Recent Comments

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் -12

    T .சௌந்தர்

    வெண்கலக்குரலின் அசரீரி:

    தமிழ் சினிமாவில், ஒருகாலத்தில் பெரும்பாலும் கர்னாடக இசை நன்கு தெரிந்தவர்கள் மட்டும் தான் பாட முடியும் என்றொரு நிலை இருந்தது.கர்நாடக இசை தெரிந்தவர்கள் அல்லது அதில் கொஞ்சமாவது பரீட்சயமிருந்தவர்களே நன்றாகக் பரிமளிக்கவும்  முடிந்தது.அதன் பயிற்சிக்களனாக அன்றைய நாடக மேடை இருந்தது.பாட முடியாதவர்கள் கூட அதில் ஆர்வம் காட்டும் அளவுக்கு இசை  முக்கியமாகக் கருதப்பட்டது.தொழில்முறைப்பாடகர் என்ற வகையில் இல்லாவிட்டாலும் பாடும் ஆற்றலைக் கொண்டவர்களுக்கு உதாரணமாக என்.எஸ்.கிருஷ்ணன் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.பாடும் ஆற்றல் மிக்கவர்கள் மீதான பிரமிப்பும் அதனால் தான் ஏற்பட்டது.நாடக மேடை மட்டுமல்ல, பின்னர் முறையான இசைப் பயிற்சியும் பெற்ற ஒரு இசைக்கலைஞனாக வளர்ந்தவர் தான் சீர்காழி கோவிந்தராஜன்.

    1940 களின்  சினிமாவில் கர்னாடக இசை என்பது கர்நாடக இசைக்கலந்த மென் இசையாக [ Semi Classical ] இருந்ததென்பதே உண்மையாகும்.செவ்வியலிசை தெரிந்தவர்கள் அதை அற்புதமாகப் பாடினார்கள்.1940 களில் தொடங்கிய அந்த இசைப்பாணி  1950 களின் இறுதியிலும் தொடர்ந்தது. அந்தவகையில் கர்னாடக இசையில் விதிமுறைப்பயிற்சி பெற்ற சீர்காழி கோவிந்தராஜன் தனது வெண்கலக்குரலால் தனக்கென ஓர் தனியிடத்தைப் பிடித்துக்கொண்டார்.

    செவ்வியல்  இசையிலும் சினிமா இசையிலும் சரிசமமாக தனது  திறமையைக் காண்பித்த முன்னோடிப்பாடகர்களில் ஒருவர்.இசையின் போக்கு மாறிய,வாய்ப்புகள் குறைந்த  ஒரு காலத்தில் மிக அருமையான  பக்திப்பாடல்களையும் ,இசை நிகழ்ச்சிகளையும் நடாத்தி தனக்கென தனியிடம் பிடித்த இணையற்ற பாடகர்.

    1962 இல் ராமநாதன் இசையில் வெளிவந்த தெய்வத்தின் தெய்வம் படத்தில், திருமண நிகழ்வொன்றில் சீர்காழியின் இசை நிகழ்ச்சி நடைபெறும் காட்சி இடம்பெற்றுள்ளது.அப்படத்தின் டைட்டிலில் "இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் இசை நிகழ்ச்சி " என்று தனித்து காட்டப்பட்டிருப்பது அவரது குரலுக்கும் ,பாடும்  இனிமை ,ஈர்ப்புகளுக்குக் கிடைத்த தவிர்க்க முடியாத அங்கீகாரமாகும்.

    தமிழ் இசைவெளியில் கலந்த குரல்களை பற்றி சிந்திக்கும் போது நாடகப்பண்பாடு சார்ந்தெழுந்த குரல்கள் நம் கவனத்துக்கு வருகின்றன.அவற்றை உற்று நோக்கி கவனித்ததில் அவை தமிழ் மண்ணுக்குரிய குரல்களோ [!] என்ற எண்ணம் மேலோங்குவதை தவிர்க்க முடியவில்லை.தமிழ் நாடக மரபின் வேர்களில் துளிர்த்து வளர்ந்த குரல்கள்அவை !

