Recent Comments

    மூதன்னையின் பாடல்

    இந்த கைக்கடக்கமான, வாசிப்பதற்கு இலகுவான மொழி நடையில் இருக்கின்ற கவிதை நூலைப் பிரசவித்த கவிஞர் சி கிருஷ்ணபிரியன் மலையகத்தில் ஒரு இடதுசாரி குடும்பத்திலிருந்து உதித்தவர்.

    இக்கவிதை நூலை வெளியீடு செய்த தேசியக் கலை இலக்கியப்  பேரவையின் தலைவர் திரு தணிகாசலம் சுட்டிக்காட்டியது போல்,  கவிஞருடைய  தந்தை தோழர் சிவசூரிய நாராயணசாமி இயற்கை எய்திய ஓராண்டு நினைவாக வெளிவந்த கவிஞரின்   'வேரின் பிரசவங்கள்' என்ற முதலாவது கவிதைத் தொகுதி உழைக்கும் வர்க்கத்தின் உணர்வுகளுக்கு மதிப்பூட்டுவதாக அமைந்திருந்ததாக அறிகிறோம்.  

    அதே போல மூதன்னையின் பாடல்கள் அதே உழைக்கும் வர்க்கத்தின் வலி மிகுந்த  முன்னேற்றப் பாதைக்கு வழி காட்டுவனவாய் அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. உழைப்பை, அதிலும் கடின உழைப்பை மட்டுமே தம் வாழ்வில் கண்டறிந்திருக்கும் மலையகத்தின் தொழிலாளர் வர்க்கம்  எதிர் நோக்குகின்ற சவால்களையும் சஞ்சலங்களையும் இவரது கவிதைகள் உரக்கச் சொல்கின்றன.

    கவிஞர் கூறியிருப்பது போல அவரது கவிதைகள்  அனைத்தும் சம கால அரசியல், சமூக, பொருளாதார, பெருந்தொற்று நிகழ்வுகளின் சாராம்சமாக அவற்றின் தாக்கங்களை ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக, அடக்கு  முறைக்கெதிராகப் பேசிச் செல்கின்றன. இருந்த போதிலும் பல கவிதைகள் மனித நேயம் சார்ந்தவையாய் அன்பு, பாசம், காதல், குழந்தைகள் உலகு, போரின் விளைவுகள், போரின் அவலங்கள், அமைதியின் தேவை, ஏகாதிபத்தியங்களின் தான் தோன்றித்தனங்கள் எனப் பலதையும் தொட்டுச் செல்வனவாயும் அமைந்திருக்கின்றன.

    ஒரு சில கவிதைகளை இங்கே சுருக்கமாகத் தருவது கவிஞரது உணர்வுகள் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை கோடிட்டுக் காட்டும் எனத் தோன்றுகிறது.  

    குழந்தைகளின்பாடல் 

    //எல்லாக் குழந்தைகளும் எப்போதும் ஏதாவதொரு தேவதையைப் பற்றிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.//

    //கடலோரத்தில் இறந்து ஒதுங்கிய  'சிரிய' குழந்தை 

    வறண்ட பனி படர்ந்த சாலையில் குண்டுகள் துளைத்து இறந்த குர்திய குழந்தை ஈழத்தின் தெருக்களில் 

    ஜெருசலேத்தின் தெருக்களில் 

    இறந்து போன குழந்தைகளும் 

    தேவதைகள் பற்றியே பாடியிருப்பார்கள் //

    //தேவதைகளின் பாடலை உரக்கப் படும் 

    குழந்தைகள் இறந்து போகும் 

    இவுலகத்தில்த் தான் 

    தேவதைகளும் எங்கோ 

    யார் மடியிலோ தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் //

    குழந்தைகள் உலகம் மிக ரம்மியமானது , அவர்கள் கள்ளம் கபடமற்ற மனம் கொண்டவர்கள், எல்லா குழந்தைகளுமே இனம், மதம், மொழி, வர்க்க வேறுபாடுகள் எதுவுமற்ற உலகில் சஞ்சரிப்பவர்கள். அவர்களையும் கூட இந்த இரக்கமற்ற உலகில் போர் என்ற கொடுமையான அரக்கன், இந்தத் தேவதைக்கதை சொல்லும் தேவதைகளைக் கூட கொன்று போட்டு விடும் அவலத்தைச் சொல்லிச் செல்கிறது.

    குழந்தைகள் தமக்கிடையே வேறுபாடு பார்க்காதவர்கள்,  எல்லாக் குழந்தைகளுமே தம் வயதைச் சேர்ந்த குழந்தைகளுடன் கூடிப் பேசியும் ஓடித்திருந்து விளையாடவும் செய்வார்கள்.  பெரியவர்கள் உலகிலிருந்து தான் வேற்றுமைகளும் கசப்புகளும் ஊட்டப்படுகின்றன. ஒருவருக்கொருவர் மொழி தெரியாத குழந்தைகள் கூட தமக்கிடையே இடைவெளி வராத வரையில் ஏதோ ஒரு வகையில் பாலங்கள்   அமைத்துக் கொள்கிறர்கள்.   இந்தக் குழந்தைகளைக் கூட போர் என்ற கொடிய அரக்கன் கொல்லும் போதும் எந்த வித்தியாசமும் இன்றி கொன்று போட்டு விடுகிறான்.

