Recent Comments

    புதுமனைப் புகுவிழாவுக்கு முன்னால்…

    new houseவீடு வாங்கப் புறப்பட்டு கடைசியில் மாமி, மாமா, மைத்துனர் விருப்புக்கேற்பவும், நியூமரோலஜிபடி 13ம் இலக்கம் வராதபடிக்கும், (அப்படித்தான் 13 இலக்கம் வந்தாலும் அதற்கு அருகில் A போட்டு விடும் நியூமரோலஜி சாத்திரிமார்களும் உண்டு) வீடு வாங்க அச்சாரமும் கொடுத்து ஒருவாறாக வீடு வாங்கும் படலம் முடிவுக்கு வந்திருக்கும். வீடு வாங்குவது என்பது கடையில் பொருட்கள் வாங்குவது போலல்ல, வாங்கியவுடன் பயன்படுத்த. உங்கள் ஒப்பந்தத்தின் முடிவு நாள் (Closing Date) ஒரு முக்கியமான நாள். அந்த நாளைக் கவனமாகத் திட்டமிடுங்கள். வெள்ளிக்கிழமை தவிர்ந்த நாட்களில் முடிவுநாளை வைக்க முயற்சியுங்கள். வழமையில் வெள்ளிக்கிழமைகளில் தான் பெரும்பாலான வீடுகளின் ஒப்பந்தம் முடிக்கும் நாள் வருவதால், முகவர் அலுவலகங்கள் பிஸியாக இருக்கும். இதனால், பல ஒப்பந்தங்கள் நாளின் முடிவில் தான் முடிக்க வேண்டி வரலாம். எதிர்பாராத விடயங்களால் ஒப்பந்தம் இழுபட நேரிட்டால், திங்கள் வரைக்கும், நீண்ட வார இறுதியாயின், செவ்வாய் வரைக்கும் திறப்பு உங்கள் கைக்கு வர முடியாமல் போக நேரிடலாம். கடைசி நேர மன அழுத்தத்தையும், சிக்கல்களையும் தவிர்க்க மற்ற நாட்களைத் தெரிவு செய்யுங்கள். புதன்கிழமை ஒப்பந்தம் முடிக்க நல்லதொரு நாள். ஏதாவது சிக்கல் வந்தாலும், ஒருநாள் நீடிப்பு செய்யலாம். (பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பதைக் கேட்க சாத்திரியாருக்கு நீங்கள் பணம் கொடுக்கத் தேவையில்லை. அதற்காக புதன்கொடுதீவு என்றெல்லாம் தொடங்காதீர்கள்) ஒப்பந்தம் முடிவு நாளில் மாலை மூன்று மணிக்கு உங்களுக்கு வீடு கையில் கிடைக்க வேண்டும். வழமையில் ஒப்பந்தங்கள் 2 அல்லது 3 மணிக்கே கைச்சாத்தாகும். ஒப்பந்தம் கைச்சாத்தாகியவுடன், வீட்டுக்காரர் வீட்டை உங்களிடம் கையளிக்க வேண்டும். அப்படித் தான் முடியாமல் அவதிப்பட்டாலும், மனிதத் தன்மையை இழக்காதீர்கள். இது என்ரை வீடு, நான் சாமான் இறக்க வேணும் என்று பழைய வீட்டுக்காரரின் பொருட்களை வீதியில் எறிதல் வேண்டாம். முடிந்தவரைக்கும் அவர்கள் வீட்டை விட்டு வெளியேற ஒத்துழையுங்கள். சட்டத்தரணியிடம் திறப்பை வாங்கி வீட்டைத் திறக்க, வீட்டுக்காரி எங்களைத் திருட வந்ததாய் திடுக்கிட்டு, கடைசியில் சட்டத்தரணிகளின் தலையீட்டால் நிலைமை தௌpவாகி, கடைசியில் வீட்டுக்காரி வீட்டுக்குள்ளே கராஜ் சேல் வைத்ததும், பழைய கட்டில் வாங்க வந்த பெண் 'நீயெல்லாம் இந்த வயதில வீடு வாங்கியிட்டாய், என்ரை புருஷனுக்கு வேலை ஏதும் எடுத்துத் தரேலுமோ?' என்று (பொறாமை கலக்க) விசாரித்த அனுபவமும் நமக்குண்டு. நீங்கள் குடியிருந்த வீட்டை விற்று, மாமிக்கு பெரிய பெட்ரூம் வேண்டுமென்று மார்க்கத்தில் மில்லியன் டொலர் வீடு வாங்குவீர்களாயிருந்தால், நீங்கள் விற்றுச் செல்லும் வீட்டை துப்புரவாக்கி விட்டே