Recent Comments

    யாரை நோவோம்?

    டேவிட் ஐயாவின் மரணம் முகப்புத்தகத்தின் தற்போதைய அவல். முகப்புத்தகத்தில் வெறுவாய் மெல்லுவதே பலருக்கு வாழ்வாகிய நிலையில், (காலை வணக்கம், நண்பர்களே!) ஐயா அவலாகி கொஞ்ச நாளைக்கு களை கட்டுவார். பின்னால் வழமை போல மறக்கப்படுவார். (யாருக்காவது நீலமும் சிவப்புமாய் சட்டையணிந்து, கடற்கரையில் ஒதுங்கிய அந்தச் சிரியச் சிறுவனின் படம் ஞாபகம் இருக்கிறதா?) வெளிநாடுகளில் வசதியான வாழ்வுக்கு வாய்ப்புகள் இருந்தும், வெளிநாட்டுக் கனவே வாழ்வாகிய ஒரு மண்ணில், அந்த மண்ணில் மாற்றத்தை ஏற்படுத்தவென எல்லாவற்றையும் துறந்து வாழ்ந்த ஒரு துறவி மனிதனின் மறைவு அந்த மண்ணில் எந்தச் சலனத்தையும் தரவில்லை என்பதில் மனம் துயரடைவது தவிர்ந்து வேறென்ன செய்ய முடியும்? காந்தியத்தை வாழ்வாக்கி, எளிய மனிதனாய் வாழ்ந்த ஒரு மனிதன் நினைக்கப்படாமல் போனதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. 'எங்களுக்கு காந்தி எண்டால் திலீபன் தான். உவர் உண்ணாவிரதம் இருந்த ஆக்கள் மாதிரி மெலிஞ்சவர் எண்டதுக்காக, நாங்கள் காந்தியவாதி எண்டு சொல்லேலுமே!' ஈழப் பட்டுத்துகிலுக்கு ஆசைப்பட்டு முள்ளிவாய்க்காலில் கோவணத்தோடு கிடந்த தமிழ்த் தேசியம் விழுங்கி ஏப்பம் விட்ட அப்பாவிகளில் அவரும் ஒருவர். பூர்வ புண்ணியம், புளொட் ஒட்டுக்குழு (வளர்ப்புப்பிராணி, துரோகி, றோ ஏஜண்ட்...) என்றெல்லாம் இணையத் தளங்களில் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் போய்ச் சேர்ந்திருக்கிறார். அல்லது இப்போதைய முகப்புத்தக யுகத்துக்கு முன்னால், 'இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தான்' என்று யாருக்குமே தெரியாமல் சவுக்குத் தோப்புகளில் புதைந்திருப்பார். 'தனிமனித சர்வாதிகாரியான கொலைகார முகுந்தன்' பற்றி குமுறிய ஒரு மனிதன், தமிழ்த் தேசியத்தின் கொடூர வடிவமான புலிகளின் மாயைக்குள்ளும் சங்கமித்து பிரபாகரனால் விடிவு கிடைக்கும் என்று நம்பியது தவறா? காலத்தின் கட்டாயமா? தீர்ப்பளிக்க முடிவில்லை. ஆனால், அது அவருடைய உயர்ந்த நோக்கையும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்த முடியாது. காந்தியச் சிந்தனை எமது சமுகத்தில் எத்தனையோ மாற்றங்களை உண்டு பண்ணியிருக்கக் கூடியது. மலையகத் தமிழர்களை எல்லைகளில் குடியேற்றி, சிங்கள மயமாக்கலுக்கு எதிரான உந்துசக்தியாக இருந்திருக்கக் கூடியது. ஆயுதம் தாங்கிய பகைவனுக்கு எதிராக தார்மீகத் திமிருடன் நிமிர்ந்து நிற்க வைத்திருந்திருக்கக் கூடியது. சர்வதேச தளங்களில் எங்கள் நியாயங்களை நிலைநிறுத்தியிருக்கக் கூடியது. தமிழ்த் தேசியம் ஆயுதம் தரித்து, நண்பர், துரோகி, பகைவர் வேறுபாடு தெரியாமல் போட்டுத் தள்ளிய காலத்தில் வந்ததால், காந்தியத்தின் அகிம்சை சிந்தனையும் மக்கள் மயமாக்கலும் அடிபட்டுப் (அல்லது அடி பணிந்து) போய் அதன் நோக்கங்களையும் தாற்பரியத்தையும் இழந்து சிதைந்து போனது. பட்டுத் துகில் கனவை நிறையவே தந்த ஆயுதம், கடைசியில் அகிம்சைக் கோவணத்தையும் உருவிக் கொண்டு போய் விட்டது. இரண்டும் கெட்டான் நிலையில் புலன் பெயர்ந்த பல நிர்வாண சாமியார்கள் தமிழ்த் தேசியத்தை றிசைக்கிள் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கேடிகள் மலிந்திருக்கிறார்கள். கோடிகளாய் இழந்த பக்த கோடிகளைத் தான் காணோம். ஒரு சமூக அமைப்பை அரசியல் சாயம் அடிக்க விட்டு, சிதைய விட்டது அவரது தவறாயிருக்கலாம். ஆயுததாரிகளிடம் நியாயம் பேசத் துணிந்த ஒரு தமிழன் இருந்திருந்தால், பேசிய தமிழனை உயிரோடு விட்டிருந்தால், எமது இனம் இன்றைய நிலைக்கு வந்திருக்காது. அரசியல் தெரிவதற்கு முன்னால் ஆயுதம் தரித்ததால் வந்த வினை இது. தன்னுடைய இனத்தையே அழித்தவர்கள் கோயில் கட்டாத குறையாகக் கொண்டாடப்படும் சமூகத்தில், ஒரு சமூகத்தின் மாற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்த மனிதன் ஆங்காங்கே ஒரு சிலரால் நினைவு கூரப்படும் கொடூரம்! யாரை நோவோம்? மீளவும் எழுந்து கொள்ள முடியாதபடிக்கு, மீளாப் படுகுழிக்குள் விழுந்த உண்மையைக் கூட உணர்ந்து கொள்ளாத இனத்தைத் தவிர!

    Postad



    You must be logged in to post a comment Login