Recent Comments

    சயிக்கிள்களின் மரணம்: கருணாவுக்கு அஞ்சலிகள்

         க.கலாமோகன்

    மிகவும் ஓர் ஆழமான துயரைத் தருகின்றது நான் நேற்று அறிந்த செய்தி. புகலிடத்தில் தனது காத்திரமான ஓவியப் பண்புகளைக் காட்டிய கருணாவினது இழப்பு. இந்த ஓவியருடன் எனக்குத் தொடர்பு இல்லை. இவரது ஓவியங்களுடன் மட்டும்தான் தொடர்பு. இவைகளுடன் நான் பேசியுள்ளேன். தனது இதயத்தில் ஓர் வித்துவத்தைக் கொண்டுள்ளார் கருணா என்பதுதான் எனது நினைப்பு. இவரது இழப்பு உலகின் ஓவியக் கலாசாரத்தின் இழப்புமாகும்.

    எனக்கு ஓவியத்தின் மூலங்கள் அதிகமாகத் தெரியாது போயினும் எழுத்தின் கலாசாரத்துக்கு மேலாக உள்ளது ஓவியக் கலாசாரம் என நினைக்கின்றேன். எழுத்து வாசிப்பில் நிச்சயமாக எமக்கு ஓவியங்கள் தெரியும், ஆனால் ஓவியங்களின் மீதான பார்வைக்குள் நிறைய வாசிப்புகள் உள்ளன. பல சிந்தனைக் குடங்களைத் தாங்கியனவே ஓவிய வித்து என்பது எனது கருத்து.

    அனைத்து நிலங்களிலும் ஓவியர்கள் தமது வீரியத்தைக் காட்டுகின்றனர். சொல்ல முடியாத செய்திகளையும் தமது கீறல்களால் காட்டுவது இவர்களது இயல்பாக உள்ளது. நிறைய ஓவியங்கள் மனித விடுதலைகளை தேடியதால் பல ஓவியர்கள் தமது நாடுகளில் கொல்லப்பட்டுள்ளனர், வேறு சிலர் நாட்டினைப் பிரிந்துள்ளனர். இலங்கையினது மோசமான மனித உரிமைகள் மறுப்பின் அரசியல்கள் நிறையத் தமிழ்க் கலைஞர்களை வெளியே துரத்தியுள்ளன. இவர்களில் ஒருவர்தான் கருணா. ஓவியர் அ. மார்க்கு படைத்த வித்தகர்களில் இவரும் ஒருவர்.

    இணையத்தில் இவரது ஓவியங்களைக் காணும்போது எனக்குள் தோன்றுவது ஆழமான தரிசிப்பே. பல தடவைகள் இவரது விரல்கள் பேணிக் காக்கப்படவேண்டும் என்று துதித்துள்ளேன். இந்த விரல்கள்தாம் எமது கண்களுக்கு ஓர் வாசிப்பைத் தந்தன. இவரது அனைத்துப் படைப்புகளிலும் தூங்கின எனது விழிகள். பல விதமான வாசிப்புகளைத் தனது தூரிகையால் வழங்கிய கருணாவின் இழப்பு பலரைக் கவலைக் கிணற்றில் போட்டுள்ளன.

    கருணா தனது விரல்களால் படைத்த சயிக்கிள்கள் மிகவும் புதுமையானவை. ஓர் ஆழமான நவீனத்துவம் இவரது சயிக்கிள்களில் உள்ளன. ஆம், இவைகள் கீறல்கள் மட்டும்தாம். நாம் ஏறிய சயிக்கிள்கள் இவரது கீறல்களில் வேறு அழகமைப்பில் சயிக்கிள்கள் ஆகின்றன. இந்த சயிக்கிள்களின் கீறல் உத்தி மேன்மையானது. ஓர் படம் தருபவர் அல்லர் கருணா, இவர் எமக்கு ஓவியம் தருபவர்.

    சில வேளைகளில் நான் சில ஒட்டு ஓவியங்களை எனது போக்கில் செய்வேன். இந்த ஓவியங்கள் பாரிஸ் எக்ஸில் இதழின் முன் பக்கத்தில் வந்தபோது இந்தப் பக்கவடிவைச் செய்தவர் கருணா. இவர் மீதான நிறையக் குறிப்புகளை நான் வாசித்ததில்லை. தன் மீது பிரபலங்களை நாடாமல் தனது ஓவியத் தோட்டத்துள் இருந்தவர் என நான் நினைக்கின்றேன்.