செல்லுங்கள். இனிமேல் அது அவவின்ரை பிரச்சனை என்று எந்தக் குப்பையையும் விட்டுச் செல்லாதீர்கள். நீங்கள் வீடு வாங்கும்போது வாங்கும் வீடு துப்புரவான நிலையில் இருக்கிறதா என்பதை இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்று பார்வையிடலாம். மேற்சொன்னவாறு இருந்த வீட்டை விற்று மார்க்கத்து மில்லியன் டொலர் வீடு வாங்கினால், இரண்டு நாட்களுக்கு முன்னர் வாங்கும் வீட்டின் ஒப்பந்தத்தை முடியுங்கள். அதற்கு நீங்கள் Bridge Financing பெற வேண்டும். உங்கள் வீடு விற்று உங்களுக்கு கையில் பணம் வந்தால் தான் வாங்கும் வீட்டுக்கு கொடுக்க முடியும். வைப்புத் தொகை கொடுக்கவும் பணம் இல்லாமல் போகலாம். அதற்காக விற்பதற்கும் வாங்குவதற்குமான இடைக்காலத்தில் அந்தத் தொகையைக் கடனாகப் பெற்று, வீடு விற்றதும் அந்தக் கடனைச் செலுத்துதற்கான பாலமே Bridge financing. இரண்டும் ஒரே நேரத்தில் முடிப்பதாயின், சிக்கல்கள் எழலாம். மன அழுத்தமின்றி ஒப்பந்தம் முடிக்கவும், உங்கள் வீடு விற்பதற்கிடையில் இரண்டு நாட்களுக்குள் உங்கள் பொருட்களை புதிய வீட்டுக்கு கொண்டு போகவும் வசதியேற்படும். அத்துடன், உங்கள் வீட்டு விற்பனையின் ஒப்பந்தம் நீடிக்க வேண்டி வந்தாலும் சிக்கல்கள் எழாது. தவிர்க்க முடியாமல் அவசரமாய் குடியேற வேண்டுமாயினும் ஒப்பந்தம் முடிப்பு நாளின் பிற்பகுதியில் அல்லது மறுநாளே குடி புகத் திட்டமிடுங்கள். சில நேரங்களில் கடைசி நேரச் சிக்கல்களால் பொருட்களை நகர்த்துபவர்களுக்கு மேலதிகமாகச் செலவிட வேண்டி ஏற்படலாம். சில நேரம் குடி புக அவசரமில்லாவிட்டாலும், ஒப்பந்தம் முடிப்பு நாளில் வீட்டைச் சென்று பார்வையிடுங்கள். எதுவும் சேதப்படுத்தப்பட்டதா, பொருட்கள் யாவும் வேலை செய்கின்றனவா என்பதை உறுதிப்படுத்துங்கள். ஒப்பந்தம் முடிப்பு நாளில் எல்லாம் வேலை செய்யும், நல்ல நிலையில் எல்லாம் இருக்கிறது என்று விற்பவர் உறுதிப்படுத்துவார். அதன் பின்னால் நடப்பது பற்றி அவருக்கு பொறுப்பில்லை. எனவே ஏதாவது பாதிப்பு இருந்தால் உடனடியாக முகவரிடமும் சட்டத்தரணியிடமும் தொடர்பு கொள்ளுங்கள். பழுதான உடை கழுவும் இயந்திரத்தை உடை உலர்த்தும் இயந்திரம் மாதிரி காட்டியதால் ஏமாந்த அனுபவம் நமக்குண்டு. எனவே குளிர்சாதனப் பெட்டி போன்றவற்றை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சில நேரம் வீடு பார்க்கும்போது இருந்த பொருட்களை மாற்றி பழையவற்றையும் வைக்கக் கூடும். சரி, வீடு வாங்கியாயிற்று. யாராவது டிஜே தமிழனைக் கூப்பிட்டு பாட்டுப் போட்டு, அற் ஹோம் நடத்துவதற்கு முன்னால், என்ன செய்கிறீர்களோ, ஏது செய்கிறீர்களோ, வீட்டில் நிம்மதியாக இருக்க வேண்டுமாயின், எதற்கும் உடனடியாக விஜய் டிவி இணைப்பைப் பெறுங்கள். இல்லாவிட்டால், மார்க்கத்து மில்லியன் டொலர் வீட்டு மாப்பிள்ளையை மாமியார் அற்ப புழுவைப் போல பார்க்க நேரிடும்.

    You must be logged in to post a comment Login