Recent Comments

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் – 22

    T .சௌந்தர்

    பழங்கவிஞர்கள் விலக்கலும் புதுக்கவிஞர்கள் இணைத்தலும் :

    பழந்தமிழ் கூத்து மரபு என்பது ஆடல் பாடல்களுடன் ஒரு கதையைப் பல மணிநேரம் நிகழ்த்துதலேயாம். என்பார் இசை ஆய்வாளர் அரிமளம் பத்மநாபன்.

    பழைய மரபின் தொடர்ச்சியாகவும் ,மறுமலர்ச்சியாகவும் வருபவர் சங்கரதாஸ் சுவாமிகள்.நாடக மேடை அவரால் புத்துயிர் பெற்றது.அவரது நாடகங்கள் இனிய பாடல்களால் நிறைந்தவையாக இருந்தன. தமிழ் சினிமாவும் இதைத்தான் வரித்துக் கொண்டுள்ளது.

    தமிழின் கவிதைமரபு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. அதன் புதிய பரிமாணமாய் திகழும் புதுக்கவிதையின் தாக்கத்தால் கவி ஆற்றல் இல்லாத சாதாரணமாக எழுத்து பழக்கம் தெரிந்த பலரிடம் வசனத்தை முறித்து கீழே ,கீழே வரிசைப்படுத்திவிட்டால் கவிதையாகி விடும் என்ற எண்ணம் வலுத்திருக்கும் காலம் இதுவே!

    வாசிப்பவர்களைவிட கவிதை எழுதுபவர்கள் அதிகம் என்று பிரபல கவிஞர்களே கேலியாக சொல்லும் நிலை கவிதைக்கு வந்திருக்கிறது. இவ்விதமாக ஒரு நிலை வருவதற்கு காரணம் தமிழ் மக்களின் நீண்ட நெடிய கவிதை மரபின் தாக்கமேயாகும். கவிதை ஆற்றல் மீதான போலியான மனோரதியப் போக்கின் விளைவுகள் இவை.

    நீண்ட தமிழ் கவிதை மரபின் தொடர்ச்சியாக வந்த பாரதி ,பாரதிதாசன் போன்றோரை முன்மாதிரியாகக் கொண்ட கவிதை பாரம்பரியத்தில் வந்த ஏராளமான கவிஞர்கள் தமிழ் திரைப்படங்களில் நுழைந்தார்கள். குறிப்பாக 1950 களில் எண்ணிக்கையில் அதிகமான கவிஞர்கள் பல நல்ல பாடல்களை எழுதினர் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வர். இந்தக் கவிஞர் திரைப்படங்களில் பாடலாசிரியர் என்றே அறியப்படுகின்றனர்.

    1940களில் பாபநாசம் சிவன் , கொத்தமங்கலம் சுப்பு , கு.சா.கிருஷ்ணமூர்த்தி , , டி.கே. சுந்தரவாத்தியார் கம்பதாசன் , உடுமலை நாராயணகவி , 1950 களில் தஞ்சை ராமையாதாஸ் , சுரதா , அண்ணல் தாங்கோ , புரட்சிதாசன் , மருதகாசி , க.மு. செரீப் , அவினாசிமணி ,ஆலங்குடி சோமு ,எஸ்.டி.சுந்தரம் , மு.கருணாநிதி, கே.பி.காமாட்சி, விந்தன். வில்லிபுத்தன் மக்களன்பன் , கு.மா.பாலசுப்ரமணியம் , மாயவனாதன் ,கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் , கே.டி. சந்தானம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , கண்ணதாசன் என இவர்கள் அனைவருடனும் பணியாற்றியவர்கள் மெல்லிசைமன்னர்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பாடல் எழுதுவதில் மட்டுமல்ல வசனம் எழுதுவதிலும் மிகுந்த திறமைசாலிகளாக விளங்கினர்.

    பின்னர் 1960 களில் இருந்து தனது மரணம் வரை வாலி, புலமைப்பித்தன் , முத்துலிங்கம், காமகோடியன் , பிறைசூடன் , காமராசன் , வைரமுத்து , மேத்தா, கங்கை அமரன் , பா.விஜய் வரை பணியாற்றிய பெருமை மெல்லிசைமன்னர் விஸ்வநாதனையே சேரும். இத்தனை கவிஞர்களுடன் இயங்கினார் என்று சொல்லும் போது இத்தனை வருடங்கள் தனது இசையின் வல்லமை ஒன்றினாலேயே இதை சாதித்தியப்படுத்தினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    1950 களில் இயங்கிய கவிஞர்கள் அல்லது பாடலாசிரியர்கள் அக்காலங்களில் வெளிவந்த பல படங்களில் வசனகர்த்தாக்களாகவும் விளங்கியமைக்குக் காரணம் அவர்களது தமிழ் அறிவும் ஆற்றலும் ஆகும். தங்களது நுட்மிக்க கைத்திறனால் இலக்கியநயமிக்க , கவியாற்றல் மிக்க வசனங்களை தர முடிந்தது. அதே போலவே உயிரோட்டமிக்க இசைக்கு அன்றைய கவிஞர்கள் தங்களது இலக்கியநயமிக்க வரிகளால் நியாயமும் செய்தனர்.

    1950களில் பேச்சும், பாட்டும் அதிகமாக இருந்த காலத்தில் வசனம்,பாடல் இரண்டிலும் ஆற்றல் வாய்ந்தவர்கள் தேவை அதிகமிருந்தால் பல கவிஞர்கள் அந்த ஆற்றல்களைக் கொண்டிருந்ததைக் காண்கிறோம்.அன்று வெளிவந்த படங்களின் எண்ணிக்கையுடன் கவிஞர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப்பார்த்தால் அதிகமான கவிஞர்கள் களத்தில் இருந்ததைக்கான முடியும்.

