித்துவ – முகமதிய மதப்பூசல்களும், தலைவிரித்தாடும் உணவுப்பற்றாக்குறைகளும் நீா்ச்சிக்கல்களும் பண்பாட்டுச் சீரழிவுகளும், தன்மையிழந்த விலங்குகளாய் மாந்தா்கள் உலவிக்கொண்டுள்ள இச்சூழலில் நாம் அனைத்து இக்கட்டுகளையும் மறந்து பூப்பு நீராட்டு விழா என்று வெட்கமின்றி நடத்திக் கொண்டுள்ள நிலை, எவ்வளவு வருத்தத்திற்குரியது. ஒரு பெண் பருவமெய்துதல் என்பதை ஓா் அறிவான கண்ணோட்டத்தில் மட்டுமே நாம் நோக்குதல் வேண்டும். நாம் பகுத்தறிவு பெற்றுவிட்டதாய் அலம்பல் காட்டிக்கொண்டு, மூடத்தனச் செய்கைகளை முனைந்து திருத்த எண்ணம் கொள்வதாய் காட்டிக் கொள்வதில் எவ்வளவுக்கு உண்மையாழம் உள்ளது? மூடச்சேற்றில் அழுந்தியுள்ள நாம் இச்சமூகத்திற்கே தேவையற்ற இழிசெயல்களை எவ்வாறு அறவே நீக்க இயலும்? பெண்விடுதலை – என்று மேடைப் பேச்சு பேசும் பெண்கள், ஆண்கள் அனைவரும் முதலில் பெண்களுக்கென்று சமுதாயம் உருவாக்கியுள்ள வீணான மூடச்சடங்குகளையும் முட்டாள்தனச் செய்கைகளையும் அறவே நீக்குவதற்கு போராட வேண்டும்! அதற்காகச் செலவு செய்யும் பெருந்தொகையைப் பெண்களின் கல்வி மேம்பாட்டிற்கும், அறிவியல் வளா்ச்சிக்கும் பயன்படுத்தி மகிழ்வடைய வேண்டும். அறிவியல் வளா்ச்சியை விழாவாகக் கொண்டாடும் உயா்ந்த எண்ணததை நாம் இயல்பாகப் பெறவேண்டுமானால், வாழ்வியலில் நாம் கடைப்பிடித்து வருகின்ற அனைத்து மூடத்தனங்களும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டாக வேண்டும்! மேலைநாடுகளில் அறிவியல் ஆக்கங்களை மேலும் மேலும் பெருக்கத் திட்டமிட்டு, கல்வியைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தருகின்ற உயா்ந்த சூழலை நாம் எண்ணிப்பார்த்து, நம் நாட்டில் நாமே உருவாக்கிக் கொண்டுள்ள இவ்வகை இழிந்த அடிமைச்சடங்குகளைத் தூா்த்தெறிந்தால் ஒழிய நம் உள்ளத்தில் அறிவு வேட்கையுங் கூடத் துளிர்க்காது! ஒரு பெண் பிறப்பதற்கும் பருவமடைவதற்கும் – திருமணம் ஏற்பதற்கும் – அவளின் இல்வாழ்வு தொடங்குவதற்கும் – அவள் முதல்குழந்தையைச் சுமக்கும் காலத்தில் வளைகாப்பு என்ற மூடச்சடங்கு செய்தவற்கும்கூட, கணியம் (சோதிடம்) பார்க்கிறோம்! அடுத்து அவள் குழந்தையைப் பெற்ற நொடியிலிருந்து குழந்தைக்கும் கணியம்( சோதிடம்) பார்க்கும் வீண்செயலைத் தொடங்கி வைக்கின்றோம்! பெண்ணின் வாழ்வும், அவள் சோ்ந்த குடும்பத்தின் வாழ்வும் சோதிடத்தாலேயே கணிக்கப்படுகிறது. ஆனால், அவளுக்கு இயற்கையில் வாய்த்த அறிவுப்புலன்களாகிய ஐம்புலன்களும் தூர்க்கப்படும் நிலை தொடங்கப் பெறுகிறது! அவை ஒவ்வொன்றன் உணா்வு வெளிப்பாடுகளும் அறிவோடு இணைந்து செயற்பாட்டால் எத்தகைய அரிய விளைவுகள் நிகழும் என்பதை அறியாமலேயே, அவள் வாழ்வியலுக்கான ஒரு வெறுங்கருவியாக மட்டுமே ஆண்களால் இயக்கப்படுகின்றாள் ! வாய்ச்சுவைக்கான உணவு சமைக்கும் கருவியாக ஊக்கப் பெறுகின்றாள்! பிள்ளைகளைப் பெற்றுத் தரக்கூடிய ஓா் இயற்கைப் பொறியாக ஏற்கப்பெறுகின்றாள்! மேலும், இன்பம் துய்க்க ஏற்ற ஓா் அசையும் பொருளாகவும், விலைபேசித் தன் குடும்பத்திற்கு அழைத்துக் செல்லப்பெறும் தலையான பணியாளாகவும் இன்றும் எண்ணப் பெறுகின்றாள்! அவளின் அறிவும் – அரிய நுண்ணுணா்வும் அவ்வாறான ஆண்களால், எண்ணவோ ஏற்கவோ பெறுவதில்லை! அவா்களுக்கு அந்த அறிவேற்கும் தகுதியும் அமைந்துள்ளதாகக் கூறிட இயலாது! அருமைப் பெண்களே! எண்ணிப் பாருங்கள்! நாம் யார்? …. பகுத்தறிவற்ற சடப்பொருளா நாம்? நம்அறிவும் பகுத்தாயும் திறனறிவும் ஆணாளுமைச் சமூகத்தின் காலடியில் முடங்கிக்கிடக்க