Recent Comments

    புலன் பெயர்ந்த ஈழத்து இலக்கிய அரசியல்!

    ஜோர்ஜ் இ.குருஷ்சேவ்

    ''மார்ச் மாதத்தில் சென்னையில் கவிஞர் இந்திரனைச் சந்தித்தபோது அவர் கேட்டார். ஈழத்தின் முக்கிய எழுத்தாளர்கள் யார் என்ற போது விமல் குழந்தைவேலு எனத் தொடங்கினேன். அவர் இடைநிறுத்தி அந்தப் பெயரை நான் கேள்விப்பட்டதேயில்லை என்றார்.

    'அது எமது இலக்கிய அரசியல்' எனச் சொல்லி விட்டு மேலும் பல விசயங்கள் பேசினோம்.''

    நான் நேரில் பேசும் போது டொக்டர் என்றும், பேஸ்புக்கில் சோம்பல் காரணமாக டொக் என்றும் மதிப்புடன் அழைக்கின்ற நோயல் நடேசன் தனது பேஸ்புக் பதிவொன்றில் இந்தக் குறிப்பை பதிவிட்டிருந்தார்.

    (தமிழ்நாட்டு நண்பர்கள் டாக்டர் என்றே மேற்கொண்டு வாசிக்க!)

    தமிழ்நாட்டுக்கு 'நல்லெண்ணை' இலக்கிய விஜயம் மேற்கொள்ளும் யாழ்ப்பாணப் பூர்வீகத்துப் பூதந்தேவனார்களின் Modus Operandi  டொக்டருக்கு தெரியாது போலிருக்கிறது.

    போனமா? அங்குள்ள பிரபலங்களை 'மரியாதை நிமித்தமான சந்திப்பு மேற்கொண்டு' படைப்புகளைக் கொடுத்து நெருக்கத்தைக் காட்ட படம் எடுத்தமா? கொண்டு போன விஸ்கிப் போத்தல்களை சஞ்சிகைக்காரருக்குக் கொடுத்து, 'புலன் பெயர் இலக்கியத்தின் பிதாமகன் நானே!', 'தன்னந்தனியாக புலிகளையும் இலங்கை அரசாங்கத்தையும் எதிர்த்து வாய் வீசத் தெரிந்தவன் நான் மட்டுமே!' 'நான் தான் புலம் பெயர் இலக்கியத்தின் ஒரே கவிஞன், கதாசிரியன், விமர்சகன், சஞ்சிகை ஆசிரியன்!' என்று பீலா விட்டு நேர்காணல் கொடுத்தமா? விருதுப் பண்டமாற்றுப் பரிமாற்றத்திற்கான பூர்வாங்க வேலைகளைச் செய்தமா? என்ற 'ஈழ இலக்கிய அறம்' இல்லாமல்...

    தன்னடக்கத்தோடு, 'நான் மட்டுமில்லை, இங்க வேற ஆக்களும் இருக்கிறாங்கள்?' என்று...!

    'உன்னைப் படைத்த ஒரே கடவுள் நான் மட்டுமே, என்னைத் தவிர வேறு கடவுள் உனக்கு இல்லாமல் போகக் கடவதாக!' என்று சினாய் மலையில் பத்துக் கட்டளைகளில் முதலாவதாக மோசஸ்க்கு சொன்ன கடவுள் மாதிரி, நான் தான் ஈழ இலக்கியத்தின் ஒரே படைப்பாளியான கடவுள் , 'எல்லாப் புகழும் என் ஒருவனுக்கே!' என்று சொல்லாமல்...

    ஏன் டொக்டர் 'நான் மட்டுமில்லை, உவங்களும் மாங்காய்க்கு கல்லெறிஞ்சவங்கள்' எண்டு?

    (சும்மா, தன்னைப் பற்றிப் பேசியே பொழுதைப் போக்காமல், தற்போதைய தனிமைப்படுத்தலைப் பயன்படுத்தி, பொதுப் பரப்பில் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல்வேறு இலங்கைத் தமிழர்களின் நாவல்கள் பற்றிய அறிமுக விமர்சனக் குறிப்புகளையும் வேறு அவர் வெளியிட்டு வருகிறார்!)

    யாழ்ப்பாணப் பாசையில்...

    டொக்டர் ஒரு பிழைக்கத் தெரியாத மனிசன்!

    என்னைப் போலவே!

    நாங்கள் இரண்டு பேருமே, 'எங்கட சனம் கொஞ்சமாவது மூளையைப் பாவிக்காதோ?' என்ற ஏக்கத்தோடு, சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்டவர்கள்.

    ஊடகம் பற்றி எந்த முன் அனுபவமும் இல்லாமல், அதை வைச்சுப் பிழைக்கலாம் என்ற எண்ணம் இல்லாமல், பத்திரிகை நடத்தியவர்கள்.

    நேரில் கதைக்கும் போது ஒன்றும், ஒலிவாங்கிக்கு முன்னால் வேறு ஒன்றுமாக பேசாமல், இரகசியங்களும் பரகசியங்களும் ஒன்றாகவே இருந்தவர்கள்.

    நாங்கள் நம்பிய கருத்துக்களை, நண்பர்களால் கூட ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், துணிச்சலாக வெளியில் சொல்ல தெரிந்தவர்கள்.

    இரண்டு பேருடைய பத்திரிகைகளுமே, வாழ்நாளில் வாசிப்பு அனுபவம் இல்லாத கூட்டத்தால் தடை செய்யப்பட்டு, கடைக் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, கடைகளில் இருந்து பத்திரிகைகள் பறிக்கப்பட்டு...

    'ஊருக்கு வா! கவனிக்கிறம்' என்று அன்போடு அறிவுறுத்தப்பட்டவர்கள்.

    புலிகளுக்கு எதிராக எழுதி பிரபலமாகி, எழுத்தே பிழைப்பாகி, பின்னர் புலிகளின் உத்தியோகபூர்வ 'ஊளையிடலாளனாகவே' ஆகி, 'ஆட்டிலறிக்கு செலவிடப்படும் பணம், இணையத் தளத்திற்கு செலவிடப்பட வேண்டும்' என்று புலிகளுக்கு ஆலோசனை சொல்லி பணம் சம்பாதிக்க வழி தேடி, மாமனிதர் ரேஞ்சுக்கு போன தராக்கி சிவராம் புலி ஆதரவாளர்களின் Poster Boy Journalist ஆனது போல...

    நாங்களும் புலியை வைத்தோ, புலியைச் சார்ந்தோ பிழைத்துக் கொண்டிருக்கலாம்.

    பினாமிச் சொத்துகளுக்கு ஆட்டையைப் போட்டு, கோடீஸ்வரர்கள் ஆகக் கூட ஆகியிருக்கலாம்.

    எங்களை துரோகி என்ற ஒற்றைச் சொல்லில் மூடி மறைக்க முயன்ற யாழ்ப்பாணிகளால்...