    பின்னாளில் 1960களில் எண்ணிக்கையில் அதிகமான படங்கள் வெளிவந்த காலத்தில் கவிஞர்களின் எண்ணிக்கை சுருங்கியதையும் அவதானிக்க முடியும்.அந்த எண்ணிக்கை ஏன் குறைந்தது என்பதும் சிந்திக்கத்தக்கது.அதே போல 1950களில் அதிக எண்ணிக்கையிலிருந்த இசையமைப்பாளர்கள் 1960களில் குறைந்ததையும் நாம் காணலாம்.

    1940 களின் நடுப்பகுதியிலிருந்து 1950 நடுப்பகுதிவரை ஒரு புதிய மாற்றங்களுக்குள் நுழைந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவின் புதிய வளர்ச்சி நிலையாக ஜி.ராமநாதன்,சி.ஆர்.சுப்பராமன் போன்ற இசையமைப்பாளர்களும் , கவிஞர்களில் உடுமலை நாராயணகவி ,கம்பதாசன் ,சுரதா போன்றோர் முன்னணிக்கு வந்தனர். இவர்களில் உடுமலை நாராயணகவி அதிக புகழ் பெற்றவராக விளங்கினார். அதுமட்டுமல்ல திராவிட இயக்க சார்பான பல எழுத்தாளர்களும் ,கவிஞர்களும் சினிமாவில் நுழைந்தனர். அண்ணாத்துரை, கருணாநிதி , அண்ணல் தாங்கோ , சிவாஜி , கண்ணதாசன் என இந்தப்படியால் நீண்டு செல்லும்.

    தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும் பின்னர் திராவியிட முன்னேற்றக கழகத்தின் அரசியல் கருத்துக்களையும் உள்வாங்கி தனது பாடல்களில் வெளிப்படுத்தியவர் உடுமலை நாராயணகவி.

    தந்தை பெரியாரின் சமுதாயக்கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட உடுமலை நாராயணகவி பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துக்களையும் திராவிட முன்னேற்றக கழகத்தின் கருத்துக்களையும் தனது பாடல்களில் பிரதிபலித்தார். அக்காலத்தின் புகழபெற்ற நகைச்சுவை நடிகரான என்.எஸ்.கிருஷ்ணனின் உற்ற நண்பராகவும் விளங்கினார். அவரது வெற்றிக்கு தி.மு.க இயக்கத்தின் ஆதரவும் இருந்தது. அதுமட்டுமல்ல அந்தக்காலத்து இசையமைப்பாளர்களின் ஆதர்சக்கவிஞரார்கவும் விளங்கியவர் உடுமலை நாராயணகவி என்பது மிகையான கூற்றல்ல.

    காசிக்குப் போனால் கருவுண்டாகும் என்ற காலம் மாறிப் போச்சு - இப்போ ஊசியைப் போட்டா உண்டாகும் என்கிற உண்மை தெரிஞ்சு போச்சு – [ படம்: Dr .சாவித்ரி ]

    என காலத்துக்கேற்ற விஞ்ஞானக் கருத்துக்களை உளவாங்கி பாடல்களை எழுதினார் உடுமலை நாராயணகவி. நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நெருங்கிய நண்பரான உடுமலை அவருக்காக சமூகக் கருத்துக்களை வெளிப்படுத்தும் பலவிதமான பாடல்களையும் எழுதினார்.

    சிரிப்பு சிரிப்பு இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு

    சிரிப்பின் மகிமையை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான பாடலை யாரும் எண்ணிப்பார்க்க முடியாதவண்ணம் எழுதியவர் உடுமலையார்

    மிகுந்த இலக்கியநடையிலும் தன்னால் பாடல்கள் எழுத முடியும் என அவர் பல பாடல்கள் மூலம் நிரூபித்தார். அதற்கு உதாரணாக " எல்லாம் இன்ப மயம் " [ படம் : மணமகள் 1950 ] பாடலைக் கூறலாம்

    உடுமலை நாராயணகவி எழுதிய சில பாடல்கள்:

    01 எல்லாம் இன்பமயம் - மணமகள் 1951 - எம்.எல்.வசந்தகுமாரி + பி.லீலா - இசை : சி.ஆர்.சுப்பராமன் 02 கன்னித் தமிழ் சாலையோரம் - சொர்க்கவாசல் 1954 - கே.ஆர். ராமசாமி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 ஒன்றல்ல இரண்டல்ல தம்பி - தாய் மக்களுக்கு கட்டிய தாலி 1954 - சீர்காழி - இசை : டி.ஆர்.பாப்பா 04 சிங்கார பைங்கிளியே பேசு - மனோகரா 1954 - ஏ.எம்.ராஜா + ராதா ஜெயலட்சுமி - இசை : எஸ்.வி.வெங்கடராமன் 05 விண்ணோடும் முகிலோடும் - புதையல் 1957 - சி.எஸ்.ஜெயராமன் + பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 06 ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா - மஞ்சள் மகிமை 1959 - கண்டசாலா + பி.சுசீலா - இசை : மாஸ்டர் வேணு 07 கோடை மறைந்தால் இன்பம் வரும் - மஞ்சள் மகிமை 1959 - கண்டசாலா + பி.சுசீலா - இசை : மாஸ்டர் வேணு 08 தாரா தாரா வந்தாரா - தெய்வப்பிறவி 1960 - எம்.எஸ்.ராஜேஸ்வரி - இசை : கே.வி.மகாதேவன் 09 பொன்னாள் இது போலெ - பூம்புகார் 1965 - டி.எம்.எஸ் +ஜானகி - இசை : சுதர்சனம் 10 கடவுள் என்னும் முதலாளி - விவசாயி 1969 - டி.எம்.எஸ் - இசை : கே.வி.மகாதேவன் 11 காதல் எந்தன் மீதில் என்றால் - விவசாயி 1969 - டி.எம்.எஸ் + பி.சுசீலா - இசை : கே.வி.மகாதேவன்.

