Recent Comments

    இயற்கைத் தாயே! இது என்ன நீதி?

    Curious Floodபேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி

    வெள்ளம்... தீவுகள் போல நகரங்கள்... வாகனங்கள் ஓடிய இடத்தில் வள்ளம் ஓடும் பாதைகள்... ஓடும் நீரின் வேகம் தாங்காமல் இடிந்து விழும் பாலங்கள்... வெறும் கூரை மட்டுமே தெரிகின்ற குடிசைகள்... நல்ல காலம், வெள்ளத்தோடு சூறாவளியும் போனசாக வந்திருந்தால், நிலைமையே வேறு! இந்த அழிவுகளை எல்லாம் தூர இருந்து வெறும் செய்திகளாகவே மட்டும் தெரிந்து, ஒரு 'த்சொ' கொட்டி விட்டு வேறு வேலை பார்க்கலாம்... எமது போராட்டம் போலவே! அல்லது ஹெலிகொப்டரில் பறந்து போய் பார்வையிட்டதாக போட்டோஷொப் விளையாட்டு விடலாம். யார் எவ்வளவு கொடுத்தார், ஏன் இவ்வளவு கொடுத்தார் என்று கண்ணுக்குள் எண்ணெய் விட்டு முகப்புத்தக ஸ்டேட்டஸ் கூட போடலாம்! ஆனால் அதற்குள் அகப்பட்டுப் பாதிப்புக்கு உள்ளாகின்றவர்களுக்கு...? பால் இல்லாக் குழந்தைகளையும், நடமாட முடியாத நோயாளிகளையும், வயோதிபர்களையும் வைத்துக் கொண்டு படும் அவலம்... சுற்றி வர நிறைந்து நிற்கும் தண்ணீருக்குள்ளும், குடிக்கத் தண்ணீர் கிடையாத கொடுமை... தட்டுகளை ஏந்தி வரிசையாக நின்று உணவு இரக்க வேண்டிய துயரம்... உறங்கவும், இயற்கைக் கடன்களைக் கழிக்கவும் முடியாமல் உபாதைப்படவும், நீரிலே மிதந்து வரும் பாம்பு, பூச்சிகளுக்கு அஞ்சவும்... அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும் இந்தத் துயரமெல்லாம். அடுக்குமாடி நகர வாசிகளுக்கு ஒரு நாள் தண்ணீரையும் மின்சாரத்தையும் நிறுத்தி விட்டால் தெரியும் இந்த நிலைமை. • • • அரசனும் ஆண்டியும் அறிஞனும் அசடனும் ஒன்றாய் உறங்குவது சுடுகாடுகளிலும், இயற்கைப் பாதிப்பினால் வரும் அகதி முகாம்களிலுமாகத் தான் இருக்கும். தங்களுக்குள்ளே வேறுபாடுகளை வரித்துக் கொண்டு, மனித இனத்துக்குள்ளும் என்ன, சொந்த இனத்திற்குள்ளும் உயர்வு, தாழ்வு பேதம் காட்டும் பேதைகளுக்கு... என் முன்னால் நீங்கள் எல்லாரும் ஒன்று என அடிக்கடி நினைவுபடுத்தி சமரசம் உலவச் செய்யும் இயற்கையின் விந்தைகளில் இந்த அழிவுகளும் ஒன்று. இயற்கையோடு போட்டி போட்டுக் கொண்டு, அதை மதிக்காமல் அபிவிருத்தி என்ற பெயரில் நடக்கும் கூத்துகளை அம்பலப்படுத்தி, மனித இனத்தின் நிர்வாணத்தைப் புரிய வைத்து, who is in control என்பதை நிருபிக்க அவ்வப்போது இயற்கையும் சீற்றம் கொண்டு துயில் கலைந்தபடி தான் இருக்கிறது. இந்த அழிவுகளுக்குள் தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே சிந்திக்கும் சுயநலச் சிந்தனை மனிதனின் குரூரமான சொந்த ரூபமும் தெரியும். அதே போல, சாதாரண மனிதர்களுக்குள் இருக்கும் தலைமைத்துவமும், வேறுபாடு மறந்து