Recent Comments

  Mission: Chinese Hot Sour Soup

  பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி

  சாப்பிடும் சாப்பாட்டை உடனடியாகவே படம் எடுத்து பேஸ்புக், இன்ஸ்ராகிராமில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதன் சமூகப் பயன்பாடு, உளநிறைவு, மனநிலப் பின்னணி பற்றி எல்லாம் நமக்குத் தெரியாது. சாப்பாடு பெரும்பாலும் பசியெடுக்கும் போது தான் என்ற நிலையில், இதற்குள் இதைப் படம் எடுத்து நண்பர்களின் வயிற்றெரிச்சலைச் சம்பாதிக்க வேண்டுமாக்கும் என்ற நினைப்பில், இந்த சாப்பாட்டு செல்பி விவகாரம் நமக்குத் சரிப்பட்டு வருவதேயில்லை.

  அதிலும் தங்கள் சமையலை படம் பிடித்து பகிர்வதன் நோக்கம், சமையல் திறனை வெளிக்காட்டுவதா, இல்லை, மற்றவர்களை வாயூற வைப்பதா என்பது இன்னமும் புரியவில்லை.

  சாப்பாட்டைப் படம் பிடிப்பதே ஒரு தனிக்கலை. Food Photography. அதற்காக சாயங்களும் எண்ணெய்களும் லைட்டிங்குகளும் என மெருகுபடுத்த, சாப்பிடும் சாப்பாட்டுக்கும் படத்தில் காண்பதற்கும் பெருவேறுபாடுகள் உண்டு.

  சும்மா செல்போனில் செல்பி எடுப்பது போல, சாப்பாட்டை படம் எடுத்து பகிர்வது உண்மையில் doesn't do any justice to சாப்பாடு!

  புதுவருசப் பலகாரப் பெருமைகள் பேஸ்புக்கில் உலவி, அடிக்கடி கண்ணில் படுவதால் 'ஆணியை விட்டான் சிங்கன்' என்று நமது சமையல் திறனை காட்டி, பேஸ்புக் நண்பர்களின் லைக் அங்கீகாரத்தைப் பெற்றால், ஏதாவது ஒரு காலத்தில் தமிழ்ச் சாப்பாட்டுக் கடையில் கைக்காசுக்கு வேலை தேட வேண்டிய நிலை எற்பட்டால், அதை நற்சான்றிதழாகக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை வேறு!

  வெளிநாட்டு பிரமச்சர்ய வாழ்க்கை சமையலை ஒரு necessity நிலைக்கு கொண்டு வந்ததால், களவு மாதிரி, சமையலையும் கற்று மறக்க வேண்டிய நிலை!

  கலியாணம் ஆன புதிதில் விழுந்து விழுந்து சமைச்சுப் போட்ட வீட்டுக்காரி இப்போது 'உங்க கிடக்கிறதைப் போட்டுச் சாப்பிடு, பிறகு பாப்பம்' என்று பணிவன்போடு அறிவுறுத்தும் போது, தன் தள்ளாத வயதிலும் சிரமம் பாராமல் சமைச்சுப் போட்ட ஆச்சியின் சமையலை விமர்சித்த போது, 'உங்களுக்கும் வருவாளவை தானேடா' என்று வழங்கிய ஆசி வந்து, கூழுக்குள் கிடந்து தொண்டைக்குள் சில்மிஷம் செய்யும் மீன் முள் போல, குத்தித் தொலைக்கும்.

  ஆனால், சமையல் என்பது ஏதோ மூளைச் சந்திர சிகிச்சை, செவ்வாய்க்கிரக ஏவுகணை டிசைன் மாதிரி, சீன் போடும் போது சிரிப்பாக வரும்.

  சமைக்கத் தொடங்கினால், எல்லாமே கழுவி கிளீனாக ஆரம்பித்து, முடிந்த பின் கிளீனாக கழுவித் துடைக்கும் ரகம் நான். இறைச்சியை வெட்டி அது அவிந்து போவதற்குள், பிரிட்ஜ்க்குள் கவனிப்பாரற்றுக் கிடக்கும் மரக்கறிகளை கறியாக்கி, ஒரு தக்காளிச் சம்பலும் போடுவது நம்ம ஸ்டைல்.