    யாழ்ப்பாணப் பாணியில் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்ல முடியுமே தவிர,

    'இனத்தின் அழிவில் பணம் பண்ணிய, புகழ் தேடிய அயோக்கியர்கள்' என்று ஒருபோதும் சொல்ல முடியாது.

    போராட்டத்திற்கு வாங்கிய தன்னுடைய பணத்தை சுருட்டி கோடீஸ்வரர்கள் ஆனவர்களையே 'தமிழ் உணர்வாளர்கள்', 'தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள்' என்று இன்றைக்கும் புகழும் புலன் பெயர்ந்த யாழ்ப்பாணியின் அறம் அவ்வளவு தான்!

    யாழ்ப்பாணிக்கு துரோகி 'இன்றைய மார்க்கட் நிலவரம்' தான்.

    நேற்று, நாளை எல்லாம் பற்றி கவலை கிடையாது.

    யாழ்ப்பாணத்து எழுத்தாளர்களே, தமிழ்நாட்டுக்கு 'புலன் பெயர்ந்த எழுத்தாளர்களாக' இருந்த காலத்தில், தமிழ்நாட்டு வெளியீடுகளில் யாழ்ப்பாணத்திலிருந்து எழுதுபவர்கள் ஏதோ வேற்றுக்கிரக மனிதர்களாக சித்தரிக்கப்பட்ட காலத்தில்...

    ஐரோப்பிய மாற்றுக் கருத்துச் சஞ்சிகைகளுடன் சேர்ந்து, 'புலம் பெயர்ந்த இலக்கியம்' என்ற ஒன்று உருவாகுவதற்கு களம் அமைத்துக் கொடுத்தவர்கள்.

    இன்று புலன் பெயர்ந்த இலக்கியத்தின் ஏகபிரதிநிதிகளாக தங்களைச் சித்தரித்துக் கொண்டிருப்போரில் பலர், இந்த சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் இல்லாமல், பிரபஞ்சம் தோன்ற முன்னான சூன்ய பூஜ்ய பெருவெளியில் Big Bang தான்தோன்றீஸ்வரர்கள் ஆனதாகத் தான் தமிழ் நாட்டில் தோன்றி அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இன்றைக்கு உலகம் முழுவதும் பரந்திருக்கும் இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளை பெருமையோடு பிரசுரிக்கும் பிரசுரங்களும், அவர்களைப் பற்றிப் பேசுவதை பெருமையாக கருதும் இலக்கியவாதிகளும், விருது கொடுத்து கௌரவிக்கும் அமைப்புகளும், அவர்களை வைத்து பணம் பண்ணும் பிரசுரிப்பாளர்களுமாக தமிழ்நாடு அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    அன்றைக்கு யாழ்ப்பாண எழுத்தாளர்கள் தமிழ்நாட்டு இலக்கியகாரர்களின் அங்கீகாரத்துக்காக அலைய வேண்டிய நிலை போய்...

    இன்றைக்கு கனடாவில் கொடுக்கப்படும் ஒரு பம்மாத்து விருதின் அங்கீகாரத்திற்காக தமிழ்நாட்டு இலக்கிய உலகமே வடக்கு நோக்கி தவம் இருப்பதைப் பார்க்க... சிரிப்பு வரவில்லை. பரிதாபமாக இருக்கிறது!

    ஆனால்... இந்த புலன் பெயர் இலக்கியவாதிகள் தோன்றுவதற்கு களம் அமைத்துக் கொடுத்தவர்கள் பற்றியோ, அவற்றில் மாற்றுக் கருத்துக்களுடன் புலிகளின் மானிட விரோதப் போக்கிற்கு எதிராக எழுதியவர்களையோ தான் பேச யாருமில்லை.

    இந்த வரலாறுகள் எல்லாம் புலன் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்குள்ளேயே தெரிந்து விடாதபடிக்கு கொலை மிரட்டல், பத்திரிகை தடை என்றெல்லாம் புலிகள் செய்தார்கள் என்றால்...

    இலக்கியவாதிகளோ, தங்களைத் தவிர்ந்த, இவர்கள் பற்றிய வரலாறுகள் ஈழத்திற்கு வெளியே தெரியாமல் இருட்டடிப்பு செய்வதில் மிகவும் கவனமாக நடந்து கொண்டார்கள்.

    புலி எதிர்ப்பு என்ற ஒற்றைச் சொல்லோடு!

    புலி எதிர்ப்பு இருட்டடிப்பு என்பது தீண்டாமையின் தற்போதைய இன்னொரு வடிவம்!

    இந்தப் புலி எதிர்ப்பு என்று இவர்கள் பூசிய சாயத்தைக் கொண்டே, நான் ஒரு தீண்டத்தகாதவனாக இந்த இலக்கியப் பிதாமகர்களால் கருதப்பட்டிருக்கிறேன்.

    மாற்றுக் கருத்து, மனித உரிமைகள் என்று ஒரு முகமும், புலிக்கு வாலும் காட்டிய இலக்கியப் பெருந்தகைகளை தோலுரித்து தொங்க விட முடியும்.

    இனிமேல் பூமியின் ஆயுள் பரியந்தம் புலிகளை அசைக்க முடியாது என்று நம்பி, பின்பக்க குத்துக்கரணம் அடித்தவர்களை அடையாளம் காட்டி, துவைத்து நார் நாராக கிழிக்கவும் முடியும்.

    உயர்வைத் தக்க வைக்க, சமரசங்கள் செய்து முட்டுக் கொடுப்பவர்கள்...

    புலிகளின் வெளிநாட்டமைச்சர் பதவிக்கான கனவுகளுடன் வன்னி நோக்கி தவம் இருந்தவர்கள்...

    வேண்டாம்!

    அதற்கெல்லாம் முகமூடித் தலையாட்டி வேடம் போடும் தேவை எதுவும் இல்லை.

    சொந்தப் பெயரிலே அதைச் செய்ய முடியும்.

    இந்தக் கூட்டம் கொண்டிருக்கிற பொறாமையுணர்வான 'இவங்களைப் பற்றி கதைச்சா வெளியில தெரிஞ்சிடும், உவங்களைப் பெரியாக்கள் ஆக்கக் கூடாது!' என்ற சிந்தனை கூட எதுவும் இல்லை.

    'பொறாமையில சொல்றான்' என்ற சமாளிப்புடனேயே கடந்து போகக் கூடிய 'அறஞர்'கள் இவர்கள்!

    அந்த கிழிப்புகள் இந்தப் போலிகளுக்கு உவப்பானதாக இருக்காது என்பதை விட,

    இனத்தின் அழிவையே தங்களது அல்ப புகழுக்காக பயன்படுத்தும் அயோக்கியர்களைப் பற்றி எழுத இனி இன்ன தான் இருக்கிறது!?

    தமிழ்நாட்டில் தூர நின்று பிரமிக்கின்ற இந்த உலக நாயக இலக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நாங்கள் அருகே இருந்து பார்த்தவர்கள் தான், Warts and all!

    நாங்கள் கண்டு கேட்டு இன்புற்ற, இவர்களின் ஈனத் தனங்கள் பற்றி நாகரிகம் கருதித்தான் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது!