    அந்த மரபின் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க குரல்களாக எஸ்.ஜி.கிட்டப்பா,கே.பி.சுந்தராம்பாள், எம்.கே.தியாகராஜபாகவதர், பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், எம்.எம்.மாரியப்பா, திருச்சி லோகநாதன் ,எஸ்.சி.கிருஷ்ணன்,டி.எம்.சௌந்தரராஜன் என்ற வரிசையை நாம் வந்தடைவோம்.

    அப்படியான தமிழ் குரலுக்கு சொந்தக்காரர் தான் சீர்காழி கோவிந்தராஜன்.சிறுவனாக பாய்ஸ் கம்பனியில் நாடகப் பயிற்சி பெற்று ,மாடர்ன் தியேட்டர்ஸ் திரைக்கம்பனியில் வளர்ந்தவர்.தனது பாடும் ஆற்றலால் ஒரு காலத்தில் அந்த நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்த ஜி.ராமனாதனால் பாராட்டு பெற்றவர்.முறையாக தமிழ் மொழியின் உச்சரிப்பு இவரது சிறப்பு.மணியோசையின் சுகம் இவரது குரல்.மங்கலமும் , வெண்கலமும் இணைந்த தனித்துவமிக்க குரல்! செவ்வியல் இசைக்கு ஏற்ற குரலும்,உயர்ந்த சுருதிகளில் அனாயசமாக பாய்ந்து செல்லும் ஆற்றல் வாய்ந்த  குரல்வளம் கொண்ட பாடகர்.

    1952 ல் வெளிவந்த பொன்வயல் படத்தில்  "சிரிப்புத்தான் வருகுதைய்யா " என்ற பாடல் மூலம் அறிமுகமாகியவர்.அதைத்தொடர்ந்து 1952 களில்  புகழ் பெற்ற இசையமைப்பாளர்களிடமும் பல இனிமையான பாடல்களை பாடினார் .

    குறிப்பாக,  கம்பீரமும்,அழகும், உயர்ந்த சுருதியிலும் ,அனாயாசமான சங்கதிகளை அள்ளி வீசி, இசையமைப்பில்  மரபு மாறாத இனிமையை வகை , வகையாக கொட்டிய ஜி.ராமநாதனின் இசையமைப்பில் பல அற்புதமான பாடல்களை செவ்வியலிசை சார்ந்தும்,நாட்டுப்புறம்  சார்ந்தும் சீர்காழி  கோவிந்தராஜன்  பாடினார்.

    01   சரச மோகன சங்கீதாம்கிருத    - கோகிலவாணி 1955 - சீர்காழி - இசை:ஜி.ராமநாதன் 02   வானமீதில் நீந்தி ஓடும்  - கோமதியின் காதலன் 1956 - சீர்காழி - இசை:ஜி.ராமநாதன் 03   மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி  - கோமதியின் காதலன் 1956 - சீர்காழி + ஜிக்கி - இசை:ஜி.ராமநாதன் 04   அன்பே என் ஆரமுதே  வாராய்  - கோமதியின் காதலன் 1956 - சீர்காழி + ஜிக்கி - இசை:ஜி.ராமநாதன்

    05   மாலையிலே மனா சாந்தி தந்து  - கோகிலவாணி 1955  - சீர்காழி  - இசை:ஜி.ராமநாதன்

    06   பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் - சித்தூர் ராணி பத்மினி - சீர்காழி - இசை:ஜி.ராமநாதன்

    07   ஓகோ..நிலாராணி  - சித்தூர் ராணி பத்மினி - சீர்காழி - இசை:ஜி.ராமநாதன்

    08   எல்லையில்லாத இன்பத்தில்  - சக்கரவர்த்தித்த திருமகள் - சீர்காழி + பி.லீலா - இசை:ஜி.ராமநாதன்

    09   திருவே என் தேவியே வாராய்  - கோகிலவாணி  - சீர்காழி+ ஜிக்கி  - இசை:ஜி.ராமநாதன்

