Recent Comments

    உங்கள் செல்பேசி தண்ணி போட்டதா?

    Cellwaterdamage(அட, வழமை போல எழுத்துப் பிழை, செல்பேசிக்குள் தண்ணீர் போய் விட்டதா?) கர்ணன் கவச குண்டலங்களோடு பிறந்தது போல, இப்போது நாங்களும் பல கவச குண்டலங்களுடன் உலாவி வருகிறோம். அந்த குண்டலங்கள் கொஞ்ச நேரம் கை நழுவிப் போனால், கவச குண்டலங்களை இழந்த கர்ணன் தன் பலத்தை இழந்தது போலத் தான் எங்கள் நிலையும். கையும் ஓடாது, காலும் ஓடாது! அட, நான் சொல்ல வருவது... நாங்கள் தவறாமல் சுமந்து திரியும் செல்லிடப் பேசியும் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களும் தான். கொஞ்ச நேரம் கை நழுவிப் போனால், ஏதோ அங்கத்தை இழந்தது போன்ற உணர்வு. இந்த கவச குண்டலங்கள் எப்போதாவது தண்ணீரில் நனைந்து அல்லல்பட்டிருக்கும் அனுபவம் பலருக்கும் இருக்குமே? கொட்டும் மழையிலும் காதில் வைத்து சல்லாபம் புரிந்திருந்தோ, அல்லது கழியறையில் முகப்புத்தகத்தைப் படிக்கப் போய் தவறி விழுந்தோ... உங்கள் குண்டலம் ஜலக்கிரீடை செய்திருக்கக் கூடும். இதுவரையும் ஜாலம் காட்டி மகிழ்வித்த அந்த திரை புகை படிந்து மங்க... மனதில் பயம் பீடிக்க... துடித்துப் போயிருப்பீர்கள். நூற்றுக்கணக்கில் கொட்டியழுது, மற்றவர்களுக்கு விலாசம் காட்டிய செல்லிடப் பேசி, இப்போது செல்லாக்காசு பெறுமதியுற்றதாய் போயிருக்கும். அஞ்சற்க... அபயம் அளித்தோம்! முதலில் செய்ய வேண்டியது உங்கள் கருவியை செயலிழக்கச் செய்வது தான். அதாவது off பண்ணுவது. அதையும் உடனடியாகச் செய்ய வேண்டும். உங்களுடைய கருவியின் மின்கலத்தை கழற்ற முடிந்தால் அதைக் கழற்றுங்கள். ஏன்னா, நீரும் மின்சாரமும் சேர்ந்தாலும் என்ன நடக்கும்? ஹீரோவின் ஸ்பரிசம் பட்ட தமிழ்ப்படக் கதாநாயகி நெஞ்சம் விம்ம துடிப்பது போல, ஷொக் அடிக்கும். தண்ணீர் உள்ளே உள்ள மிகவும் உணர்திறனுள்ள இலத்திரனியல் பாகங்களை முழுமையாக செயலிழக்கச் செய்து விடும். உங்களுக்கு ஜாலம் காட்டிய திரை உயிரிழக்கவும் நேரிடலாம். உங்கள் கருவி வேலை செய்கிறதா என்று பார்ப்பதற்காக அதையும் இதையும் அழுத்திப் பார்க்க முயற்சிக்காதீர்கள். உங்கள் கவச குண்டலத்தை நீங்களே பிடுங்கிக் கொள்வதற்கு சமம் இது. உங்கள் கருவியை கழற்ற முடிந்தவரைக்கும் கழற்றுங்கள். தற்போதைய கருவிகள் பல திறக்க முடியாதபடிக்கு நிரந்தரமாய் பூட்டி இறுக்கப்பட்டவை. இதனால் தான் 'முடிந்தவரைக்கும்' என்கிறோம். கழற்றக் கூடிய சிம் அட்டை, மெமரி அட்டைகள் போன்றவற்றைக் கழற்றி, நீரைத் துடைத்து காய விடுங்கள். இந்த அட்டைகள் உறையும் பகுதிகளை முடிந்தவரை மென்பஞ்சுக் கடதாசியால் துடையுங்கள். கழியறைக்குள்ளாயின் கைக்கெட்டிய தூரத்தில் தானே அந்த மென்பஞ்சுக் கடதாசி! பின்னர் கருவியின் வெளிப்புறம் முழுவதையும், அதன் சுவிச்சுகள் இருக்கும் பகுதிகள் போன்ற இடுக்குகள் உட்பட, நன்றாகத் துடையுங்கள். கருவியின் உள்ளே உள்ள