Recent Comments

    சிவரமணி: தற்கொலையில் இருந்து படுகொலைகள் வரை.

    Sivaramani குஞ்சன்

    Ashok-yogan Kannamuthu முகப் புத்தகத்தில் சிவரமணியின் 25 ஆவது நினைவு தினம் என அறியப்படுத்தியுள்ளார். இவருக்கு நன்றி. இலங்கையின் அரசியலையும், இங்கு வாழும் தமிழ் மக்களின் அரசியலையும் முகப் புத்தகத்தில் தினம் தினம் குத்திக் கொண்டிருக்கும் புத்திஜீவிகள், கவிஞர்கள், கனடாவில் கிடைத்த விருதை நோபெல் விருது எனக் கருதிக்கொண்டிருப்போர், வெளிநாடுகளில் இலங்கையின் மனித உரிமைக்காக ஆர்ப்பாட்டங்களில் வேட்டி கட்டிக் கொடிகளைப் பிடிப்போர், பெண்விடுதலைக் கூட்டங்கள் நடத்துவோர், இவர்களுக்குச் சிவரமணி தெரியாது. இவளின் எழுத்துகள் எனது விழிகளில் கண்ணீர் மழைகளைத் தோற்றுவிக்கின்றன. இவளின் தற்கொலை தமிழ் இனத்தின் பாசிஸ விடுதலைப் போக்கை எதிர்ப்பது. இவள் காலத்தில் பல தமிழ்ப் புத்திஜீவிகளை சிங்கள அரசியலின் இனவெறி கொன்றதல்ல, இலங்கையின் தமிழ்த் தேசியவாதத்தினை பயங்கரவாதத்தால் ஈபில் கோபுரமாக மாற்றத்துடித்த புலிகளே. புலித்துவம் கவித்துவம் தெரியாதது. இதுதான் செல்வியைக் கொன்றது. இது ரஜனியைக் கொன்றதும் இதற்கு புத்திஜீவிகளிடம் இருந்த வெறுப்பாகும். Ashok-yogan Kannamuthu மீது பல எதிர் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இவர் செல்வியின் காதலராக இருந்தவர். எவரிலும் எப்போதும் விமர்சனங்கள் வைக்கப்படலாம். இவர் சிவரமணி மீது இன்று எழுதியவை கவனத்துக்கு எடுக்கப்படவேண்டியன. இவருக்கு நன்றியுடன், இவர் குறிப்பும், இவர் தரும் சிவரமணி கவிதைகளும் உங்கள் வாசிப்புக்குத் தரப்படுகின்றன. “இன்னொரு தடவை சிவரமணி செத்ததுபோதும்” எனத் “தாயகம்” இதழில் தமிழ் இலக்கியத்தின் தரமான விமர்சகர் மு.நித்தியானந்தன் எழுதிய கட்டுரை குறிப்பிடத்தக்ககது.

    Ashok-yogan Kannamuthu குறிப்புகள்.