பகிர்ந்துண்டு, உதவும் இயல்பும் தெரியும். கழுத்தளவு தண்ணீருக்குள் குழந்தைகளைத் தலையில் வைத்த தாய்மார்களும், பிள்ளையைக் கழுத்தளவு நீரில் விட்டு, மறக்காமல் டிவியைத் தலையில் வைத்தவர்களும், சமூகமாக எழுந்து நின்று நிவாரணங்களைச் செய்தவர்கள், உணவு வழங்கியவர்களும், வேறெங்கோ போகும் நிவாரணங்களை வழிப்பறி செய்தவர்களும், அரசியல் லாபம் தேட முனைந்தவர்கள், முகப்புத்தகத்தில் ஜாலியாக அமர்ந்து கொண்டு எவன் எவ்வளவு கொடுத்தான் என்று கணக்கெடுப்பு எடுத்தவர்களும் என, மனிதரில் இத்தனை நிறங்களா என்று உண்மையான மனித இயல்புகளை, சுயரூபங்களை இவ்வாறான நெருக்கடிகளிலேயே காண முடியும். • • • எங்களுக்கும் மழை வரும். சாதாரண மழையில் குட்டையாய் தேங்கிய நீரில் பாடசாலை முடிந்து வரும் வழியில் காலால் அடித்து விளையாட, நீர்ச் சிரங்கு வரும். மண்ணெண்ணெய் அல்லது சிறுநீர் வைத்தியம் நடக்கும். அதிக பட்சமாய் முழங்கால் அளவு வெள்ளம்... நம்முடையது தான். உரிந்து விழும் காற்சட்டை நனையாமல்! வெறும் மழை பெய்தாலே, முப்பதடி ஆழக் கிணறு நீர் முட்டும். எட்டி நீரைத் தொடலாம். சுற்றி வரப் பாதுகாப்புக் கட்டில்லாத மொட்டைக் கிணறு. நீந்தத் தெரியாத அந்த வயதில் விழுந்திருந்தால், கிரேக்கக் கடற்கரையில் கிடந்த சிரியச் சிறுவன் போல மிதந்திருக்கக் கூடும். இருந்தாலும் மழை காலத்தில் மழையில் நனைந்தபடியே, பூவரசில் தொங்கிய துலாவை இழுத்துக் குளித்து பாடசாலைக்குச் செல்ல வேண்டும். இதற்குள் ஒலையால் வேய்ந்த மண் குடிசையில் படும் பாடு சொல்லி மாளாது. மழை காலத்தில் நிலம் ஊறும். நிலத்தில் பாயில் படுக்க முடியாது. தென்னோலைக் கிடுகுக் கூரை ஓரிரு வருடங்களில் உக்கும். கூரைத் துளைகளுக்குள்ளால் மழை வந்து, வைத்திருக்கும் கிண்ணச்சட்டிகளுக்குள் நிறைக்கும். படுத்திருக்கும் போது தெறித்து தூக்கம் கலைக்கும். சுற்றி வர இருக்கும் தோட்டத்துப் பயிர்களுக்கு மழை உதவினாலும், செம்பாட்டு மண் களியாகி, போட்டிருக்கும் பாட்டா சிலிப்பர்களால் சிதறடிக்கப்பட்டு, பெல்பொட்டங்களை சேறாக்கும். சில நேரம் மட்காட் இல்லாத சைக்கிள்களின் பின் சில்லுகள் மழை நீரை சேட்டின் பின்புறம் வரை வாரியிறைத்ததும் உண்டு. பள்ளி நாட்களில் மழை வந்தால் தனிக் குஷி. ஆண்களுக்கும் பெண்களுக்குமாய் தனித் தனியாய் பஸ் விட்டு, கலாசாரம் காத்த பூமியில் கனவுக் கன்னிகளுடன் தோளுரச வசதியாக, நகரத்துப் பாடசாலைகள் எல்லாமே அரை நேர விடுமுறை. அடைமழைக்குள் நனைந்தபடி, தப்பாமல் கச்சேரி பஸ் பிடித்து வந்து, பலாலி பஸ்ஸில் முண்டியடித்து... இன்றைக்கும் அந்த ஆண்கள், பெண்கள் கல்லூரி அதிபர்கள் அமைதியில் இளைப்பாறுவர்களாக! வருண பகவானுக்கு வீர வணக்கம்! மழை முடிந்த கையோடு... எங்கோ மண்டையைப் போட்ட வயோதிபர்களின் மரணத்திற்கு