    தமிழ்நாட்டு வெகுசனப் பிரபல இலக்கியம் அரசியல் பேசியது என்றால்... அது புறநானூறுடன் முடிந்து விட்டது.

    அதுவும் தலைவனுக்கு புகழ் பாடுவதிலேயே காலத்தைக் கழித்தது.

    மாற்றுக் கருத்து காளமேகங்கள் தனிப்பாடல் திரட்டுகளில் மட்டுமே தலையைக் காட்டுவதுண்டு.

    மன்னவனும் நீயோ, வளநாடும் உன்னதோ என்று தமிழ் ஓதியதற்காக மனம் நொந்த புலவர்கள் வயிற்றுப் பசிக்கே பாடினார்கள்.

    அவர்களும் பொற்காசு கிடைத்திருந்தால் புகழேந்தியிருப்பார்களே அன்றி ஆட்சி மாற்றம் வேண்டி நின்றிருக்க மாட்டார்கள்.

    திராவிடம் அரசுக் கட்டிலேறிய பின்னர்...

    இன்றைக்கு அரசியல் பற்றி வாயே திறக்காமல்..

    திராவிட அரசியல், தமிழ்த் தேசிய அரசியல் பற்றி எந்த விமர்சனமும் இல்லாமலே இலக்கியம் படைக்கலாம். பிரபலம் ஆகலாம். பணம் சம்பாதிக்கலாம்.

    'புறநானூறில் கொத்துப் பரோட்டா' பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டராகக் கூட ஆகலாம்.

    நோகாமல் நொங்கும் குடிக்கலாம். கள்ளும் விற்கலாம்!

    மாற்று இலக்கியக் கருத்துக்கள் இஸங்களுடன் கூடிய சிறு வகையினதாக இருந்தாலும், அவை ஆளும் வர்க்கம் பற்றிய கடுமையான விமர்சனங்களை முன் வைத்தாலும், அதற்கு உயிர்ப் பிரச்சனை என்பது பெரிய பிரச்சனையாகவே இருந்ததில்லை.

    மிஞ்சிப் போனால், உள்ளே தள்ளி, முட்டிக்கு முட்டி தட்டப்படுவதோடு விசயம் முடிந்து விடும்.

    நம்ம தேசிக்காய்த் தலைவரின் 'தட்டுதல்' மாதிரி ஆளை முடித்து விடுவதாக இல்லாமல்!

    அரசியலைத் தொடுவதை விட, சாதியைத் தொடுவது உயிர்ப் பிரச்சனையாகும் அளவுக்குத் தான் 'புறம் வைக்கும் நானூறு சாதித்' தமிழர் பெருமை அங்கே இருக்கிறது.

    ஆனால், தமிழ்நாட்டில் நோகாத நொங்கு இலக்கியம் செய்வோருக்கு ஈழத் தமிழர்களுக்கு கருத்துச் சுதந்திரம் மட்டுமில்லை, இலக்கியமும் உயிர் அச்சுறுத்தலுக்குள்ளானது என்ற உண்மை இன்னமும் தெரிந்திருக்கவில்லை.

    'நாங்கள் உயிரைக் குடுத்துப் போராடுறம், உங்களுக்கு கம்பரசம் கேக்குதோ?' என்று வெறும் கம்பரசம் படித்தவர்களே விரட்டப்படும் அளவுக்கு, அரசியலைத் தொடாத இலக்கியம் செய்யவே முடியாத அளவுக்கு நிலை இருந்தது இந்த தமிழக இலக்கியக் கனவான்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

    இடதுசாரிக் கருத்து உட்பட பல தத்துவார்த்தப் பின்னணியுடைய இலக்கியர்கள், புலி பிராண்ட் தமிழ்த் தேசியத்தின் கருத்துக்களோடு ஒத்தோட வரமாட்டார்கள் என்ற சந்தேகத்திலேயே, விசாரணைக்கு அழைக்கப்பட்டு மிரட்டப்பட்டதும், பார ஊர்திச் சாக்குகளுக்குள் மறைந்து தப்பிக்க வேண்டியதுமான சூழ்நிலை இருந்தது தெரியுமா?

    வதைமுகாம்களில் வதைக்கப்பட்டதும், கொலை செய்யப்பட்டதும், தற்கொலைக்குத் தூண்டப்பட்டதுமான சூழ்நிலைகள் இவர்களுக்குத் தெரிந்திருக்காது.

    எதை எழுதினாலும், போற்றிப் பாடடி, கண்ணே! தேசிக்காய்த் தலையர் மண்ணே! என்ற நிலையில் தான் புலி பிராண்ட் விடுதலைப் போராட்டம் அந்த மண்ணுக்குள் இருந்தது.

    இப்படியாகத் தான்...

    ஈழத்தில் அந்த புறநானூற்று வியாதி தொற்றி, போர் இலக்கியம் பரணி பாடத் தொடங்கியது.

    இதனால்... 'சிங்களவர்கள் தமிழ்ப் பெண்களில் மார்பகங்களை அறுக்கிறார்கள்' என்ற தமிழ்த் தேசியச் சித்தரிப்பு மட்டுமே சாண்டில்யனின் கொங்கைகள் போல தமிழ்நாட்டு மனதில் படிந்து போய்க் கிடக்கிறது.

    கங்கை கொண்டான், கடாரம் வென்றான் கதைபோல, சிங்களம் கொன்றான் என்ற பெருமிதம் தங்களை இன உணர்வாளர்களாகக் காட்டிக் கொள்ள போதுமானதாக இருக்கிறது.

    இலங்கையின் இனப்பிரச்சனையும், அதற்கெதிரான போராட்டம் புலிகளால் சீரழிக்கப்பட்டதும் பற்றிய சரியான புரிதல் இல்லாமல், தமிழகத்தவர்களுக்கு 'ரம்போ'ராட்டம் சினிமாப் பிரமாண்டத்தில் பிரமிக்க வைத்துப் புல்லரிக்க மட்டுமே வைத்திருக்கிறது.

    துப்பாக்கிகள் தமிழர்களின் நெற்றிகளிலும் குரல் வளைகளுக்கும் திணிக்கப்படும் வரைக்கும், ஒரு சுதந்திரச் சிந்தனை யாழ்ப்பாணத்தில் எழுச்சி கொண்டிருந்தது. பல விடுதலை இயக்கங்கள் இருந்த நிலையில் இது சாத்தியமாகியிருந்தது.

    வெறும் ஆயுதத்தை மட்டும் நம்பியிருக்காமல், மக்களை சிந்தனை எழுச்சிக்குள்ளாக்குவதன் மூலம் போராட்டத்தை முன்நகர்த்தலாம் என்ற சிந்தனை கொண்ட முற்போக்குச் சக்திகள் புலிகள் தவிர்ந்த இயக்கங்களில் இருந்தன.

    அந்த இயக்கங்கள் எல்லாம் புலிகளால் உயிரோடு, எரியும் டயர்களில் வீசப்பட்டது வரையான முறைகளால் அழிக்கப்பட்ட பின்னர்...