  அவ்வப்போது ஆங்காங்கே கிடைக்கும் சமையல் குறிப்புகளைக் கொண்டு புதிய பரிசோதனைகளுக்கும் குறைவிருக்காது.

  முன்பு என்னோடு வேலை செய்த சீனாக்காரனின் குறிப்பின்படி, Chicken fried rice செய்து அது அமோக வெற்றி. அந்த சோற்றை விட, அதற்குப் போடும் தனிமிளகாய்ச் சம்பல் சுப்பர் ஹிட்.

  சமையல்காரனின் வெற்றி, (சமையல்காரி என்று சொன்னால், பெண்ணியவாதிகள் தொல்லை வேறு!) சாப்பாட்டு மேசையில் வைத்து 'கத்தரிக்காய் கறி நல்லாய் இருக்குதோ?' என்று கேட்டு இக்கட்டில் மாட்டி 'ஓம்' என்று தலையாட்ட வைத்து, 'இந்தாங்கோ, அப்ப இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்கோ'என்று அள்ளிப் போடுவதில் இல்லை. தானாகவே கேளாமல் அள்ளிப் போட்டு சாப்பிட வைப்பது தான் என்றால், அடிக்கடி அந்த வெற்றி கிடைக்கும்.

  ஆனால் மகன் சாப்பிடும் போது 'நல்லாயிருக்கிறது' என்று சொன்னால் பொறுக்காத வீட்டுக்காரி, 'அவன் உன்ரை மனம் நோகக் கூடாது' என்று சொல்றான் என்று தேற்றிக் கொள்வதுண்டு, தன்னை!

  போதாக் குறைக்கு அவ்வப்போது நரி வெருட்டி, பாண் வெதுப்பி (வன்னித் தமிழ்!), கேக் உபகரணங்கள் என்று வாங்கி வந்து, பிரான்சில் இருக்கும் அக்காவிடம் அடிச்சுக் கேட்ட recipe யுடன் கேக் செய்து, அந்த ஆசைகளும் அறுபது நாட்களுடன் முடிந்து, தொல்லை தாங்காத வீட்டுக்காரி நிலக்கீழ் அறையில் கொண்டு போய் எறிந்ததை தேடிப் பிடிக்கும் 'பஞ்சியில்' அவை தலைமறைவாகும்.

  இந்த கிறிஸ்மஸ் புதுவருடத்திற்கும் ஏதாவது வாங்க வேண்டுமே என்று தொடங்கி, மரக்கறிகள், பழங்களை சீவி காய வைக்கும் கருவியும் (Dehydrator), எண்ணெய் விடாமல் பொரிக்கும் கருவியும் (Air Fryer), அநியாயத்திற்கும் கடைக்கு காசு கொடுக்காமல், இந்த மறத் தமிழன் இணையத்தில் மலிவாகத் தேடி, கிஜிஜியில் வாங்கி வந்திருக்கிறான்.

  இன்றைக்கும் வாங்கி வைத்த சூப் கோழி பிரீசருக்குள் இத்தனை நாளாச்சு, வளர்ந்து முட்டையிட்டு விடுமோ என்று அதற்கு வழி பண்ண, Chinese hot sour soup செய்ய ஆரம்பித்தால்...

  எல்லாமே சரி வந்து thickener க்கான சோளம் மா பழுதடைந்ததால் கூழ் தடிப்பாக இல்லாது போனாலும்,

  Operation Success! Mission Accomplished!

  இருந்தாலும் என்னுடைய வெற்றிக்கான உரிமை கோரலை,

  புலிகளின் 'வெற்றிகரமான பின்வாங்கல்' தாக்குதல் உரிமை கோரல் மாதிரி,

  Take it with a grain of salt!

  Save Save

  You must be logged in to post a comment Login