Recent Comments

  வித்தியா மீண்டும் பிறப்பாளா?

  குஞ்சன்

  நான் மரணதண்டனைகளுக்கு எதிர்ப்பானவன். நிச்சயமாக குற்றவாளிகளுக்கு ஆதரவு காட்டுவது எனது போக்கு அல்ல. கொடூரமான செயல்களைச் செய்வோருக்கும் மரணம் தண்டனையாக இருக்க முடியாது. இந்த நீதிசார் மரணங்கள் உலகின் கொடூரங்களை ஒழிப்பனவல்ல. மரணதண்டனைக்கு எதிராக எழுதும் கணங்களில் குற்றவாளிகளின் முகங்களுக்கு அப்பால் மரணமடைந்தவர்களது சிதைக்கப்பட்ட முகங்கள் எனக்கு முன்  தெரிகின்றன. இந்த முகங்களுக்காக  இரங்காமல் இருக்க முடியுமா? இந்த முகங்கள் கொலைகளாலும், வன்முறைகளாலும் புதைக்கப்பட வேண்டியனவா? நிச்சயமாக இந்த முகங்களுக்காக இரங்கவேண்டியது மனித தத்துவமாக இருத்தல் அவசியமானது.

  யாழ்ப்பாணத்தில் சில ஆண்டுகளின் முன்னால் கெடுக்கப்பட்டும், கொலைசெய்யப்பட்டவருமான இளம் மாணவி வித்யாவுக்கான இரக்கங்கள் எமக்குள் எப்போதும் இருக்கும். இவரது குடும்பம் நீள் துயரை வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று யாழ்ப்பாண மூன்று நீதிபதிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனையை வழங்கியுள்ளமை நிறையத் தமிழ் மக்களால் பாராட்டப்படுகின்றது. முகப் புத்தகம் இந்தத் தண்டனையின் பாராட்டுப் புத்தகமாக வந்ததை ஆதரிக்க முடியுமா? நீதி அதிகாரத்தின் சர்வாதிகாரப்போக்கே இந்த மரண தண்டனைகள் எனச் சொல்வது தவறா? இந்தக் கொலைத் தண்டனையை மறுதலித்து வேறு தண்டனைகள் இல்லையா? நீண்ட கால சிறைத் தண்டனைகள், குற்றவாளிகளின் மனங்களை இவர்கள் நடத்திய குற்றங்களுக்கு எதிராகத் திருப்பாதா? நிச்சயமாக மரண தண்டனைகள் உடல் ஒழிப்பே தவிர குற்றங்களின் ஒழிப்பல்ல.

  உலகின் பல நாடுகள் மரணதண்டனையை மனித உரிமையின் எதிர்ப்பாகக் கொண்டுள்ளன. இந்தத் தண்டனையால் குற்றவாளிகள் அல்ல, அரசியலது மாற்றுக் கருத்துக் கொண்டோர்களும் கொல்லப்படுகின்றனர். அமெரிக்காவின் சிறைகளுக்குள் நிறையக் குற்றம் செய்யாதவர்களும் மரணதண்டனையைக் காத்திருக்கின்றார்கள் என்பது கொடூரமான விஷயம். அண்மையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் அமெரிக்க சிறைகளுள் கைதிகள் அடிமைகளாக நடத்தப்படுகின்றார்கள் என்பதை அறிந்தேன். ஆம்! இந்த அமெரிக்க நாட்டின், ஒவ்வொரு அரசுகளிலும் மரண தண்டனைகள் நடத்தப்பட்டாலும் இங்கு குற்றவாளிகள் குறைக்கின்றார்களா? இந்த அரசு வெளிநாடுகளுக்கான ஆயுத விற்பனையால் குற்றவாளி இல்லையா?  கொலைகளுக்காக ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்க அரசின் பிரதிநிதிகளைத் தண்டிப்பதற்கு நீதிபதிகள் உள்ளனரா? மரண தண்டனையைத் தூக்கிப் பிடிக்கும் அமெரிக்க நாட்டில் அனைத்துப் பிரஜைகளும் துப்பாக்கிகளை உணவுப் பொருள்கள் போல வாங்கும் உரிமை இருப்பது சரியா?

