Recent Comments

  கர்ப்பம் கலைக்க இயற்கை மருத்துவ வழிகள்

  Abortionமுன்பெல்லாம் அச்சில் வந்தால் அது உண்மையாகத்தான் இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை. பத்திரிகைகளுக்கும் பொறுப்புணர்வுள்ளவர்கள் ஆசிரியர்களாக இருந்தார்கள். அச்சுக்குப் போகுமுன்னால் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் என்று தீரவிசாரித்து உண்மையை எழுதினார்கள். பின்னர் தமிழர்கள் புலன் பெயர்ந்த பின்னால், கணனியில் தமிழில் எழுதத் தெரிந்தவர்கள் எல்லாம் ஊடகவியலாளர்கள் தான். அந்த ஊடகவியலாளர்களும் கனடாவில் பிரதமர் செத்தாலும், வன்னியில் இருந்து வந்தால் தான் அதைப் பிரசுரிப்பார்கள் என்று ஒரு காலம் இருந்தது. பத்திரிகை என்பது உண்மையைத் தேடுவதை விட்டு, பொய்யைப் பிரசாரம் செய்வது என்றாகி விட்டிருந்தது. இருந்தாலும் அச்சில் வந்ததை நம்ப நாங்கள் விரும்பினோம். நாங்கள் நம்ப விரும்பியதை அவர்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நம்பினோம். கடைசியில் என்ன நடந்தது என்பதைச் சொன்னால் சண்டைக்கு வருவீர்கள். நமக்கேன் வம்பு?

  இப்போது புதிதாக இணையமும் அதில் முகப்புத்தகமும் தோன்றியிருக்கிறது. யாரும் எவரும் இணையத்தில் எழுதலாம். அவர்களின் தகுதி பற்றி யாருக்கும் தெரியாது.  அரசியலை எழுத என்ன, நடத்தவே தகுதி தேவையில்லை என்று இங்கே தேர்தலில் நிற்கும் தமிழர்களுக்குத் தெரியும். எல்லாம் தெரிந்த தமிழர்களுக்கு எழுதவா தகுதி தேவை?

  இப்போது கண்டவர்கள், நிண்டவர்கள் எல்லாம் நினைத்ததை எழுதி விட்டுப் போக அதை எல்லோரும் வேதவாக்காக நம்பி மற்றவர்களுடன் பகிர்கிறார்கள்.

  Pearbudha1

  Ginsengசமீபத்தில் முகப்புத்தகப் பதிவு ஒன்றில்,  புத்தர் வடிவத்தில் ஒரு பழம் இருந்தது. எழுதியவரும் அது சீனாவைச் சேர்ந்த ஜின்செங் பழம் என்றும் இமயமலையில் வளரும் அந்த மரத்திற்கு குரங்கு ஒர்க்கிட் என்று பெயர் என்றும் அது 20 வருடங்களுக்கு ஒரு தடவை பழுக்கிறது என்றும் இறைவனின் அற்புதலீலைகளைப் படத்துடன் போட்டிருந்தார்.  (ஒக்கிட் மரத்தில் ஜின்செங் கிழங்குப் பழம். அதுவும் சீனாவில் உள்ள இமயமலையில்!) கண்டதும் கற்கும் நமக்கு, எங்கேயோ ஒரு தடவை சீன விவசாயி ஒருவர் பியர்ஸ் பழங்களுக்கு புத்தர் வடிவ பிளாஸ்டிக் அச்சுகளைக் PearBudhaகொழுவி  அந்த அச்சுகளுக்குள் வளர வைத்து, புத்தர் வடிவப் பழங்களை நல்ல விலைக்கு விற்கிறார் என்று வாசித்த ஞாபகம் வந்தது. சும்மா படத்தை வைத்தே இவர்கள் இந்தக் கதையை இழுத்து விட்டிருக்கிறார்கள். இணையத்தில் தேடினால், சீனாவில் அந்த அச்சுக்களை விற்கிறார்கள். நீங்களும் விரும்பினால், வாங்கி புத்தர் பெருமானின் மாம்பழங்களை... சே... ஜின்செங் பழங்களை, ஊரில் உள்ள காணிகளில் வளர்த்து உண்ணலாம். அப்புறமாய் உங்கள் கொல்லைப்புறத்தில் விகாரை கட்ட யாராவது வந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பில்லை.