    ஊரோடு ஒத்தோடும் யாழ்ப்பாணியச் சிந்தனை, சாகச விளையாட்டுகளின் மீதான மயக்கம், வாயைத் திறந்தால் வெடி விழும் என்ற பயம் என இன்னோரன்ன பல காரணங்களால்,

    இன்றைக்கு புலிகளின் துப்பாக்கிகள் மெளனிக்கப்பட்ட மாதிரி...

    அன்றைக்கு சுதந்திர எழுச்சிக் குரல்கள் புலிகளால் மெளனிக்கச் செய்யப்பட்டன.

    புறநானூற்றுத் தலைவரின் பொற்காசுகளுக்கும், மாமனிதர் பட்டத்துக்குமாய் இரந்து நின்ற கவிஞர்கள், எழுத்தாளர்கள் போர் இலக்கியம் படைக்க...

    ஊடகவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் என்ற இன்னொரு கூட்டம் புலிகளால் குடிசைக் கைத்தொழிலாய் உற்பத்தி செய்யப்பட்டது.

    சுதந்திரமான சிந்தனை மறுக்கப்பட்டு, ஊரோடு ஒத்தோடுவது பாதுகாப்பானதான நிலையில்...

    படைக்கப்பட்ட அந்தப் 'போரிலக்கியம்' தமிழ்நாட்டில் ஏற்படுத்திய பிம்பத்தைத் தான் இன்றும் பலர் கட்டிப் பிடித்துக் கொண்டு விட மறுக்கிறார்கள்.

    அது தான் இவர்களுக்கு நவீன புறநாறு!

    புனிதப் போராட்டம்!

    அந்தப் புறநானூற்றுக் கனவுகள் எல்லாம் தனித்த ஒரேயொரு மூடனில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டதால் சிதைந்து போக...

    விக்கிரமாதித்தன்கள் தங்கள் முயற்சியில் சற்றும் தளர்ந்தும் விடவில்லை.

    அந்தக் கனவுத் தொழிற்சாலையில் இருந்து 'முள்ளிவாய்க்கால் முடிவல்ல, எங்கள் விடுதலைக் கனவை அழிக்க முடியாது' என்ற புதுப் பம்மாத்துக் கனவோடு, 'துரோகிகள் இல்லாவிட்டால், தேசிக்காய்த் தலையர் ஈழத்தை அடிச்சுப் பறிச்சிருப்பார்' என்ற நியாயப்படுத்தலையும் உருவாக்கி, அந்த அழிவின் துயரம், புலி version 2.0 கண்ணீர்க் கதையையும் விற்கலாம் என்ற சந்தைப்படுத்தல் வாய்ப்பும் உருவாக,

    இப்போது அது 'போருக்குப் பின்னான' 'இலக்கியமாகி' விட்டது!

    இந்தக் கனவுத்தொழிற்சாலையின் உற்பத்திப் பண்டங்களை, தமிழ்த் தேசியத்தை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்வோர்கள் செய்வதில் நியாயங்கள் இருக்கலாம்.

    சுதந்திர சிந்தனையையும் உண்மைக்கான தேடலையும் அவாவி நிற்கும் இலக்கியச் சூழல் எவ்வாறு மயக்கம் கொள்ள முடியும்? விலை போக முடியும்?

    யாழ்ப்பாணத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் வாழ முடியாது, சுதந்திரமாகக் கருத்துத் தெரிவிப்பதற்கான சூழல் இல்லை என்ற நிலையில்...

    புலம் பெயர் நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்கள் சுயாதீனமாக வெளிக்கொணர்ந்த சிறு சஞ்சிகைகள் வருகின்றன.

    பிணத்தையும் பிணமாகுதலையும் போற்றிப் பாடும் புலி பிராண்ட் யாழ்ப்பாண ஈழத்தமிழ் தேசியத்தை மறுதலித்து, மனித உரிமைகள் என்ற மானிடம் தழுவிய சிந்தனையைக் கொண்ட பல இதழ்கள், புலிகளால் தடை செய்யப்பட்டு விரட்டப்பட்ட மற்ற இயக்கங்களில் இருந்தவர்களாலும் சுயாதீனச் சிந்தனை கொண்டோர்களாலும் வெளிக் கொணரப்பட்டன.

    தமிழகத்தில் இருப்பவர்களுக்கு இயக்கங்கள் பற்றிய புரிதல் எல்லாரையும் விடுதலைப்புலிகள் என்று வர்ணிப்பதிலேயே இருந்தது.

    ஆனால், புலிகள் தலைமை விசுவாசத்தையும் தலைமைக்காக உயிரைக் கொடுப்பதையும் மட்டுமே விடுதலைப் போராட்டத்திற்கான தகைமை என்ற கருத்தை வலியுறுத்திய நேரத்தில், சுதந்திரமான கருத்துப் பரிமாற்றம், தலைமை பற்றிய விமர்சனங்கள் பற்றிய அவசியத்தையும் வலியுறுத்தி மற்ற இயக்கங்களில் நடைபெற்ற விவாதங்களும், அதுவே அவற்றின் அழிவுக்கான காரணமாகியதையும் அறிந்திருக்க நியாயமில்லை.

    இந்தச் சிந்தனை எழுச்சியின் தொடர்ச்சியாகத் தான் இந்த மாற்றுக் கருத்துச் சஞ்சிகைகள் ஐரோப்பாவிலும் கனடாவிலும் வெளிவந்தன.

    புலம் பெயர்ந்த இலக்கியம் என்று சொல்லப்படும் இந்த விருட்சத்திற்கான விதைகள் அந்த விளைநிலைத்தில் தான் தூவப்பட்டன.

    அந்த சஞ்சிகைகள் இல்லாமல், புலன் பெயர்ந்த இலக்கியம் என்பது வெற்றிடத்தில் வளர்ந்த ஒன்றல்ல.

    இந்த எழுத்துக்களை பிரசுரிக்கும் துணிச்சல் தமிழகத்தில் எந்த வெளியீட்டிற்கும் இருந்திருக்காது என்பது தான் உண்மை.

    காற்றுப் புகாத இடத்திற்குள்ளும் புகக் கூடிய புலி என்று பெருமிதப்பட்ட புலி, அந்தக் குரலை நசுக்க ஐரோப்பாவில் கொலை வரைக்கும் சென்றது கூட, இந்த தமிழக இலக்கியப் பெருந்தகைகளுக்கு தெரிந்திருக்கவில்லை.

    இவ்வாறான சூழ்நிலைக்குள் தான், தமிழ்நாட்டின் நோகாத நொங்கு இலக்கியத்தை போலன்றி, அந்த நொந்த இலக்கியம் வளர்ந்தது.

    இன்றைக்கு புலன் பெயர்ந்த இலக்கியத்தைப் புகழ்பவர்களும், அதை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுமான தமிழ்நாட்டு இலக்கியர்கள் எத்தனை பேர் அந்த இதழ்கள் பற்றிய தேடலில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்பதை, அந்த இத்துப் போன cliche யான, 'உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்!' என்ற வார்த்தை மூலமாகத் தான் கேட்க வேண்டியிருக்கிறது!