    10   வனமேவும் ராஜ குமாரி  -ராஜா தேசிங்கு   - சீர்காழி+ ஜிக்கி  - இசை:ஜி.ராமநாதன்

    11   மலையே உன் நிலையை நீ பாராய்  - வணங்காமுடி - சீர்காழி - இசை:ஜி.ராமநாதன்

    12   காதலெனும் சோலையிலே ராதே ராதே   - சக்கரவர்த்தித்த திருமகள்  - சீர்காழி - இசை:ஜி.ராமநாதன்

    13   அன்பொளி வீசி உயிர் வரித்தாடும்    - கோகிலவாணி   - சீர்காழி - இசை:ஜி.ராமநாதன்

    14   அழகோடையில் நீந்தும் இள அன்னம்     - கோகிலவாணி   - சீர்காழி + ஜிக்கி  - இசை:ஜி.ராமநாதன்.

    இது போன்ற பல இனிய பாடல்களை பிற இசையமைப்பாளர்களிடமும் பாடியிருக்கிறார் எனினும் கே.வி.மகாதேவன் இவரை மிக அருமையாக பாட வைத்த இசையமைப்பாளர்களில் முக்கியமானவர்.

    கே.வி மகாதேவன் மற்றும் பிற இசையமைப்பாளர்களின் இசையில் சீர்காழி பாடிய பாடல்கள்:

    01   அமுதும் தேனும் எதற்கு   - தை பிறந்தால் வழி பிறக்கும்    - சீர்காழி - இசை:கே.வி மகாதேவன்

    02   எங்கிருந்தோ வந்தான்   - படிக்காத மேதை    - சீர்காழி - இசை:கே.வி மகாதேவன்

    03  அன்னையின் அருளே வா வா    - ஆடிப்பெருக்கு    - சீர்காழி - இசை:ஏ.எம்.ராஜா

    04   சமரசம் உலாவும் இடமே    - ரம்பையின் காதல்    - சீர்காழி - இசை:டி.ஆர்.பாப்பா

    05   விழி வாசல் அழகான மணி மண்டபம்   - பெண் குளத்தின் பொன் விளக்கு  1956 - சீர்காழி + சுசீலா    - இசை:மாஸ்டர் வேணு 06   என்னை விட்டு ஓடிப்போக முடியுமா   - குமுதம்  1959 - சீர்காழி + சுசீலா    - இசை:கே.வி.மகாதேவன்

    இவை போன்ற பல புகழபெற்ற பாடல்களை சீர்காழியார் பாடினாலும் மெல்லிசைமன்னர்களின் இசையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ,தனித்துமிக்க பாடல்களையும் பாடினார்.அவரது குரலின் ரீங்காரம் , அதிர்வு போன்றவற்றை சரியாக கணித்து அளந்தது போல பாடல்களை இசையமைத்து தமது ஆற்றலையும் சீர்காழியின்  குர லின் ஆற்றலையும் வெளிப்படுத்தினார்கள்.

    மெல்லிசைமன்னர்களின் படைப்பாற்றலின் முக்கிய ஒரு அம்சமாக விளங்குவது வெவ்வேறு விதமான குரல்களுக்கேற்ப,அவர்களின் குரல்,பாடும் தன்மையறிந்து இசையமைப்பது என்பதாகும்.  எந்தவிதமான குரல்களாக இருந்தாலும் அந்தந்தக் குரல்களுக்கேற்ப மெட்டமைப்பதும் அதற்கு தனித்துவமான அடையாளங்களைக் கொடுப்பதுமாகும்.

    செவ்வியல் இசை சார்ந்து பாடுகின்ற முறை மறைந்து மெல்லிசை வளர்ந்த காலத்தில் செவ்வியல் இசையில் பட்டொளி வீசும் குரல்களுக்கு மௌசு குறைய ஆரம்பித்தது.அது மட்டுமல்ல கதாநாயகர்களுக்கு சில பாடகர்கள் தான் பாட முடியும் என்ற நிலையும் சில பாடகர்களுக்கான வாய்ப்புகளைக் குறைத்து விட்டிருந்தது.

