Recent Comments

    இயற்கை – நிலம் – இசை : 13

    T.சௌந்தர்

    இசையில் நீரும் - நதியும்

    குகைகளில் வாழ்ந்த மனிதன் பின்னர் தனது வாழ்விடங்களை நீர் நிலைகளுக்கருகில் அமைத்துக் கொண்டான். ஆரம்பகால நாகரீகங்கள் அனைத்தும் நதியைச் சார்ந்ததாகவே இருந்தன. குடிநீர் தேவைகளையும், பயிர் செய்வதற்கான மூலாதாரமாகவும், களியாட்டங்களில் பிறப்பிடமாகவும் நதிகள் விளங்கியதுடன் எளிமையான போக்குவரத்துக்கும் நதிகள் பயன்பட்டதால் நதிகள் மிகவும் அத்தியாவசியமானதாகக்  கருதப்பட்டன. 

    நீர் நிலைகளின் அத்தியாவசியம் என்பது நிலையான குடியிருப்புக்கும், விவசாயத்திற்கும் வழி வகுத்ததுடன் உற்பத்தியின் மிகையாக பெருகிய செல்வம் நாகரீகங்களின் உருவாக்கத்திற்கும் வழி வகுத்தன. பெரு நாகரீகங்களாகப் போற்றப்படும் அனைத்து நாகரீகங்களும் ஆற்றாங்கரை நாகரீகங்களாக இருப்பதையும் காண்கின்றோம். 

    சிந்து நதி [இந்தியா], நைல் நதி [ எகிப்து ], மஞ்சள் நதி [ சீனா ] மற்றும் டைக்ரிஸ், யூப்ரடீஸ் [மெசபடோமியா]  நதி நாகரிகங்கள் சிறந்த உதாரணங்கள் ஆகும்.

    உலகின் தொல்குடிகள் அனைத்தும்  நீர் பற்றிய புரிதல் உள்ளவர்களாக இருந்ததையும் காணமுடியும்.

    உலக மக்கள் அனைவரும் நீரின் அத்தியாவசியத்தை உணர்ந்து உணர்ந்துள்ளனர். சில பழங்குடிமக்கள் உயிர் வளர்க்கும் நீரை வெறும் நீராக மட்டுமல்ல வாழ்வின் இன்றியமையாததாகவும், ஆறுகளை புனிதமாகவும்  கருதுகிறார்கள். அவை தமது முன்னோர்களின் நினைவுகளை சுமந்து வருவதாகவும் அதில் அவர்களின் ஆன்மா வாழ்வதாகவும் நம்புகிற வழமையையும் கொண்டுள்ளார்கள்.பழங்குடிகள் இயற்கையை போற்றுவதும் அதை புனிதமாகப் பார்ப்பதையும் காண்கிறோம்.

    பழந்தமிழர்களும் நீருக்கு சிறப்பான இடம் கொடுத்திருப்பதை பழைய இலக்கியங்களில் காண்கின்றோம். " நீரின்றி அமையாது உலகு " என்று இரத்தினச் சுருக்கமாக அதன் அருமையை வள்ளுவன் கூறிவிட்டான்! 

    நீரைப்பற்றியும், ஆறுகளை பற்றியும் அவை தொடர்பான ஏராளமான செய்திகளையும் பழந்தமிழ் இலக்கியங்கள் பேசியுள்ளமை நம்மை வியப்பில் ஆழ்த்துவதுடன், இயற்கையுடன் அவர்களின் ஒன்றித்த வாழ்வையும் நமக்கு காட்டுகின்றன.

    ஆறுகள் பற்றியும் அவற்றின்  நீரோட்ட வகைகளையும், அவை சார்ந்த நிலத்தின் தன்மைகளுக்கேற்ப நீரின் சுவைகளையும், ஆறுகளின் வகைப்படுத்தல்களையும் அவற்றின் நிறங்களுக்கு ஏற்ப  பெயர்களையும், அவை ஊடறுத்துச் செல்லும் நிலப்ப்குதிகளையும், அமைந்த நிலப்பகுதிகளுக்கு ஆறுசார்ந்த பெயர்கள் வைத்திருப்பதையும் காண்கிறோம். 

