Recent Comments

    அடே, வாங்கடா டோய், ஓசில பத்து ஜன்னல் கொடுக்கிறாங்களாமடா!

    Windows10ஓசியில் கொடுத்தால் தமிழன் நஞ்சையும் குடிப்பான். இது ஜன்னல் தானே என்று சும்மாவா இருப்பான்? இருக்கிற ஜன்னலையே வீசிவிட்டு, ஓசி ஜன்னலை பெருமிதத்தோடு காசு கொடுத்துப் பொருத்துவான். அட, இதொன்றும் நீங்க நினைக்கிற ஜன்னல் இல்லீங்க. உங்க கணனியில் இருக்கும் விண்டோஸ் செயலியின் பத்தாம் தலைமுறை வந்திறங்கியிருக்கிறது. அதை மைக்ரோசொப்ட் நிறுவனம் இலவசமாய் கொடுக்கிறது. அதுவும் இப்போதும் Windows XP வைத்து இணையத்தில் முகப்புத்தக ஸ்டேட்டஸ் விடும் பழைய கணனிகளுக்கு அல்ல. (நல்ல காலம் இணையம் வந்து தொலைத்தது. இல்லாவிட்டால், இருபது வருடங்களுக்கு முன்னால் மூவாயிரம் டொலர் கொடுத்து வாங்கிய கணனிகள் எத்தனை இன்னமும் பழைய துவாய்களால் மூடப்பட்டு, தூசி படாமல் இருந்திருக்கும்?) ஏற்கனவே நீங்கள் வைத்திருக்கும் கணனிகளில் விண்டோஸ் 7 SP1 அல்லது 8.1 இருந்தால் மட்டுமே புதிய பத்தாம் தலைமுறையை நீங்கள் இலவசமாய் பெற முடியும். வெறும் விண்டோஸ் 7 அல்லது 8 உள்ளவர்கள் முதலில் 7 SP1, அல்லது 8.1 க்கு மாற்றிய பின்பே விண்டோஸ் 10 ஐ தரவிறக்கம் செய்ய முடியும். இந்த ஓசிச் சலுகை ஒரு வருடத்துக்கு மட்டுமே. அதற்குள் தரவிறக்கம் செய்யாவிட்டால், பின்னர் இந்த இலவசச் சலுகையைப் பெற முடியாது. உங்கள் கணனி தானாகவே மைக்ரோசொப்ட் நிறுவன கணனிகளுடன் கதைத்துப் பேசி, நம்ம தமிழ் அரசியல்வாதிகள் சர்வதேசத்துடன் பேசி உரிமை வாங்கித் தருவது போல, உங்கள் செயலியில் தரவிறக்கம் செய்ய முடியுமா என்பதை உங்கள் Taskbar ல் சொல்லும். இப்படி Windows Update மூலமாகவோ, இந்த இணைப்பில் விண்டோஸைப் பதிவிறக்கம் செய்தோ நீங்கள் உங்கள் Windows ஐ upgrade பண்ணலாம். அட, ஓசியில் தானே என்று அன்னதானத்தில் அடிபட்டது மாதிரி அவசரப்படாமல், முதலில் உங்கள் கணனியில் சேர்த்து வைத்திருக்கும் ஒன்றுகூடல் படங்கள், கடற்கரை உல்லாசம், வால்முருகன் திருத்தல யாத்திரை (வால்முருகன் இல்லீங்க, வல் மொரின்!) படங்கள் போன்றவற்றை இழந்து துயருறாமல், அழிபட்டால் மீளப் பெற முடியாமல் தவிக்கக் கூடிய எல்லாவற்றையும் வேறு பதிகருவிகளில் பிரதி செய்யுங்கள். சொல்ல முடியாது, புதிய செயலியை தரவிறக்கியதும் சில நேரம் உங்கள் கணனி செயற்பட மறுத்தால் அம்போ! புதிதாக நீங்கள் வாங்கும் கணனிகளில் அவர்கள் ஏற்கனவே விண்டோஸ் 10 தரவிறக்கித் தருவார்கள். இவ்வாறாக இலவசமாகப் பெற முடியாத புராதன கணனிகளில் முகப்புத்தக ஸ்டேட்டஸ் அப்டேட் செய்பவர்கள் தனியான விண்டோஸ் 10 பிரதிகளை விலைக்கும் வாங்கலாம். அவை விரைவில் விற்பனையாகும். சுவடி ஆடி 2015

    Postad



    You must be logged in to post a comment Login