    இன்னாருக்கு இன்னார் தான் பாட வேண்டும் என்ற  போலியான ஒரு வீண்  கோதாவில் பலியாக்கப்பட்ட பாடகர்கள் பலர்.இந்த நிலைமை மெல்லிசைமன்னர்கள் உச்சத்திலிருந்த காலத்திலேயே நிலைபெற்றது.அதற்கு அவர்களும் முக்கிய காரணமாயின என்றே சொல்ல வேண்டும்.

    நாடகத்தன்மையற்ற ஹிந்தி திரை இசையை பின்பற்றிய மெல்லிசைமன்னர்கள் சிவாஜியின் மிகை நடிப்புக்கு ஏற்ப அபிநயிக்கும் ஒரு நாடக பாணி இசையை சிவாஜிக்காக உருவாக்கினார்கள் என்பதும் ,அது எழுபதுகள் வரை சென்று சகிக்கமுடியாத நிலைக்கு  வந்ததும்  தமிழ் சினிமாவின் வரலாற்றுள் அடங்குவதே !

    பாடி நடிக்கும் மரபு மறைந்து போனதும் ,பாடத் தெரியாத நடிகர்களுக்கு சிலர் பின்னணி பாடுகிறார்கள் என்ற "பரம ரகசியம்"   ஊர் அறிந்த உண்மையாக இருந்ததும் ,அதை சினிமா வட்டாரம் போலியாக பின்றியதும் வேடிக்கையாகும்.

    இதில் பலியாக்கப்பட்ட முக்கியமானவர்களில்  திருச்சி லோகநாதன்,ஏ.எம்.ராஜா ,சி.எஸ்.ஜெயராமன் போன்ற முக்கியமான பாடகர்களை கூறலாம்.ஆயினும் அதில் ஓரளவு தப்பித்தவர் சீர்காழி கோவிந்தராஜன் என்று கூறினாலும் அவரையும் ஓரமாகவே வைத்துக்கொண்டனர்.

    "இன்னாருக்கு இன்னார் தான் பாட முடியும்" என்ற ஒரு போலியான முறையை நடிகர்களும் .தயாரிப்பாளர்களும் சப்பை காட்டு கட்டிய காலத்தில் ஆணா, பெண்ணா என்று சந்தேகம் கொள்ளும் குரலுக்கு சொந்தக்காரரான அன்றைய   எஸ்.பி.பாலசுப்ரமணியம் எடுத்த எடுப்பிலேயே முன்னணி நடிகர்களுக்கு பாட வைத்தது மிகப்பெரிய கோமாளித்தனமாகும்.

    சுமதி என் சுந்தரி படத்தில் " பொட்டு வைத்த முகமோ " என்ற பாடலுக்கு சிவாஜியின் ஒப்புதல் கேட்ட போது யார் பாடினாலும் அதற்கேற்ப நான் நடிப்பேன் என்றாராம்.எஸ்.பி.பி. இயற்கை என்னும் ஆயிரம் நிலவே வா. இளைய கன்னி , ஆயிரம் நிலவே வா, வெற்றி மீது வெற்றி வந்து   போன்ற பாடல்களை முறையே அன்றைய முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர் ,ஜெமினி போன்றவர்களுக்கு பாட வைக்கப்பட்டார் என்பது.நடிகர்களைத் தாண்டி அப்பாடல்கள் ரசிகர்கள் ரசித்தார்கள் என்பதும் அவை வெற்றி பெற்றன என்பதும் நாம் அறிந்ததே! ஆக இந்த  " இன்னாருக்கு இன்னார் தான் பாட வேண்டும் " வாதத்தில் எந்தவித தர்க்க நியாயமுமில்லை என்பது வெளிப்படை! தங்களுக்கு பிடித்தவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்கினார்கள் என்பதும் , ரசிகர்களுக்கு யார் பாடுகிறார் என்ற அதியுன்னதமான கருத்துக்கள் இருக்கவில்லை என்பதும் எம்.ஜி.ஆர் ,சிவாஜி ,ஜெமினிக்கு பல்வேறு பாடகர்கள் பாடிய பாடல்களும் வெற்றி பெற்று புகழடைந்தன என்பதையும் நாம் காண்கிறோம்.அவர்களுக்கு நடிகர்களே முக்கியம்.குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இசையமைப்பாளர்கள் கூட முக்கியமில்லை.

