Recent Comments

    Hanami In High Park

    வசந்த காலம் பிறந்தால், பூக்கள் மலர ஆரம்பிக்கும்.

    வீட்டுக்கு முன்னால் எப்போதோ வைத்த குமிழ்களான Crocus, Hyacinth தில் ஆரம்பித்து Tulips வரைக்கும் வருடா வருடம் பூத்துக் குலுங்கி, அட்டகாசமாக போவோர் வருவோரை ஒரு தடவை வீட்டை திரும்பி பார்க்க வைக்கும்.

    வீட்டின் பின்னால் உள்ள மரங்களும் பூத்துக் குலுங்கும்.

    முதலில் Apricot பூக்கும். பின்னால் குளிர் வந்து பூக்கள் உதிராவிட்டால் மட்டுமே பழங்கள் கிடைக்கும்.

    அதன் பின்னால் Crab Apple எனப்படும் நாவல்பழ சைஸ் அப்பிள் மரமும் ஒரே மரத்தில் ஐந்து வகை பழங்கள் வரும் Cherry மரமும், ஜப்பானிய plum மரமும் பூக்கும்.

    அப்புறம் அப்பிள் மரம்!

    வேலை முடிந்து வந்த பின்னால் அவற்றை படம் பிடிப்பது என்பது பிடித்தமானதொரு பொழுதுபோக்கு.

    நம்ம வீட்டு செரி மரங்கள் போலன்றி, Sakura என அழைக்கப்படும் ஜப்பானிய செரி மரங்கள் பழங்களைத் தருவதில்லை. கண்ணைக் கொள்ளை கொள்ள pink நிறப் பூக்களை அள்ளித் தரும்.

    ஜப்பானில் வசந்த கால வருகையைக் குறிக்கும் செரி மரங்களின் பூத்துக் குலுங்கலை ஒரு (தெரு!)விழாவாகவே கொண்டாடுகிறார்கள்.

    பூக்களைப் பார்வையிடல் என்ற கருத்துக் கொண்ட Hanami என்ற பெயரில் இந்த கொண்டாட்டம் நடக்கும்.

    அரச குடும்பத்தினரால் கடைப்பிடிக்கப்பட்ட இந்த பாரம்பரியம் சமுராய் போர்வீரர்களுக்கும் வழமை போல கடைசியில் சாதாரண மக்களுக்கும் போய் தற்போது பூங்காக்களில் இந்த மரங்களின் கீழ் அமர்ந்து உணவு உண்டு குடித்து மகிழும் நிகழ்வு கோலாகலமாய் நடைபெறும்.

    இரண்டு வாரங்கள் மட்டுமே அழகைக் காட்டி உதிர்ந்து போகும் இதன் பின்னணியில் 'அழகின் நிலையாமை' என்ற கருத்து நினைவூட்டப்படுவதாக ஜப்பானியர்கள் கருதுகிறார்கள்.

    இம்முறை ரொறன்ரோவில் உள்ள High Park கில் ஜப்பானிய செரி மரங்கள் பூத்துக் குலுங்குவது பற்றி ஊடகங்கள் பெரிதாக ஊதிப் பெருப்பித்தன.

    கட்டாயமாகப் போய் படங்கள் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம்.

    Sakurainhighpark இணையத்தளம் வைத்திருப்பவர் அடிக்கடி போய் பார்த்து... இந்தா முகிழ் விட்டு விட்டது, இந்தா இதழ் விரிந்து விட்டது என்ற மாதிரி நேர்முக வர்ணனை ரீதியில் பதிவு செய்யப் போய் ஒரு ஊடகங்களால் பேட்டி காணப்படும் மீடியா ஸ்டார் நிலைமைக்கு போய் விட்டார்.

    யுத்தம் முடிந்த பின்னர் பகை நாடுகளுடன் நட்புணர்வுக் குறியீடாக கனடாவிற்கு கொடுத்த ஆயிரக்கணக்கான செரி மரங்களில் நூற்றுக்கணக்கானவை ஹை பார்க்கில் நாட்டப்பட்டு அதன் பூத்துக் குலுங்கலை பல்லாயிரக்கணக்கான ரொறன்ரோ வாசிகள் வருடாந்தம் ரசித்து வருகிறார்கள்.

    பார்வையிட வருவோ கண்ட இடங்களில் கார்களை தரிப்பிடுவதால் ஏற்படும் அசௌகரியங்களை மனதில் கொண்டு இம்முறை பூங்காவிற்குள் கார்கள் நுழையத் தடை.

