Recent Comments

    ‘ஸ்வீட் பார்க்’

    பூங்கோதை

    தாயகத்தின் தற்போதைய அரசியல், பொருளாதார நெருக்கடி நிலைமையில் மாத்திரமல்லாது எப்போதுமே தற்சார்பு உற்பத்தி,  தன்னிறைவுப் பொருளாதாரம் சார்ந்த விவசாயம், வீட்டுத் தோட்டங்கள்,  சிறு கைத்தொழில் போன்றவை எம் உறவுகளுக்குக் கை கொடுக்கக் கூடியவை.  பல முகநூல் தோழமைகள் விவசாயம், சிறு கைத்தொழில் சார்ந்த பயனுள்ள விடயங்களை தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் பகிர்ந்து வருவது நாம் அறிந்ததே.

    என்னோடு, சமூக நலனில் அக்கறையுள்ள, கடின உழைப்புக்  கொண்ட, பரந்த மனம் கொண்ட  பல முகநூல் நட்புகள் வந்தமைந்திருப்பது  வரம்.  இப்படியான நட்புகளில், நான் கல்வி கற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலிருந்து வெளியேறிய ஒரு இளம் மாணவன் தனது சமூக அக்கறையுடனான பதிவுகள்  மூலம் என்னைக் கவர்ந்திருந்தார்.   அந்த  முகநூல் நட்பு தான் இன்று இந்தப் பதிவின் கதாநாயகன்.

    இவர் திடீரென முகநூல் பதிவுகளிலிருந்து காணாமல் போனபோது, எல்லோரையும் தேடிப்பார்ப்பது போலவே இவரையும் தேடியபோது தான்,   இவர் தானாக ஒரு பழச்சாறு விற்பனை நிலையம் ஒன்றை கச்சாய் வீதி, சாவகச்சேரியில் ஆரம்பித்திருப்பது தெரியவந்து மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தேன். 

    இதற்கிடையே தாயகம் போவதற்கான சந்தர்ப்பம் கிடைத்த போது, நிஷாந்தனின் தன்னம்பிக்கை, துணிச்சல், தானாக ஒரு சுய தொழிலை உருவாக்குவதில் உள்ள ஆர்வம் போன்றவை நிறைவைக் கொடுத்ததில்,  எப்படியாவது எனது குடும்பத்தோடு இவரது விற்பனை நிலையம் செல்ல வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டிருந்தது..

    இந்நிலையில் இவருடனான தொடர்புகள் அருகிப் போன நிலையில், நாம் கடந்த சித்திரை 13ம் திகதியன்று கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி காரில்ப் பயணம் ஆனோம்.  வழியெங்கும் இயற்கை அன்னையின் செல்வங்கள் கொழித்திருக்க, அன்று சித்திரைப் புத்தாண்டிற்கு முதல் நாளாகவும் இருந்தது.  கார் போன பாதையை காணொளியாகப்  பதிவு செய்து முகநூலில்ப் பகிர்ந்து கொண்ட போது, நிஷாந்தன் நகைச்சுவையோடு, "அக்கா , கை விசேஷம் கிடைக்கும் போல இருக்கு!" எனப்  பின்னூட்டம் விட்டிருந்தார்.

    "சரி, பார்க்கலாம், நாங்கள் வர முயற்சிக்கிறோம்." எனப்பதில் அளித்திருந்ததால், யாழில் நின்றிருந்த நாட்கள் குறைவாக இருந்தாலும், எப்படியும் முயற்சி செய்து ஒரு தடவை ஒரு எட்டு எட்டிப் பார்க்கலாம் என நினைத்து, சாப்பாடும் விநியோகிப்பீர்களா எனக் கேட்டிருந்தோம்.

    அதன் பின்னர் வந்த அடுத்தடுத்த நாட்களில் வெவ்வேறு கடமைகளையும் பொறுப்புகளையும் முடிக்க வேண்டி வந்ததில், வழமை போலவே எனக்கு  நாட்களும் நேரங்களும்  தடம் பிரண்டு ஒடத் தொடங்கின.