    சங்க இலக்கியங்களில் இயல்பாய் காணப்படும் ஆறுகளின் தமிழ் பெயர்கள் பிற்காலத்தில் பார்ப்பனீய செல்வாக்கு ஓங்கிய காலத்தில் சமஸ்கிருதப் பெயர்களாக மாற்றப்பட்டது மட்டுமல்ல, அவை புனிதமாகக் கருதப்பட்டு சமய ஆச்சரங்களுடன் இணைக்கப்பட்டதையும் காண்கிறோம்.

    தமிழில் பெண்ணை ஆறு, காவிரி, பாலாறு, பொருநை, வையை ஆறு,  பஃறுளி ஆறு, சோணை ஆறு,, குமரி ஆறு, சுள்ளியம் ஆறு, அரிசில் ஆறு, கங்கை, அயிரியாறு, காரியாறு, காவிரி ஆறு, குமரி ஆறு, சிலம்பாறு, காப்பியாறு, சேயாறு, பேராறு, பொறையாறு, வாட்டாறு, வானி ஆறு  என பல பெயர்களைக்  காண்கிறோம். 

    "வான் முகந்த நீர் மழைப் பொழியவும் 

    மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்" [பட்டினப்பாலை] உருத்திரங்கண்ணார். 

    நிலத்தியல்பால் நீர்த்திருந் தற்றாகும் மாந்தர்க்கு 

    இனத்தியல்ப தாகும் அறிவு - வள்ளுவர் - [452]

    விரிநீர் வியனுலகு - தன்நீர்மை  என பல பொருள்களில் நீரை உவமானம் சொல்லுகிறார் வள்ளுவர்.

    நீருடனான இயல்பான நெருக்கத்தை தமது வழிபாட்டு முறைகளிலும் பழமொழிகளிலும், ஆறு மட்டுமல்ல ஏரி, குளங்கள் பற்றிய செய்திகளையும் குறித்து சென்றுள்ளனர்..

    கார்கால வாழ்க்கை, கூதிர்க் கால வாழ்க்கை , முன்பனிக் கால வாழ்க்கை , பின்பனிக் காலம், இளவேனில் காலம் முதுவேனில் காலம் போன்ற பருவ காலங்கள் பற்றியும், கானல் வரி , ஆற்றுவரி என கடல், ஆறு பற்றிய பாடல்களும் கதைகளுடன் சிலப்பதிகாரத்தில் சொல்லிச் செல்கிறார் இளங்கோ.

    ஆற்றுவரி  

    மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,

    மணிப் பூ ஆடை-அது போர்த்து,

    கருங் கயல்-கண் விழித்து, ஒல்கி,

    நடந்தாய்; வாழி, காவேரி!

    கரையின் இருபக்கமும் வண்டுகள் மிகுதியாக ஒலிக்க , அழகிய பூக்களாகிய ஆடையைப் போர்த்துக் கொண்டு, கரிய கயல் மீன்களாகிய கண்களால் விழித்துப் பார்த்துக் கொண்டு , அசைந்து நடக்கின்ற காவிரிப் பெண்ணே !

    சிலப்பதிகாரத்தில்..

    "புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி

    வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீ ரேரியும்

    காய்க்குலைத் தேங்கும் வாழையும் கமுகும்"

    என்ற பாடலில் நீரின் வளத்தைக்காட்டுகிறார்.

    போன்ற ஏராளமான கருத்துக்கள் மட்டுமல்ல , வானிலை குறித்த தெளிவான பார்வையும் , அவற்றை முன்னறிந்து சொல்லக்கூடிய திறமை பற்றியும் நாம் அறிகிறோம். 