    உடுமலை நாராயணகவி க்கு பின்னர் ஒரு படத்தின் முழுப்பாடல்களை எழுதும் வாய்ப்பைப் பெற்ற கவிஞராக தஞ்சை ராமையாதாஸ் திகழ்ந்தார்.

    உடுமலை நாராயணகவி புகழின் உச்சத்திலிருந்த அந்தக்காலத்திலேயே பிற கவிஞர்கள் பலரும் கவிநயமிக்க மிக அருமையான பாடல்களையும் இயற்றினர்.அக்கவிஞர்களின் பாடல்களில் சில:

    கவிஞர் சுரதா

    01 கண்ணில் வந்து மின்னல் போல் - நாடோடிமன்னன் 1958 - டி.எம்.எஸ் + ஜிக்கி - இசை : சுப்பையாநாயுடு 02 அமுதும் தேனும் எதற்கு - தாய் பிறந்தால் வழி பிறக்கும் 19559 - சீர்காழி - - இசை : கே.வி.மகாதேவன் 03 விண்ணுக்கு மேலாடை - நாணல் 1966 - டி.எம்.எஸ் + பி.சுசீலா - - இசை : .வி.குமார்

    கவிஞர் விந்தன் 04 மயக்கும் மாலை பொழுதே நீ போ - குலேபகாவலி 1957 - ஏ.எம்.ராஜா + ஜிக்கி - இசை : கே.வி.மகாதேவன் 05 கொஞ்சும் கிளையான பெண்ணை - கூண்டுக்கிளி 1954 - டி.எம்.எஸ் - இசை : கே.வி.மகாதேவன் 06 இதயவானின் உதய நிலவே - பார்த்திபன் கனவு 1960 - ஏ.எம்.ராஜா + பி.சுசீலா - இசை : வேதா

    கவிஞர் மருதகாசி

    01 வாராய் நீ வாராய் - மந்திரிகுமாரி 1951 - லோகநாதன் + ஜிக்கி - இசை : ஜி.ராமநாதன் 02 தென்ற உறங்கிய போதும் - பெற்ற மகனை விற்ற அன்னை 1957 - ஏ.எம்.ராஜா + சுசீலா - இசை : கே.வி.மகாதேவன் 03 முல்லை மலர் மேலே - உத்தமபுத்திரன் 1959 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : ஜி.ராமநாதன் 04 சமரசம் உலாவும் இடமே - ரம்பையின் காதல் 1956 - சீர்காழி - இசை : டி.ஆர்.பாப்பா 05 கடவுள் என்னும் முதலாளி - விவசாயி 1968 - டி.எம்.எஸ் - இசை : கே.வி.மகாதேவன்

    கவிஞர் வில்லிபுத்தன்

    01 விழிவாசல் அழகான மணிமண்டபம் - பெண் குலாத்தின் பொன் விளக்கு 1959 - சீர்காழி + சுசீலா - இசை :மாட்டார் வேணு 02 நான் பாட நீ ஆடு கண்ணே - மாலா ஒரு மங்கள விளக்கு 1959 - பி.பி.ஸ்ரீனிவாஸ் - இசை : சி.என்.பாண்டுரங்கன்

    கவிஞர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்

    01 காதல் வாழ்வில் நானே - எதிர்பாராதது 1954 - ஏ.எம்.ராஜா + ஜிக்கி - இசை :சி.என்.பாண்டுரங்கன் 02 உன் அழகை கன்னியர்கள் - உத்தமபுத்திரன் 1958 - பி.சுசீலா - இசை : ஜி.ராமநாதன்

    கா.மு செரீப்:

    01 வாழ்ந்தாலும் ஏசும் - நான் பெற்ற செல்வம் 1955 - டி.எம்.எஸ் - இசை : ஜி.ராமநாதன் 02 நான் பெற்ற செல்வம் - நான் பெற்ற செல்வம் 1955 - டி.எம்.எஸ் - இசை : ஜி.ராமநாதன் 03 ஏரிக்கரையில் மேலே - முதலாளி 1958 - டி.எம்.எஸ் - - இசை : கே.வி. மகாதேவன் 04 பணம் பந்தியிலே - பணம் பந்தியிலே 1961 - சீர்காழி - இசை : கே.வி. மகாதேவன் 05 பார்த்தா பாசுரம் - திருவருட்செல்வர் 1967 - டி.எம்.எஸ் - இசை : கே.வி.மகாதேவன் 06 பொன்னான வாழ்வு - டவுன் பஸ் 1959 - லோகநாதன் + ராஜேஸ்வரி - - இசை : கே.வி.மகாதேவன்

    எஸ்.டி.சுந்தரம்:

    01 அழகோடையில் நீந்தும் அன்னம் - கோகிலவாணி 1955 - சீர்காழி + ஜிக்கி - இசை : ஜி.ராமநாதன் 02 அன்பொளிவீசி உயிர் விரித்தாடும் - கோகிலவாணி 1955 - சீர்காழி + ஜிக்கி - இசை : ஜி.ராமநாதன் 03 இமயமலைச் சாரலில் - மனிதனும் மிருகமும் 1958 - எம்.எல்.வசந்தகுமார் - இசை : கோவிந்தராஜூலு

    கே.பி.காமாட்சி

    01 சிற்பி செதுக்காத - எதிர்பாராதது 1955 - ஏ.எம்.ராஜா + ஜிக்கி - இசை : ஜி.ராமநாதன் 02 மந்த மாருதம் தவழும் - நானே ராஜா 1955 - டி.எம்.எஸ் - இசை : ராமநாதன் 03 தேன் உண்ணும் வண்டு - அமரதீபம் 1956 - ஏ.எம்.ராஜா + சுசீலா - இசை : சலபதிராவ் 04 பொருளே இல்லார்க்கு - பராசக்தி 1952 - டி..எஸ்.பகவதி - இசை : சுதர்சன் 03 வசந்த முல்லையும் மல்லிகையும் - ஓர் இரவு 1951 - எம்.எஸ்ராஜேஸ்வரி - இசை : ஆர்.சுதர்சனம்