  மரண தண்டனையை எதிர்க்கும்போது வித்யா எனும் மாணவியின் இழப்பினைச் செய்தவர்களை வெளியால் விடுதல் என்பது எனது எழுத்தின் இலக்கல்ல, இவர்கள் நீள் சிறைகளில் இருந்தால், பின்பு வரும் இவர்களது வாக்கு மூலங்கள் இத்தகைய கொடுமைகளை எதிர்காலத்தில்  அழிக்க உதவலாம் என்பது என் நினைப்பு. எமது தமிழ் அரசியலில், அனைத்து நிறங்களையும் காட்டிய இயக்கங்கள் மரண தண்டனைகளைச் செய்தனர்.  இவைகளைச் செய்தோர் இப்போது சொகுசான அரசியல் கதிரைகளில் இல்லையா? எமது இயக்கங்கள் எப்போதுமே மரணங்களை விரும்பவில்லையா?  முன்பு இயக்கங்கள் எமது “நீதி மன்றங்களாக” இருந்தன, இப்போது நீதிபதிகள் “மரணம்” என்பது ஓர் உடல் அழிப்பே என்பதைச் சொல்லாமல், நீதிகளையா வழங்குகின்றார்கள்? ஆம், அநீதிகளே.

  எமது மக்களின் பலர் மனித இழப்புகளைத் தமது நலன்களுக்காக விரும்புகின்றனர். இந்த விருப்பு ஏனைய நாடுகளிலும் உள்ளன. துருக்கி அரசு ஜனநாயகத்துக்கு எதிர்ப்பானது. இது அண்மையில் மரணதண்டனையை வலியுறுத்தியபோது, மக்களில் பலர் அதனை ஆதரித்தனர். இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் சிறைகளில் உள்ளனர். அரசின் எதிர்ப்பாளர்களுக்கு இந்தக் கொடிய தண்டனையைக் காட்டுவதே இந்த நாடு. நிறையைத் துருக்கிய மக்களது மரணதண்டனை ரசிப்பு வேறு நாடுகளிலும் உள்ளன.

  தண்டனை அறிவிக்கப்பட்டபின் வித்தியாவின்  அம்மாவினது முதலாவது குறிப்பின் தொடக்கத்தில் அவரது நீள் துயரை விளங்குகின்றோம். பின் அவரது கவலை கலந்த சொல்கள் தண்டனைக்கு ஓர் பெரிய புகழைச் சொல்லாமல், சூழலுக்கு ஒப்ப வாழ்த்தி, இந்தத் தண்டனைகள் வித்தியாவின் மீள் பிறப்பைக் கொடுவர முடியாது என்கின்றன. ஆம்! மீள் பிறப்பைத் தண்டனைகள் கொண்டுவராது என்பதே அம்மாவின் மறைமுகச் செய்தி.  நீதிபதிகளது தண்டனை அம்மாவுக்கு ஒரு மன ஆறுதலைத் தந்தாலும், வித்தியாவின் முகத்தை மீளக் காணமுடியாது என்பதை அவரது கண்ணீர் வாக்குமூலம் காட்டுகின்றது.