    ஒரு வியாழக்கிழமை வந்த போது, கிடைத்த ஒரு சில நிமிடங்களைப் பயன்படுத்தி  நிஷாந்தனுக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பினோம், அதில் நாங்கள் அடுத்த நாள் வந்தால் சாப்பிட முடியுமா எனக் கேட்டிருந்தோம். அதற்கு அவரும், அடுத்த நாள் வெள்ளிக்கிழமை என்பதை மறந்து,  மகிழ்வுடன், தாராளமாக வரலாம் எனப்  பதில் போட்டிருந்தார்.

    இங்கும் அங்குமான ஓட்டங்களுக்கிடையில் வெள்ளியன்று 'ஸ்வீட் பார்க்கில்’ மதியம் சாப்பிடுவதாய் திட்டமிடப் பட்டது.  

    இதற்கிடையில், சாவகச்சேரிக்கு வேறு அலுவலாகப் போயிருந்த எனது தங்கையின் கணவர், எமக்குத் தொலைபேசியில் நிஷாந்தனின் ஸ்வீட் பார்க் வெள்ளியன்று திறப்பதில்லை எனத் தெரிய வருவதாக அறிவிக்க, நான் ஒரு நிமிடம் ஆடிப் போனாலும், எதற்கும் நிஷாந்தனோடு தொடர்பு கொண்டதில் அவரும் தான் நாள் மறந்து உறுதி தந்ததற்காக,  தவறுக்கு மன்னிப்புக்  கேட்டிருந்தார்.

    "பரவாயில்லை, மன்னிப்பு எல்லாம் பெரிய வார்த்தை, அதெல்லாம் வேண்டாம், பேசாமல் எங்களுக்காக கடையைத் திறவுங்கோ பார்ப்பம்!" என்று தொலைபேசியில் தடாலடியாகச் சொல்லிவிட்டுக் காத்திருந்தேன்.  அந்தப் பக்கம் ஒரு சில வினாடிகள் ஒரு  சத்தத்தையும் காணவில்லை. கிராதகி, சாப்பிடாமல் போக மாட்டாள் போல என எண்ணியிருக்கக் கூடும்.

    "சரி வாங்கோ அக்கா, எத்தனை பேர் வாறீங்கள், என்ன சாப்பாடு வேணும்?" என்று அன்போடு கேட்டு நாங்கள் வரும் நேரத்தையும் அவர் அறிந்து கொண்ட போது என் உள்ளம் எங்கும் பேரன்பு வியாபித்தது.  

    அதன் பிறகு நடந்தவை எல்லாம் கனவு போலவே, மூங்கில் குழலில் வேக வைக்கப்பட்ட உணவுகள் மிகுந்த சுவையோடு, நாம் எதிர்பார்த்ததை விட அதி சுவையோடு எமக்குப் பரிமாறப்பட்டது. அன்னாசி, பப்பாசி போன்ற பழரசங்களும் சேர்ந்தே வந்தன.  ஏனைய உணவு நிலையங்கள் போலல்லாது, மிகுந்த ரம்மியமான, சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் கொண்ட வீட்டின் அமைப்போடு இருந்த இந்த ' ஸ்வீட் பார்க்'  கண்டி வீதி, நுணாவிலுக்கு அண்மையில்  அமைந்திருந்தது.

    நிஷாந்தன் எம்முடன் பேசிய போது, தமது உணவுகள், பழரசங்கள் அனைத்துமே பெரும்பான்மையானவை இயற்கையோடு இணைந்த உற்பத்திப் பொருட்களைப் பாவித்தே தயாரிப்பதாக அறிவித்ததோடு, ஏனைய உணவு நிலையங்களின் விலைகளிலிருந்து மிகக் குறைவான விலையிலேயே தமது உணவுகள் பரிமாறப்படுவதாய் அறிவித்தார்.   

    இப்படியான தற்சார்பு முயற்சிகள் பாராட்டப்பட வேண்டும், இவர் போன்றவர்களின் முயற்சிக்கு ஊக்கம் கொடுக்கும் முகமாக, வெளியே உண்ண வேண்டியிருக்கும் வேளைகளில், இப்படியான உணவு விற்பனை நிலையங்களுக்கு எம் உறவுகள் போய் வரவேண்டும்.  

    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் ஸ்வீட் பார்க் நிஷாந்தனுக்கு!

    Postad



    You must be logged in to post a comment Login