    கம்பதாசன்

    01 ஏகாந்தமாம் இம்மாலையில் - அவன் 1951 - ஜிக்கி - இசை : சங்கர் ஜெய்கிஷன் 02 கண் காணாததும் மனம் - அவன் 1951 - ஏ.எம்.ராஜ + ஜிக்கி - இசை : சங்கர் ஜெய்கிஷன் 03 அன்பே வா அழைக்கின்ற - அவன் 1951 - ஏ.எம்.ராஜா + ஜிக்கி - இசை : சங்கர் ஜெய்கிஷன் 04 நான் ஏன் வர வேண்டும் - பூங்கோதை 1955 - மோதி + ஜிக்கி - இசை : 05 ஆசைக்கிளியே அழைத்து வாராய் - இதயகீதம் 1953 - மகாலிங்கம் + வரலட்சுமி - இசை : டி.ஜி.லிங்கப்பா

    கு.மா. பாலசுப்ரமணியம்

    01 வானமீதில் நீந்தி ஓடும் - கோமதியின் காதலன் 1956 - சீர்காழி - இசை : ஜி.ராமநாதன் 02 அன்பே என் ஆரமுதே - கோமதியின் காதலன் 1956 - சீர்காழி + ஜிக்கி - இசை : ஜி.ராமநாதன் 03 அமுதை பொழியும் நிலவே - தங்கமலை ரகசியம் 1959 - பி.சுசீலா - இசை :டி.ஜி.லிங்கப்பா 04 மாசிலா நிலவே நம் - அம்பிகாபதி 1957 - டி.எம்.எஸ் + பானுமதி - இசை : ஜி.ராமநாதன் 05 சித்திரம் பேசுதடி - சபாஷ் மீனா 1953 - டி.எம்.எஸ் இசை : டி.ஜி.லிங்கப்பா 06 காணா இன்பம் - சபாஷ் மீனா 1953 - டி.ஏ.மோதி + பி.சுசீலா இசை : டி.ஜி.லிங்கப்பா 07 சிங்கார வேலனே தேவா - கொஞ்சும் சலங்கை 1962 - எஸ்.ஜானகி இசை : எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு

    ஆத்மநாதன்

    01 விண்ணோடும் முகிலொடும் - புதையல் 1956 - சி.எஸ்.ஜெயராமன் + பி.சுசீலா - இசை : விசுவநாதன் ராமமூர்த்தி 02 ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - நல்லவன் வாழ்வான் 1960 - சீர்காழி - இசை :டி.ஆர்.பாப்பா 03 வண்ண மலரோடு கொஞ்சும் - நாட்டுக்கோர் நல்லவன் 1960 - சீர்காழி + பி.சுசீலா - இசை :மாஸ்டர் வேணு

    லட்சுமணன்

    01 நீயும் பொம்மை - பொம்மை 1964 - கே.ஜே.ஜேசுதாஸ் - இசை : எஸ்.பாலசந்தர் 02 நான் தேடும் போது நீ ஓடலாமா - அவள் யார் 1955 - பானுகிரகி இசை : எஸ்.ராஜேஸ்வரராவ் 03 கண் காணும் மின்னல் தானோ - அவள் யார் 1955 - பானுகிரகி இசை : எஸ்.ராஜேஸ்வரராவ்

    பி.கே.முத்துசாமி

    01 மண்ணுக்கு மரம் பாரமா - தை பிறந்தால் வழி பிறக்கும் 1958 - எஸ்.ராஜேஸ்வரி - இசை : கே.வி.மகாதேவன் 02 ஏன் சிரித்தாய் என்னை பார்த்து - பொன்னித்திருநாள் 1960 - பி.பி.எஸ் - இசை :கே.வி.மகாதேவன் 03 சின்ன சின்ன நடை நடந்து - காவேரியின் கணவன் 1960 - பி.சுசீலா - இசை :மாஸ்டர் வேணு

    ஆலங்குடி சோமு

    01 மலை சாய்ந்து போனால் - கார்த்திகை தீபம் 1966 - டி.எம்.எஸ் - இசை : ஆர்.சுதர்சனம் 02 எண்ணப்பறவை - கார்த்திகை தீபம் 1966 - டி.எம்.எஸ் - இசை : ஆர்.சுதர்சனம் 03 மலருக்கு தென்றல் பகையானால் - எங்க வீட்டு பிள்ளை 1963 - சுசீலா + ஈஸ்வரி - இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 மேகங்கள் திரண்டு வந்தால் - நான் ஆணையிட்டால் 1966 -டி.எம்.எஸ் - இசை :விஸ்வநாதன் 05 தாயில்லாமல் நானில்லை - அடிமைப்பெண் 1969 -டி.எம்.எஸ் - இசை :கே.வி.மகாதேவன் 06 ஒரு கொடியில் இருமலர்கள் - காஞ்சித்தலைவன் 1963 -டி.எம்.எஸ் + சுசீலா - இசை :கே.வி.மகாதேவன் 07 ஆணடவன் உலகத்தின் முதலாளி - தொழிலாளி 1966 -டி.எம்.எஸ் - இசை :கே.வி.மகாதேவன் 08 இறந்தவனை சுமப்பவனும் - இரவும் பகலும் 1965 - அசோகன் - இசை :டி.ஆர்.பாப்பா