    இன்றைக்கும் புலன் பெயர்ந்த எழுத்தாளர்கள் தமிழ்நாட்டு பிரசுராலயங்களையும், அச்சகங்களையும் பயன்படுத்தித் தான் நூல் வெளியிடுகிறார்கள். அதில் அவர்கள் ஏமாற்றப்படும் கதைகள் எல்லாம் நாங்கள் எப்போதும் கேள்விப்படுகின்றவை தான்.

    தொப்புள் கொடி உறவு என்பது... வாயும் வயிறும் வேறு என்பதை எப்போதுமே தெளிவாகத் தான் காட்டிக் கொண்டிருக்கிறது.

    அந்தப் பிரச்சனை நூல் வெளியிடுகிறவர்களுக்கு மட்டுமல்ல, நூல் புடைவை வாங்குவோருக்கும் இருக்கும் பிரச்சனை! அதை விடுவோம் இன்னொரு நேரத்திற்கு!

    அவ்வாறு வெளிவந்த நூல்கள் தமிழ்நாட்டிலும் எங்கோ, குறைந்த பட்சம் நூலகத் திட்டத்தினால், நூலகங்களிலாவது இருக்கும்.

    அவை பற்றி எங்கே தேடி எழுதப்பட்டிருக்கிறது?

    வாங்கின விஸ்கிக்கு பங்கம் இல்லாமல், கையில் திணித்ததைப் பற்றி, குஷிப்படுத்துவதற்காகவோ பண்டமாற்று நலன் கருதியோ மட்டுமே எழுதுவதில் அறம் என்ன இருக்கிறது?

    கேள்விப்பட்டதேயில்லை' என்று இலகுவாகக் கடந்து போக முடிகிறதென்றால்...

    உங்கள் காதுகளில் ஓதியவர்கள் யார்?

    அவர்கள் 'சொல்வதெல்லாம் உண்மை' என்று தானே இன்றைக்கும் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்?

    உங்களின் தேடல் என்பது, கேள்விச் செவியன் மட்டத்தில் தானா இருக்கிறது?

    உலக இலக்கியம், பிறமொழி இலக்கியம் என்றெல்லாம் ஆழக்கடலில் முத்துத் தேடுகின்ற உங்களால் காலடியில் கிடக்கும் முத்துக்களைக் கண்டுகொள்ள முடியவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.

    பன்றிகளின் முன்னால் முத்துக்களை எறியாதீர்கள், அவை மிதித்து விட்டு போய் விடும் என்று என்று யேசு சொன்னது உங்களுக்காகத் தானோ?

    இதில் இன்னமும் சுவாரஷ்யமான விசயம், எனக்கு நெருக்கமான ஒரு இலக்கிய நண்பர் ஒருவர் சொன்னது...

    அவர்களுக்குத் தெரியாது என்று இல்லை. ஆனால் பகிரங்கமாக அது பற்றிப் பேச அவர்கள் தயாராக இல்லை!

    இதை விட்ட ஒரு பொய்மை இருக்க முடியுமா?

    தெரிந்து கொண்டே, அவற்றைப் பேச மறுப்பதற்கான காரணம் என்ன?

    அங்கேயும் அந்த உழுத்துப் போன தமிழ்த் தேசியம் தான்!

    ஒரு மாயையைக் கனவாக்கி, அதற்காக உயிரைக் கொடுப்பதை தியாகம் என்று புறநானூறு தொடக்கம் புறம் காட்டிய தலைவன் வரைக்கும் செய்த பில்டப்புகள் தான் இன்றைக்கும் தமிழர்களின் வீர அடையாளமாக இருக்கிறது.

    தியாகம், துரோகம் என்ற இரண்டு கறுப்பு வெள்ளை எல்லைகளால் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட தமிழ்த் தேசியம், எந்த நேரமும் துரோகி ஆக்கலாம் என்ற அந்த கண்ணுக்குத் தெரியாத ஒன்றின் மீதான பயம் தான் இன்றைக்கும் பலரை மெளனமாக வைத்துக் கொண்டிருக்கிறது.

    இலக்கியத்திலும் சரி, அரசியலிலும் சரி, எந்த மூடனும் கெக்கே பிக்கே என்று இளித்துக் கொண்டே, யாரையும் துரோகி என்று விட முடிகிறது!

    அந்த துரோகிப்படுத்தலுக்கான பயம் தான் இவர்களை உண்மையைப் பேச விட மறுக்கிறது என்றால்...

    இவர்கள் அடிக்கடி உச்சாடனம் செய்கின்ற அந்த 'இலக்கிய அறம்'?

    இந்த தமிழக இலக்கியரின் புலன் பெயர் இலக்கியம் பற்றிய அறியாமைக்கு, அவர்களின் தேடலின்மையோ, Shameless self-promotion செய்யும் தான்தோன்றீஸ்வரர்களின் அயோக்கியத்தனத்தை மட்டுமே குற்றம் சொல்லவும் முடியாது.

    இதில் நம்மவர்களும் Guilty as charged?

    முதலாவது... பலருக்கு இருக்கும் தமிழ்நாட்டு அங்கீகாரம் பற்றிய வேட்கை.

    சிறந்த புலன் பெயர்ந்த இலக்கியம் என்று தமிழ்நாட்டில் எவர் தொகுத்தாலும், அந்த டொப் ரென் 10 லிஸ்டில் வந்து விட வேண்டும் என்ற துடிப்பு பலருக்கும் உண்டு.

    அங்குள்ள இலக்கியர்கள் தங்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற துடிப்புள்ளோர் பலர்.

    அதனால் பலருக்கு தெரிய வரலாம், அதிகம் புத்தகங்கள் விற்கலாம், பிரசுரம் பெறலாம், அவற்றில் விருது பெற்ற எழுத்தாளர் என்று பீற்றியும் கொள்ளலாம் (பணம் வருமா? என்ற மில்லியன் டொலர் கேள்வி தவிர்த்து!) என்பது உண்மை தான்.

    அந்த அங்கீகாரத்திற்கான வேட்கை யாசகமாகவோ, பண்ட மாற்றாகவோ ஆகும் போது தான் பிரச்சனை வருகிறது. (Copyright மாதிரி Conflict of interest பற்றிய தமிழர்களின் கருத்து யாவரும் அறிந்ததே! அது பற்றி தமிழர்கள் கவலைப்படுவதேயில்லை.)

    இந்த முயற்சியில் Shameless self-promotion செய்வோர் இலகுவாக வெற்றியடைகிறார்கள். அவர்களிடம் மாற்றிக் கொள்ள பண்டங்களும் உள்ளன என்பது இன்னொரு வசதி.