  மரணதண்டனை மீதான முழு எதிர்ப்புகளும் அம்மாவின் கலையாக் கண்ணீருக்கு அஞ்சலி செலுத்தவேண்டும். “என்ரை பிள்ளை வரப்போறதில்ல” என, தீர்ப்பின் பின்னர்  அவர் சொல்லும் கண்ணீர் மல்கிய கருத்துகளை, குற்றவாளிகள் எனக் கருதப்படுவர்களுக்கு அவர் எறியும் ஈட்டிகள் எனக் கருதலாம். வித்தியாவின் இழப்பை நிறைய மீடியாக்கள் தமது லாபத்துக்காகப் பயன்படுத்தியதா? ஆம்! இந்தப் பயன்படுத்தல்கள் சில காத்திரமான செய்திகளையும், வீடியோக்களையும் தந்துள்ளன. ஆனால்! தண்டனையின் பின்னர், இந்த மீடியாக்கள் மரணதண்டையைப் போற்றுகின்றன, அவைகள் குற்றங்களைத் தீர்க்காதன என்பதைச் சொல்லவில்லை.  இந்தப் போற்றல்கள் மூன்று நீதிபதிகளுக்கும் விளங்குமா? இந்த நீதிபதிகள் இலங்கையைச் சேர்ந்தாலும், இவர்கள் தமிழ் நீதிபதிகளே. வித்தியாவின் கொடூரமான அழிவின் நோக்கை அறிய ஓர் சிங்கள நீதிபதியையும் இணைத்திருக்கலாமே?  நீதிபதி இளஞ்செழியன் தன் உடல் பாதுகாப்புக்கு ஓர் சிங்களவரைக் கொண்டிருந்து, பின்பு இவர் தாக்குதலுக்கு உள்ளாகியவேளையில், சிங்களப் பாதுகாப்பாளர் கொலைசெய்யப்பட்டார். இதனால் நீதிபதி அழும் செய்திகள் பல பத்திரிகைகளில் புகழப்பட்டன. இந்தத் தாக்குதல் கொடூரமானது. ஏன் இந்தத் தாக்குதல் நடந்தது? ஏன் நீதிபதியைக் கொல்லும் எண்ணம் ஒருவருக்கு வந்தது?  இவர் வித்தியாவின் மரணத்தைத் தீவிரமாக ஆய்வு செய்வார் என்பதனாலா?  ஓர் அரசியல்வாதியும், ஓர் சட்டவாதியும் சுவிஸ் குமாரைக் காப்பாற்றும் எண்ணங்களின் காரணங்கள் எவை? எனும் கேள்விகள் மரணதண்டனைகளை மனித நீதிக்காக அழிக்கவேண்டும் என நினைக்கும் எனக்குள் வருகின்றன.

  நீதிபதி இளம்செழியன் பேசுபவைகளைப் பல தடவைகள் கேட்டுள்ளேன். ஆம்! எமக்குள் நடுக்கத்தைத் தரும் பேச்சுகள். இவரது அனைத்து மொழிகளிலும் ஓர் அடக்குமுறைக் கலாசாரம் இருப்பதை அவதானிக்கலாம். சில வேளைகளில் இவர் தன்னை நீதிபதி என்று கருதாமல் “கடவுள்” எனக் கருதுகின்றார் என்று நினைக்கைக் கூடும் என்பது என் நினைப்பு. இவர் இலங்கையின் நீதிபதியா அல்லது யாழ்ப்பாணத்தின் நீதிபதியா? எமது இலங்கைத் தீவு இரு கலாசாரங்களில் வாழ்வது. இந்த இரு கலாச்சாரங்களின் வாழ்வுகள் ஒரே போக்கினைக் கொண்டு இருப்பதல்ல. ஜூலை மாதத்தில் “"குடாநாட்டு பெண்கள் இரவு 12 மணிக்கு யாழ் நகரில் தாம் சுதந்திரமாக திரிகிறோம் என்ற குரல் எழுப்பும் போதே , நான் யாழ் மாவட்டத்தை விட்டு வெளியேறுவேன்" என எமது நீதிபதி கதறியது பெண்கள் உரிமைக்கு எதிரானது.  எமது பொருதாரக் கலாசாரத்தில் இரவு வேலைகள் பெண்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளாதா?  சில பெண் பொலிசுகள், இரவு 12 மணிக்குப் பின்னால் சேவை செய்ய முடியாதா?

  நீதிபதி இளம்செழியனுக்கு சட்டங்கள் தெரிந்திருக்கும், ஆனால் இவர் மூளை ஓர் அதிகாரப் போக்கில் தூங்குகின்றது. “நான் படித்தது பரியோவான் கல்லூரியில். ஒழுங்குமுறையில் வழிநடத்தினார்கள் “ என இவர் படித்த கல்லூரி மீது இவர்  பேசுவது நிச்சயமாக அமைதி நிலையில் இல்லை,  ஓர் வெறித்துவம் இவர் படிப்புக்குள்ளும், பதவிக்குள்ளும் உள்ளது என்பதையே காட்டுகின்றது. எனது புத்திஜீவித நினைப்பின் நோக்கில், இளம்செழியன் ஓர் கல்வி நோக்கில் பேசுதலைக் கற்கவேண்டும் என நினைக்கின்றேன். நீதிபதியினது மொழிகள் சர்வாதிகாரத்தனம் கொள்ளாமல் கல்வித்தனம் கொண்டிருத்தல் அவரது கலாசாரத்தைக் காட்டும்.  எனது இந்த மொழிகள் வித்தியாவின் உடலை யாழ் நிலத்திலிருந்து அழித்தவர்களுக்காக அல்ல. அழித்தோர், நிச்சயமாக வெளியில் அல்ல, அவர்கள் உள்ளே இருக்கவேண்டும் என்பது எனது தியானம்.