    மாயவனாதன்

    01 சித்திரப் பூவிழி வாசலிலே - இதயத்தில் நீ 1964 - சுசீலா + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 நித்தம் நித்தம் மாறுகின்ற - பந்தபாசம் 1963 - சீர்காழி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 தேன்நிலவு தேனீரைக்க - படித்தால் மட்டும் போதுமா 1963 - சுசீலா - இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 பூந் தென்றல் இசைபாட - தாயின் கருணை 1965 - பி.பி.எஸ் - இசை :ஜி.கே.வெங்கடேஷ்

    திருச்சி தியாகராஜன்

    01 மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய் - செங்கமலத்தீவு 1962 -பி.பி.எஸ். ஈஸ்வரி - இசை :கே.வி.மகாதேவன் 06 சிந்தித்தால் சிரிப்பு வரும் - செங்கமலத்தீவு 1962 -டி.எம்.எஸ் - இசை :கே.வி.மகாதேவன்

    புரட்சிதாசன்

    01 செங்கனி வாய் திறந்து - யானைப்பாகன் 1961 - சீர்காழி + சுசீலா - இசை :கே.வி.மகாதேவன் 02 வான் மதியாகியே - மாயமோகினி 1956 - ஏ.எம்.ராஜா + ஜிக்கி - இசை :-

    1950களின் நடுப்பகுதியில் மெல்லிசைமன்னர்கள் அறிமுகமாகிப் புகழ் பெறத் தொடங்கினர்.

    நாம் விரும்பியோ விரும்பாமலோ நமது காதுகளில் வந்து விழுந்த சினிமாப்பாடல்களை ஓர் இலக்கிய வடிவமாக ஏற்றுக்கொள்ளாத நிலை தமிழ் இலக்கியச் சூழலில் இருந்தது. அவையெல்லாம் பழந்தமிழ் இலக்கியமனான சங்க இலக்கியத்திலிருந்தும் , பிற இலக்கியங்களிலிருந்தும் சாரம்பிழிந்து தரப்பட்டடவை எனபதை இலக்கியம் தெரிந்தவர்கள் பின்னாளில் எடுத்து விளக்கும் போது வியப்படைகின்றோம்.

    எளிமையாக மக்கள் புழங்கிவரும் ஒலித்திரள்களையெல்லாம் இசைப்பாடல்களில் இழைத்து பாமரமக்களுக்கும் புரியும்வண்ணம் தந்த பாடலாசிரியரும் , அவர்களின் இலக்கியப்புலமையும் இசைவடிவம் பெற்று திக்கெட்டும் பரவியது. இது போன்ற பாடல்களின் புகழ் சாதாரண வாசகர்களையும் பழந்தமிழ் இலக்கியங்கள் மீதான ஆர்வங்களைத் தூண்டிவிட்டன. இது குறித்த ஆய்வுகளும் பிற்காலத்தில் ஏற்படலாயிற்று.

    தமிழின் ஒலித்திரள்கள் இசைத்தமிழின் கூறுகளில் பின்னிப்பிணைக்கப்பட்டு பலவிதமான பாடல்வடிவங்கள் பெற்று நம்மை வந்தடைந்தன.பழந்தமிழ் இலக்கியம் என்ற அழகான மாளிகைக்குள் பாமரமக்களையும் அழைத்து சென்ற பெருமை சினிமாப் பாடலாசிரியர்களைச் சாரும். அந்த அழகிய மாளிகையில் தாம் என்னென்னவற்றையெல்லாம் ரசித்தார்களோ அவற்றையெல்லாம் சாதாரண மக்களுக்கு புரியும் வண்ணமும் காட்டினர்.

    தமிழ்மரபில் வரக்கூடிய இலக்கிய வகைகளையெல்லாம் திரைக்களனுக்குப் பொருத்தமான முறையில் கதைகளின் பொருத்தபபாடறிந்து பாடல்களாக்கிய பெருமை பாடலாசிரியர்களையே சாரும். நாட்டுப்புறம், தத்துவம், காதல் ,ஆன்மிகம் போன்ற அனைத்துத் துறைகளிலும் அற்புதமான பாடல்களாக்கித் தந்தனர். உயர்ந்த கவிநடை மட்டும்மல்ல சாதாரண மக்களின் நெஞ்சார்ந்த வாழ்வும் அனுபவமும் , வட்டார மொழிவழக்குகளும் பாடல்களாக்கப்பட்டன.

    ஆனாலும் இத்தனை சிறப்பான ஆற்றல்கள் மிக்கவர்களாக விளங்கிய அன்றைய முன்னணிக் கவிஞர்களாயிருந்த உடுமலை நாராயணகவி , தஞ்சை ராமையாதாஸ் , சுரதா , கம்பதாசன் போன்றோரையெல்லாம் மெல்லிசைமன்னர்கள் தாம் புகழ்பெற்ற காலத்தில் சட்டை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழத்தான் செய்தது.

    பழம்பெரும் கவிஞர்களாக இருந்தவர்கள் அன்றைய பழைய இசையமைப்பாளர்களுக்கு மிகவும் விருப்பமானவர்களாக இருந்தனர். அன்றைய இசையமைப்பாளர்களிடம் உதவியாளர்களாக இருந்த விஸ்வநாதன் ராமமூர்த்தி பின்னர் தாம் இசையமைப்பாளர்களான பின்னர் தாம் விரும்பியபடி பழைய கவிஞர்களிடம் வேலை வாங்க முடியுமா என்ற பயம் அல்லது தாம் விரும்புகிற சுதந்திரம் கிடைக்குமா என்கிற சந்தேகம் புதியவர்களிடம் இருந்திருக்கக்கூடும்!

