Recent Comments

    குளிர் காலத்திற்கு நீங்கள் தயார்? உங்கள் வாகனம் தயாரா?

    Wintercarcareசரி, குளிர்காலம் வருகிறது. கோடை காலம் என்றதும் ஐரோப்பாவிலிருந்து வந்த உறவுகளை நயாகராவுக்கும், மாமியாரை வல்மொறின் தரிசனத்துக்கும் தாங்கிச் சென்ற உங்கள் வாகனத்தை தயார் பண்ண வேண்டாமா? உங்கள் வாகனத்தின் பட்டரி ஆரோக்கியத்துடன் இருக்கிறதா என்பதை கவனியுங்கள். பட்டரி சரியான பலத்துடன் இல்லாவிடின், வாகனத்தை ஸ்டார்ட் பண்ண முடியாமல் போகலாம். பல பட்டரிகள் ஐந்து வருட ஆயுள் கொண்டவை. ஆயுட்காலம் முடிந்தால் புதியதாக பட்டரி வாங்குகள். பட்டரி இணைப்புகளில் பச்சை நிறப் படிவுகள் இருந்தால் சுடுநீரை ஊற்றினால் அவை கரைந்து விடும். கார் இயந்திரத்தின் எண்ணெயை கவனியுங்கள். இயந்திரம் மிருதுவாகச் செயற்பட எண்ணெய் அவசியம். பெரும்பாலும் 5000 கிலோமீட்டர்களுக்கு ஒரு தடவை எண்ணெயை மாற்ற வேண்டி வரும். சாதாரண எண்ணெயோ, அல்லது விலை கூடிய சிந்தட்டிக் எண்ணெயோ பயன்படுத்தலாம். அத்துடன் இயந்திரத்தை குளிராக்கும் Coolant,Transmission, Power Steering, Brake போன்றவற்றுக்கான எண்ணெய்களையும் பரிசோதியுங்கள். தேவைப்படின் அவற்றையும் மாற்றுங்கள். உங்கள் வாகன டயர்களை அவதானியுங்கள். அவற்றிற்கான காற்றழுத்தம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். அதன் இறப்பர்களில் வெடிப்புகள் உள்ளனவா என்பதை கவனியுங்கள். உங்கள் வாகனத்தின் முன் கண்ணாடி குளிர்காலநிலையில் நீராவி ஓடுங்குவதாலும், பனி உறைந்திருப்பதாலும் ஊடாகப் பார்க்க முடியாதபடிக்கு இருக்கும். அதிலும் குறிப்பாக சூரியன் நேரே கண்களில் படும் போது, கண்ணாடியில் உள்ள பனித்துகள்கள் ஓளியைத் தெறித்து இன்னமும் சேட்டை பண்ணும். அந்த பனித்துகள்களை வழித்துத் துடைக்கும் துடைப்பான்களை (Wipers) தேவை ஏற்படின் மாற்றுங்கள். அவை கிழிந்தோ வெடித்தோ இருந்தால் முழுமையாகத் துடைக்க முடியாது. கடும் சூரிய வெப்பத்திலும் குளிரிலும் பாதிக்கப்பட்டு அவற்றில் உள்ள இறப்பர் வெடித்து கிழியும். எனவே முன்கண்ணாடி, பின்கண்ணாடிகளைத் துடைக்கும் றப்பர் துடைப்பான்களை மாற்றுங்கள். கடும் பனிப்புயல்களின் போது எங்காவது சனநடமாட்டம் இல்லாத தொலைவுகளில் சிக்கிக் கொண்டால் ஆபத்துக்கு உதவுவதற்கான Emergency Kit களை வாங்கி உங்கள் காரில் வைத்துக் கொள்ளுங்கள். (தற்போது தமிழர்கள் அதிகமாக வீடு வாங்கிச் செல்லும் இடங்கள் கூட, சனநடமாட்டம் இல்லாத இடங்கள் தான்! அதிலும் மாமியை