    முதியவர்கள் 

    //ஒரு முதியவர் 

    இறந்து போகும் போது ....//

    //பேரப்பிள்ளைகள் அனாதைகளாகின்றனர் 

    அவர்களுடன் சேர்ந்து ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம் என்ற முகாந்திர சொற்றோடரும்  அனாதையாகிறது //

    குழந்தைகள் போன்றவர்கள் தான் முதியவர்கள்.  அவர்கள் உலகம் வாழ்வின் அனுபவங்களால் நுணுக்கமாகக் கட்டப்பட்டது.  அவற்றை தமது இளைய சமுதாயத்தோடு பகிர்ந்து கொள்ளுவது என்பது அன்றாட வாழ்வின் ஊடாக தமது பண்பாடு, கலை, கலாச்சாரத்தை பகிர்ந்து கொள்வது என்பதே.  

    இக்கவிதையில் ஒரு முதியவர் இறந்து போகும் போது அவரது நினைவுகளும் உடமைகளும் அனாதைகளாகுவது போலவே அவரது குழந்தைகளும் அதன் பின் வரும் நாட்களில் அனாதைகளாகி விடுவதாய் கவிதை சொல்லிப் போகிறது.

    பசித்திருப்பவர்களின்இரவு 

    // கணவனுக்கு மனைவி மீதும் 

    மனைவிக்கு கணவன் மீதும் 

    ஒருவிதமான கோபம் //

    //அது இரைச்சலற்ற கோபம் 

    களைப்பின் கோபம் 

    இயலாமையின் கோபம் //

    // பசித்திருப்பவர்களின் இரவுகள் நீண்டவை //

    பசியின் கொடுமை என்பது அனைவர்க்கும் பொதுவானது, சாப்பிடுவதற்கு வசதியுள்ளவர்களுக்கு பசிக்கும் போது எதையாவது சாப்பிட்டுக் கொள்வதில் இடையூறு எதுவும் இருப்பதில்லை.  ஒரு நேர உணவுக்கு அல்லாடும் மக்களின் பசி அப்படியானதல்ல . அது கணவன் மனைவிக்கிடையில் கூட இனம் புரியாத, இயலாமையால் விளைந்த கோபத்தை உருவாக்கும் தன்மை கொண்டது.

    பசி குடலை உருவும் வேளைகளில் தூக்கம் தொலைந்து இரவுகள் நீண்டு விடுதல் இயல்பாகி கொடுமையாகிறது.  

    ஏகாதிபத்தியசவுக்கு 

    //ஏகாதிபத்திய சவுக்கு 

    சிரியாவின் தெருக்களெங்கும் 

    விளாசித் திரிகின்றது // என ஆரம்பித்து,

    //சாம்பல் நிற அந்தியில் 

    சிரியாவின் தெருக்களெங்கும் 

    உறைந்த குருதியின் வாடை.// 

    என ஏகாதிபத்தியங்களின் அதிகார வெறியில் மனிதம் தொலைந்த பொழுதுகளைப் பேசிப் போகிறது இவரது இன்னொரு  கவிதை. எத்தனையோ நாடுகளில் ஏகாதிபத்தியங்களின் அதிகார வெறியானது எவ்வளவு தூரம் தலை விரித்தாடி அம்மக்களை, அவர்களின் கனவுகளை அவர்களின் எதிர்காலத்தை சிதைத்துப் போட்டிருக்கிறது என்பது சிரியாவில் நடந்த அநீதிகளைப் கண்டறிந்து, அவற்றை வெறுத்து,  தன் கவிதைகளூடே பாடிச்செல்கிறார் கவிஞர்.

    மூதன்னையின்பாடல்

    //எங்கிருந்து தொடங்கியிருக்கும் அப்பாடல் 

    அவள் நடந்த நீண்ட நெடு அடர்வனத்தின் பாதையிலா 

    உறவுகளை விட்டு வந்த 

    வறண்ட நிலத்திலா 

    இதோ இந்த மலைகளின் மேலே 

    அவள் முதுகெலும்பு உடைக்கப்பட்டதே 

    அங்கிருந்து தொடங்கியிருக்குமோ 

    நம் மூதன்னையின் பாடல் //

    சில பாடல்கள் காலம் காலமாக ஒரு குடும்பத்தில் அல்லது ஒரு குமுகத்தில், அல்லது சமூகத்தில் பாடப்பட்டு,  நாட்டார் பாடல்களாக வந்திருக்கும். ஆனால் யாருக்கும் அதன் அடி முடி தெரியாதாதாய், பாடப்பட்டு வந்து கொண்டிருக்கும். அப்படியான ஒரு நாட்டார் பாடலை மலையகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வு வழிக் கவிதையாக மூதன்னையின் பாடலை  சி கிருஷ்ணப்பிரியன் படைத்திருக்கிறார்.

    ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கை மலையகத் தோட்டத் தொழிலார்கள்   தமது அடிப்படை உரிமைகளைக் கூடப் பேணிப்பாதுகாக்க முடியாத நிலை இன்றுவரை நீடிக்கிறது.   அது மட்டுமல்ல அவர்கள் மீதான ஒடுக்குமுறைகளும் இன்றுவரை இருந்து கொண்டுதான் இருக்கிறது.. இம்மக்களின் குரலாக வெளிப்படும் இது போன்ற கவிதைகள் தொடர்ந்தும் வரையப்பட வேண்டும். எழுத்துக்களும் வாசிப்புகளும் அருகிப் போகும் காலப் பகுதியில், இவ்வாறான படைப்பிலக்கியங்கள் வெளிவருவது மனதிற்கு மகிழ்வாகவே இருக்கிறது. கவிஞருக்கு எமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    Postad



    You must be logged in to post a comment Login