    பின்னாளில் 1990களில் பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்படும் TTN என்ற தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பழம்பெரும் கவிஞரான உவமைக்கவி சுரதா " நீங்கள் ஏன் சினிமாவில் நீண்ட காலமாக பாட்டு எழுதவில்லை " என்ற கேள்விக்கு " என்னை கூப்பிட்டால் நான் எழுத மாட்டேனா ? சும்மா ஆர்மோனியம் வாசித்துக்கொடு திரிந்த விஸ்வநாதனை நான் தான் அன்று புகழபெற்றிருந்த ஞானமணியிடம் சேர்த்து விட்டேன் ; அவர் என்னை பாட்டு எழுதக் கூப்பிடவில்லையே !? எனத் தனது விசனத்தைத் தெரிவித்தார்.

    கலைஞருக்களுக்கிடையேயான மனச்சிக்கல்கள், புரிந்துணர்வற்ற தன்மை பழைய இசையமைப்பாளர்களுக்கு புதிய கவிஞர்களுக்கும் , புதிய இசையமைப்பாளர்களுக்கும் பழைய கவிஞர்களுக்குமான விலக்கல், நீக்கல்களுக்கு காரணமாகின்றன. பாடல்வரிகளும், இசையும் ஒன்றையொன்று சார்ந்திருக்க வேண்டியது அவசியம் என்ற நிலையில் இக்கலைஞர்களுக்கிடையேயான உறவுச் சிக்கல்களால் மெருகு மிகுந்த படைப்புக்கள் வெளிவராமல் போய்விடுகின்ற துரதிஷ்டம் நிகழ்கிறது. ஆற்றல்மிக்க கலைஞர்கள் ஒதுக்கப்படுவதால் எத்தனை அற்புதமான படைப்புகள் மக்களுக்கு கிடைக்காமல் போகின்றன என்பதற்கு ஒதுக்கப்பட்ட அல்லது தானே ஒதுங்கிய பாடகரான ஏ.எம்.ராஜா உட்பட ஏராளமான கலைஞர்கள் உதாரணமாகத் திகழ்வது கலையுலகிற்கும் , மக்களுக்கும் , குறிப்பாக நல்லிசை ரசிகர்களுக்கு பெருநட்டமாகும்.

    மூத்த இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் மத்தியில் இளைஞர்களாயிருந்த விஸ்வநாதன் - கண்ணதாசன் தங்களுக்குள் ஓர் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தியது என்பது இளைஞர்களிடம் இயற்கையாக இருக்கும் நடப்புணர்வின் இயல்பாகும். தங்களது சுயத்தைக் காக்கும் ஒரு போக்காகவும் இந்த இளைஞர்களின் இசைவை , நட்பை நாம் காண வேண்டியுள்ளது.

    பழைய வரம்புகளுக்கு உட்பட விரும்பாத புதியவர்கள் தங்களுடன் இசைந்து போபவர்களுடன் இணைந்து கொள்கின்றனர்.பழமைக்கும் புதுமைக்கும் இடையே நடக்கும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவையே ! இதில் சில கவிஞர்கள் "சதி பதி விரோதம் மிகவே சிதைந்தது இதம் தரும் வாழ்வே " என்று பாடல்வரிகளையும் எழுதியமை குறிப்பிடத்தக்கது

    ஆயினும் ஆரம்பகாலத்தில் உடுமலை நாராயணகவி ,மருதகாசி , தஞ்சை ராமையாதாஸ் ,ஆத்மநாதன் போன்ற பல கவிஞர்கள் மெல்லிசைமன்னர்களின் இசையில் சில பாடல்கள் எழுதினார்கள் என்பதும் உண்மையே !

    மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் இவர்கள் எழுதிய சில பாடல்கள் இங்கே;

    01 கன்னித் தமிழ் சாலையோரம் - சொர்க்கவாசல் 1955 - பாடியவர்: கே.ஆர்.ராமசாமி - கவிஞர் : உடுமலை 02 நாடு நடக்கிற நடையிலே - சொர்க்கவாசல் 1955 - பாடியவர்: கே.ஆர்.ராமசாமி - கவிஞர் : உடுமலை 03 எங்கே தேடுவேன் - பணம் 1955 - பாடியவர்: என்.எஸ்.கிருஷ்ணன் - கவிஞர் : உடுமலை நாராயணகவி 04 அநியாயம் இந்த ஆடசியிலே - குலேபகாவலி 1955 - பாடியவர்: ஜிக்கி - கவிஞர் : தஞ்சைராமையாதாஸ் 05 வில்லேந்தும் வீரரெல்லாம் - குலேபகாவலி 1955 -பாடியவர்: லோகநாதன் + லீலா - கவிஞர் : தஞ்சைராமையாதாஸ் 06 விண்ணோடும் முகிலொடும் - புதையல் 1956- பாடியவர்: ஜெயராமன் + சுசீலா - கவிஞர் : ஆத்மநாதன் 07 தென்றல் உறங்கிய போதும் - பெற்றமகனை விற்ற அன்னை 1957 -பாடியவர்: ஏ.எம்.ராஜ + சுசீலா - கவிஞர் : மருதகாசி

    ஒவ்வொரு காலத்திலும் புதியவர்கள் அறிமுகமாவதும் அதில் சிலர் தவிர்க்க முடியாமல் தங்களது திறமையால் அதி உச்சங்களையும் தொடுவதும் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாக அமைகின்றன. அந்தவகையில் அறிமுகமாகிக் குறுகிய காலத்திலேயே முதன்மைக் கவிஞராகத் திகழ்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

    மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த பாசவலை என்ற படத்தின் ஒரு பாடலுக்கு கண்ணதாசன் , மருதகாசி , தஞ்சை ராமையாதாஸ் போன்றோர் பலநாள் முயன்றும் சரியாக அமையாத ஒரு சூழ்நிலையில் புதுக்கவிஞனாக வந்த பட்டுக்கோட்டை அனாயாசமாக அதை எழுதி எல்லோரையும் திகைக்க வைத்தான்.