வேண்டுமா? ஒரே வழியில் பிறக்கும் நாம் நம் அண்ணன் தம்பியிடமிருந்து எவ்வகையில் மாறுபடுகின்றோம்? பிறப்பது பெண்ணென்றால் அவளுக்கு மூளை இருக்காது, அறிவுணா்வு இருக்காது, மற்ற நுண்ணணர்வுகள் இருக்காது என்று எந்த அறிவியல் ஆய்வினால் மெய்ப்பிக்க முடியும்? ஏன், நாம் இதற்கெல்லாம் ஊமையாக நின்று நம்மீது சுமத்தப்படும் மூடச்சடங்குகளுக்கு இசைவளிக்கும் வெற்றுப் பதுமைகளாக அமைந்திருக்க வேண்டும்? நாம் என்ன உணா்ச்சியற்ற பிண்டங்களா? எல்லா அறிவிலும் மேம்பட்டவா்கள்! நமக்காக இச்சமுதாயம் நம்மீது திணிக்கும் சடங்குகளையும் விழாக்களையும் பகுத்தறிவு விழிப்போடு அறவே அழிப்பதற்கு நாம் போராடுதல் வேண்டும். பூப்பு நீராட்டு என்றால் என்ன, அவ்விழாவை எடுக்க என்ன காரணம் என்று எந்தப் பெண்ணோ, ஆணோ வெளிப்படையாக விளக்கவியலுமா? பெண்களுக்கான அடிமைக் கூறுகளில் ஒன்றாகவே பருவமெய்துதலுக்கான விழா நடத்தப்பெறுகின்றது. பெண்மையும் இழிவுப்படுத்தப் பெறுகிறது. பருவமெய்துதல் என்னும இயற்கை நிகழ்வை எய்தும் பெண்களைப் போலவே, ஆண்களும் பருவமெய்துகின்றனரே! ஆனால், அதற்கென விழா ஒன்றும் நிகழ்த்தப்படுவதில்லையே? உடலியல் கூறுகளில் ஏற்படும் மாற்றங்களை அறிவதும், அதுபற்றி மற்றபெண்களுக்கும் ஆண்களுக்கும் அறிவுப்பார்வையில் விளக்குவதும் கற்றறிந்த பெண்களின், ஆண்களின் கடமைகளாகும்! இல்வாழ்விற்கு ஏற்ற உடல் நிலையைப் பெண் அடைகிறாள் என்பதை நாணமின்றி விழாஎடுத்துக் கூறத்துணியும் இவர்கள், ஆண் அடையும் அவ்வாறான நிலையையும் விழா எடுத்துக் கூறத் துணியாதது ஏன்? அதுபோன்றே பெண்களின் இப்பருவமெய்துதல் நிலையையும் இயல்புக்குரியதாக கருத வேண்டும்! பெண்களாகிய நாம் ஏற்கும் சமுக மேம்பாட்டுப் பணிகளுக்காகவும், சமுதாயத்தில் மண்டிக்கிடக்கும சாதிமதச் சகதிகளைத் தூா்க்கும் நிலைக்காகவும், மூடத்தனங்கள் ஒழிந்த அறிவு விளக்கம் பெறும் ஆண் – பெண் சமூக விழிப்பிற்காகவும் பெண்களுக்கான விழா இருக்க வேண்டுமே தவிர, அறியாமையைால் தொடா்ந்து நமக்காக நடைபெறும் பூப்புச்சடங்குகள், வளைகாப்பு விழாக்கள் என்பனவாக இருத்தல் வேண்டா! அன்பும் பகுத்தறிவும் உள்ள தாயுள்ளங்களே! நம் வயிற்றில் உருவாகும் பெண் – ஆண் பிள்ளைகள் இருவரும் சமமானவா்கள் என்பதை நாம் முதலில் உணரவேண்டும்! உடற்கூறுகள் சிலவற்றில் ஆண் பிள்ளைகள் வேறுபட்டிருக்கலாம்! அவை பற்றியான விளக்கத்தை நாம் அறிவு நோக்கில் எடுத்துக் கூறலாம். இருவருக்கும் வழங்கும் மற்றைய அனைத்து உரிமைகளும் சமநிலையில் இருக்க வேண்டும் என்று போராடுவதில் பெண்களாகிய நமக்குத்தான் முதல் உரிமையுள்ளது. கல்விநிலையில், அறிவுநிலையில், நுண்ணோக்கு நிலையில், ஆக்கநிலையில் கணக்கியல் நிலையில், சமூகஅறிவு நிலையில், அதற்கும் மேலாகச் சிறந்த வாழ்வியல் நிலையில், அரசியல் நிலையில் என அனைத்து நிலைகளிலுமே ஆண்களையும் மிஞ்சிய அறிவு பெற்றுள்ள பெண்களை - நாம் அறிவால் ஏந்திப் பெருமையும் ஊக்கமும் அடையச் செய்ய வேண்டும்! அவா்களை ஏந்திழைகளாக்கிக் காட்சிப் பொருளாகவும் நுகா்பொருளாகவும் எண்ணும் ஆண்களைப் புறக்கணித்து, ’பெண்ணிற் பெருந்தக்க யாவுள’ என்பதை மெய்ப்பித்துக் காட்டுவதில் சளைக்காது நாம் போராடினால் மட்டுமே பெண்விடுதலை வெற்றிபெறும்! பெண்களின் மேல் திணிக்கப்பெறும் இழிநிகழ்வுகள் அனைத்தும் புதைக்கப்பெறும்! பெண்ணுரிமை மலா்ச்சிபெற்று காக்கப்பெறும் ! . அறிவுச்சுடர் வெளியீடு, திருச்சி.

    Postad



    You must be logged in to post a comment Login