Recent Comments

    கூடு விட்டுப் போன ஆவி!

    சில வாரங்களுக்கு முன்...

    வீட்டுப் பின்புறமாய் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்க...

    முன்வீட்டு பங்களாதேஷிக்காரரும் பக்கத்து வீட்டு இந்தியத்தமிழ்ப் பையனும் உரையாடும் சத்தம் கேட்டது.

    நீ ஆவியை நேரில் பார்த்திருக்கிறாயா?

    பங்களாதேஷிக்காரர் கிறிஸ்தவர். தமிழ்ப்பையன் வெள்ளையினப் பெண்ணை திருமணம் செய்தவன்.

    பேய், ஆவிக் கதை கேட்டால் இரவில் நடமாடப் பயம், ஊரில்!

    இங்கே எங்கே போனாலும் மின்வெளிச்சம். இதனால் பேய்கள் நடமாட்டம் வீட்டுக்குள் மட்டும் தான்!

    ஆனால் முன் வீட்டுக்காரர் வீட்டில் ஆவி நடமாடுவதற்கான சாத்தியங்கள் உண்டு. அது பற்றி பின்னால்...!

    அவர் தன் வீட்டில் கண்ட ஆவி பற்றித் தான் பேசுகிறாரோ என்ற எண்ணத்தில் 'எதைக் கண்டாய்?' என்று கேட்டுக் கொண்டே வர, தமிழ்ப் பையன் 'இங்கே வா, இவன் ஆவியைக் கண்டது பற்றிச் சொல்கிறான்!' என்று விளக்கம் தந்தான்.

    பங்களாதேஷிக்காரர் அடிக்கடி மீன் பிடிக்கப் போகின்றவர். எனக்கும் அவ்வப்போது மீன் கிடைக்கும். நீண்ட நாட்களுக்கு பின் மீன் சினை எனப்படும் முட்டைகளை அவரின் புண்ணியத்தில் சாப்பிட முடிந்தது.

    நான் நேற்று ராத்திரி ஆவியை நேரில் கண்டேன் என்று பங்களாதேஷிக்காரர் பயமுறுத்தினார்.

    வழமை போல, இவரும் சில நண்பர்களும் தொலைவில் மீன் பிடிக்கப் போயிருக்கிறார்கள்.

    இருட்டில், நெற்றியில் மின்கல லைட்டுகளை பொருத்தியபடி தூண்டில் போட்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    திடீரென்று பார்க்க, இவரது நண்பருக்குப் பின்னால், ஒரு பெண் தலையை மூடியபடி நின்று கொண்டிருந்தாள்.

    இவரும் தன்னையறியாமல் நண்பரிடம் 'அப்பால் விலகு! அந்தப் பெண் போக வேண்டும்' என்றிருக்கிறார்.

    நண்பர்களும் திரும்பிப் பார்த்து விலக, அந்தப் பெண் நேராக நடந்து தண்ணீருக்குள் போய் மறைந்திருக்கிறாள்.

    தங்களுக்கு அதைப் படம் எடுக்கும் எண்ணம் வரவில்லை என்பது தான் அவரது மனக்குறை.

    பயத்தில் எல்லாவற்றையும் கட்டிக் கொண்டு உடனேயே புறப்பட்டிருக்கிறார்கள்.

    தங்களுடைய வழிகாட்டும் ஜிபிஎஸ் சுமார் ஒரு மணி நேரத்திற்கு வேலை செய்யவே இல்லையாம்.

    வீட்டில் வந்து முதல் வேலையாக, இணையத்தில் தேடிப் பார்க்க...

    அந்தப் பகுதியில் ஒரு பெண் நீரணை ஒன்றில் தற்கொலை செய்து கொண்டதாகவும், அந்தப் பெண்ணின் ஆவி அலைவதாகவும் பலர் பதிவிட்டிருக்கிறார்கள்.

    ஊரில் கதை கேட்டிருந்தால், மயிர் சிலிர்த்திருக்கும். இங்கே அந்தப் பிரச்சனை குறைவு.

    இருந்தாலும், தனிப்பனையடிகளில் திருத்தலம் கொண்டெழுந்தருளும் கொத்தியாத்தைகள் கரியரில் உமலுககுள் கட்டிய கொய் மீன்களோடு வந்து சேர்வதாக, சிறுவயதில் கிழவிகளின் கதைகளைக் கேட்ட பயம் இன்றைக்கும் இருக்கிறது.

    பங்களாதேஷிக்காரர் அடுத்த முறை மீன் தந்தால் என்ன செய்வது என்ற யோசனை தான் தற்போது என்னை ஆட்டிப்படைக்கும் பயம்!

    Postad



    You must be logged in to post a comment Login