அழைக்கும் மேள ஒலி... மிகவும் தெளிவாக பக்கத்தில் இருந்து வருவது போலக் கேட்கும். வாந்தி, பேதி, காலரா என்று ஈழநாடு பயமுறுத்தும். • • • செம்பாட்டு மண்ணில் ஊறி சில நாட்களில் மறைந்து போகும் மழைகள் நம் ஊரில் வெள்ளம் ஆவது அபூர்வம். ஆஸ்பத்திரி வீதி, மணிக்கூட்டு வீதியோரக் கழிவு வாய்க்கால்களில் நீர் நிறைந்தோடுவதை பாடசாலை பஸ்ஸில் இருந்து விடுப்புப் பார்க்கலாம். நாகவிகாரைக்கு எதிரே, ஆரியகுளத்தில் ஒரு கால் ஊன்றி நின்ற சனசமூக நிலையக் கட்டடத்தின் காலில் யாரோ புத்திஜீவி கீறிய அடி மட்டத்தை மறைத்த நீரின் அளவை பஸ்ஸிலிருந்து தினசரி எட்டிப் பார்த்ததுண்டு. மழை றோட்டை மேவிப் பாயும். குளங்கள் நிரம்பி, கான்களை நிறைத்து மாநகரசபை, றியோத் தியேட்டர் கழிமுகத்தால் கடலில் பாயும். பள்ளக் காணிகள் குளமாகும். நீர்வேலி வாய்க்கால் தரவை போன்ற வெளிகள் கடலாகும். வீடுகளுக்குள் வெள்ளம் நுழைவது அபூர்வம். பள்ளம் நாடிப் பயிர் செய்தவர்களின் குடிசை வீடுகள் தவிர! ஆறும் குளங்களும் ஊரில் அபூர்வமானவை. மழை நீரைத் தேக்கிக் குடிக்க வேண்டிய அவசியம் இல்லாமல், சுண்ணாம்புப் பாறைகளுக்குள் தேங்கிய குடிநீர். வடிகால்களின் வசதியை விட, மண்ணின் இயல்பு... எந்த மழையையும் உறுஞ்சித் தள்ளும். வெள்ளத்தினால் அகதிகளானதில்லை. மிஞ்சிப் போனால் ஏழைகள் பாடசாலைகளில், கோயில்களில் தஞ்சம் புகுவார்கள். எந்த மழை வெள்ளத்திலும் சிங்கள பாண் மாத்தயாக்கள் தப்பாமல் பாண் வினியோகம் செய்வார்கள். சமையல் பிரச்சனை இல்லை. தோட்டத்து வாழைப்பழங்களுடனும், அட்டைகள் ஊரும் அம்மியில் அரைத்த சம்பலுடனும் தேசிய உணவு பசி தீர்க்கும். 78 மட்டில் மட்டக்களப்பில் புயலோடு சேர்ந்து வந்த மழை நிகழ்த்திய கொடுமை எங்களுக்கு வெறும் வானொலிச் செய்தி தான். தென்பகுதி வெள்ளங்கள் வீரகேசரிச் செய்தி. மலையகத்தில் வருடா வருடம் மண் சரியும். மக்கள் இறப்பார்கள். தினகரன் செய்தி தரும். வருடாந்தம் தவறாத பங்களாதேஷ் வெள்ளம் ரூபவாகினி புண்ணியத்தில் எங்கள் வீடுகளுக்குள்ளும் வந்தது. எல்லாமே செய்திகள் தான். நல்ல காலம், அதை வைத்து பணம் திரட்டிச் சுருட்ட, புலன் பெயர்ந்த நாடுகளில் தற்போது இருக்கும் திருட்டுக் கூட்டம் அன்றைக்கு இருக்கவில்லை. சமூகமாகவே, லொறிகள் பிடித்து கிடுகுகள், உதவிகள் என மட்டக்களப்புக்கு அனுப்பி வைத்தார்கள். • • • மேல்நாட்டவர் போல, சந்திக்கும் போதுகளில் அந்நியமானவர்களுடன் உரையாடலை ஆரம்பிக்க, காலநிலை என்றைக்கும் எங்களுக்கு அவசியப்பட்டதில்லை. மார்கழிப் பனிக் குளிர் விலக வரும் பத்து மணி இளவெயில் எறிக்கும் நேரத்தில், 'பியூட்டிபுல் டே' என்று பஸ்ஸிற்குள் பக்கத்தில் நிற்கும் யாழ்ப்பாணிக்கு சொன்னால், 'உனக்கு என்ன பிரச்சனை? மண்டை பிழையோ?' என்பது போல பார்வை இருக்கும். இயற்கையின் கொடைகளை ரசிப்பதும், நன்றியுடன் நினைப்பதும் நமக்குப் பழக்கமில்லை. அது, அதற்கு என அந்தந்தக் காலங்கள் இருந்தன. மழை, பனி, காண்டாவனம், சோளகம், கொண்டல், கச்சான்... அந்த வழமைகளை மீறி, பூகம்பங்களும் சுனாமிகளும் எங்களுக்கு அந்நியமானவையாக, செய்திகளாகவே இருந்தன. இடைக்கிடை வீசும் புயல்கள் தவிர! ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் தன் கடமைக்கு, மத்தியானச் செய்திக்குப் பின்பான வானிலை அறிக்கையில், வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட பவன அமுக்கத்தினால், பலத்த இடியுடன் கூடிய மழை என்று வானிலை அறிக்கை தரும். புயல் காரணமாக, தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களை எச்சரிக்கும். போர்த்துக் கட்டிக் கொண்டு தூங்கலாம். கதகதப்பாய் இருக்கும். அந்த வயதில்... அணைத்துக் கொள்ள ஆள் இருக்கவில்லை. இப்போதைய கடுங்குளிர்களில் ஆள் இருக்கிறது. அணைக்க முடியவில்லை. அவ்வளவு தான். தமிழ்நாட்டில் பெரும்புயலுடன் கூடிய மழையில் பாம்பன் பாலத்தில் புகையிரதம் இழுத்துச் செல்லப்பட்டதோ, என்னவோ பலர் இறந்த செய்தியைப் படித்த ஞாபகம். விமானங்களில் இருந்து உணவுப் பொட்டலங்கள் வீசப்பட்ட செய்திகளைப் படித்து... 'ஆக்களுக்கு மேல விழுந்தால்' என்று அனாவசியத்துக்கும் கவலைப்பட்டதுண்டு. 'பாண் மழைக்குள்ள விழுந்தால் நனையாதோ?' என விசனப்பட்டதும் உண்டு. • • • வெள்ளத்தில் உயிரிழப்பு என்பது எங்களுக்கு அபூர்வமானது. நீரில் மூழ்கி இறப்பவர்கள் எல்லாம் கீரிமலைக்கும் காரைநகருக்கும் போய் கள்ளடித்த வெறியில் நீந்தப் போய் மூழ்கிய இளசுகள், குடாநாட்டுக்கு அப்பால் குளங்களில் முதலைகளால் இழுத்துச் செல்லப்பட்டவர்கள், காதல் தோல்வியில் கிணற்றில் விழுந்து இறந்தவர்கள் என 'நமது நிருபர்'கள் என அந்நாளிலும், 'ஊடகவியலாளர்கள்' என இந்நாளில் அர்த்தமில்லாமல் அழைக்கப்படுபவர்களின் செய்திகளானவர்கள் தவிர, முழங்கால் அளவு வெள்ளத்தில் நீரில் மூழ்கி இறக்கக் கூடியளவுக்கு 'தண்ணியில் கண்டம் உள்ளவர்கள்', நம்ம ஊர் கசிப்பைக் குடித்து விழுபவர்களாகத் தான் இருக்கும். அந்த நேரம் இயக்கங்கள் இருக்கவில்லை. இருந்திருந்தால், இவ்வாறு இறந்தவர்கள் எல்லாம் மாவீரர்களாகப் பாடல் பெற்றிருப்பார்கள். சில நேரம் வன்னிக்குள் மழை பெய்து, இரணைமடு உடைக்கப் போகிறது, கட்டுக்கரைக் குளம் உடைக்கப் போகிறது என்று செய்தி வரும். இதனால் நமக்கென்ன? அந்த வெள்ளம் சுனாமி மாதிரி வந்தாலும், ஆனையிறவுத் தடைமுகாமைத் தாண்டி வர முடியாது. நம் ஆரியகுளம், புல்லுக்குளம், தேவரிக்குளம் எல்லாம் நிரம்பினாலும் குடிகளுக்கு பெரும் பாதிப்பு இருக்காது. யாழ்ப்பாணம் தண்ணீர் தாங்கியடியில் மட்டும், ஆங்கிலக் கன்னியர் மடத்துக்கு