    சினிமா இசையை விட்டால் பெரும்பாலான இசைரசிகர்களுக்கு வேறு கதியில்லை என்று இருந்த ஒரு காலத்தில் சினிமாவில் என்ன பாடினாலும் ரசிக்கும் மனநிலை இருந்தது.இன்னாருக்கு இன்னார் என்ற கோதாவில் இசையமைப்பாளர்கள் தங்களுக்குச் சேர வேண்டிய நியாயமான புகழ் எல்லாவற்றையும் சினிமா நடிகர்களுக்குத் தாரை வார்த்துக்கொண்டிருந்தார்கள் என்பது மகா விஸ்வரூபம் எடுத்து நின்ற சினிமா என்ற காலை வடிவத்தின் வினோதமான  இன்னொரு முகமாகும்.

    எம்.ஜி.ஆர் ,சிவாஜி போன்ற நடிகர்களுக்கு ஏலவே மிக அருமையான பாடல்களை பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்.

    சிவாஜிக்காக அவர் பல புகழபெற்ற பாடல்களை பாடினார்.

    01   மலையே உன் நிலையை நீ பாராய் - படம்: வணங்காமுடி 1957 - இசை: ஜி.ராமநாதன்

    02   பார்த்துக்கொண்டிருந்தாலே போதும்  - படம்: சித்தூரராணி பத்மினி  1957 - இசை: ஜி.ராமநாதன்

    03   ஓகோ..நிலாராணி   - படம்: சித்தூரராணி பத்மினி  1957 - இசை: ஜி.ராமநாதன்.

    எம்.ஜி.ஆருக்காகவும்  அவர் பல புகழபெற்ற பாடல்களை பாடினார்.

    01   ஒன்றல்ல இரண்டல்ல தம்பி  - படம்: தாய் மகளுக்கு கட்டிய தாலி  1956 - இசை: டி.ஆர்.பாப்பா

    02   ஆடி வரும் ஆடகர் பொற் பாவையடி நீ    - படம்: தாய் மகளுக்கு கட்டிய தாலி  1956 - இசை:  டி.ஆர்.பாப்பா

    03   உழைப்பதிலா உழைப்பைப்  பெறுவதிலா   - படம்: நாடோடிமன்னன் 1959 - இசை: ஜி.ராமநாதன்

    04   சிரிக்கிறாள் இன்று    - படம்: நல்லவன் வாழ்வான்  1960 - இசை: டி.ஆர்.பாப்பா

    05   ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்     - படம்: நல்லவன் வாழ்வான்  1960 - இசை: டி.ஆர்.பாப்பா

    இது போன்ற பல  பாடல்களைப் பாடினார்.அப்போது இந்த இரண்டு நடிகர்களின் புகழுக்கு எந்த விதமான களங்கமும் நடக்கவில்லை.ரசிகர்களும் அவர்களது படங்களை வெற்றியடையவே வைத்தனர்.

    குங்குமம் படத்தில் "சின்னஞ் சிறிய வண்ணப்பறவை " என்ற செவ்வியலிசையில் அமைக்கப்பட்ட பாடலை கே.வி.மகாதேவன் அருமையான சங்கதிகளை போட்டு இசையமைத்து கோவிந்தராஜனையும் பாடவைத்தார்.

