Recent Comments

    அவள் ஒண்டும் செய்யேல்லை!

    பூங்கோதை

    "அம்மா... அப்பா எத்தனை மணிக்கு வந்து சேருவார்? நான் லண்டனிலயிருந்து அவர் வாங்கி வாற சட்டையைப் போட்டுகொண்டு தான் என்ற ஃபிரண்ட்ஸோட வெளியால சாப்பிடப் போகப்போறன்.  இன்னும் ஒரு மணித்தியாலம் தான் இருக்கு, ஏன் இன்னும் அவர் வரேல்லை? அவரிண்ட ஃபோனும் வேலை செய்யேல்லை. "

    பிறந்த நாளுக்கு உடுப்புகள் எடுக்க என்று லண்டன் போன அப்பா தான் தாமதமாக வரவிருப்பது குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லாமல், தனக்கு வேண்டிய உடைகளை வாங்கி வராத கவலையில் துவண்டு போயிருந்த மகளுக்கு என்ன சொல்லுவதென்று தெரியாமல், அவன் காதல் மனைவி கண்ணீரை மகளுக்குத் தெரியாமல் கைகளால் துடைத்துக் கொண்டாள்.

    ***

    "தம்பி, எனக்குப் பெயர் இந்தி, நான் தான் உங்களுக்கு உத்தியோகபூர்வமான மொழி பெயர்ப்பாளர்." இந்தி இந்த மொழிபெயர்புக்காக தான் வைத்திருக்கும் பெயரைச்  சொல்லி முடிக்க முன்பே மறு பக்கம் பேசத் தொடங்கியது. 

    இந்திக்கு இதுவொன்றும் புதிதல்ல. அவள் தனது வழக்குரைஞர் பணியோடு அம்மாவட்டத்தின் காவல் நிலையத்தோடும் மொழிபெயர்ப்பாளராக தன்னைப் பதிவு செய்து வைத்த காலத்திலிருந்தே இப்படியான சோதனைகள் வந்து போவது தான்.  தனக்கு தன் பணி சார்ந்த கடமைகள் அதிகம் இல்லாத பொழுதுகளில் தன்னை மொழிபெயர்ப்பாளராக மாற்றிக்கொள்வதில் அவளுக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை. சில அல்லது பல வேளைகளில் எத்தனையோ நிரபராதிகள் மொழிச் சிக்கல்களால் தண்டனை பெறுவதிலிருந்து தப்பிக்க வழி சமைத்திருக்கிறாள் என்பதால் அந்தப் பணியும்  நிம்மதியைத் தருவதாயிருந்தது. 

    "அக்கோய், இப்ப நான் என்ன செய்தனான் எண்டு என்னைப் பிடிச்சு வந்தவங்களாம்?"  தொலைபேசியின் மறுபக்கத்திலிருந்து சினத்தோடு உச்சஸ்தாயியில் ஒரு ஆண்குரல் காதைக் கிழித்தது.  

    "தம்பி முதலில உங்கட பெயரைச் சொல்லுங்கோ. பிறகு நான் ஏன் உங்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டி வந்தவை எண்டு சொல்லுறன்." இந்தி பொறுமையாகத் தான் கேட்க வேண்டியவற்றைக் கேட்டாள்.

    " எனக்குப் பெயர் ஜீவரத்தினம், ஜீவா எண்டு கூப்பிடுறவை. எனக்கு ஜேர்மன் பாஸ்போர்ட், சிட்டிசன் எல்லாம் இருக்கு. இங்க இங்கிலண்ட்டில ஒண்டும் என்னைச் செய்ய ஏலாது அக்கோய்." ஜீவா மீண்டும் கத்தியது இந்தியின் பொறுமையைச் சோதித்தாலும் அவள் பொறுத்துக் கொண்டாள்.

    காவல்துறை அதிகாரிகள் தாம் ஜீவா மீது சுமத்திய குற்றச் சாட்டுகளையும் தமது கேள்விகளையும் அவளுக்கு முன்வைத்தனர்.  இந்தி அவற்றைக் கவனமாக உள்வாங்கி, குறித்து வைத்துக் கொண்டாள்.

    "சரி ஜீவா, உங்களுக்கு மேல முக்கியமாக இரண்டு பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கு. அதுக்கு சாட்சியங்களும் பலமாய் இருக்கு. முதலாவது குற்றச்சாட்டு என்னவெண்டால் உடல் ரீதியான வன்முறை, அதாவது ஆங்கிலத்தில physical assault எண்டு சொல்லுவம், ஒரு இளம் பெண்ணுக்கெதிராய் நீங்கள் உடல் வன்முறையை மேற்கொண்டிருக்கிறீங்கள்!"

    " அக்கோய், அது படு பொய் அக்கோய். நான் ஏன் சும்மா ஒருத்தியைத் தள்ளி விழுத்தப் போறன்?" ஜீவா மீண்டும் சினந்ததைப் பொருட்படுத்தாமல் இந்தி தன் கேள்விகளை முன்வைத்தாள்.

