Recent Comments

  மொடல் அழகி Madam Butterfly

   

  தனக்கு பேஸ்புக்கில் கிடைத்த பதினைந்து நிமிடப் புகழை அறிந்தோ என்னவோ, இந்த வண்ணத்துப் பூச்சி இன்றைக்கும் வீட்டு முன் பூந்தோட்டத்தில்... எங்கோ போய் வந்து காரை நிறுத்தி உள்ளே செல்ல முன்... கண்ணில் பட்டது.

  பாய்ந்து சென்று கமெராவை எடுத்து வந்து சுட... ஒரே ஒரு போஸ் தந்து விட்டுப் பறந்து விட்டது!

  சீனியாஸ் என்றழைக்கப்படும் Zinniaவில் உட்கார்ந்து அழகு காட்டி, கண்ணுக்கு எட்டி, கமெராவுக்குள் எட்டாமல், தலை மறைவாகி விட்டது.

  * * *

  இந்த வகையான வண்ணத்துப் பூச்சிகள் Monarch Butterfly என்றழைக்கப்படுவன. வண்ணத்துப் பூச்சிகளில் மிகவும் அழகானவையாக, அவற்றின் அரசனாக கருதப்படுவன. இதனால் தான் இந்த Monarch பெயர். இவை வட அமெரிக்காவை இயற்கை இருப்பிடமாய் கொண்டன.

  இவை நவம்பர் மாத்தில், குளிர் காலத்தைக் கழிக்க, கனடா, அமெரிக்காவிலிருந்து மெக்சிக்கோசிற்கு சுமார் ஐயாயிரம் கிலோ மீட்டர் வரை பறந்து செல்கின்றன. தமிழர்கள் கியூபாவிற்கு சுற்றுலா போவது போல, இவையும் மெக்சிக்கோவில் உள்ள காடுகளில் குளிர் காலத்தை கழிக்கின்றன. குளிர் முடிந்து வசந்த காலம் தொடங்க, மீண்டும் இவை வட அமெரிக்காவை நோக்கிப் பறந்து வருகின்றன. ஆனால் சென்ற வண்ணத்துப் பூச்சிகள் திரும்புவதில்லை. வரும் வழியிலேயே இவற்றின் இரண்டாம், மூன்றாம், நான்காம் தலைமுறைகள் பிறந்து, அவற்றின் வாழ்வுக் காலம் 2 முதல் 6 வாரம் வரை மட்டுமே, நான்காம் தலைமுறையே திரும்பவும் வட அமெரிக்காவுக்கு வந்து சேர்கின்றன. வட அமெரிக்காவில் வந்தவையும் சில தலைமுறைகள் கடந்து, திரும்பவும் மெக்சிக்கோவுக்கான யாத்திரை ஆரம்பமாகும்.

  முன் அனுபவம் இல்லாத ஒவ்வொரு தலைமுறையும் எப்படி இவ்வளவு தூரம் அதே காலங்களில், அதே பாதையில் கடந்து, அதே இடங்களுக்குப் போய் வருகின்றன என்பது இயற்கையின் மர்மங்களில் ஒன்று! சில நேரங்களில் தங்கள் பரம்பரையினர் தங்கிய அதே மரங்களிலேயே அவற்றின் வழித் தோன்றல்கள் தங்குமாம்!

  * * *

  இப்படி வந்து சேர்ந்து தான் நம் கமெராவுக்குள் அகப்பட்டு, ஆசை காட்டி மோசம் பண்ணியது.

  சரி, வெயில் இறங்கிய பின்னால் இன்றைக்கு உள்ளி நாட்டுவோம் என்று வெளியே போக, இன்னொரு வண்ணத்துப் பூச்சி முன்தோட்டப் பூக்களின் நடுவில்! சரி, அதை அதைப் படம் பிடிப்போம் என்று படம் பிடிக்கத் தொடங்க, நம்ம மொடல் அழகி வந்து சேர்ந்தாள், திரும்பவும்! இரண்டு பேருமே போஸ் கொடுத்த பின்னால், புதியவள் கோபத்திலோ என்னவோ, பறந்து விட்டாள்! நம்மவளோ, விதம் விதமான போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள். காற்றில் கொப்புகள் அசைந்தாலும், தான் பறந்து விடாமல், வளைந்து நெளிந்து!

  அவ்வப்போது பறந்து சென்றாலும், திரும்பவும் அதே இடத்திற்கு வந்தும், வேறு வேறு பூக்களின் மேல் சாய்ந்தும், சரிந்தும்! கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல், சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தேன்.

  * * *

  பிரபலமான ஒப்பெரா நாடகங்களில் ஒன்று, Madam Butterfly!

  1898ல் வெளிவந்த சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாடகம் அது! அமெரிக்க கடற்படை வீரன் ஒருவன் ஜப்பானில் தற்காலிகமாக, வசதிக்காக பதினைந்து வயதான ஒரு துணையைத் தேடிக் கொள்கிறான். அவளோ அந்த உறவை உண்மையான காதலாக, நிரந்தரமாக நினைத்துக் கொள்கிறாள். அவன் அவளைக் கைவிட்டு அமெரிக்கா செல்ல, அவளுக்கு குழந்தை பிறக்கிறது. அவளின் வேலைக்காரியோ அவன் வரமாட்டான் என்று சொன்னாலும், அவள் அதை நம்பாமல் காத்துக் கொண்டே இருக்கிறாள். அவளுக்கு திருமணம் செய்து வைத்த தரகரும் அவன் வர மாட்டான், நீ இன்னொருவனை திருமணம் செய்து கொள் என்று வற்புறுத்துகிறான். அவளோ அந்த திருமணத்திற்கு மறுத்து, தொடர்ந்தும் காத்திருக்கிறாள். அவனோ அமெரிக்காவில் ஒருத்தியை திருமணம் செய்து, அந்தக் குழந்தையை கொண்டு செல்ல வருகிறான். ஏமாந்து போன அவள், தன் தந்தையின் வாளினால் தன்னை வெட்டித் தற்கொலை செய்து கொள்கிறாள்.

  இது 1900ம் ஆண்டு மேடையேற்றப்பட்டது. இது பின்னர் படங்களாகக் கூட வெளிவந்தது.

  * * *

  போதும் போதும் என்னும் அளவுக்கு போஸ்கள் தந்த வண்ணத்துப் பூச்சி, பறந்து பின்புறத் தோட்டப் பக்கமாய் பறந்தது!

  சரி, போய் உள்ளியை நடுவோம் என்று போனால், செவ்வந்திப் பூ ஒன்றில் சாய்ந்தபடி அதுவும், இன்னொரு வெள்ளை வண்ணத்துப் பூச்சியும்!

  இன்றைக்கு இது போதும் என்ற நினைப்பில் உள்ளி நாட்டல் தொடர்ந்தது!

  இருந்தாலும், இன்னொரு தடவை இப்படியான மொடல் அழகிகளுக்காக நம் கமெரா தயாராகவே இருக்கிறது, தேசிக்காய்த் தலையரின் இடுப்புத் துப்பாக்கி போல!

     

  Save Save Save Save Save Save Save

  You must be logged in to post a comment Login