    "அவரும் மிக  அருமையாகப் பாடியிருந்தார்” என டி.எம் சௌந்தர்ராஜன் பின்னாளில்  கூறியிருந்தார்.பின்னர் சிவாஜி தலையிலிட்டு “எனக்கு டி.எம்.எஸ் பாடினால்தான்   நன்றாக இருக்கும்”  எனக் கூறியதால் டி.எம்.எஸ். அதை மறுத்த நிலையிலும் பாட வைக்கப்பட்டார். தனக்கு  யார் பின்னணி  பாடினாலும் அதற்கேற்ப  நடிக்கும் வல்லமை எனக்குண்டு என்று வழமையாகக் கூறும் சிவாஜி ,தனது  நடிப்பை விட   பாடலில் நம்பிக்கை வைத்தது இசையின் வ்லிமையன்றி வேறென்ன? டி.எம்.எஸ். தான் பாட வேண்டும் என்ற சிவாஜி  பின்னாளில் பெண்மை நிரம்பிய குரலுக்கு சொந்தக்காரரான எஸ்.பி.பி யின் குரலுக்கு அபிநயித்தது மிகவும் வேடிக்கையானது.

    இது குறித்து சீர்காழியார் சிவாஜியிடம் " அண்ணே ..மத்தவங்களுக்கு சாப்பாடு போடுங்க , ஆனால் எச்சில் இலையில் போடாதீங்க " என்று சூடு வைத்ததும் வரலாறு.

    சினிமா நடிகர்கள் தங்களது செல்வாக்கை வைத்து மற்றவர்களை மட்டம் தட்டுவது ஒரு புறம் என்றால் ,அந்த நடிகர்களுக்கு பின்னால் தொங்கும் ஜால்றா கும்பல்,,அவர்கள் ஒத்துக் கொண்டாலும் ,அவர்களுக்குப் "பின்பாட்டு பாடுவதன் வதன் மூலம்  அவர்களையும் சும்மா இருக்க விடுவதில்லை என்பதை  சிவாஜி பற்றி தனது கருத்தைக் கூறிய சந்திரபாபுவும் பதிவு செய்திருக்கின்றார்.இன்று வரையும் சிவாஜி ,எம்.ஜி.ஆர் க்காகவே பாடல்களை ரசிக்கும் ஜால்றா கும்பல்கள் இருந்து கொண்டேதான்  இருக்கிறது. அதிலும் தம்மை “அறிவுஜீவிகள் ", "முற்போக்குவாதிகள் "என்று சொல்லிக் கொள்ளும் கலை,இலக்கியத்  துறையிலிருக்கும் சிலரிடமும் இந்த கோமாளித்தனம் இருப்பதே அதிக நகைசுவை ஆகும். சிவாஜிக்காகவே மெல்லிசைமன்னர் விஸ்வநாதனை ரசிக்கும் பாமரத்தனமிக்க ரசிகர்கள் சிலர் இப்போதும் உண்டு.

    தமிழ் இசை மரபின் தனித்த கூறு கொண்ட குரலுக்குச் சொந்தக்காரரான சீர்காழி கோவிந்தராஜனின்   இனிய குரலை எப்படி பயன்டுத்துவது என்ற வகையில் மரபின் ரசமும் ,புதுமையின் பரிமாணமும் அறிந்த மெல்லிசைமன்னர்கள் ஏதோ ஒருவகையில் தொடர்ச்சியாக பயன்படுத்தியே வந்துள்ளனர். மெல்லிசைமன்னர்கள் பிரிந்த போதும் ,விஸ்வநாதன்,ராமமூர்த்தி  தனித்து,தனித்து  இசையமைத்த போதும் சீர்காழியாரை தொடர்ந்து தங்கள்  இசையில் பாட வைத்துக் கொண்டிருந்தார்கள்.

    மெல்லிசைமன்னர்களின் இசையில் சீர்காழியார் பாடிய சில பாடல்கள்.