    ரிக்வேதத்தின் பத்தாவது பாடலில் நதி ஸ்துதி என்ற பற்றிய செய்திகளைக் கூறுகிறது . பலநதிகள் பற்றி பேசும் அப்பகுதியில்  சரஸ்வதி, சிந்துநதி பெயர்கள் குறிப்பிடப்படுகிறது.. வடமேற்கில் இருக்கும் நதிகளில் சப்த சிந்து [ ஏழு நதிகள் ] பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அந்த ஏழு நதிகள் எவை என்பதை நதி ஸ்துதி என்ற பகுதியிலிருந்து இன்றைய ஆராச்சியாளர்கள் விளக்குகிறார்கள். சுசுத்ரி, விபஸ், பரிசுநீரவர். அசைக்கினி , விதாஸ்தா இவற்றுடன் சிந்துவும்,  சரஸ்வதியும் சேர்த்து      இன்றைய ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தருகிறார்கள்!

    ஆனால் தெற்கே இருக்கிற பிரம்மபுத்திரா,கோதாவரி, நர்மதா , கிருஷ்ணா நதிகள் மட்டுமல்ல காவேரி ,கங்கை நதிகளும் ரிக்வேதத்தில் இல்லை.

    உலகின் பல பழங்குடிமக்களும் இயற்கை வனப்பு, நீர் நிலைகளால் உந்தும் தமது உணர்ச்சிகளை பாடல்களாகவும், இசை வடிவங்களாகவும் வெளிப்படுத்துவதை நீண்ட காலமாகவே தொடர்ந்து வருகிறார்கள். இதை போலவே இந்தியாவிலும் நீர்,ஆறுகள் நிலைகளை புனிதமாகவும்  பார்க்கும் பார்வை இருந்து வருகிறது. அதிலும் இரண்டு , மூன்று நதிகள் சேரும் இடங்கள் மிகப்புனிதமாகவும், வழிபாட்டு இடங்களாகவும்  கருதப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் தொன்மங்கள், பழங்கதைகளை தொன்மங்களாக ஏற்காத, அதையே உண்மையென நம்பும் ஒருவித மூட நம்பிக்கையாகவும் இருக்கிறது. 

    நதிகளைப் பாடு பொருளாகாகக்  கொண்டு இந்திய இசைக்கலைஞர்களும் இசை படைத்துள்ளனர். அவர்களில் ரவிசங்கர், சிவகுமார் சர்மா, ஆனந்த சங்கர் போன்றவர்கள் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர். 

     Blue - Music Of the Rivers - by Ravi Shankar   

    1. Celebrating Monsoon [ Mehg ]
    2. Gangeswary
    3. Janasamokini
    4. Parameswary
    5. Rangeswary

    இந்த இசை வடிவம் ரவி சங்கரின் வழமையான செவ்வியல் சார்ந்த, சித்தார் வாசிப்பின் ஊடாக வெளிப்படுத்தப்படும் வகையில் அமைந்துள்ளது. இதில் அவரே கண்டுபிடித்த Gangeswary, Parameswary, Rangeswary போன்ற ராகங்களின் அடைப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. 

    ரவி சங்கரைப் போலவே சந்தூர் வாத்திய இசைக்கலைஞர் சிவகுமார் சர்மாவும், புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஹரிபிரசாத் சௌராசைய்யாவும்  நதி பற்றி தமது  இசைக்கோர்வைகளை தந்திருக்கின்றனர் 

    1. Sound Scares Music of the Valley - Shivkumar Sharma
    2. Call Of The Valley - Shivkumar Sharma
    3. Music Of The Mountains - Shiv Kumar Sharma 
    4. Music Of The River - Sivakumar Sharma 

    சிவகுமார் சர்மாவின் Call Of The Valley   என்ற படைப்பு இசையால்  காட்சிகளை முன்னிறுத்தும் பாங்கில் அமைக்கப்பட்டுள்ளன. இது சிவகுமார் சர்மாவின் சந்தூர் வாசிப்பும், இனிய குழலிசையும் கலந்து இழையும் இனிய இசைப்படைப்பாகும். 