  narilanarilatha

  நிர்வாணப்பெண் வடிவில் ஒரு பூ இமயமலைச்சாரலில் பூப்பதாக இன்னொரு பதிவு. (இமய மலைச்சாரலுக்கு அப்படி திறமை! இமய மலைச்சாரலில் தவம் புரியும் முனிபுங்குவர்களை மயக்க இறைவன் செய்யும் அற்புத லீலையோ தெரியாது!) அது இந்தியத் தொலைக் காட்சிகளிலும் செய்தியாக வந்த யூடியூப் உள்ளது. நாரிலதா என்ற இந்தப் பூவைப் பார்த்தால், நிர்வாணப் பெண் பல பூக்களில் தன் அந்தரங்கத்தைக் கைகளால் மறைத்து நிற்க, சில பூக்களில் கைகளைப் பக்கத்தில் வைத்தபடி! இன்னொரு படத்தில் பாதங்கள் குறுக்காக ஒரு பூவில். இன்னொரு படத்தில் பூவின் காம்பு இடுப்பு பகுதியில் ஒட்டியிருக்கிறது. இணையம் முழுவதும் தேடினால், ஒரு மூன்று நாலு படங்களை வைத்து, எத்தனையோ பேர் கயிறு திரித்திருக்கிறார்கள். அப்படி எந்தப் பூவோ, மரமோ இருப்பதாக உத்தியோகபூர்வமாக எந்தப் பதிவுகளும் இல்லை. யாரோ நிர்வாணப் பொம்மைகளைக் கட்டித் தூக்கி கயிறு திரித்திருக்கிறார்கள். அதை ஆளுக்காள் முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள்.Narilath1

  அப்புறம், திருநல்லாறு சனீஸ்வரன் ஆலயத்தின் மேல் செல்லும் உபகோள் மூன்று செக்கன் நிற்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் அதை ஆராய்ச்சி செய்து சனி பகவானின் திறமையைக் கண்டு வியந்ததாக இன்னொன்று! செக்கனுக்கு மூன்று கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றும் உபகோள் கோவிலுக்கு மேலே வந்து, திடீர் பிரேக் அடிக்க முடியாது. விஞ்ஞான விதிகளின்படி அவ்வாறு அசைவற்று நின்றால், புவியீர்ப்பினால் கீழே விழ வேண்டி வரும். நாசா இணையத்தளத்தில் இது பற்றி எந்தத் தகவலும் இல்லை. கதையைத் திரித்தவரோ, அதீத ஊதாக் கதிர்கள் பற்றி விஞ்ஞான விளக்கம் வேறு கொடுத்திருக்கிறார்.

  தில்லை நடராஜரின் பெருவிரலில் தான் முழு உலகின் காந்தப் புள்ளி இருப்பதாக பல கோடி டொலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகள் உலக நாடுகள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்ததாக இன்னொரு பதிவு. எந்த நாடுகள் எப்போது செய்த ஆராய்ச்சி என்று நாம் கேட்ட பின்னூட்டத்திற்கு இன்னமும் பதில் இல்லை. பூமியின் காந்தப்புலம் துருவம் நோக்கியது என்பது நாங்கள் படித்தது. துருவப் பகுதியில் நடராஜர் சிலை எதுவும் இல்லை. தில்லையில் தான் உள்ளார்.

  சுவிட்சலாந்தில் உள்ள CERN பௌதிக தத்துவவியல் ஆய்வு நிலையத்தில் நிலக் கீழ் சுற்றுப் பாதையில் அணுத் துகள்களை ஆராய்ச்சி செய்யப் போக, உலகம் அழிந்து விடும் என்ற பயத்தினால், நடராஜர் சிலையைக் கொண்டு போய் வைத்ததால் உலக அழிவு தடுக்கப்பட்டதாக இன்னொன்று. உண்மையில் இந்திய அரசுதான் அந்த சிலையை அன்பளிப்பாகக் கொடுத்ததாக செய்தி.

  கணவன் சாப்பிட்ட மீதி இலையில் மனைவி சாப்பிட வேண்டும் என்ற பண்பாடு பற்றி வியந்து இன்னொன்று. அப்போது தானாம், கணவனுக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்பது மனைவிக்குத் தெரியுமாம். அதை விடப் பெரிய கதை... கணவனின் எச்சலில் உள்ள டி.என்.ஏ மனைவியின் வயிற்றுக்குப் போய் ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்குமாம்.

  பெண்கள் காலுக்கு மேல் கால் போட்டால், கர்ப்பப்பையில் பாதிப்பாம். அப்போ மற்ற நாடுகளில் உள்ள பெண்களுக்கு கர்ப்பப் பை பாதிப்போ என்ற கேள்விக்கு  இன்னமும் பதில் இல்லை.

  இப்படித் தான் 2012ல் உலகம் அழியப் போகிறது என்று பல இணையத்தள நிபுணர்கள் பல்வேறு கதைகளைக் கட்டி விட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் மாயர்களின் கண்டுபிடிப்புகளுக்கு தமிழர்கள் தான் மூலம் என்று பல தமிழ் 'அறிஞர்கள்' 'ஆய்வு' செய்து கொண்டிருந்தார்கள். முக்காலம் உணர்ந்த தீர்க்கதரிசனத் தமிழர்களின் இவ்வாறான அறிவின் உயர்ச்சியினால் தான் தமிழன் அழிந்து போக, உலகம் அழியாமல் போனதோ என்னவோ? இப்போதெல்லாம் இந்துமதத்தினதும், தமிழர்களினதும் பெருமையை எடுத்து இயம்புவதற்காக (தமிழேன்டா!) பலர் புதுப்புதுக் கதைகளோடு தோன்றுகிறார்கள்.