    பின்னாளில் தனது பாடல்களால் புகழ் பெற்ற கவிஞர் கண்ணதாசனுக்கு பாடல் எழுதும் துறையில் எடுத்த எடுப்பில் அங்கீகாரம் கிட்டவில்லை. இது குறித்து பின்னாளில் கண்ணதாசன் தனது வனவாசம் என்ற நூலில் பின்வருமாறு எழுதுகிறார்." பாட்டெழுதுகிறேன் பாட்டெழுதுகிறேன் " என்று நிர்வாகிகளிடம் கேட்டுப் பார்த்தான். அந்தப் பாட்டுத்தான் மிஞ்சியதே தவிர, சினிமாப்பாட்டுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை "

    பின்னர் அவரது வெற்றி படிப்படியாகவே வந்ததெனினும் இதே காலத்தில் [ 1950 களில் ] கண்ணதாசன் பாடல் எழுதுவதிலும் , படங்களுக்கு வசனம் எழுதுவதிலும் புகழ்பெற்றவராகவே இருந்தார்.

    கண்ணதாசனுக்கும் , விஸ்வநாதனுக்குமான அறிமுகம் விஸ்வநாதன் உதவியாளராக இருந்த காலத்திலேயே நிகழ்ந்து விட்டது. பழம்பெரும் பாடலாசிரியர்களாக இருந்த உடுமலை நாராயணகவி , தஞ்சை ராமையாதாஸ் போன்றவர்கள் பாடல்கள் எழுதிய காலத்தில் அறிமுகமான கண்ணதாசன் எழுதிய " காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டாடுதே " என்ற பாடலில் பாடல்வரிகள் இசைக்கு பொருந்தாததை அன்றைய இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையாநாயுடு குறிப்பிட்டு சொன்னதாகவும் , பின் உடுமலை நாராயணகவி அந்த வரிகளை " காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோசம் கொண்டாடுதே " என்று மாற்றியதாகவும் அன்று இசையமைப்பாளரின் உதவியாளராக இருந்த விசுவநாதன் பின்னாளில் கண்ணதாசனுடனான முதல் சந்திப்பு பற்றி கூறினார்.

    இந்த அறிமுகம் இளைஞர்களாயிருந்த இருவரையும் பின்னாளில் நெருக்கமான நண்பர்களாக்கியது.குறுகிய காலத்தில் படத்தயாரிப்பாளாராக வளர்ந்த கண்ணதாசன் தனது முதல் சொந்தப்படமான மாலையிட்ட மங்கை படத்தின் இசையமைப்பாளர்களாக மெல்லிசைமன்னர்களையே நியமித்தார். அந்தப்படம் மெல்லிசைமன்னர்களுக்கும் புதுத்திருப்பமாகவே அமைந்து விட்டது.

    அன்றைய நிலையில் கண்ணதாசன் பாடல் எழுதுவதிலும் , வசனம் எழுதுவதிலும் தனக்கென ஓர் தனி இடத்தைப்பிடித்து புகழ் பெற்றிருந்தார் என்பதும் உண்மையே ! வசனம் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் சினிமாவில் நுழைந்த கண்ணதாசன் பாடல் எழுதுவதில் முன்னணிக்கு வந்தது என்பதும் அவரது இன்னொரு ஆளுமைக்கு சான்றாகும்.

    மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி அதிகம் புகழ் பெறாத காலத்திலேயே கண்ணதாசன் நல்ல கவிஞர் என்று பெயர் எடுத்திருந்தார் என்பதற்கு அவர் எழுதிய ஆரம்பகாலப் பாடல்களே சான்றாகும். வகைக்கு சில பாடல்கள் :

    01 கலங்காதிரு மனமே நீ - கன்னியின் காதலி 1947 - பாடியவர்: கே.வி.ஜானகி - இசை : எஸ்.எம்.சுப்பையாநாயுடு 02 காரணம் தெரியாமல் உள்ளம் - கன்னியின் காதலி 1947 - பாடியவர்: கே.வி.ஜானகி - இசை : எஸ்.எம்.சுப்பையாநாயுடு 03 புவி ராஜா என் ஆருயிர் - கன்னியின் காதலி 1947 - பாடியவர்: எம்.எல்.வி + லோகநாதன் - இசை : சி.ஆர்.சுப்பராமன் 04 கண்டேன் அய்யா - கன்னியின் காதலி 1947 - பாடியவர்: கே.வி.ஜானகி - இசை : எஸ்.எம்.சுப்பையாநாயுடு 05 வானின் மதி போல் - கன்னியின் காதலி 1947 - பாடியவர்: கே.வி.ஜானகி - இசை : எஸ்.எம்.சுப்பையாநாயுடு 06 வானத்து முழுமதியோ - கன்னியின் காதலி 1947 - பாடியவர்: கே.வி.ஜானகி - இசை : எஸ்.எம்.சுப்பையாநாயுடு 07 கேட்பதெல்லாம் காதல் கீதங்களே - இல்லறஜோதி 1955 - பாடியவர்: பி.லீலா - இசை : ஜி.ராமநாதன் 08 பெண்ணில்லாத ஊரிலே - இல்லறஜோதி 1955 - பாடியவர்: ஜிக்கி - இசை : ஜி.ராமநாதன் 09 சிட்டுப் போலெ வணக்கம் - இல்லறஜோதி 1955 - பாடியவர்: ஏ.பி.கோமளா - இசை : ஜி.ராமநாதன் 10 கலைதேனூரும் கன்னித் தமிழ் - இல்லறஜோதி 1955 - பாடியவர்: பி.லீலா - இசை : ஜி.ராமநாதன் 11 களங்கமில்லா காதலிலே - இல்லறஜோதி 1955 - பாடியவர்: ஜிக்கி - இசை : ஜி.ராமநாதன்12 கன்னியரின் வெள்ளைமணம - இல்லறஜோதி 1955 - பாடியவர்: ஏ.எம்.ராஜா + ஸ்வர்ணலதா - இசை : ஜி.ராமநாதன் 13 தங்க நிலவில் - திருமணம் 1958 - பாடியவர்: ஏ.எம்.ராஜா +ஜிக்கி - இசை : எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு 14 நாடகம் எல்லாம் கண்டேன் - மதுரைவீரன் 1955 - பாடியவர்: டி.எம்.எஸ் + ஜிக்கி - இசை : ஜி.ராமநாதன் 15 கண் பாடும் பொன்வண்ணமே - சகோதரி 1955 - பாடியவர்: ஏ.எம்.ராஜா + ஜிக்கி - இசை : ஆர்.சுதர்சனம் 16 தென்றல் உறங்கிடக்கூடுமடி - சங்கிலித்தேவன் 1955 - பாடியவர்: டி.எம்.எஸ் + பி.லீலா - இசை : டி.ஜி.லிங்கப்பா 17 ஒருமுறை தான் வரும் - மங்கையர் திலகம் 1955 - பாடியவர்: ஜிக்கி - இசை : எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி 18 கண்கள் இரண்டில் - திரும்பிப்பார் 1955 - பாடியவர்: கோமளா - இசை : ஜி.ராமநாதன் 19 அவர்க்கும் எனக்கும் - மதுரைவீரன் 1955 - பாடியவர்: பி.பானுமதி - இசை : ஜி.ராமநாதன் 20 வாடா மலர்த்தேனே - தோழன் 1960 - பாடியவர்: பாலசரஸ்வதி தேவி - இசை : ஜி.ராமநாதன்.