    " தம்பி இது போலீஸ் முன் வைக்கிற கேள்விகள், எனக்கு நீங்கள் என்ன செய்த நீங்கள் எண்ட விபரம் ஒண்டும் தெரியாது கண்டீங்களோ! .  நீங்கள் மேல் வீட்டுப் படியில இருந்து ஒரு இளம் பெண்ணைத் தள்ளி விழுத்தி இருக்கிறீங்கள்  எண்டு அவை சொல்லுறது சரியோ பிழையோ? அதைச் சொல்லுங்கோ பார்ப்பம்."  முதற் குற்றச்சாட்டு என்ன என்பதை அவள் விளக்கமாக ஜீவாவிற்கு எடுத்துச் சொன்னாள்.

    " அக்கோய், நாசமாய்ப் போவார், நான் ஏன் அக்கோய் சும்மா ஒருத்தியை தள்ளி விழுத்தப் போறன்? இப்பிடிச் சொன்னபடியால தான் தூசனத்தில நாலு வார்த்தை உவங்களைக் கேட்டனான்," இப்போது ஜீவாவின் குரலில் மதுவின் நெடி நாராசமாய் வீசியது.

    "தம்பி ஜீவா, அதுக்குதான் அப்பு,  அவையள் உமக்கு பிறம்பாயும் இதுக்கெண்டு ஒரு குற்றச்சாட்டை  வைச்சிருக்கினம், போலீசை அவமதித்த குற்றச்சாட்டு ." இந்தி அமைதியாகக் கூறி முடித்தாள்.

    "சரியாய்ப் போச்சு! நாசமாய்ப் போவாங்கள்.  நான் ஜேர்மன் பாஸ்போர்ட் அக்கோய், என்னை இங்க ஒரு மண்ணும் பண்ண ஏலாது. சரி வேற என்ன குற்றச்சாட்டாம்?" அவன் கொக்கரித்தான்.

    " முதலில நீங்கள் ஒரு இளம் பெண்ணை மேல் வீட்டுப் படியில இருந்து தள்ளி விழுத்தினனீங்களோ எண்டதைச் சொல்லுங்கோ பார்ப்பம்." 

    " ஓம், செய்தனான் தான், ஆனால் ஏன் எண்டு கேளுங்கோ பார்ப்பம் அக்கோய்?"

    "நான் ஏன் எண்டு கேட்க முதல் அடுத்த குற்றச்சாட்டையும் கேளுங்கோ தம்பி."

    " சரி சொல்லுங்கோ, சொல்லுங்கோ." ஜீவாவின் குரலில் சிறிது அமைதி நிலவியது. மது போதை குறைந்திருக்கலாம் என இந்தி நினைத்துக் கொண்டாள்.

    " இது முதல் குற்றச்சாட்டை விட மோசமானது தம்பி. ஒரு இளம் பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியிருக்கிறீங்கள் . இதற்கு உங்களுடைய விளக்கம் என்ன?"

    "அக்கோய் அவள் நாசமாய்ப் போவாள், அவளிண்ட கதையை நம்புற உந்த போலீசுக்காரங்களும் நாசமாய்ப் போவாங்கள் அக்கோய்.  நான் அவளைத் தள்ளினதே எனக்கொண்டும் அவள் செய்யேல்லை எண்டு தானே அக்கோய்."

    "அவள் யார், நீங்கள் ஏன் அவளைத் தள்ளி விழுதினனீங்கள் மேல் வீட்டுப் படியிலயிருந்து? நீங்கள் கேட்டது என்ன, அவள் என்ன செய்யேல்லை?" இந்தி தன் கேள்விகளை தொகுத்துக் கேட்டு விட்டு மறு பக்கத்துப் பதிலுக்காகக் காத்திருந்தாள்.

    "..................................." நீண்ட மௌனம் நிலவியது. 

    ஒரு சிறிய இடைவெளியின் பின் தம்பி பேசினார், "அக்கோய் பகிடி விடாதேயுங்கோ. அவளுக்கு நான் பத்து பவுண்ட்ஸ் குடுத்தனான். ஆனால் அவள் நான் கேட்டதைச் செய்யேல்ல. இதுக்கு மேல நான் சொல்ல மாட்டன்."

    இந்தி தன் கேள்விக்கான பதிலுக்காக மேற்கொண்டு அவனை ஒளிவு மறைவின்றி கதைக்கத்  தூண்டினாள்.  

    "நீங்கள் தம்பி என்னத்தை செய்யச் சொல்லி அவளைக் கேட்டியள்? தேத்தண்ணி கீத்தண்ணி போட்டுத் தரச்சொல்லி கேட்டிங்களோ? அல்லது சாப்பாடு சூடாக்கித் தரச் சொன்னீங்களோ?"