    “ஈழத் தமிழ் கவிதையில் தோன்றிய முக்கியமான கவிஞராகவும் ஈழப் பெண் கவிதையில் மிகவும் முக்கியமான கவிஞராகவும் கருதப்படும் சிவரமணியின் இருபத்தைந்தாவது நினைவுநாள் இன்றாகும். யுத்தகால இரவொன்றின் நெருக்குதல் என எழுதிய சிவரமணி போர்க்கால அழுத்தங்களால் தன்னை தற்கொலை செய்துகொண்டார். 1991-ம் ஆண்டு மே மாதம் 05-ம் தேதியன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டில் 23 வயது மட்டுமே நிரம்பிய சிவரமணி தற்கொலை செய்துகொண்டார். மரணிப்பதற்கு முன், தான் எழுதிய அத்தனை கவிதைகளையும் தீயின் நாக்குகளுக்குத் தின்னக் கொடுத்து சாம்பலாக்கிவிட்டு, 'எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்!’ என்று ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். 23வயதேயான சிவரமணி அக்கால கட்டத்தில் எழுதிய கவிதைகள் அவரது ஆளுமையை பறைசாற்றின. தமிழின் மிகவும் முக்கியமான ஆளுமையாக பரிணமிக்கும் இயல்புகளைக் கொண்ட அவர் இன்றிருந்தால் மிகப் பெரும் கவி ஆளுமையாக இருந்திருப்பார். சிவரமணியின் கவிதைகளை மீள் வாசிப்புச் செய்வதும் அவரை நினைவுகூர்வதும் போரால் சிதைந்துபோன - பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு அவசியம். அவருடைய நம்பிக்கைகளும் நம்பிக்கையீனங்களும் எதிர்பார்ப்புக்களும் ஆழமாக சிந்திக்கவும் உணரவும் வேண்டியது. யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்! யுத்தகால இரவொன்றின் நெருக்குதல் எங்கள் குழந்தைகளை வளந்தவர்களாக்கி விடும். முகமற்ற மனித உடலும் உயிர் நிறைந்த அவர்களின் சிரிப்பின் மீதாய் உடைந்து விழும் மதிற் சுவர்களும் காரணமாய் எங்களுடைய சிறுவர்கள் சிறுவர்களாயில்லாது போயினர். நட்சத்திரம் நிறைந்த இரவில் அதன் அமைதியை உடைத்து வெடித்த ஒரு தனித்த துப்பாக்கி சன்னத்தின் ஓசை எல்லாக் குழந்தைகளினதும் அர்த்தத்தை இல்லாதொழித்தது. எஞ்சிய சிறிய பகலிலோ ஊமன்கொட்டையில் தேர் செய்வதையும் கிளித்தட்டு மறிப்பதையும் அவர்கள் மறந்து போயினர். அதன் பின்னர் படலையை நேரத்துடன் சாத்திக்கொள்ளவும் நாயின் வித்தியாசமான குரைப்பை இனம் காணவும் கேள்வி கேட்காதிருக்கவும் கேட்ட கேள்விக்கு விடை இல்லாதபோது மௌனமாயிருக்கவும், மந்தைகள் போல எல்லாவற்றையும் பழகிக் கொண்டனர். தும்பியின் இறக்கையை பிய்த்து எறிவதும் தடியையும் பொல்லையும் துப்பாக்கியாக்கி எதிரியாய் நினைத்த நண்பனைக் கொல்வதும் எமது சிறுவரின் விளையாட்டானது. யுத்தகால இரவுகளின் நெருக்குதலில் எங்கள் குழந்தைகள் "வளர்ந்தவர்கள்" ஆயினர்.

    முனைப்பு

    பேய்களால் சிதைக்கப்படும் பிரேதத்தைப் போன்று சிதைக்கப்பட்டேன் ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம் இரத்தம் தீண்டிய கரங்களால் அசுத்தப்படுத்தப்பட்டன. என்னை மேகத்திற்குள்ளும் மண்ணிற்குள்ளும் மறைக்க எண்ணிய வேளையில் வெளிச்சம் போட்டுப் பார்த்தனர் . அவர்களின் குரோதம் நிறைந்த பார்வையும் வஞ்சகம் நிறைந்த சிரிப்பும் என்னைச் சுட்டெரித்தன. எனது ஆசைகள் இலட்சியங்கள் சிதைக்கப்பட்டன. அவர்களின் மனம் மகிழ்ச்சி கொண்டது. அவர்களின் பேரின்பம் என் கண்ணீரில்தான் இருக்கமுடியும் . ஆனால் என் கண்களுக்கு நான் அடிமையில்லையே அவர்களின் முன் கண்ணீரக் கொட்ட என் வேதனை கண்டு ரசித்தனர் அவர்கள் என்றைக்குமாய் என்தலை குனிந்து போனதாய்க் கனவு கண்டனர் . ஆனால் நான் வாழ்ந்தேன் வாழ்நாளெல்லாம் நானாக இருள் நிறைந்த பயங்கரங்களின் ஊடாக நான் வாழ்ந்தேன் இன்னும் வாழ்கிறேன் . 0