ஏற்றிச் செல்லும்போது, கார் பழுதடைந்தால் ஏற்படும் துன்பம் சொல்லி மாளாது!) அதில் கம்பளிப் போர்வை, மெழுகுதிரி, தீக்குச்சிகள், மடிக்கக் கூடிய பனி அள்ளும் பனிவெட்டிகள், உடலுக்கு சக்தி தரும் சிறுஉணவுப் பொருட்கள் என்பன இருக்கும். உயர்ந்த பாதணிகள் அணியும் பெண்கள் தட்டையான கீழ்ப்பக்கம் உள்ள சப்பாத்துக்களையும் அவசரத்திற்காக வாகனத்தில் வைத்துக் கொள்ளலாம். அத்துடன் உங்கள் வாகனங்களில் தடித்த காட்போட் மட்டைகளை வைத்திருத்தல் நல்லது. (அல்லது கடைகளில் நிறைந்து வழியும் தமிழ்ப் பேப்பர்கள்!) உங்கள் வாகனச் சில் பனிக்குள் அகப்பட்டு உங்களால் நகர முடியாமல் போனால் சக்கரங்களுக்கு அடியில் இந்த காட்போட் மட்டைகளை வைத்து பனிக்குள்ளால் வெளியில் வர முடியும். அவ்வாறு காட்போட் இல்லா விட்டால், காலில் உள்ள பனியைத் தட்ட கால் பகுதிக்குள் வைத்திருக்கும் றப்பர் தட்டுகளையும் பயன்படுத்தலாம். வாகனக் கண்ணாடிகளைத் கழுவும் திரவங்களை நிரப்புங்கள். இந்த திரவங்கள் குளிரில் உறைந்து போகாதபடிக்கும், வீதியில் பனியை அகற்றப் பயன்படும் உப்பை கழுவவும் கூடிய விதத்தில் இரசாயனப் பொருட்கள் சேர்க்கப்பட்டவை. ஒரு போதும் வெறும் பச்சைத் தண்ணீரைப் பயன்படுத்தாதீர்கள். அது உறைந்து திரவத்தை இறைக்கும் இயந்திரத்தைப் பழுதாக்கி விடும். எல்லாம் முடிந்ததும் வாகனத்தின் உட்புறத்தை கூட்டித் துப்புரவாக்கி, ஒரு தடவை உங்கள் வாகனத்தைக் குளியலுக்கு அழைத்துச் செல்லுங்கள். குறிப்பாக அடிப்புறம் போன்றவற்றை சரியாகக் கழுவுவதுடன், துருப்பிடிப்பதைத் தடுக்கக் கூடிய எண்ணெய் விசிறும் கார் கழுவும் இடங்களைப் பயன்படுத்துங்கள். அந்த வகைக் கழுவல் துருப்பிடித்தலைத் தடுக்க உதவும். ஞாபகம் இருக்கட்டும், குளிர் கால வாகனச் செலுத்தலில் அவதானம் தேவை. அதுவும் பனி கொட்டியதும் வாகனம் நீங்கள் நினைத்தபடி செல்லாமல் தான் நினைத்த இடங்களுக்குப் பாயலாம். பனி கொட்டிய வீதிகளில் கவனமாய் வாகனங்களைச் செலுத்தி வீட்டாரைக் கூட்டிக் கொண்டு அடிக்கடி மாமியார் வீட்டுக்குச் செல்லுங்கள். (ஓ! உங்கள் பெற்றோர் முதியோர் விடுதியில், உங்கள் மாமியார் உங்களோடு தான் என்றால், உங்கள் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு, உங்கள் பெற்றோரையும் அடிக்கடி சென்று பார்த்து வாருங்கள். உங்கள் வயதான காலத்தில் வாழப் போகும் இடத்துக்குப் பரிச்சயமாகிக் கொள்வதும் பிற்காலத்தில் உதவும் அல்லவா!) சுவடி ஐப்பசி 2015

    Postad



    You must be logged in to post a comment Login