    அதே வேளை, தொலைபேசியின் அடுத்த பக்கம் தம்பியுடன் இருந்த காவல் அதிகாரிகள் இதற்கு மேல் பொறுக்க மாட்டாதவர்களாய் ஆங்கில   மொழியாக்கம் செய்யப்பட்ட இந்தியின் மறுமொழிகளை பரிசீலித்து விட்டு தமது முடிவை அவனுக்கு அறிவிக்கக் கோரினார்கள்.

    இந்தி அவர்கள் கூறுவதை செவிமடுக்கத் தொடங்கினாள்.

    முதலாவது அதிகாரி பேசத் தொடங்கினார், " இன்று இரவு இங்கு தான் இவர் தங்க வேண்டும். மது போதனை அதிகமாக இருப்பதால் இவரது பாதுகாப்பு கருதியும், இவருக்கு டி என் ஏ (DNA ) பரிசோதனை எடுக்க வேண்டிய மிக முக்கிய தேவை இருப்பதாலும் இவரை நாளைக்கு காலையில் தான் வெளியே விடலாம் என்பதைத் தெரிவியுங்கள். அத்தோடு சில நிமிடங்களில் ஒரு ஆண் மருத்துவ பரிசோதகர் இவரது டி என் ஏ (DNA ) ஐ பரிசோதிக்க வருவதால், இவரை உடைகளைக் களைந்து விட்டு  நிற்கச் சொல்லி அறிவித்து விடுங்கள்.

    இந்தி நிலைமையின் தீவிரம் புரிந்து, காவல் அதிகாரிகள் கூறியதை தம்பிக்கு கூறத் தொடங்கினாள்.  அவனுக்கு சினம் அதிகரித்ததை அவன் வார்த்தைகள் கூறின.

    "என்னது? அவைக்கு முன்னால நான் உடுப்பில்லாமல் நிற்க வேண்டுமாமோ? என்ன வெட்கக் கேடு? நான் ஜேர்மன் பாஸ்போர்ட் அக்கோய், இங்கிலண்ட்டில என்னை ஒண்டும் புடுங்க ஏலாது கண்டியளோ! இவைக்கு ஒருக்கால் சொல்லுங்கோ!" 

    அவன் சொன்னதை அவள் காவல் அதிகாரிகளுக்கு தன் சிரிப்பை அடக்கியவாறே கூறி முடித்தாள். 

    அத்தோடு அவனது கேள்விக்கு அந்தப் பக்கம்  இருந்த பெண் அதிகாரி அளித்த பதிலில் பரிகாசமும்  சினமும்  மேம்பட்டிருந்ததை இந்தி அறியாமல் இல்லை.

    அந்தப் பெண் அதிகாரி, " இவர் அங்க உடுப்பில்லாமல் போய் நிண்டு அட்டகாசம் பண்ணின படியாலதானே இப்ப இங்க உடுப்பைக் கழட்ட வேண்டி வந்திருக்கு எண்டதை ஒருக்கால் விளங்கப்படுத்தி விடுங்கோ. இத்தோட இந்த மொழி பெயர்ப்பு நிகழ்வு முடிகிறது. இந்த நடுசியில் உங்கள் உதவிக்கு மிக்க நன்றி!"

    இந்தி அவனுக்கு நிலமையைப் புரிய வைத்தாள்.

    "அக்கோய், நான் நாளைக்கு பின்னேரத்துக்கிடையில வீட்டை போக வேணும் அக்கோய். என்ர மூத்தவளுக்கு நாளைக்கு 18 வயசு பிறந்த நாள், உடுப்பெடுக்க எண்டெல்லே வந்தனான்? பிள்ளைகளும் மனிசியும் பார்த்துக் கொண்டிருப்பினம் ." அவனது குரல் குறளல் போல ஒலிக்கத் தொடங்கியது.

    ***

    எலிசாவுக்கு இரண்டு மாதங்களின் முன்னர் தான் 18வது பிறந்த நாள் முடிந்திருந்தாலும் அவளது வளர்த்தியைக் காரணம் காட்டி, சட்டத்துக்கு மட்டும்  21 வயதாக்கி தன் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க, அந்த வீட்டின் நாயகி எலிசாவை திறம்பட பழக்கி எடுத்திருந்தாள். ஆங்கிலம் அவ்வளவாக வராவிட்டாலும் தனது வறுமைக்கும் குடிவரவுச் சட்டங்களுக்கு அஞ்சியும் அந்த வீட்டில்  எலிசா தஞ்சமாகி விட்டிருந்தாள்.  வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அவளுக்கு 18 வயதே தான்.

    ஜீவா தன்னை மேல் வீட்டுப் படியிலிருந்து தள்ளி விழுத்தியதில் ஏற்பட்ட உடல், உள அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் எலிசா அம்மா என அழுது அரட்டத் தொடங்கியிருந்தாள்.

    Postad



    You must be logged in to post a comment Login