Recent Comments

    வெற்றி அல்லது வீரமரணம்!

    முல்லைத்தீவில் வைக்கப்பட்ட காந்தி சிலை உடைக்கப்பட்டிருக்கிறது.

    காந்தி பிறந்த மண்ணில், காந்தியைக் கொன்ற கோட்சே புனிதப் போராளியாகிய நிலையில், இங்கே இதற்கான தேவையும் நோக்கமும் அவசரமும் என்ன என்ற கேள்வி தவிர்க்க முடியாது.

    யுத்தம் முடிந்து தங்கள் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அத்தியாவசியத் தேவைகளுக்கு பயன்படக் கூடிய நிதி இவ்வாறாக செலவிடப்படுவது குறித்து யார் தான் விசனப்பட முடியாது?

    இருந்தாலும், கட்டி வைத்து மண்டையில் போட மட்டுமன்றி, நாய்கள் சிறுநீர் கழிக்கவும் மின் கம்பங்கள் பயன்பட்டது போல, காகங்கள் இயற்கைக் கடன்களைக் கழிக்க சிலைகள் வைப்பதில் நமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

    கோயில் சிலைகளுக்குப் போட்டியாக வீதியில் சிலைகள் கொண்ட நிலம் அது.

    சிவகுமாரன் சிலை திறப்பின்போது சுட்டி வயதில் ஆஜராகியது முதல் துரையப்பா ஆஸ்பத்திரி வீதியில் கட்டிய சிலைகள் தலையில் வெள்ளை நிறப் பெயின்ட் உடன் காட்சியளித்தது வரை கண்டதுண்டு. குருநகரில் எம்.ஜி.ஆர் சிலை என பெருமை கொண்ட பூமி இது.

    இந்த நிலையில், காந்தியின் சிலை வடிவில் இந்திய ஆக்கிரமிப்பு நடப்பதையும், காந்தி இந்தியாவுக்கு இழைத்த துரோகங்களை பட்டியலிட்டும் 'உடைத்ததே சரி' என்று பலரும் துள்ளிக் குதிக்கிறார்கள்.

    ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு ஒரு பனங்கொட்டையாவது எறிய மாட்டார்களா என்று பொச்சடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, இந்த கரந்துறைத் தாக்குதல் கற்கண்டாய் இனித்திருக்கிறது...

    'தமிழர்களுக்கு இந்தியாவின் அனுசரணை கிடைக்கக் கூடாதபடிக்கு தமிழர்களும் இந்தியாவும் மோதிக் கொள்ள வேண்டும்' என்பதில் ஆர்வமாக உள்ள சிங்கள இனவாதிகளுக்கு தேனாக இனித்தது போல!

    பிரச்சனை இல்லை!

    எங்கள் மண்ணில் நாங்கள் யாரை சிலை வைத்துக் கௌரவிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கான உரிமை எங்களுக்கு உரியது தான்.

    இருந்தாலும் சின்ன சந்தேகங்கள் சில!

    இவற்றை அறிவார்ந்த பெரியோர் தெளிய வைத்து விளம்பின் இச்சிறியேன் நன்றியுடையவனாய் இருப்பேன்.

    1. தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுச் சின்னம், சிவகுமாரன் சிலை உடைப்புகள் சிங்கள அரசின் இன வன்முறை என்றால், காந்தி சிலை உடைத்தது என்ன அகிம்சை நடவடிக்கையா?

    2. காந்தி இந்திய மக்களுக்கு துரோகம் இழைத்தார் என்றால், உண்ணாவிரதம் இருந்த திலீபனை அஹிம்சாமூர்த்தி, ஈழத்துக் காந்தி ரேஞ்சில் தூக்கிக் கொண்டாடுவது ஏன்?

    3. முல்லைத்தீவில் காந்தி சிலை வைத்தால் உடைக்க வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்க இந்தியா அனுமதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் நிறுத்தப்படுமா?

    4. இப்போது மூலைக்கு மூலை புத்தரும் காந்தியும் சிலை வடிவில் எழுந்தருளி அருள் பாலிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டுப் போன தீர்க்கதரிசிக்கு எப்போது சிலை எழுப்பப் போகிறீர்கள்?

    'மூலைக்கு மூலை காந்தி சிலை இருந்தால், எங்கள் மக்களின் போராட்ட உணர்வு மழுங்கி, தமிழ் மக்கள் அகிம்சாவாதிகள் ஆகி விடுவார்கள்' என்று நினைத்து, 'எங்களுக்கு இணக்க அரசியல், மென்வலு அரசியல் எதிலும் நம்பிக்கை இல்லை, ஆக்கிரமிப்பு, அடக்குமுறையை வன்முறையால் தான் எதிர்ப்போம்' என்றால்,

    முடிவு வெற்றி அல்லது வீரமரணம் தான்.

    அடி வாங்கும் போது 'ஐயோ, காப்பாற்று, அழுத்தம் கொடு' என்று இந்தியா முதல் உலகம் வரைக்கும் உயிர்ப்பிச்சை கேட்கக் கூடாது. 'துரோகம் இழைத்து விட்டன, சதி செய்து விட்டன' என்று புலம்பக் கூடாது.

    வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும் எனறு நம்பினால், 'உங்களுடைய போராட்டம் நியாயமானது, வெளிஆதரவு கிடைக்காவிட்டாலும், இறுதித் துளி இரத்தம் இருக்கும்வரை போராடியே தீருவோம்' என்றால்,

    இதையெல்லாம் பதுங்கியிருந்து இரவில் உடைக்கத் தேவையில்லை.

    பகிரங்கமாக பகலிலேயே உடைக்கலாம்,

    மக்களை போராட்டத்திற்கு திரட்டிக் கொண்டு!

    Postad



    You must be logged in to post a comment Login