    இந்த எதிர்பார்ப்பின் ஒரு பகுதியாகத் தான் இலக்கிய நல்லெண்ணைச் சுற்றுலா வரும் தமிழ்நாட்டு இலக்கியர்கள் ராஜோபசார விருந்தோம்பலுக்கு உள்ளாகிறார்கள். அவர்களின் மூலமாக ஆன்ம ஈடேற்றம் அடைந்து விடலாம் என்ற கனவு அது! அவர்களும் தம் பங்குக்கு நக்கி நாவிழந்தபடியே உள்ளார்கள்!

    ஆனால்...

    மற்ற எழுத்தாளர்கள்?

    மானம் பெரிதென்று வாழும் 'மயிரை விட்டான் சிங்கன்' கலைமான்கள்!

    நாங்கள் அதெல்லாம் செய்ய மாட்டோம் என்று அடம் பிடிப்பவர்கள். புத்தகத்தை வெளியிட்டு, ஆங்காங்கே வெளியீட்டு விழா நடத்தி, முதல் பிரதி விற்று, வடையும் தின்று டீயும் குடித்து, இலக்கியம் பேசுவது மட்டுமே போதும் என்று நினைப்பவர்கள் உண்டு.

    குறைந்த பட்சமான புரமோஷன் செய்வதையே ஹராமாக்கும் சிந்தனை பலருக்கும் உண்டு. இதை தன்மானப் பிரச்சனையாகக் கூட பார்க்கும் நிலை உண்டு. நண்பர்கள் மட்டுமே தங்கள் படைப்புகளைப் பற்றி எழுதினால் போதும் என்ற திருப்தி பலருக்கு உண்டு.

    இரண்டாவது, இவர்களுக்கும் இடையில் உள்ள குழு வாதங்கள்

    இது மற்றக் குழுக்களில் உள்ளவர்களைப் பற்றி பேசுவதையே தவிர்க்கிறது. சில நேரங்களில் காலை வாரவும் புறக்கணிப்புச் செய்யவும் இது வழிவகுக்கிறது.

    தங்களுக்குள்ளேயே புலிகளை விமர்சித்து எழுதுபவர்களை கூட்டமாய் கல்லால் எறிந்து கொல்வதன் மூலம் தங்களை தமிழ்த் தேசியத்தின் அரண்களாகக் காட்டிக் கொள்கின்ற பலரை இந்த விமர்சனக் கூட்டங்களில் கண்டபடி தானே இருக்கிறோம்.

    மூன்றாவது பொறாமை உணர்வு,

    இவர்களிலும் 'எல்லாப் பெருமையும் என் ஒருவனுக்கே' கூட்டம் உண்டு.

    தங்களின் துறையில் மற்றவர்கள் படைப்பதை பொறாமை உணர்வோடு பார்ப்பது பலரை பேஸ்புக் பதிவுகளுக்கு லைக் போடுவதைக் கூட தடுத்து விடுகிறது.

    மிகவும் அபூர்வமாக யாராவது தங்களது துறையில் சாதிப்போரைப் பற்றி பெருமையாக குறிப்பிடும் போது, என்னால் ஆச்சரியம் தாள முடியாமல் அதைப் பாராட்டும்படி செய்து விடுகிறது.

    நான்காவது, தமிழ்நாட்டில் கூட ஒவ்வொரு பிரசுரங்கள் மீது ஒவ்வொருவருக்கும் இருக்கும் விமர்சனக் கண்ணோட்டம் காரணமாக, அந்தந்தப் பிரசுரங்களில் எழுவதும், பிரசுரமாவதும் சமூகப் பிரஷ்டம் செய்வதற்கு காரணமாகிறது.

    அங்கே இருக்கும் குழு வாதங்களால் நடைபெறும் மோதல்களும் வேறு அந்தச் சுழலுக்குள் இவர்களையும் இழுத்து விடுகிறது.

    கடைசியாக, புலி பிராண்ட் தமிழ்த் தேசியத்தின் 'மண்டை கழண்ட கூட்டம்'.

    இது ஒரு பெரும் தலையிடி பிடித்த கூட்டம்.

    தமிழகத்தில் புலிகள் பற்றிய விமர்சனம் செய்யும் படைப்பு ஒன்று வந்து விட்டால், 'புலிகள் புனிதப் போராட்டம் தான் நடத்தினார்கள்' என்று 'அம்மாவாணை அடிச்சு சத்தியம் செய்து' 'அன்னிய சக்திகளுக்கு விலை போகும் துரோகிகளைத் திட்டி' வாசகர் கடிதம் எழுதும் இலக்கிய ஆர்வலர்கள் முதல், அந்த வெளியீடுகளை வாசிக்காமலேயே தடை செய்வோம், கடைகளில் இருந்து பறித்து தெருவில் வைத்து எரிப்போம், படத்தை பகிஷ்கரிப்போம், கலந்து கொள்ளும் கூட்டத்தைக் குழப்புவோம் என்கிற பைத்தியங்கள் வரை எமக்குள் உண்டு.

    'எல்லா இயக்கப் போராளிகளுக்கும்' என்ற அஞ்சலியே இன்றைக்கும் தீண்டத்தகாததாக இருக்கிற சூழல் புலி பிராண்ட் ஈழத் தமிழ்த் தேசியத்தினுடையது.

    தாங்களே சொல்லி தாங்களே நம்புகின்ற பொய்களை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று அடம் பிடிக்கின்ற ஈழத் தமிழ்த் தேசியத்தின் கதை சொல்லலுக்கு எதிராக எதையும் சொல்வது துரோகமாக்கப்படுகிறது.

    இந்த தலையிடியைப் பார்த்தே, பிச்சை வேண்டாம், நாய்களைப் பிடி என்று நொங்கு இலக்கியம் செய்யும் நிலைக்கு தமிழகத்தார் தள்ளப்படும் நிலையும் ஏற்படும்.

    இந்த மாற்றுக் கருத்தாளர்களை ஆதரிக்கப் போய், தங்களுடைய படைப்புகளும் எரிக்கப்படும் நிலை ஏற்படும், யாழ்ப்பாணத்தில் விற்க முடியாத நிலை வரலாம் என்ற பயம் கூட இருக்கலாம்.

    இவ்வாறான குளறுபடிகளும், எமது மாற்றுக் கருத்து எழுத்தாளர்கள் தமிழகத்தில் பிரபலம் பெற முடியாமைக்கு காரணமாக இருக்கின்ற உண்மையையும் நாங்கள் ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்.

    இந்த புலன் பெயர்ந்த இலக்கிய வளர்ச்சிக் காலத்தில் கண்டு கேட்டு அறியாத ஒருவர், திடீரென்று கிளம்பி, அந்த புலன் பெயர்ந்த இலக்கியத்தை அங்கீகரிக்காமல், தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கே விருது கொடுத்து, தனக்கு தமிழ் நாட்டில் அங்கீகாரம் தேட, கனடாவில் உருவாக்கிய விருது ஒன்றைச் சுற்றிக் கட்டப்பட்ட இலக்கிய மாபியாவின் தரக் கட்டுப்பாட்டு முத்திரை குத்தப் பெற்று அங்கீகாரம் பெற்றவர்களைக் கனம் பண்ணுவதே பாதுகாப்பானதும், விருதை எப்போதாவது பெறுவதற்கான அச்சாரமாகவும் கருதும் போக்கு இருப்பதாகவே படுகிறது.