    The River by Anandha Shankar [ 1975]

    இது மெல்லிசைப்பாங்கில் ஆனந்தசங்கர் அமைத்த இசைவடிவம். சினிமாவில் பயன்படும் மேற்கத்திய பாப் இசை சார்ந்த அதே சமயம் சித்தார் போன்ற இந்திய இசைக்கருவிகளை சேர்ந்த இசை வடிவம்.

    சீனர்களும் நதி பற்றிய இசைகளைத் தந்துள்ளனர். அதில்The Yellow River Piano Concerto என்ற இசை வடிவம் முக்கிய படைப்பாக கருதப்படுகிறது.

    The Yellow River Piano Concerto அல்லது  Yellow River Cantata என்ற இ]ந்தப் படைப்பு Cantata  என்ற இசைவடிவத்தை சேர்ந்தது. Cantata என்பது இசையுடன் குரல்கள் இணைந்த இசை வடிவம் ஆகும். 1939  ம் வருடம் Xian Xinghai என்ற   சீன இசைக்கலைஞர் இதனைப் படைத்தார்.  மேலைத்தேய இசைக்கலைப்பில் உருவான இந்தப்படைப்பு சீன-ஜப்பானியப் போரின் போது (1937-1945) ஜெனானில் ஆறு நாட்களில் எழுதப்பட்டது என்பர். 

    சீனா மீதான ஜப்பானிய  ஆக்கிரமிப்பை எதிர்த்து, சீன நாட்டுப்புற இசையை அடிப்படையாக வைத்துக் கொண்டு , சீனர்களின் மிகப்பெரிய நதியான மஞ்சள் நதியை எதிர்ப்பின் குறியீடாக்கிக் கொண்ட ஓர் இசைப்படைப்பாக அமைக்கப்பட்டது.  

    இந்த இசைவடிவம் கீழ்க் காணும் நான்கு பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது 

    1.The Song of the Yellow River Boatmen" 

    2. Ode to the Yellow River "

    3.The Wrath of the Yellow River " 

    4.Defend the Yellow River  "

    " The Song of the Yellow River Boatmen"  என்ற பகுதியில் மஞ்சள் ஆற்றின் ஓட்டத்தையும், வேகத்தையும், அதன் நாடகத்தன்மையையும் காண்பிக்க பலவித தாளங்களையும்  காண்பிக்கிறார்.

    Ode to the Yellow River " இப்பகுதி மெல்லிசை மற்றும்  மஞ்சள் நதியின் வரலாற்று  இருப்பையும் புகழ்ந்து பாடுகிறது,, இது சீனர்களின் கலாச்சார பெருமையையும், பரந்த சீனப் பாடல்  செலோ வாத்தியத்தின் மூலம்  ஆழத்தையும் தாள அமைப்பின் மூலம்  செழுமையையும் காண்பிப்பதுடன் சீன  தேசியவாத கூறுகளையும்  எடுத்துக்காட்டுவதாகவும்  கருதப்படுகிறது.  சீன தேசிய கீதத்தின் தொடக்க மையக்கருத்து காற்று இசைக்கருவியாக ட்ராம்போன்  பகுதியில் காட்டப்படுகிறது.

    The Wrath of the Yellow River  "

    "மஞ்சள் நதியின் கோபம்"  பியானோவுடன் கூடிய தனிப்பாடலுடன் தொடங்கி, வயலின் கச்சேரியின்  மெல்லிசையால் மெருகேற்றப்பட்டு,  வடமேற்கு சீனாவின்  நாட்டுப்புற மொழிகளின் பாணியில் அமைக்கப்பட்டு  பியானோ பெண் கோரஸால் பாடப்பட்ட ஒரு மெல்லிசையாகவும் மாறுகிறது. 

    " Defend the Yellow River  "

    மஞ்சள் நதியைப் பாதுகாத்தல்.