அருகில் போகும் வாய்க்காலில் கொட்டில் வீடு கட்டியவர்கள் இடம் பெயர வேண்டி வரும். மொத்தத்தில் நமக்கெல்லாம் வெள்ளத்தினால் பிரச்சனை இருந்ததில்லை... பிறகு இரத்த வெள்ளத்தால் வந்தது வேறு கதை! தண்ணியில் கண்டம் இல்லாமல் தப்பியவர்கள், இரத்தத்தில் கண்டம் கண்டார்கள். எது நடந்தாலும் வேலி அடைத்துக் காத்த தன் வீட்டிலிருந்து யாழ்ப்பாணி நகர்ந்ததில்லை. அந்த யாழ்ப்பாணிக்கு வேலையைக் கொடுக்க, இயற்கை ஒருவரை அனுப்பி வைத்தது. தப்பாமல் காணி, பூமியை விட்டு அகதியாக்கப்பட்டான். முகாமில் தட்டேந்தினான். மறக்காமல் அதிலும் சாதி பார்த்தான். • • • ஆனாலும்... எங்களுக்கும் வெள்ளம் வந்தது... 67ம் ஆண்டாக இருக்க வேண்டும். தொடர்ந்த மழை. நோவாவின் கப்பல் செய்து, வளர்த்த ஆடுகளையும் நாயையும் பாதுகாப்பாகக் கொண்டு போகும் கற்பனை செய்யும் வயது. பாடக் கொப்பிகளைக் கிழித்து வள்ளம் செய்து முற்றத்தில் மிதக்க விட்ட வெள்ளம் வீட்டுக்குள் வந்தது. இதொன்றும் கல்லாலும் சீமெந்தினாலும் கட்டிய கோட்டை இல்லை. பாலைமரத் தூண்கள் தாங்கிய கிடுகு முகடும், தென்னோலைத் தட்டிகளும் என, ஓரடி முதல் நான்கு அடிக்கு மேல் உயரா மண் சுவர்களில் அமைந்த குடிசை... வெள்ளத்தில் சமைக்கும் சட்டி, பானைகள் முதல் கழிவுகள் வரை மிதந்தன. நாங்களும் அகதிகளானோம். முகப்புத்தகத்தில் வந்த படத்தில், நீரில் சேட்டில்லாமல் நெஞ்சளவு நீரில் தெப்பமாய் நனைந்தபடி, தெப்பத்தில் இருந்து வழங்கப்படும் உணவை ஏந்தும் சிறுவன் வயதில் நானும், அப்பாவும், ஆச்சியும், கொஞ்சம் மேட்டில் இருந்த கல்வீட்டு உறவினர் ஒருவர் வீட்டில் அழையா விருந்தாளிகளானோம். அப்பா எங்கோ கடையில் தோசை வாங்கி வந்தது இன்றும் ஞாபகம். வீட்டில் இருந்த கிழவர், கால்கள் வழங்காமல் நடக்க முடியாமல் இருந்தார். நாங்கள் அங்கே அத்துமீறி நுழைந்ததையிட்டு, புறுபுறுத்துக் கொண்டே இருந்தார். வீட்டுக்கு வந்தவர் விரும்பாவிட்டாலும், தேநீரை கையில் திணிக்கும் யாழ்ப்பாணியின் விருந்தோம்பல்! என்ன செய்வது? அகதிகள் ஆனால், உங்களுக்கு எந்தத் தெரிவும் இல்லை! தலைகுனிவோடு அவமானத்தை எதிர்கொள்ள வேண்டியது தான்! • • • நெல்லுக்கு பெய்யும் மழை நீர் புல்லுக்கும் பொசிவது நல்ல விசயம் தான். ஆனால் சில நேரம் சமரசத்தை வலியுறுத்த, மேலோர்கள் மேல் சீற்றம் கொள்ளும் இயற்கை, ஏற்கனவே நொந்து போயிருக்கும் கீழோர்களான ஏழைகளையும் பாகுபாடில்லாமல் தண்டித்து விடுகிறது. தற்காலிகமாய் கையேந்தினாலும், முடிந்தவர்களால் மீளவும் கட்டியெழுப்ப முடியும். வாழ்வே கையேந்துதலாய் இருக்கும் எதுவுமற்றவர்களும், ஏழைகளும், எப்படி தலை நிமிர்வது? இயற்கைத் தாயே! இது என்ன நீதி?

    Postad



    You must be logged in to post a comment Login