    எமது விடுதலை

    நாங்கள் எதைப் பெறுவோம் தோழர்களே நாங்கள் எதைப் பெறுவோம்? இன்பமும் இளமையும் இழந்து நின்றோம் ஏக்கமும் ஏழ்மையும் சுமந்து வந்தோம் நாங்கள் எதைப் பெறுவோம்? விடுதலை என்றீர் சுதந்திரம் என்றீர் எம் இனம் என்றீர் எம் மண் என்றீர் தேசங்கள் பலதிலும் விடுதலை வந்தது இன்று சுதந்திரம் கிடைத்தது எனினும் தேசங்கள் பலதிலும் மனிதர்கள் இன்னும் பிச்சைப் பாத்திரங்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். நாமும் பெறுவோமா தோழர்களே பிச்சைப் பாத்திரத்தோடு நாளை ஒரு விடுதலை? நாம் எல்லாம் இழந்தோம் எனினும் வேண்டவே வேண்டாம் எங்களில் சிலரது விடுதலை மட்டும்; விலங்கொடு கூடிய விடுதலை மட்டும் வேண்டவே வேண்டாம்! தோழர்களே விலங்குகளுக்கெல்லாம் விலங்கொன்றைச் செய்தபின் நாங்கள் பெறுவோம் விடுதலை ஒன்றை. 0

    வையகத்தை வெற்றி கொள்ள

    என் இனிய தோழிகளே இன்னுமா தலைவார கண்ணாடி தேடுகிறீர்? சேலைகளைச் சரிப்படுத்தியே வேளைகள் வீணாகின்றன. வேண்டாம் தோழிகளே வேண்டாம். காதலும் கானமும் எங்கள் தங்கையர் பெறுவதற்காய் எங்கள் கண்மையையும் இதழ்பூச்சையும் சிறிதுகாலம் தள்ளிவைப்போம். எங்கள் இளம் தோள்களில் கடமையின் சுமையினை ஏற்றிக் கொள்வோம். ஆடையின் மடிப்புகள் அழகாக இல்லை என்பதற்காக கண்ணீர் விட்ட நாட்களை மறப்போம். வெட்கம் கெட்ட அந்த நாட்களை மறந்தே விடுவோம். எங்கள் தோழிகள் பலரும் உலகில் இன்று கண்மையையும் இதழ்பூச்சையும் மறது போயினர். ஆனால் தமது மணிக்கரத்தைப் பிணைத்த விலங்கை அறுத்தனர். வாருங்கள் தோழிகளே நாங்களும் வழிசெய்வோம். மண்ணால் கோலமிட்டு அழித்தது போதும். எங்கள் செந்நீரில் கோலமிட்டு வாழ்க்கைக் கோலத்தை மாற்றி வரைவோம் வாருங்கள் தோழிகளே. சரிகைச் சேலைக்கும் கண்ணிறைந்த காதலர்க்கும் காத்திருந்த காலங்கள்! அந்த வெட்கம் கெட்ட காலத்தின் சுவடுகளை அழித்து விடுவோம். புதிய வாழ்வின் சுதந்திர கீதத்தை இசைத்துக் களிப்போம் வாருங்கள் தோழிகளே.