  வித்தியாவைப் பூதம் கெடுத்ததல்ல, பூதம் கொலை செய்ததும் இல்லை. இந்தக் கெடுத்தலையும், கொலையையும் நடத்தியோர் நிச்சயமாக மனித மிருகங்களே. இந்த மிருகங்களை அழித்தலில் அல்ல நீதி தங்கியுள்ளது, இவர்களைச் சிறைகளில் வாழவைப்பதிலும், பின்பு பேசவைப்பதிலும் கவனங்கள் எடுப்பதே நீதிக் கலாசாரத்தின் நிறமாக இருக்கவேண்டும். சில வேளைகளில் எமது 3 நீதிபதிகளினது நீதிக்கலாசாரங்கள் வடக்கு மக்களது குமுறல்களில் நடக்கின்றதா? நிச்சயமாக இந்தக் குமுறல்கள் ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளும் இடம்பெறும். இந்தக் குமுறல்கள் நிச்சயமாக ஓர் பின் பாதுகாப்பினைத் தேடுவன. ஆனால், மரணதண்டனைகளை நாம் இன்று ஆதரித்தால், எமது நாடு கொடூரமான சுடலையாகத்தான் போகலாம். நல்லவர்களும், பொய்க் காரணிகளால் கொல்லப்படுதல் இலகுவாக்கப்படலாம். எமக்குள் இருக்கவேண்டிய வித்யாவுக்கான  காணிக்கை மரணதண்டனையின் எதிர்ப்பாக இருக்கவேண்டும்.

  ஏன் இந்த எதிர்ப்பு?  தமிழர் கலாசாரம் சமூக அநீதிகளை தனது கலாசாரமாகக் கொண்டதே. இந்த கலாசாரத்தில் இப்போது சீதன வெறிகள் கொடூரமாக உள்ளன. இந்த சீதன வெறியர்களுக்கு எமது நீதிபதிகள் ஒருபோதும் தண்டனைகளைக் கொடுத்ததில்லை.  எமது சீதன வெறிகள் நிறையப் பெண்களை உயிர்போகும் தடவையிலும் கன்னிகளாக வைத்திருப்பது கொடுமைகள் என எங்களது நீதிபதிகளுக்குத் தெரியாதா? சீதனம் வாங்கும் வெறியர்களுக்கு எமது நீதிபதிகள் தண்டனைகளைக் கொடுத்தனரா?

  எமது இலங்கைத் தமிழர் நிலங்களில் சாதி வெறிகள் பல கோணங்களிலும் உள்ளன. இந்த வெறிகளைத் தூண்டுபவர்களுக்காக எமது தமிழ் நீதிபதிகள் எந்தத் தண்டனைகளைக் கொண்டுள்ளனர்? ஒவ்வொருநாளும் சாதி வெறித்துவம் தமிழ் பேசும் நிலங்களில் நடக்கின்றது. இந்த வெறித்துவத்துக்கு நீதிபதி இளம்செழியன் எதிரானவரா?

  சில தினங்களின் முன்னர் இந்தக் குறிப்பை எழுதிக்கொண்டு இருக்கும் வேளையில் இலங்கைத் தமிழர் அரசியல் போராளியாக இருந்த அசோக்கினது (Ashok-yogan Kannamuthu), மரணதண்டனை மீதான குறிப்புகளை முகப்புத்தகத்தில் வாசித்தேன். இந்தக் குறிப்பு மரணதண்டனைக்கு எதிரானதால் மீள் வாசிப்புக்கு நன்றியுடன் இங்கு தரப்படுகின்றது:

  “இன்று, இந்த குறிப்பை எழுதக் கூடாது.

  எனினும் எழுதுகிறேன். Ashok-yogan Kannamuthu

  நண்பர்கள் மன்னிக்கவேண்டும்...

  வித்தியாவுக்கு இழைக்கப்பட்ட கொடுரமான, மனித சமூகத்தையே தலைகுனிய வைக்கும் குற்றத்திற்கான தண்டவை வழங்கப்பட்டுள்ளது.