    நான் முன்பு எழுதியது போல, விஸ்கிக்கும் விமானச்சீட்டுக்கும், விருதுக்குமான கனவுகளே, தமிழ்நாட்டில் புலன் பெயர்ந்த எழுத்தாளர்களை promote பண்ணுவதற்கான காரணங்களாக அமைகிறது.

    இவன் யார் என்றே தெரியவில்லை? எதுக்கு புதுசா இதுக்குள்ள வந்து குதிக்கிறான் என்று இந்த இலக்கியச் செம்மல்கள் தலையைச் சொறியலாம்.

    கேள்விப்பட்டதேயில்லை என்று சொல்லும் இலக்கியவாதிகள் வேண்டும் என்றால், புலன் பெயர் இலக்கியத்தின் பிதாமகர்கள் தாங்களே என தங்களிடம் வந்து உரிமை கோருபவர்களிடம் கேட்டுப் பார்க்கலாம்...

    இன்னாரைத் தெரியுமா? அவர் ஏதாவது எழுதியிருக்கிறாரா? என!

    இந்த முப்பது வெள்ளிக்காசு ஆசையில் அலையும் யூதாஸ்கள் காட்டிக் கொடுப்பார்களா?

    அல்லது பேதுரு போல, 'அவனை நான் அறியேனே!' என்று சேவல் கூவ முன் மும்முறை மறுதலிப்பார்களா? என்பதை எங்களுக்குச் சொல்லுங்கள்!

    படைப்பாளிகளுக்கும் வாசகனுக்கும் இடையில் தரக்கட்டுப்பாட்டாளர்களும் முகவர்களும் இடைத்தரகர்களும் நந்திகள் போல அனாவசியமானவர்கள் என்று நினைப்பவன் நான்.

    புத்தகம் வெளியிட்டாலும், முகவுரை, அணிந்துரை இல்லாமல் வெளியிட வேண்டும், வெளியீட்டு விழா வைத்து முதற் பிரதிகளைத் திணிக்கக் கூடாது என்ற எண்ணம் உள்ளவன் நான்.

    என்னுடைய எழுத்துக்கள் இன்னொரு ஆசிரியரைச் சங்கடத்திற்குள்ளேயோ, ஆபத்திற்குள்ளேயோ மாட்டி விடக் கூடாது என்பதற்காகவே சொந்த பிரசுரங்களில் எழுதுவதை விரும்புகின்றவன் நான்.

    எனது எழுத்துக்கள் ஒரு போதும் அங்கீகாரம் பற்றியதாக இருந்ததில்லை. இந்தச் சமூகம் சீரழியப் போகிறதே என்று, எனக்கு ஊட்டி வளர்க்கப்பட்ட சமூக உணர்வினால் எழுந்ததே என் எழுத்து.

    தொலைபேசிப் போராளிகள் முதல் கொலைபேசிப் போராளிகள் வரையான பயமுறுத்தல்கள் எல்லாம் கண்டு தான் வந்திருக்கிறேன்.

    சஞ்சிகைகளை கைகளில் திணிப்பதை விட, தாங்களாகவே விலை கொடுத்து வாங்கிச் செல்ல வேண்டும் என்றே பத்திரிகை நடத்தியவன்.

    கேட்கச் செவியுள்ளவன் கேட்கக் கடவான். அவ்வளவு தான்.

    அங்கீகாரம் வேண்டி நின்றால், நான் எழுதியவற்றை புத்தகங்களாக வெளியிட்டு, தமிழ்நாட்டு இலக்கியர்களின் பார்வைக்காக யாரையாவது பிடித்தோ அனுப்பியோ, கனடா வரும் போது கையில் திணித்தோ இருந்திருப்பேன்.

    சிலோன் (கல்லடி) விஜயேந்திரன் தான் அச்சிட்ட புத்தகத்தை நான் படித்த கல்லூரி அதிபரான சுவாமியாருக்கு விற்க வந்து அவமானப்பட்டு மனம் நொந்ததை, என் மூத்த அண்ணன் இப்படி அவர் கொண்டு திரிந்து விற்றபோது எங்கோ அவரிடம் இப்படியாக வாங்கி வந்த ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை புத்தகத்தை வாசித்து 'உங்கட புத்தகத்தை நான் வாசிச்சனான்' என்று, அருகில் உள்ள தேநீர்க் கடையில் கண்டு அறிமுகப்படுத்திய எட்டாம் வகுப்பேயான என்னிடம், சொல்லி வருந்தியதைக் கண்டு, ஒரு படைப்பாளியின் துயரத்தை இன்று வரையும் கண்ணுக்குள் வைத்து நினைவில் கொண்டிருப்பவன் நான்.

    பிச்சைக்காரப் புலவனின் நிலையில், யாசிப்பவனாக படைப்பாளி இருக்கக் கூடாது என்ற எண்ணம் எனக்கு இன்றும் உண்டு.

    யாருக்கும் தலைவணங்காத காளமேகத் திமிர் எனக்கு உண்டு.

    இந்த அங்கீகாரங்களால் நான் எதுவும் உலக நாயகனாகி விடப் போவதில்லை.

    கனடாவில் என் வீட்டிற்கு தேடி வந்து சந்தித்த தமிழகத்து இலக்கியப் பிரபலம் இன்றைக்கும் பேஸ்புக்கில் இருக்கிறார். இதுவரைக்கும் என்னைத் தெரிந்ததாக எங்கேயும் காட்டிக் கொண்டதில்லை.

    தமிழகத்தின் பிரபலம் ஒன்று கனடா வந்தபோது, என்னைப் பற்றி அறிந்து கொண்ட போதும், தமிழ்நாடு திரும்பிய போது இங்கே சந்தித்த சகலரையும் பற்றி எழுதிய போதும் என்னைப் பற்றி எழுதவேயில்லை. இவர் சினிமா பற்றி எழுதுவதற்கு எத்தனையோ வருடங்களுக்கு முன்பே உலக சினிமா பற்றிய எழுதியவன் என்பதையும், ஈரானிய இயக்குனர் பற்றி நான் பேசியதையும் அவர் ரசிக்கவில்லை என்பது எனக்குத் தெரிந்திருந்தது. 'ஒரே உறையில் இரண்டு வாட்கள் இருப்பதை' அவர் விரும்பாமல் இருந்திருக்கக் கூடும்.

    இன்றைக்கும் தாயகம் பற்றி பெருமையாக எழுதும் நண்பர்களும், தாயகத்தில் எழுதியதைப் பெருமையாக கருதும் நண்பர்களும், தாயகத்தில் நான் எழுதிய ஏடிட்டோரியல்கள், கியூறியஸ் கட்டுரைகளைப் புத்தகமாக்க வேண்டும் என்று என்னை வற்புறுத்தும் நண்பர்களும் உண்டு.

    'நீ விடாட்டி சொல்லு, நாங்கள் விடுறம்' என்று உரிமையோடு சொல்பவர்கள் அவர்கள்.