    பலரை நாம் ரசிக்கின்றோம், ஆனால் பார்க்காமல் உள்ளோம். பார்ப்பது இவர்களது படைப்புகளையே. இந்தப் படைப்புகளில் நாம் புகழலாம் அல்லது புகலாதும் இருக்கலாம். ரசிப்புக்கு விதிகளைப் போடுதலின் வெறுப்பில் வாழும் என்னுள் கருணாவின் படைப்புகள் தந்த தரிசனத்திற்குஉரியதாகஇருந்தன.

    ஆம்! இவரது விரல்கள் நிலங்களைப் பாதுகாப்பன. இலங்கைத் தமிழ் நிலங்கள் இவரது இதயத்துள். ஓர் உலக ரசிப்பின் தேவையைத் தூண்டுவன இவரது கீறல்கள். இவர் மீது எழுதும் என் முன் தோன்றுவது சயிக்கிள்கள்தான்.

    நான் இப்போதும் சிலவேலைகளில் எனது சயிக்கிளில் பாரிஸ் வீதிகளில். இந்தக் கணங்களில் என் முன் ஓடுவன கருணாவின் சயிக்கிள்களே. இவைகள் நிச்சயமாக எமது இருப்புகளின் முத்திரைகளே.

    அண்மையில் இவரது முகப் புத்தகத்தில் இவரை கவிஞராகவும் கண்டேன். வாசித்த பதிவு இது:

    காத்திருக்கிறது...

    30 June 2012

    மழை எப்போதும் பெய்யலாம்

    இலைகளின் அழுகையை மீறி

    காற்று, குதிரையாய்க் கனைத்தது

    சோம்பேறிகளும் முட்டாள்களும்கூட

    சாளரங்களைத் திறந்து

    மரணத்திற்காகக் காத்திருப்பதில்லை.

    பெருவெளியில் அலைந்து கொண்டிருந்த

    மரணம்

    ஊஞ்சலில் வந்தமர்ந்தது.

    தெளிவான அடையாளங்களுடன்

    எப்போதும் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதால்

    அறிமுகம் தேவையில்லை.

    மனிதனே! நீ மண்ணாய் இருக்கின்றாய்

    மண்ணுக்கே திரும்புவாய்

    மறவாதேயென

    நசரேத்தில் இருந்து எழுந்த பாடலைக் கேட்டு

    பெரு மூச்செறிந்தது

    கண்ணாடிக் குவளையில் திராட்சைப்

    பழ இரசத்தை அவரிடம் கேட்டுப் பருகியது

    கல்லறைக்கு அவரை அழைத்துப்போகமுன்

    அவரது மூக்குக் கண்ணாடியைக் கழற்றி

    மேசையில் இருந்த மோட்ச பாதையின்

    படிகளில் வைத்தது

    அடைமழையில் நனைந்து கொண்டு

    சூன்யத்தின் வெளிக்கு

    அவரை அழைத்துப் போனது

    .......

    நாங்கள் நெடுநேரம் அழுதோம்

    அது எமக்காகவும் காத்திருக்கிறது

    பிம்பவெளிகளில் இருள் கனமாகி

    நிழல்கள் விலகி நகர

    நெளியும் அசைவில் நமக்கான

    காத்திருப்புத் தெரிகிறது.

    - கருணா

    (எனது மாமா இறந்தபோது எழுதியது. மோட்ச பாதை என்பது கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்யும் போது வாசிக்கும் ஒரு நூல். எனது மாமனார் எப்போதும் அதை வாசிப்பது வழக்கம். நசரேத் இயேசுவின் ஊர். மாமனார் யார் வந்தாலும் வைன் வழங்கும் பழக்கமுள்ளவர். )

    ஆம், கருணாவுக்கு அஞ்சலிகள்.

    (“கருணா வின்சென்ட், கனடாவில் வாழும் கனதியான ஓவியர். வடிவத்துவத்துள் புது வீச்சுகளைக் கொடுக்கும் பலம் இவருக்கு உள்ளது. புகலிட நாட்டின் சிறப்பான ஓவியரான கே.கே.ராஜா போல இவரும் அ.மார்க்கின் மாணவர். கருணாவின் ஓவியங்களினது கனதியாக நான் கருதுவது இவர் தனது வடிவங்களுள் சில ஈட்டிகளை மறைத்திருப்பதுதான்.” அன்பு லிங்கன், தாயகம் கனடா, 2017)

    Postad



    You must be logged in to post a comment Login