Recent Comments

    பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளையின் தலைவர் பிரபாகரனே…

    Velupillai2எஸ்.கௌந்தி

    “புறநானூறு காட்டும் சங்க மறவர் போர்வெறி” எனும் தலைப்பில் அண்மையில் மறைந்த பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளையின் போர் எதிர்ப்பு மொழிகளை 1993 இல் “தாயகம்” பத்திரிகை இதழில் பதிவு செய்தேன். இது எனக்குள்ள போர் எதிர்ப்புடன் சம்பந்தப்பட்டது. இவரது மரணத்தின் பின் இவருக்கு அஞ்சலி செய்யுமுகமாகப் “தாயகம்” இணைய இதழில் பிரசுரிக்கப்பட்டது. அனைத்துப் போர்களும் மனிதர்களை அழிக்கும் இலக்கைக் கொண்டனவே. நேற்றைய போர்களினதும் இன்றைய போர்களினதும் , இனிவரும் போர்களினதும் இலக்குகளின் முகங்களில் மாற்றங்கள் இருக்கும், நோக்குகளில் மாற்றங்கள் இருக்க முடியாது. 1993 இல் இந்தப் பெரிய பேராசியர் போரில் வெறுப்புக் கொண்டவர் என்பதால்தான் இவரது “காலமும் கருத்தும்” எனும் புத்தக வாசிப்புள் இவரது போரின் எதிர் எழுத்துகளை மறுபிரசுரம் செய்தேன் “தாயகம்” பத்திரிகையில். இந்த பிரசுரம் மீது அன்று எவரும் எழுதவில்லை. இந்த எழுதாதின்மையை நான் இப்போதும் விளங்குகின்றேன். ஆம்! தமிழ் மக்களில் பலர் தேசிய வெறியர்களும், சாதி வெறியர்களும்தான். இவர்கள் பெரிய பதவிகளில் இருப்பர், சிறப்பான மூளைகளும் இவர்களுக்கு உள்ளன. ஆனால் இவர்கள் தேசிய வெறிகளைக் கக்குபபவர்களே. இவர்களில் ஒருவராக இப்போது படுகின்றார் ஆ.வேலுப்பிள்ளை. இவரது “காலமும் கருத்தும்” தமிழில் எழுதப்பட்ட அழகான ஆய்வுத் தொழில். தமிழ் இலக்கியத்துள் நுழைவோர் நிச்சயமாகப் படித்தல் நல்லது எனச் சொல்வேன். இந்தப் புத்தகத்தில் : “சிறுசிறு நிலப்பரப்புகளை ஆண்ட மன்னர்களுக்கு உலகம் முழுவதிலும் தம் ஆணையைச் செலுத்த வேண்டும் என்ற ஆசை மடடுமே மிதமிஞ்சி இருந்திருக்கிறது. அதனாலேயே அக்காலத் தமிழகமெங்கும் போர்கள் தொடர்ந்து நடைபெற்றிருக்கின்றன. வென்று மேம்படும் ஆசையால் உந்தப்பட்டு மன்னர் மோத, அவராட்சியில் அடங்கிய மக்களும் மோதினர்.” “சிறுசிறு நிலப்பரப்புகளை ஆண்ட மன்னர்களுக்கு உலகம் முழுவதிலும் தம் ஆணையைச் செலுத்த வேண்டும் என்ற ஆசை மடடுமே மிதமிஞ்சி இருந்திருக்கிறது. அதனாலேயே அக்காலத் தமிழகமெங்கும் போர்கள் தொடர்ந்து நடைபெற்றிருக்கின்றன. வென்று மேம்படும் ஆசையால் உந்தப்பட்டு மன்னர் மோத, அவராட்சியில் அடங்கிய மக்களும் மோதினர்.” “புறநானூற்றுக் காலத்திற் புகழும் பெருமையும் வீரத்தின் வழி வந்தன. ‘வெற்றி அல்லது வீரமரணம்’ என்ற நிலைக்கு ஒரு தனிக்கவர்ச்சி இருந்ததாகத் தெரிகிறது. மன்னர் தலைமையில் ஒன்று கூடி ஒற்றுமையாக நின்று போராடுவதிலும் மன்னனுக்கு தம் சேவை தேவையென்றுணர்வதிலும் புறநானூற்றுக்கால