    01 கலைமங்கை உருவம் கண்டு   - மகனே கேள் - சீர்காழி + எம்.எல்.வசந்தகுமாரி  - இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    02  ஓடம் நதியினிலே    - காத்திருந்த கண்கள்      - சீர்காழி   - இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    03  மழை கொடுக்கும் கொடையும்    -  கர்ணன்  - சீர்காழி   - இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    04  உள்ளத்தில் நல்ல உள்ளம்    - கர்ணன்   - சீர்காழி   - இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    05  மரணத்தை எண்ணி கலங்கும்     - கர்ணன்   - சீர்காழி   - இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    06  ஆறோடும்  மண்ணில் எங்கும்    - பழனி       - சீர்காழி   - இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    07  எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்- கறுப்புப்பணம் -சீர்காழி+எல்.ஆர்.ஈஸ்வரி-இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    08  கண்ணான கண்ணனுக்கு  - ஆலயமணி - சீர்காழி + பி.சுசீலா -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    09  தங்கச்சி சின்ன பொண்ணு  - கறுப்புப்பணம்- - சீர்காழி + பி.சுசீலா -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    10  தேவன் கோயில் மணியோசை   - மணியோசை  - சீர்காழி  -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    11  சிங்காரத் தேருக்கு சேலை கட்டி - இது சத்தியம்  - சீர்காழி+எல்.ஆர்.ஈஸ்வரி-இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    12  வெண்பளிங்கு மேடை கட்டி  - பூஜைக்கு வந்த மலர்   - சீர்காழி+எல்.ஆர்.ஈஸ்வரி-இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    13  கண்ணிலே நீர் எதற்கு  - போலீஸ்காரன் மக்கள்  - சீர்காழி+எஸ்.ஜானகி -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    14  பணமிருந்தால் போதுமடா  -  நம்ம வீட்டு லட்சுமி   -  சீர்காழி -இசை:விஸ்வநாதன்

    *** ஓடம் நதியினிலே    - காத்திருந்த கண்கள்      - சீர்காழி   - இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    ஒரு தலைக்காதலின் தத்தளிப்பை தண்ணீரில் மிதக்கும் ஓடத்தின் தளும்பலுக்கு ஒப்புவமையாக சொல்வது போல அமைக்கப்பட்ட பாடல்.முற்றுமுழுதாக பாடகரின் குரலை நம்பி அல்லது அவரின் குரலுக்கு ஏற்ப இசைமைக்கப்பட்ட பாடல்! அதனுடன் குழலையும் இணைத்து இசையின் கற்பனை எல்லைகளை இசையமைப்பாளர்கள் தொட்டுவிடுகின்றனர்.இந்தப் பாடலை வேறு ஒரு பாடகர் கற்பனையே செய்ய முடியாது.

    "மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம் "

    படத்தில் வெவ்வேறு நிலைகளில் பாடப்படுகின்ற இந்தப்பாடல் ,ஒலித்தட்டில் சீர்காழியாரின் பாடலுடன் தான் ஆரம்பிக்கிறது.பத்து செக்கன்கள் மட்டுமே  ஒலிக்கும் அவரின் அந்த ஹிந்தோள ராக ஆலாபனையின் எத்தனை அதிர்வு ,எத்தனை குழைவு ! உயிர் ததும்பும் அந்த ஹமிம்மிங்கின் அசரீரியில் பாடல் ஓடக்கம் அமைக்கப்பட்டு ரசிகர்களை மெய்மறக்க வைக்கின்றார்கள் மெல்லிசை மன்னர்கள்! அதன் மூலம் மற்ற பாடகர்களின் பாடலையும் ரசிக்க வைக்க வைக்கும் உத்தியாக அமைத்துள்ளனர்.இது போல உயிரின் இன்னிசையை வேறு பாடல்களில் நாம் கேட்கவில்லை என்று சொல்லி விடலாம் என்பது மட்டுமல்ல வேறு எந்த பாடகரையும் நாம் கற்பனை செய்தும் பார்க்க முடியாத சிறப்பையும் செய்து விடுகின்றனர்.

    பல படங்களில் கதாநாயகர்களுக்கு பாட வைக்க முடியாவிட்டாலும் திரையில் பின்னணியாக ,அல்லது அசரீரியாக ஒலிக்கும் பாடல்களில் சீர்காழியாரை மிக அற்புதமாகப் பயன்படுத்தினர்.தங்களுடன் பயணித்த ஒரு அற்புதமான கலைஞரை அவரது திறமையறிந்து தம்மால் முடிந்த வாய்ப்புக்களை மெல்லிசைமன்னர்கள் கொடுத்தார்கள்.

