Recent Comments

    நீரோடும் மண்ணில் எங்கும் வேரோடும்!

    Neer

    ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து! (6)

    பூந்தோட்டக் காவல்காரனுக்கு சனி பகவான் கடாட்சம் அள்ளிப் பொழிந்தாலும், வருண பகவான் கொஞ்ச நாளாய் கடைக்கண் பார்த்து அருள் மழை பொழிய மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தார். மழை வரும் வரைக்கும், முந்திய மழையில் சேமித்த நீர் கை கொடுத்தது. ஊரில் புகையிலைக் கன்றுகளுக்கு அக்காமார் நாரி முறிய, குடங்களில் தண்ணீர் வார்த்த போது, விடுப்புப் பார்த்த பழி... இப்போது துவைக்கும் திரவ சோப் வரும் கொள்கலங்களை றிசைக்கிள் பண்ணி நீர் வார்ப்பு. அதுவே ஒரு உடற்பயிற்சி தானே என்ற நியாயப்படுத்தலோடு! அந்த நீர்க் கையிருப்பும் முடிந்தது! ஒவ்வொரு நாளும் வேலை விட்டு வரும் போது, மரக்கறிக் கன்றுகளுக்கு நீர் பாய்ச்சலாம் என்று வந்திறங்க, அந்தி மழை பொழியும் என வானிலை அவதானிப்பு கட்டியம் கூறும். அட, பிறகெதற்கு அனாவசியமான நீர் விரயம் என்று நீரைச் சேமிக்கப் போனால்... வருண பகவான் வேறு யாருக்காவது அருள் மழை பொழியப் போயிருப்பார். இப்படியே நாலைந்து நாளாய் வருண பகவானும் நானும் தாச்சி விளையாடிக் கொண்டிருக்க... மே மாதம் முடிவாகியும் மே மாத சுவடி வெளி வரவில்லை. ஒரே நாளில் அதைத் தயார் பண்ணி, வினியோகத்திற்கு தயார் பண்ண... வருண பகவான் அனுக்கிரகம் தற்போதைக்கு கிடைக்காது என்பதால், சுவடி வாசகர்கள் ஒருநாள் பொறுக்கட்டுமே என்று பாய்ந்தோடி வந்து நீர் பாய்ச்சியாயிற்று. உள்ளிப் பாத்திகள் வரண்டு போய் பாளம் பாளமாய் வெடித்திருக்க... வீசிய விதைகள் முளையோடு வான் பார்த்திருக்க... இரண்டு மணி நேரம் குழாய் நீரால் அபிஷேகம் செய்து முடித்தாயிற்று. அடுத்த நாட்களில் சுவடி வினியோகம் இனிதே நிறைவுற்றது. கன்றுகள் வாங்க வருவோர் 'குறைக்க மாட்டியளோ?' என்ற கேள்வி கேட்காதபடிக்கு சுவடி விளம்பரத்தில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. காவல்காரன் வான் பார்த்ததற்கு காரணம் இருக்கிறது.  ஒரு புறத்தில் மழை பெய்தாலும் நன்மை. மறுபுறத்தில் பெய்யாவிட்டாலும் நன்மை. மழை பெய்தால் கன்றுகளுக்கு குளிர்ச்சி. ஆனால் களைகளும் குடி கொண்ட காடாச்சே! அவையும் கன்றுகளை விட வேகமாய் வளரும். சில நாட்கள் பொறுத்தால் முழுத் தோட்டத்தையும் மூடி விடலாம். நிலம் முழுமையாய் ஈரமானால், களைகளை வேரோடு இழுக்கலாம். பெய்யாவிட்டால், களைகளின் வளர்ச்சி மட்டுப்படுத்தபட்டிருக்கும். கடைசியாக வேறு