  இந்த தண்டனைகளோ, நிவாரணங்களோ, ஆறுதல் வார்த்தைகளோ வித்தியாவை பறிகொடுத்த குடும்பத்தினருக்கோ, உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ எத்தகைய தீர்வையும் தந்து விடப்போவதில்லை.

  எனினும் , கொடியவர்கள் தண்டணையை அனுபவித்தே தீர வெண்டும்.

  தண்டனையின் காலமும் -நீட்சியும் அது கொடுக்கும் உறுத்தல்களும், குற்றஉணர்வுகளுமே இக் கொடியவர்களுக்கான பெரும் தண்டனை.

  மரண தண்டனை உயிரை எடுக்குமே அன்றி, அதற்கு அப்பால் அது குற்றம் கொண்ட சமூகத்தை எந்தவகையிலும் திருத்திய வரலாற்று சான்றுகள் நம்மிடம் இல்லை.

  அவ்வாறாயின் மரணதண்டனை மூலம் நாம் அடையும் சமூகத் தீர்வுதான் என்ன?

  எமது உறவிற்கு இழைக்கப்பட்ட கொடூரத்திற்கு, அதனால் நாம் அடைந்த பெரும் துயருக்கு, வடிகாலாக, ஆறுதலாக, எமது மனம் மரணதண்டனையை வரவேற்கலாம்.

  ஆனால், நிதானத்தோடும் மனித உயிர்களின் மேலான இருத்தலுக்காவும் நாம் சிறிது நேரம் அறிவுத்தளம்கொண்டு சிந்திப்போமானால் மரதண்டனை எந்தத் தீர்வினையும் தருவதில்லை என்பதை உணரமுடியும்.

  சட்டமானது ஒருவரின் வாழ்வுரிமைக்கு உத்தரவாதத்தை வழங்கவேண்டுமேயன்றி, மாறாக எந்தச் சூழலிலும் உயிரைப்பறிப்பதற்கு துணை நிற்க முடியாது. இது மனித உரிமைகளுக்கு முரணாணது.

  இதனாலேயே அனைத்து மரண தண்டனைகளையும், படுகொலைகளையும் நான் எதிர்த்தும், கண்டித்தும் வந்துள்ளேன். இதன் அடிப்படையிலேயே என் விமர்சனங்களும், கருத்துக்களும் அமையப்பெறுகின்றன.

  நாம் மரணதண்டனைகளை ஏற்று வரவேற்போமானால் அது தரும் கொடிய சமூக தீங்குகளையும் விளைவுகளையும் எண்ணி பார்க்கவேண்டும்.

  கொடியவர்களுக்காக பயன்படுத்தப்படும் மரணதண்டனைச் சட்டம் , நாளை அதிகாரத்திற்கு எதிரான நல்லவர்களையும், வல்லவர்களையும் பழி வாங்கும். அப்போது நாம் என்ன செய்வோம்.?

  தூக்குத் தண்டனையின் துர்நாற்றம் மனித கண்ணியத்திற்கே தலைகுனிவு, மரணதண்டனை இல்லாதொழிக்கப்படவேண்டும், எவ்வடிவிலும் அது கூடாது என்ற குரல் உலகமெங்கும் ஒலித்துவரும் நேரத்தில் நாம் மரண தண்டனையை

  எவ்வாறு ஆதரிக்க முடியும்.

  நண்பர்களே சற்று சிந்திப்போமே.

  (நான் எழுதும் இக் குறிப்புக்கள், நண்பர்களை ஆத்திரம் அடைய கவலை கொள்ள செய்யலாம். எனினும், நிதானமான யோசிப்போம்.)”

  மரண தண்டனையின் பின்னர் வித்தியாவின் அம்மா கூறிய வரிகள் முக்கியமானவை. “இவைக்கு நீதி குடுத்தாப்போல என்ரை பிள்ளை வரப்போறதில்லை.” இந்த வரிகள் கண்ணீரில் தோய்ந்தவை. இந்த வரிகளை நீதியினதும், மரணதண்டனையினதும் எதிர்ப்பு நோக்காக எடுத்துக் கொள்ளலாம்.

  Save Save

  You must be logged in to post a comment Login