Recent Comments

    உழவர் பெருவிழா

    ஒவ்வொரு நவம்பரும் ரொறன்ரோவில் நடக்கும் பெரும் நிகழ்ச்சி ஒன்று தமிழர்களின் ரேடார்களுக்கு தப்பி விடுகிறது. கொத்துரொட்டியும் சூடிதார் மலிவு விற்பனையும் இல்லாததும் காரணமாக இருக்கலாம்.

    வசந்தமும் கோடையும் ஓய்வின்றி உழைத்துக் களைத்த விவசாயிகளின் Royal Winter Fair பெருவிழா  CNE எனப்படும்  Canadian National Exhibition ல் ஒவ்வொரு நவம்பரும் நடைபெறும்.

    இன்று நேற்றல்ல,  புலன் பெயர்ந்த தமிழர் வந்தேறி, ஸ்காபரோவை தமது தாயகமாக ஈழப்பிரகடனம் செய்வதற்கு முன்னால், ஒரு 95 வருடங்களுக்கு முன்னர் தொடங்கி நடக்கும் வருடாந்த விழா.

    அத்தோடு குதிரைகளின் காட்சிகளும் ஒன்றாகவே நிகழும்.

    இம்முறை இந்த யாழ்ப்பாணத் தமிழனும் சாப்பாட்டுப் பொட்டலமும் தேநீரும் கட்டிக் கொண்டு, எங்காவது ஆற்றங்கரை, குளக்கரையில் உட்கார்ந்து பொட்டலத்தைப் பிரித்து உண்ணலாம் என்ற எண்ணத்தில் சுட்டுத் தள்ள கமெரா இத்யாதிகளையும் கட்டிக் கொண்டு போய்ச் சேர்ந்தால்...

    ஸ்காபரோவில் திரும்பிய இடமெல்லாம் தரிசனம் தரும் தமிழர்கள் மருந்துக்கு கூட இல்லை. விழாவின் உள்ளே நான் இடம் தேடி உதவி கேட்ட ஒரு செக்கியூரிட்டி கார்ட்டை விட!

    இது ஒரு நாள் முழுவதுமே பார்த்து முடியாதளவு விடயங்களைக் கொண்டிருக்கிறது. குதிரைகளின் கண்காட்சி மிகவும் பிரசித்தி பெற்றது. நடக்கும் பல்வேறு உலகப் பந்தயங்களுக்காக பல இடங்களிலும் இருந்து வந்து கலந்து கொள்வார்கள். குதிரைப் பாய்ச்சல்கள், குதிரை வண்டில் கண்காட்சிகள் என பல போட்டிகள். இந்நிகழ்ச்சிகள் இலவசமாகவும், விசேட நுழைவுக் கட்டணத்துடனும் நடைபெறுகின்றன.

    பின்னால் உள்ள குதிரை லாயத்திற்குப் போனால் சுவாரஸ்யமாக இருக்கும். வெறுமனே உடலை வைத்திருக்கக் கூடிய அளவிலான அடைப்புகளுக்குள் நின்ற நிலையிலேயே குதிரைகள் அசையாமல் நிற்கும். கொஞ்சம் பெரிய அடைப்புகளுக்குள் குதிரைகளைக் கொண்டு வந்த விவசாயிகள் இரவு தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், மடுத்திருவிழாவுக்குப் போய் கொட்டில் போட்டு தங்கிய நினைவு வந்தது.

    ஒரு ஓரமாய் குதிரைகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள்.

    இன்னொரு புறமாய் ஆடு, மாடு, பன்றிகள்.

    இவை போட்டிகளில் கலந்து கொள்ளவும், விற்பனைக்காகவும் கொண்டு வரப்படுவன. இவையும் சதுர வடிவக் கூடுகளுக்குள். ஒரு புறத்தில் போட்டிக்காக இயந்திரம் மூலம் காற்று அடித்து துப்புரவு செய்து கொண்டிருக்க... அந்த மணத்திற்கும் புழுக்கைகள், சாணிகளிற்கு மத்தியிலும் தங்கியிருந்த விவசாயிகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

    வகை, வகையான மாடுகள், ஆடுகள் பரிசில் பெற்றனவும், போட்டிக்காய் காத்திருப்பவையுமாக!

    மிகப் பெரிய சைஸில் வளர்க்கப்பட்ட மரக்கறிகளுக்கான போட்டியில் பரிசு பெற்றனவும் காட்சியில் இருந்தன.

    இதை விட, குழந்தைகளுக்கான காட்சிகள் நிறைய!

    நாய்களின் வேடிக்கைகள், முயல்களின் பாய்ச்சல்கள், வேட்டையாடும் பறவைகள் என காட்சிகளும், பிள்ளைகள் தொட்டுப் பார்க்க வசதிகளும் உண்டு.

    குடும்பத்தோடு போய் குழந்தைகளோடு குதூகலிக்கலாம்.

    நவம்பர் 12ம் திகதி வரை காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை!

    $16 Youth (4-17)   $20 Senior (65+)   $27.50 Adult (18-64)   $60 Family Pass (2 Adults / 2 Youth) Senior Mon,Tue,Wed Special $17.00 Adults After 4pm Mon-Thursday $16.00

    http://www.royalfair.org/index.html

             
    Save Save Save

    Postad



    You must be logged in to post a comment Login