மக்கள் மகிழ்ந்தனர்.” “போர் நிகழுங் காலத்தில் அப்போரில் பங்குபற்றுவோரின் உணர்ச்சி மரத்து விடுகின்றது என்ற உண்மைக்கு சங்க காலம் விதிவிலக்கல்ல என்பது தெரிகிறது.” “பிறரெல்லாம் தமக்கு அடி பணிய வேண்டும் என்ற அவாவால் உந்தப் பெற்று அக்கால மன்னர், தமிழ் வாலிபர்களைப் பலியிட்ட கதையே புறநானூற்றிற் பெரும்பான்மையாகக் கூறப்படுகின்றது.” “வெற்றி தோல்வி எவரடைந்த போதிலும் இரு கட்சியிலும் சிந்தியது தமிழ் இரத்தமே. போர் என்றாற் கொலையும் கொள்ளையும் ஒரு புறம், கண்ணீரும் இரத்தமும் மறுபுறம். பகைவருந் தமிழரே என்ற ஈவு இரக்கங் காட்டி நடந்ததற்கு புறநானூற்றிற் சான்றரிது. தமிழரில் ஒரு சாரார் இரத்தஞ் சிந்த, மற்றொரு சாரார் வெற்றி விழாக் கொண்டாடினர்.” “சமுதாயம் இடம் கொடுத்திராவிட்டால் மன்னர் போர் செய்தலையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்திருக்க முடியாது. ஆனால் மன்னர் ஏவியதாலேயே போர்கள் பெரும்பாலும் நடைபெற்றன.” என்று போரின் கொடுமைகளைத் தெளிவாகக் கூறிய பேராசிரியர் புலியாக இருக்கலாம் என்பதை நமக்குக் காட்டுகின்றார் பேராசிரியர் எம்.ஏ.நுஹ்மான். இவர் இந்த மாதத்தில் ஆ.வேலுப்பிள்ளை மீது “காலச்சுவடு" இதழில் ஓர் கட்டுரையை எழுதியுள்ளார். இந்தக் கட்டுரையில் “விடுதலைப் புலிகள் இயக்கம் வெளியிட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் மேற்கோள்கள் அடங்கிய ‘தலைவரின் சிந்தனைகள்’ என்ற நூலை மூல ஆவணங்கள் என்ற அடிப்படையில் பீற்றர் ஷல்க் உப்சலா பல்கலைக் கழகத்தின்மூலம் ஆங்கிலம், ஜேர்மன், சுவீடிஷ், சிங்களம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பித்து இணைய வெளியீடாக வெளியிட்டுள்ளார். அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘Reflections of the Leader: Quotes by Veluppillai Pirapakaran’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இம் மொழிபெயர்ப்பை பீற்றர் ஷல்குடன் இணைந்து செய்தவர் பேராசிரியர் வேலுப்பிள்ளை. புலிகள் இயக்கத்துக்கு வேலுப்பிள்ளையின் நேரடியான பங்களிப்பாக இது கருதப்படலாம்.” எனக் குறிப்பிட்டிருக்கின்றார். (http://www.kalachuvadu.com/issue-192/page64.asp) தமிழ் நிலத்தின் மக்களைக் கொடூரமாக அழித்த பிரபாகரனின் மேற்கோள்கள் திரு வேலுப்பிள்ளையை எப்படி ரசிக்க வைத்தது? இவர் ரகசியப் புலியாக இருந்தாரா? இவர் தேசிய வாதத்தை களவாகக் குடித்த பேராசிரியர் எனச் சொல்லலாம். இந்தச் சூழலில் தமிழில் பேராசிரியர்கள் உள்ளனரா, பேயாசிரியர்கள் உள்ளனரா எனக் கேட்கவேண்டியுள்ளது. ஆம்…. ஆம்….. நிறையப் பேயாசிரியர்கள் உள்ளது என்பது என் திண்ணம்.

    Postad



    You must be logged in to post a comment Login