  இது போதாதென்று, சித்தவைத்தியர்கள் பலர் இணையத்தை ஆக்கிரமித்திருக்கிறார்கள். ஏழு நாளில் தொப்பையைக் குறைப்பது முதல் விந்துக்களின் உற்பத்தியைப் பெருக்க நெருஞ்சி முள்ளைப் பாலில் காய்ச்சிக் குடிப்பது வரைக்கும் பல்வேறு மூலிகை மருத்துவங்கள் இணையத்தில் உலாவுகின்றன. மீனும் தயிரும் சேர்ந்து சாப்பிட்டால், தோல் வெளிறும் நோய் வரும் என்று ஒரு பதிவு.  பெண்களை உச்சமடையச் செய்ய வைக்கும் வழிகள் பற்றி பாலியல் நிபுணர்கள் வேறு ஒரு புறத்தில். கறுப்பு நிறமானவர்கள் வெள்ளையாவதற்கும் மொட்டையில் மயிர் முளைக்கவும் தான் சித்தவைத்தியம் சொல்கிறார்களே என்று பார்த்தால் இப்போது, கர்ப்பம் கலைக்க இயற்கை மருத்துவ வழிகள் என்று தொடங்கியிருக்கிறார்கள்.

  இவற்றை நம்புவதற்கு முதலில் இவை உண்மையாக இருக்குமா? இதை எழுதியவர் என்ன தகுதியுடையவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். விசயம் தெரியாமல் இந்த மருந்துகளை உண்ணப்போய் உயிர் ஆபத்துக்களைத் தேடிக் கொள்ளாதீர்கள்.

  அதிலும் இங்கே எங்கள் பிள்ளைகள் குடித்து விட்டு ஆட்டம் போடுவதாக வேறு செய்திகள் வருகின்றன. அவர்களுக்கு உதவட்டுமே என்ற பெருந்தன்மை இந்தச் இணையச்'சுத்தர்'களுக்குத் தோன்றியிருக்கக் கூடும். வீட்டுக்காரருக்குத் தெரியக் கூடாதே என்று அந்தப் பிள்ளைகள் இந்தக் கட்டுக்கதை மருத்துவங்களை நம்பினால் என்ன நடக்கும் என்பதைச் சொல்லி வையுங்கள்.

  தங்கள் இணையத் தளத்தைப் பலர் பார்க்க வேண்டும், அதை வைத்து விளம்பரங்களைச் சேர்த்து பணம் சம்பாதிப்பது தவிர வேறு எந்த நோக்கமும் இவர்களுக்கு இல்லை.இணையத்தில் வந்ததை கொப்பி, பேஸ்ட் பண்ணும் நம் பத்திரிகையாளர்களும் இதைக் கண்டால் தங்கள் பத்திரிகைகளுக்கு மவுசு கிடைக்கும் என்று இவற்றை மறுபிரசுரம் செய்வார்கள்.

  தீவுப் பகுதியில் கொடூரமாய் உயிரிழந்த பிள்ளையின் படங்களை வியாபாரம் செய்து முடிந்து, யாவாரம் தேக்கம் அடையும் போது, இவர்கள் மீண்டும்  கிளம்புவார்கள். இன்னும் கொஞ்ச நாளில் பிள்ளைப்பேறுக்கும், ஆண்மைக் குறைவுக்கும் சித்த மருந்து லேகியங்களை இணையத்தில் வியாபாரம் பண்ணவும் இவர்கள் தொடங்குவார்கள்.

  சுவடியில் வரும் மருத்துவக் குறிப்புகள் உலகப் புகழ் பெற்ற மாயோ மருத்துவ மனை போன்ற நம்பகமான இடங்களிலிருந்தே பெறப்படுகின்றன. சமையல் குறிப்புகளாக இருந்தாலும், உணவுப் பொருட்கள் பற்றிய தகவல்கள் என்றாலும் சரியான ஆய்வுகளால் உறுதி செய்த இடங்களிலிருந்தே பெறப்படுகின்றன. எனவே சும்மா பேஸ்புக்கில் கண்டோம் என்று கட்டுக் கதைகளை நம்புவதையோ, 'பெண்களுக்குத் தொடப் பிடித்தமான இடங்களை' வாசித்து விட்டு, பஸ்ஸில் செருப்படி வாங்குவதையோ தவிருங்கள்.

  பத்திரிகைகளில் வந்ததை நம்பி எங்கள் இனம் அழிந்தது உங்களுக்குத் தெரியும். சும்மா கண்டவர்கள் எழுதும் முகப்புத்தகத்தை நம்பி உயிரை இழக்காதீர்கள்.

  அதென்ன,  வீடியோவைக் காட்டினால் சீ... சீ.. உது கொம்பியூட்டர் கிராபிக்ஸ் என்று சொல்லி நம்புகிறீர்கள் இல்லை. முன்பின் தெரியாதவர்கள் இணையத்தில் எழுதுவதை மட்டும் எப்படி நம்புகிறீர்களோ?

  சுவடி சித்திரை 2015

  Save

  You must be logged in to post a comment Login