    இந்த பியானோ கச்சேரியின் இறுதிப் பகுதியாக, முக்கிய இசைப்பகுதிக்கு [ Theme Music ] பொருத்தமாக பல குரலமைப்பைக் கொண்ட இசையாக  அமைக்கப்பட்டுள்ளது. "கிழக்குஎன்பதுசிவப்பு" [ East is Red ] என்ற புகழ் பெற்ற இசைவடிவத்தின்  இசை  முழுமை  பெற்று  நிலைத்திருப்பதைத் தெளிவாகக் காட்டும் இசைப்பகுதியாகவும், இந்த இசைவடிவத்தின் [ மஞ்சள் நதிக் கச்சேரி ] முழுமையாக  "கிழக்கு என்பது சிவப்பு"  சொற்றொடர் ஓங்கி  இசைக்கப்படுவதுடன் சர்வதேசிய பாடலின்  ["இன்டர்நேஷனல்" ] இறுதி சொற்றொடர் இறுக்கமாகவும், உறுதியாகவும் இசைக்கப்படுகிறது.

    இவை இந்தியா, சீனா போன்ற நாடுகளின் இசையில் நீர் பற்றிய சில உதாரணங்கள் மட்டுமே. வழமை போலவே நீர் குறித்து  மேலைத்தேய செவ்வியல் இசைசார்ந்து ஏராளமான படைப்புகள் வெளியாகியுள்ளன. 

    நீர், நதி பற்றி உலகெங்கும் காணக்கிடைக்கும் இசை வடிவங்கள் சிலவற்றை தொகுத்து தருவது பொருத்தமாக இருக்கும். சில உதாரணங்கள் கீழே.       

    தண்ணீர் - நதி பற்றிய இசைச்சித்தரிப்புகள்

    Water- River

    01. Handel's Water Music

    02. Bdrich Smetana - Die Moldau

    03. Franz Schubert - Songs - River, By the River, On the River.

    04. Frederic Delius - Summer Night on the River.

    05. Robert Shumann - The River Sprite.

    06. Jacques Ibert - Reflections in the Water.

    07. Eric Whitacre- The River [ His Inspiration is Elgar, Vauhgan ]

    08. Philippe Gaubert - Over the River

    09. Tony Banks - Still Water

    10. Modest Mussorgsky - Dawn over the Moscow River.

    11. Claude Debussy - La Mer.

    12. Felix Mendelssohn - The Hebrides

    13. Robert Lowry - Beautiful River

    14. Virgil Thombson - The River Suite.

    15. Franz List - At the Source.

    16. Wagner - Das Rheingold Prelude.

    17. Jean Sebelius - The Swan of Tuonela.

    18. Paul Dukas - Sorcerer's Apprentice

    19. Anton Rubinstein - Ocean Symphony

    20. Maurice Ravel - Une barque.

    21. Armand Marsick - La source.

    22. Samuel Colridge - Deep River

    23. Ferde Grofe - Hudson River Suite

    24. Xian XingHai - Yellow River - Piano Concerto.

    இயற்கையின்கொடைகளான சூரியன், நீர், ஆறுகள், மலைகள், காடுகள்என , தம்மனதில்இயற்கை செலுத்திய செல்வாக்கின்மூலம், தாம்மன ஊக்கம்பெற்ற, அந்த அற்புதங்களை எல்லாம்தங்கள்இசைமூலம்வெளிப்படுத்த முடியும்என்ற அதீத நம்பிக்கையால்உந்தப்பட்டதை க்காண்கிறோம்.  

    காணும்இயற்கையை மட்டுமல்ல, இயற்கை குறித்து பிறருக்கு அதன்முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும்வண்ணம்செய்திப்படங்களிலும்இயற்கை குறித்த வெளிப்பாட்டு இசைகளை கலைஞர்கள்தம்முன்னோர்வழியில்இனிமையான இசைகளாக அளித்தனர்.

    [ தொடரும்

    Postad



    You must be logged in to post a comment Login