    0

    எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்

    புத்திசாலித்தனமான கடைசி மனிதனும் இறந்து கொண்டிருக்கின்றான்… கேள்வி கேட்பதற்கான எல்லா வாசலும் அறையப்பட்ட பின்னர் இருட்டின் உறுதியாக்கலில் உங்கள் குழந்தைகளை விட்டுச் செல்லுங்கள் அவர்களுக்கு பின்னால் எதுவுமே இல்லை சேலை கட்டிக் காப்பாற்றிய சில நாகரீகங்களைத் தவிர… வினாக்களுக்குரிய விடைகள் யாவும் அச்சடிக்கப்ட்டுள்ளன முடிவுகளின் அடிப்படையில் வெற்றி பெற்றவர் வரிசையில் யாரை இங்கே நிறுத்துதல் வேண்டும்? தேசத்தின் புத்திசாலிகள் யாவரும் சந்திக்குச் சந்தி தெருக்களில் காத்துள்ளனர் வினாக்களும் விடைகளும் முடிவுகளும் யாவருக்கும் முக்கியமற்றுப் போனது “மனிதர் பற்றிய மனிதத்தின் அடிப்படையளில் வாழ்வதை மறந்தோம்” என்பது இன்றைய எமது கடைசிப் பிரகடனமாயுள்ளது. கவிதை வெறிமுட்டி நான் கவிஞன் ஆகவில்லை என்னை வெறிமூட்ட இங்கு ஓராயிரம் சம்பவங்கள் அன்று நான் கவிதைகள் வரையவில்லை என்னிடம் இருந்தது கறுப்பு மையே இன்றோ சிவப்பு மையால் வரைகின்றேன் என் உள்ளத்தை உன் உள்ளத்தை தோல்வியுறா தர்மத்தின் இறுதித் தீர்ப்புகளை நானொரு பிறவிக் கவிஞன் அல்ல என்னை வெறிமூட்ட இங்கு ஓராயிரம் சம்பவங்கள் நானோ இருபதாம் நூற்றாண்டின் வசந்தத் தென்றல் அல்ல. ஓரு சிறிய குருவினுடையதைப் போன்ற அவர்களின் அழகிய காலையின் பாதைகளின் குறுக்காய் வீசப்படும் ஓவ்வொரு குருதி தோய்நத முகமற்ற மனித உடலும் உயிர் நிறைந்த அவர்களின் சிரிப்பின் மீதாய் உடைந்து விழும் மதிற்சுவர்களும் காரணமாய் எங்களுடைய சிறுவர்கள் சிறுவர்களாயில்லாது போயினர்.

    0

    எனது பரம்பரையம் நானும்

    ஒவ்வொருத்தனும் தனக்குரிய சவப்பெட்டியை சுமந்தபடியே தனது ஒவ்வொருவேளை உணவையும் உண்கிறான் தேவதூதனுக்கும் போதிப்பவனுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் உரிய இடமும் காலமும் போதனையும்கூட இல்லாதொழிக்கப்பட்டு விட்டது கூனல் விழுந்த எம் பொழுதுகளை நிமிர்த்ததக்க மகிழ்ச்சி எதுவும் எவரிடமும் இல்லை எல்லாவற்றையும் சகஜமாக்கிக் கொள்ளும் அசாதாரண முயற்சியில் தூங்கிக் கொண்டும் இறந்து கொண்டும் இருப்பவர்களிடையே நான் எனது நம்பிக்கைகளை தோற்றுக் கொண்டிருக்கிறேன்.

    0

    எனக்கு உண்மைகள் தெரியவில்லை

    பொய்களை கண்டுபிடிப்பதும் இந்த இருட்டில் இலகுவான காரியமில்லை… தெருவில் அவலமும் பதற்றமுமாய் நாய்கள் குலைக்கும் போது பூட்டப்பட்ட கதவுகளை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு எல்லோரும் தூங்கப்போகும் நேரத்தில் நான் நாளைக்கு தோன்றுகின்ற சூரியன் பற்றி எண்ண முடியாது இரவு எனக்கு முக்கியமானது நேற்றுப் போல் மீண்டும் ஒரு நண்பன் தொலைந்து போகக்கூடிய இந்த இருட்டு நிராகரிக்கப்பட முடியாதவள் நான். இனியும் என்ன தூக்கியயறியப்பட முடியாத கேள்வியாய் நான் பிரசன்னமாயுள்ளேன் என்னை அவமானங்களாலும் அநாகரிக வார்த்தைகளாலும் போர்த்துங்கள் ஆனால் உங்கள் எல்லோரினதும் கனவுகளின் மீது ஒரு அழுக்குக் குவியலாய் பளிச்சிடும் உங்கள் சப்பாத்துக்களை அசுத்தம் செய்கிறேன -சிவரமணி-

    Postad



    You must be logged in to post a comment Login