    ஆனால், என்னுடைய தயக்கத்தையும் கூச்சத்தையும், ஏன் மறுப்பையும் மீறி, என்னை இழுத்துச் சென்று, 'முன்பு தாயகம் என்றொரு பத்திரிகை நடத்தியவர்' என்று அறிமுகப்படுத்தும் நண்பர்களுக்கு முன்னால், அந்த அறிமுகத்தால் தான் கட்டி வைத்திருக்கும் புலன் பெயர் இலக்கியப் பிரம்மா பிம்பம் சிதறி விடுமே என்ற நினைப்பில், அதை விரும்பாத, தாயகத்தில் எழுதியவரை நான் கண்டிருக்கிறேன்.

    இன்று வரைக்கும் தாயகம் என்ற ஒன்று கனடாவில் வந்ததாகவே காட்டிக் கொள்ளாதவர் அவர்.

    நான் அடிக்கடி சொல்வது போல...

    இந்த விருதுகள், அங்கீகாரங்களை விட...

    என்றோ எழுதி, எப்போதோ மறந்து போன ஒன்றை காணும் போதுகளில் நினைவு படுத்தி பெருமை கொள்கின்ற வாசகர்களின் மகிழ்ச்சி தான் நான் வேண்டுகின்ற அங்கீகாரம்.

    இன்றைக்கும் என் நண்பர்கள் என் மீது கொண்டிருக்கும் மரியாதையால், என்னைப் பற்றி ஏதாவது எழுதும்போது, சங்கடப்பட்டு, கூச்சம் நிறைபவன் நான்.

    ஆகவே, இதை என்னுடைய ஏக்கம், ஆதங்கம், பொறாமை என்று முத்திரை குத்தி விட்டு அப்பால் போவதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லை.

    நான் என்னை அறிந்து கொள்ள, உங்கள் அங்கீகாரம் தேவையில்லை.

    இது என்னைப் பற்றியதல்ல!

    எத்தனையோ சிறந்த எழுத்தாளர்கள், தங்கள் கருத்துக்களாலும், எழுத்து நடையாலும் தமிழை செழுமைப்படுத்துகின்றவர்கள், சமூக நீதிக்கான வேட்கையை தங்கள் படைப்புகளில் கொண்டிருந்தவர்கள், தாயகத்தில் எழுதிய போதெல்லாம் பெருமையோடும் மகிழ்ச்சியோடும் பிரசுரித்தேன். கருத்துக்களால் ஒன்றித்த இவர்களில் பலர் நேரில் காணாமலேயே என்னோடு ஆத்மார்த்தமான நண்பர்கள் ஆனவர்கள்.

    கொலைப் பயமுறுத்தல்களுக்கும் மத்தியில் பல்வேறு சிறு சஞ்சிகைகளை ஆர்வம் மீதியால் வெளிக் கொணர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தான் இந்த விளைநிலத்திற்கு பசளை போட்டு நீர் பாய்ச்சியவர்கள்.

    அவர்களில் பலருக்கான அங்கீகாரம் இன்னமும் தமிழ்ப் பரப்பில் கிடைக்கவில்லை. அந்த அங்கீகாரம் கிடைத்தால் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் இன்னமும் படைத்திருக்கக் கூடியவர்கள். தமிழ் இலக்கியத்தை இன்னமும் செழுமைப்படுத்தியிருக்கக் கூடியவர்கள்.

    அவர்கள் எல்லாரும் திட்டமிட்டே இருட்டடிப்புச் செய்யப்படுகிறார்கள். புலன் பெயர்ந்த இலக்கிய வரலாற்றில் அவர்களுக்கான இடம் மறுக்கப்பட்டே வருகிறது.

    அவர்கள் வெறுமனே, பாடல் பெற்ற தலம் என்பது போல, பிரசுரம் பெற்ற எழுத்தாளர் என்றில்லாமல்...

    தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்தியதற்கான மரியாதையை தமிழ் இலக்கிய உலகம் வழங்க வேண்டும். அதன் மூலம் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களின் பங்களிப்பிற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.

    புலன் பெயர் எழுத்தாளர்களை ஏமாற்றுவதை தொழிலாக கொண்ட அச்சகத்தார், பிரசுரத்தாரை விட, இலக்கியவாதிகள் பெரிதும் மேலானவர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை எதுவும் எனக்குக் கிடையாது.

    அப்படி இல்லை, நாங்கள் நியாயமாக எல்லா தகுதி வாய்ந்த எழுத்தாளர்கள் பற்றியும் எழுதுகிறோம் என்பவர்கள் இங்கே எனக்குப் பதில் சொல்லத் தேவையில்லை.

    உங்கள் பதிவுகளில் எழுதுங்கள். எல்லாருமே வாசிக்கட்டும்.

    ஒரு புறத்தில் சுயதம்பட்டக் கூட்டம், மறுபுறத்தில் தமிழ்த் தேசியம் மீதான பயத்தில்  பேச மறுத்துக் கொண்டே இலக்கிய அறம் பற்றிப் பீற்றிக் கொள்ளும் கொடுமை தமிழ் இலக்கியப் பரப்பில் அன்றி வேறெங்கு தான் நடக்கும்!?

    ஆகவே,

    இது உங்களுடைய அங்கீகாரத்தைப் பெறாதது பற்றிய என்னுடைய புலம்பல் புராணம் அல்ல.

    நீங்கள் பீற்றிக் கொள்கிற இலக்கிய அறம் பற்றியது!

    இறுதியாக...

    எஸ்.பொ பாரிஸ் வந்திருந்தபோது, செல்வம் வீட்டில் நடந்த சந்திப்பில் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை, கலாமோகன் 'பாரிஸ் பகிர்வுகள்' என்ற தொடராக தாயகத்தில் எழுதியிருந்தார்.

    அதை தனது தொகுப்பில் வெளியிட்ட எஸ்.பொ, அந்த தொகுப்பில் அந்த தொடர் தாயகத்தில் வெளிவந்தது என்பதைக் குறிப்பிடவேயில்லை.

    எஸ்.பொ போன்ற, எழுத்தாளரும் பிரசுரிப்பாளருமாக இருந்த ஒருவரிடம், இது தற்செயலான நிகழ்வாக இருந்திருக்க நியாயமில்லை என்பது தான் என் கணிப்பு.

    நானும் எனது மனைவியும் ஒரு தந்தை போல நேசித்தவரும், யாழ்ப்பாணியத்தில் ஒரு கலகக்காரனாவே அறியப்பட்ட எஸ்.பொ வே, தனது மகன் புலிகள் இயக்கத்தில் போராளியாக மரணித்தார் என்பதனால் புலி பிராண்ட் தமிழ்த் தேசியத்தில் மூழ்கிப்போய், அதனால் பாதிப்புகள் வரலாம் என்றோ... தாயகத்தை இருட்டடிப்பு செய்தார் என்றால்...

    மற்றவர்களை நான் நொந்து தான் என்ன செய்ய?

    Postad



    You must be logged in to post a comment Login