வழியின்றி நேற்று முன்தினம் வருண பகவான் கறுப்புக் கொடியோடு சரணடைந்தார். சரணடைந்தவரை என்ன மண்டையிலா போட முடியும்? வாத்யார் மாதிரி... கெத்தவன் தான்! கேவதமானவன் இல்லே! வரவேற்று கொள்கலங்களில் நிரப்ப வேண்டியது தான். மழை ஈரத்தோடு, வேலியோரமாய் உட்கார்ந்து வேரோடு பிடுங்க முயன்றாலும், சில களைகளை அகற்றவே முடியாது... கொத்திப் பிரட்டினால் ஒழிய! எப்போ வாங்கி நட்டு, வளரவும் மாட்டேன், அழியவும் மாட்டேன் என்று வீரசபதம் எடுத்த எகிப்திய வெங்காயம் எனப்படும் நடக்கும் வெங்காயம் (பூவில் காய்த்து, சரிந்து விழுந்து முளைந்துப் பரவுவதால் வந்த பெயர்) புற்களுக்கு நடுவே நிற்க... ஒருவாறாக களைகளைப் போட்டாயிற்று. இனி மண்ணைப் புரட்டி, புதைத்து, 'வீணான களைகள் வீழ்வதுமில்லை. வீறுகொள் களைகள் இறப்பதுமில்லை' என்று கவிதை எழுத வேண்டியது தான் பாக்கி. மறுபுறத்தில் தோட்டத்திற்குள் எல்லை ஆக்கிரமிப்புச் செய்ய முயன்ற சில ஸ்ட்ரோபெரிகளும் காய்களோடு களையெடுக்கப்பட்டன. உள்ளிகள் கொத்திப் புரட்டப்பட்டன. களையெடுப்பு என்று வந்தால் தேசியத் தலைவரின் நேர்வழி நடக்க வேண்டியது தான். பயன்தருமே என்பதற்காக இவற்றை விட்டு வைத்தால், நாளைக்கு களைகளால் நமக்கு ஆபத்து. போராட்டத்தில் இதெல்லாம் சகஜமான Collateral damage! பயப்பட வேண்டாம். தோட்டக் களைகள் வரைக்கும் தான் அவரது கொள்கை. அதற்கு அப்பால் போனால், எத்தனையோ பேரைப் பலி கொடுத்த பின்னால், வெள்ளைக்கொடியோடு சரணடைய வேண்டி வரலாம் என்பது நமக்குத் தெரியாதா? இந்த களைகளுக்குள் களையாக ஒராக் கீரை வளர்ந்திருக்கிறது. அறுவடை செய்து ஒரு தடவை சமைத்தாயிற்று. ஆங்காங்கே சில லெட்டியூஸ் சலாட் இலைகள். அவையும் அறுவடைக்காக பொதுமன்னிப்போடு வளர்கின்றன. (கெத்தவன் தான்! கேவதமானவன் இல்லே!) இரண்டு நாள் கொட்டிய மழையில் நிலம் நனைந்து போயிருக்கிறது. இனி குந்துபலகையை வைத்து உட்கார்ந்து ஒருபுறமாய் களை பிடுங்க ஆரம்பிக்க வேண்டியதுதான். மழை பொழிந்தால்... ஆறு கரை புரண்டோடும் போது கமக்காரனுக்கு வரும் பூரிப்பு போல... மழைத் தண்ணீர் சேகரிக்கும் கலங்கள் எல்லாம் நிறைந்த பூரிப்பு. இனி ஒரு வாரத்திற்கு நீர் பற்றிய கவலை இல்லை. நீரோடும் மண்ணில் எங்கும் வேரோடும். ஊரோடு சேர்ந்துண்ணத் தயாராக இம்முறை தோட்டம் தயாராகிறது. (சில குடும்பங்களுக்கு வாராந்த சப்ளை உண்டு. சப்ளைக்கு பிரதியுபகாரமாக வாரத்தில் ஒரு நாள் மரக்கறிச் சமையல் தரும்படி கேட்பதாய் உத்தேசம்!)

    You must be logged in to post a comment Login