    இவ்விதமாக பலவிதமான பாடலாசிரியர்களான கு.சா.கிருஷ்ணமூர்த்தி , , டி.கே. சுந்தரவாத்தியார் கம்பதாசன் , உடுமலை நாராயணகவி , 1950 களில் தஞ்சை ராமையாதாஸ் , சுரதா , அண்ணல் தாங்கோ , சுரபி , லட்சுமணன் .பி.கே.முத்துசாமி , கோவை குமார தேவன் ,ப.ஆதிமூலன், முடியரசன், பல்லடம் மாணிக்கம் ,நாஞ்சில்நாடு ராஜப்பா, புரட்சிதாசன் , மருதகாசி , க.மு. செரீப் , அவினாசிமணி ,ஆலங்குடி சோமு ,எஸ்.டி.சுந்தரம் ,,மு.கருணாநிதி, கே.பி.காமாட்சி, விந்தன். வில்லிபுத்தன் மக்களன்பன் , கு.மா.பாலசுப்ரமணியம் , மாயவனாதன் ,கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் , கே.டி. சந்தானம், கண்ணதாசன் ...என பல ஆற்றல்மிக்க ஜாம்பவான்கள் களத்திலிருந்த 1950களின் நடுப்புகுதியில் பாடல் எழுதும் வாய்ப்புப் பெற்று வந்தவர் தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

    உயிர்த்துடிப்புமிக்க தனது வரிகளில் நாயக, நாயகி பாவங்களை மட்டுமல்ல தனது அரசியல் மற்றும் சமூகக்கருத்துக்களையும் சேர்த்தெழுதி அறிமுகமான சில காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணிக்கவிஞன் ஆனார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

    இயல்பாகவே நட்பு பாராட்டும் கவிஞர் கண்ணதாசனுக்கும் ,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கும் இடையே நல்ல உறவு இருந்தது என்பது கண்ணதாசனின் பின்னைய எழுத்துக்களில் வெளிப்பட்டன. கண்ணதாசன் திராவிட இயக்கத்தையும் ,பட்டுக்கோட்டை கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் சார்ந்ததும் , கவிஞர்கள் என்ற ரீதியில் இருவருக்கும் நெருக்கமும் இருந்தது.

    தனது குறுகிய வாழ்நாளில் தான் எழுதும் பாடல்கள் சிலவற்றை கண்ணதாசனுக்கும் வழங்கியவர் பட்டுக்கோட்டை ! " இது கண்ணதாசன் எழுதினால் நன்றாக இருக்கும் .அவரைக்கொண்டே எழுதுங்கள் என்று எழுந்து போய்விடுவார் " என்பர்.அப்படி எழுதப்பட்ட பாடல்களில் ஒன்று தான் " கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே " - [ அம்பிகாபதி 1957 ] என்ற பாடல்!

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - மெல்லிசைமன்னர்களின் இணை பதிபக்தி படத்தின் மூலம் உச்சம் பெற்றது.புகழபெற்ற இயக்குனரான பீம்சிங் இயக்கிய " ப " வரிசையில் சிவாஜி நடத்த பல படங்களின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது இந்தத்திரைபடம்.

    தமிழ்த்திரைப்பட வளர்ச்சிநிலையில் ஒருகாலகட்டத்தில் சமூகக்கதைகளின் வருகையும் ,அதற்கேற்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ,கண்ணதாசன் போன்றோரின் எளிமைமிக்க பாடல் வரிகளும் , மெல்லிசைமன்னர்களின் இனிய இசையும் என ஒரு புதிய, இனிய திரட்சி , பிழிந்தெடுக்கப்பட்ட சாரங்களின் ஒன்றிணைவாக அந்தக்காலம் அமைந்துவிட்டது.

    எனினும் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு மட்டுமல்ல சினிமாவில் பாடல்துறையில் பெரும்பாய்ச்சலைக்காட்டி ஒளிருந்து கொண்டிருந்த நட்சத்திரமாக விளங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது 29வது வயதில் மரணமடைந்தமை பாடல்துறையில் கண்ணதாசனின் தனி ராஜ்ஜியத்திற்கான முழுக்கதவையும் திறந்து விட்டது!

    [ தொடரும் ]

    Postad



    You must be logged in to post a comment Login