பாகங்களில் நிற்கும் நீர் முழுமையாக அகற்றப்படா விட்டால் அதோ கதி தான். அதற்கு என்ன செய்யலாம்? இருக்கவே இருக்கிறது, மயிரை உலர வைக்கும் கருவி. (Hair dryer) கழியறையில் தான் விபத்து நடந்திருந்தால், அதுவும் கைக்கெட்டிய தூரத்தில் தானே. கருவியின் உக்கிரத்தை மிகவும் குறைவான நிலையில் வைத்து, (low setting) கையைச் சுடாத தூரத்தில் பிடித்துக் கொண்டு உலர் காற்றை வீசுங்கள். மின்கலம், ஞாபக அட்டை இருந்த இடங்களுக்கு ஊடாக காற்றை வீசுவதன் மூலம் கருவியின் உட்புறங்களுக்கு உலர் காற்றை உட்புகச் செய்யலாம். இருந்தாலும் தொட்டால் சிணுங்கும் திரையை பாதிக்காத வகையில் மெதுவாகவே உலர் காற்றை அனுப்புங்கள். அரை மணித்தியாலம் இவ்வாறு உலர் காற்றை அனுப்புங்கள். இல்லாவிட்டால், சமையலறையில் உள்ள வெதுப்பியின் உள்ளே ஒரு தட்டில் வைத்து, வெதுப்பியில் உள்ள மிகக் குறைந்த வெப்பநிலையில் (110 முதல் 120 பாகை பரனைட் அளவில்) வைத்து இரவு முழுவதும் விடுங்கள். வெப்பநிலை அதிகமானால், பிளாஸ்டிக் பாகங்கள் உருகி விடும். கவனம்! இவ்வாறாக சூடாக்கப் போனால், சுட்டுக் கரியாகி விடுமே என்ற பயம் இருந்தால் இருக்கவே இருக்கிறது, அரிசி. நம்ம வீடுகளில் இல்லாததா? ஆனாலும் நம்ம பூனகரி மொட்டைக் கறுப்பன் அதற்கு உதவாது. பச்சை அரிசி, அல்லது பஸ்மதி. புழுங்கல் அரிசிக்குள் நீர் இருக்கும். அதனால் தான் அவியாத அரிசி. கருவியை ஒரு அங்குலம் சுற்றி மூடும் அளவுக்கு அரிசியால் மூடி இரவு வைத்தால், மறுநாள் முழு நீரையும் அரிசி உறுஞ்சி விடும். அதுவும் இல்லாவிட்டால், நீங்கள் வாங்கும் இலத்திரனியல் பொருட்களுடனோ, அல்லது சப்பாத்துக்களுடனோ சிறிய பக்கட்டுகளில் மணி போல இருக்கும் சிலிக்கா ஜெல் மணிகளுக்குள் புதைத்து வைத்தாலும், சிலிக்கா நீரை உறுஞ்சி விடும். இந்த சிலிக்கா ஜெல்லை, Arts and crafts கடைகளில் வாங்கலாம். இதையும் விட அப்பனான ஒரு முறை உண்டு. மேல் குறிப்பிட்ட முறைகள் பயனற்றுப் போனால், இந்த முறையைக் கையாளலாம். தூய்மையான நூற்று வீத அல்ககோல் திரவத்துக்குள் முழுமையாக கருவியை அமிழ்த்த வேண்டியது தான். அல்ககோல் நீரை உறுஞ்சும். பின்னர் தான் ஆவியாகி விடும். அல்ககோல் என்பதற்காக விஸ்கி, பிராண்டிக்குள் அமிழ்த்தும் வேலை எல்லாம் வேண்டாம். அவை நூறு வீதமானவை அல்ல. நூறு வீதமான அல்ககோலை (Rubbing Aடcohol) மருந்துக் கடைகளில் வாங்கலாம். மருந்துக் கடை என்றதும் ஞாபகம் வருகிறது. நோய்க்கு சிறந்த மருந்து, முன்னெச்சரிக்கையாக அது வராமல் தடுப்பது தான். அதற்கு, கழியறைக்குள் வைத்து முகப்புத்தகத்தில் காவியம் படைப்பதை நிறுத்துவது தான் சரியான வழி. காரணம் கழியறைக்குள் சுடுநீரில் குளிக்கும்போது வரும் நீராவி கூட, உங்கள் கருவிகளுக்குள் ஒடுங்கி, அவற்றைச் செயலிழக்கச் செய்யலாம். ஜோர்ஜ் இ.

    Postad



    You must be logged in to post a comment Login