    நேரம் கடந்தால் திருவிழாக் கூட்டத்தில் படம் எடுக்க முடியாதே என்று நீண்ட நாட்களின்பின் பாதாள ஊர்தியில் காலை எட்டரை மணிக்கு ஆஜராகிய போது, ஏற்கனவே பலரும் படங்கள் எடுத்தவாறிருந்தார்கள்.

    இணையத்தில் பார்த்த ஜப்பானிய தெருவிழாக்களின் படத்தைப் பார்த்து பெரிய பூக்காடு என்ற கற்பனைப் போனால்... ஒரே ஏமாற்றம் தான்!

    மிகப் பெரிய பூங்காவில் சிறு பகுதி ஒன்றில் மரங்கள் பூத்துக் குலுங்கினாலும், கண் கொள்ளாக் காட்சி என்று சொல்ல மனம் ஒப்பவில்லை.

    நம்மை விட கனரக ஆயுதங்கள் கொண்டு வந்த சிலரை விட, பெரும்பாலோர் செல்பிக் கூட்டம் தான்.

    ஆரவாரத்தோடு நேர்முக வர்ணனை, பேஸ்புக் ஒளிபரப்பு என்று செல்போனோடு எல்லோரும் ஒரே அமர்க்களம்!

    இதற்குள் மொடல் அழகிகளைக் கூட்டி வந்து ஸ்டுடியோ செட்டப்புகளுடன் வந்து பூக்களின் பின்னணியில் படம் எடுத்தவர்கள் ஆங்காங்கே விலாசம் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

    ஒரு சாமத்தியப்பட்டிருக்கக் கூடிய இளம் பெண் ஒருத்தியை தமிழ்த்தாய் ஒருவர் போட்டோகிராபரைக் கூட்டி வந்து, உடைகள் மாற்றி படம் எடுப்பித்துக் கொண்டிருந்தார்.

    திடீரென்று நரி வெருட்டி... ஒரு எண்ணம் தோன்றியது!

    பூக்களைப் படம் எடுப்பதில் என்ன சுவாரஷ்யம்? அதைத் தான் எல்லோரும் எடுக்கப் போகிறார்கள். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கலங்கப் போகிறது!

    இந்த செல்பி எடுப்போரைப் படம் எடுத்தால் என்ன?

    ஏற்கனவே வீட்டில் செரிப் பூக்களின் குளோசப் படங்களை எடுத்து தள்ளியாயிற்று. ஏதோ ஒரு எண்ணத்தில் 'இருந்தாலும் கொண்டு போவோம்' என்று Telephoto குவியையையும் கொண்டு போனது நல்லதாய் போச்சு!

    சுட்ட படங்கள் நிறைய!

    அதில் பூப் படங்களும் உண்டு!

    நகரில் பல இடங்களில் இந்த மரங்கள் நடப்பட்டிருப்பதாகவும் இவ்வளவு தூரம் வந்து அலையாமல் உள்ளூரிலேயே பார்த்து ரசிக்கலாம் என்று நகரசபை அறிவிப்பு சொன்னதால்...

    ஸ்காபரோவில் நடப்பட்ட மரங்களையும் படம் பிடிக்கலாமே என்று மறுநாள் காலையிலே போனால்...

    ஆளரவம் கிடையாது.

    சில வருடங்களுக்கு முன் நட்ட சிறிய மரங்கள் பூத்திருந்தன.

    பூத்துக் குலுங்க இன்னமும் பத்து வருடங்கள் எடுக்கலாம்.

    என்னையும் விட கனரக ஆயுதத்தோடு வந்த சீனப் பெண் ஒருத்தி அதைப் படமெடுக்கப் போக...

    அனாவசியமாய் எதற்கு என்று காரிலிருந்து இறங்காமலேயே திரும்பி விட்டேன்.

    என்னவோ, சனங்கள் அள்ளுப்பட்டு வந்த இந்த தெருவிழாவை விட, என் வீட்டுக் கொல்லைப்புறம் வந்தீர்களாயின் இதை விட அழகாக பூக்கள் பூத்துக் குலுங்கும்!

    என்ன, நுழைவுக் கட்டணமாக தோட்டத்தில் கொஞ்ச நேரம் கொத்தி உதவ வேண்டியிருந்திருக்கும்.

    சுட்ட படங்களின் தொகுப்பு இது.

    ஷேர் பண்ணுங்க! 24 மணி நேரத்தில் சுப செய்தி உங்களைத் தேடி வரும்!

    Postad



    You must be logged in to post a comment Login