    திரைக்கதைகளுக்கு ஏற்ப சில அசரீரிப் பாடல்களை மெல்லிசைமன்னர்கள் இவரின் குரலுக்கு ஏற்ற வகையிலேயே உருவாக்கினார்கள் என்பது அவர்களின் படைப்பாற்றலுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

    15  ஒற்றுமையாய் வாழ்வதால்  - பாகப்பிரிவினை    -  சீர்காழி + எல்.ஆர்.ஈஸ்வரி -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    16  தேவன் கோயில் மணியோசை  - மணியோசை  -சீர்காழி -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    17  வேங்கைக்கு குறி வைத்து   -  பாசம்  -சீர்காழி -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    18  காற்றடிக்கும் திசையினிலே    -  திக்குத் தெரியாத காட்டில்   -சீர்காழி -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    19  நித்தம் நித்தம் மாறுகின்ற - பந்தபாசம்   -  சீர்காழி -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    20  நல்ல மனைவி நல்ல பிள்ளை  - நம்ம வீட்டு லட்சுமி   -  சீர்காழி -இசை:விஸ்வநாதன்

    21  கண்களால்   பேசுதம்மா      -  தெய்வமகன்      -  சீர்காழி  - இசை:விஸ்வநாதன்

    22  மேகங்கள் இருந்து   வந்தால்  -  நான் ஆணையிட்டால்    -  சீர்காழி + சுசீலா  - இசை:விஸ்வநாதன்

    உதாரணமாக திரையில் டைட்டில் , நகைச்சுவை ,நாடகப்பாடல் ,நாட்டியபாடல் என பலவகையில் பலபாடல்களில் பயன்படுத்தினார் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன்.

    23  கண்ணன்  வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்   -  ராமு   -  சீர்காழி + TMS - இசை:விஸ்வநாதன்

    24  குற்றால மலையிலே     -  உயிரா மானமா     -  சீர்காழி + எல்.ஆர்.ஈஸ்வரி   - இசை:விஸ்வநாதன்

    25  கண்ணன்  வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்   -  ராமு   -  சீர்காழி + TMS - இசை:விஸ்வநாதன்

    டைட்டில் ப்பாடல்  , நகைச்சுவைப்பாடல் ,நாடகப்பாடல் ,நாட்டியபாடல் என்ற வகையில் சில பாடல்கள் : நகைச்சுவைப்பாடலாக:

    26  காதலிக்க நேரமில்லை    -  காதலிக்க நேரமில்லை   -  சீர்காழி  - இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி 27  காசிக்கு போகும் சந்நியாசி         -  ராமு   -  சீர்காழி + TMS - இசை:விஸ்வநாதன் -இசை:விஸ்வநாதன்

    நாடகப்பாடலாக :

    28  சங்கே முழங்கு   - சங்கே முழங்கு      -  சீர்காழி + குழு  - இசை:விஸ்வநாதன் 29  புதியதோர் உலகம் செய்வோம்    -  சந்திரோதயம்    -  சீர்காழி + TMS - இசை:விஸ்வநாதன்.

    டைட்டில்பாடலாக :

    30  வெற்றியை நாளை சரித்திரம்     -  உலகம் சுற்றும் வாலிபன்    -  சீர்காழி  - இசை:விஸ்வநாதன் 31  நீங்கநல்லாயிருக்கணும்     -  இதயக்கனி     -  சீர்காழி + TMS - இசை:விஸ்வநாதன்

    இதுபோன்ற பாடல்கள் மூலமும் சீர்காழி கோவிந்தராஜனை பயன்படுத்தினர்

    பாடல் வகைகள் என்ற ரீதியில் பல்வேறு நிலைகளில் சின்ன , சின்ன பாடல்களிலும் கவனம் செலுத்தினார்கள் என்பதை தொடர்ச்சியாக மெல்லிசைமன்னர்களின் இசையில் கேட்கிறோம்.சின்ன ,சின்ன பாடல்களிலும்  மிக அருமையான பாட்டின்பங்களைத் தந்திருக்கிறார்கள்.

    [தொடரும்]

     

    Postad



    You must be logged in to post a comment Login