Recent Comments

    போதையில் காரோட்டும் பார்த்தசாரதிகள்

    thayagam featured-drinkdriveகாரோட்டும் பார்த்தசாரதிகள் பாதுகாப்பாய் வீடு சேர வழிமுறைகள், விதிமுறைகளைத் தந்திருந்தோம். மதுபோதையில் வாகனம் செலுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி பலரும் அறிந்திருந்தாலும், சிலர் உயிராபத்துக்களை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்கிறார்கள். ரொறன்ரோவில் ஒரு சிங்களக் குடும்ப உறுப்பினர்கள் மதுபோதையில் வாகனம் செலுத்திய ஒருவரால் மோதுண்டு பலியாகி வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பத்திரிகை வினியோகிக்கும் தமிழ்க் குடும்ப உறுப்பினர் சமீபத்தில் குடிபோதைச் சாரதி ஒருவரால் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். தமிழ் வழக்கறிஞர் ஒருவர் ஏற்கனவே போதையில் வாகனம் செலுத்தி, சாரதிப்பத்திரம் பறித்த நிலையிலும் மீண்டும் போதையில் வாகனம் செலுத்தி பொலிசாரிடம் அகப்பட்டுள்ளார். நீண்ட நாட்களுக்கு முன்னர், நீதிமன்றம் சென்ற நம்மவர்கள் அங்கே பிரபல தமிழ் சமூக சேவகியைக் கண்டு, அவர் யாருக்கோ மொழி பெயர்ப்புச் செய்ய வந்திருப்பதாக நினைத்து விசாரித்தபோது, அவரும் குடித்து விட்டு வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் அகப்பட்டு விசாரணைக்கு வந்திருப்பது தெரிய வந்தது. பார்ட்டிகளுக்குச் செல்வோர் பலர் தாங்கள் தங்கள் வாகனத்திலேயே வீடு சேர வேண்டியிருந்தாலும், அதைப் பற்றிய கவலையில்லாமல் குடிக்கிறார்கள். சிலருக்குப் போத்தலைக் கண்டால், அப்பால் நகர முடிவதில்லை. தாங்கள் குடிப்பதற்குள் மற்றவர்கள் குடித்து முடித்து விடுவார்களோ என்ற பயத்திலோ, அல்லது ஓசியில் கிடைப்பதை விடுவானேன் என்றோ என்னவோ, அதற்கு ஒரு வழி பண்ணாமல் அசைய மாட்டார்கள். சட்டவிதிகளை மீறுவதை வழமையாக்கி, வாழும் தமிழர்களுக்கு இது பெரிய பிரச்சனையாகத் தெரிவதில்லைப் போலும். அல்லது தங்களை அதிமேதாவிப் புத்திசாலிகளாக நினைக்கும் தமிழ்ப் புத்தியாகவும் இருக்கலாம். (ஹே... ஆர் சொன்னது எனக்கு வெறியெண்டு!) குடிபோதையில் வாகனம் செலுத்தி பொலிசாரிடம் அகப்பட்டால், சாரதி அனுமதிப் பத்திரம் மட்டுமன்றி, காரும் பறிமுதலாகலாம். ஆனால் இவையெல்லாம் மீளப் பெறக் கூடியன. குடிபோதையில் விபத்தில் மாட்டிக் கொண்டால் கதையே வேறு. அப்பாவிகளின் உயிர்கள் பலியாகலாம். ஏன் வாகனம் செலுத்துபவர்களும், கூடப் பயணிக்கும் குழந்தைகள் உட்பட்ட பயணிகளும் தங்கள் உயிர்களை இழக்கக் கூடும். அதை விட மோசமாக, வாழ்நாள் பூராவும் அங்கவீனர்களாக, மற்றவர்களின் தயவில் வாழும் நிலையும் ஏற்படலாம். சில நேரம் கம்பி எண்ணவும் நேரலாம். உங்கள் வீட்டுப் பார்ட்டியில் குடித்தவர்கள் வீடு போகும்போது விபத்தில் மாட்டிக் கொண்டால், சில நேரங்களில் நீங்களும் மாட்டிக் கொள்ளலாம். முன்பு ஒரு தடவை அலுவலகப் பார்ட்டி ஒன்றில் குடித்தவர் விபத்தில் அகப்பட்ட போது, குடிவெறியில் இருந்த தன்னை தடுப்பதற்கோ, வீடு செல்வதற்கு வேறு வழிகளை செய்து தரவோ தனது தொழில் நிறுவனம் எதுவும் செய்யவில்லை என்று தான் வேலை செய்யும் நிறுவனம் மீதே வழக்குத் தொடர்ந்து, நிறுவனம் அந்த விபத்துக்குப் பொறுப்பை ஏற்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. மேன்முறையீட்டில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. எனவே உங்கள் வீட்டிலோ, நீங்கள் நடத்தும் பார்ட்டிகளிலோ வந்து குடிப்பவர்களே உங்கள் மீது வழக்கும் தொடரலாம். அதிலும் தவறான வழிகளில் காப்புறுதிப் பணம் பெறுவதில் எம்மினத்தவர்களுக்கு உள்ள அக்கறை உங்களுக்குத் தெரிந்ததே. பார்ட்டிகளில் நாங்கள் அடிக்கடி சொல்லும் ஆலோசனை இது... உங்கள் தொழில் வாகனத்தை நம்பியிருந்தால், ஒருபோதும் குடித்து விட்டு வாகனம் செலுத்தாதீர்கள். ஒருமுறை அகப்பட்டு, சாரதிப்பத்திரம் இழந்தால் தொழிலுக்கும் ஆபத்து. விபத்து நடந்தால் உயிருக்கும் ஆபத்து. அல்லது நம்மைப் போல, வீட்டுக்கு வெளியே குடிப்பதில்லை என்ற முடிவை எடுக்கலாம். (ஏதோ வீட்டில் பெரிதாகக் குடிப்பது மாதிரி!) துணைவியர் வாகனம் செலுத்தக் கூடியவர்களாயின், கணவர்கள் குடிப்பதில் பிரச்சனையில்லை. இருந்தாலும், துணைவியரைச் சங்கடத்திற்கு உள்ளாக்கும் விதத்தில் குடிப்பது அவர்களை அவமானப்படுத்த நேரிடும். அப்போ துணைவியரும் குடிப்பவர்களாக இருந்தால் என்ன செய்வது என்ற கேள்வி வந்தால்... வாடகைக்காரை அழைத்து ஒருவரை ஒருவர் அணைத்தவாறே, விழுந்து விடாதபடிக்குத்தான், வீடு சேருங்கள். சுவடி மாசி 2015 இந்தச் செய்தியை மற்றவர்களுடன் கீழுள்ள பட்டன்களை அழுத்திப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நீங்கள் பல உயிர்களைக் காக்கவும் முடியும்,

    You must be logged in to post a comment Login