Recent Comments

    நினைவு கூர்கிறோம் – தி.உமாகாந்தன்

    Uma

    "யுத்தம் யாருடனும் செய்யலாம் புத்தகம் யாரும் வெளியிடலாம் ஆனால் எழுத்து எந்த நேரமும் இறுக்கமாக இதயத்தில் இருக்கும். எமது தோழர்கள், நண்பர்கள் அப்படித்தான்"

    உமாகாந்தன்

    11வது நினைவு தினம்

    புரட்டாதி 28, 2004

    ஆண்டுகள் கடந்தாலும் எங்கள் இதயத்தை விட்டு நீங்காமல், தன் எழுத்துக்களால் இறுக்கமாய் இடம் பிடித்த எங்கள் அன்பு நண்பனை என்றும் மறவோம்

    தாயகம் குடும்பத்தினர்

      (உமாகாந்தன் மறைவையொட்டி, தாயகம் வெளியிட்ட சிறப்பிழில் வந்த கட்டுரையை இங்கே மறுபிரசுரம் செய்கிறோம்.)

    உமாகாந்தன் மறைவு

    தாயகம் பத்திரிகையில் நீண்ட காலம் சர்வதேச அரசியல் பற்றிய தொடரை எழுதி வாசகர்களின் கவனத்தை ஈர்த்த உமாகாந்தன் பாரிஸில் செப்டம்பர் 28ம் திகதியன்று காலமானார். சமீப காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த உமாகாந்தன் இறுதிவரைக்கும் தன் அரசியல், இலக்கியப் பணிகளில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். நீண்ட கால அரசியல், இலக்கியப் பின்னணிகள் கொண்ட இவர் சிந்தாமணி, ஈழநாடு, சுதந்திரன் உட்பட்ட பல்வேறு இலங்கைப் பத்திரிகைகளில் எழுதியவர். 77ல் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து கூட்டணி போட்டியிட்ட போது, அதன் வெற்றிக்காக உழைத்தவர் இவர். பின்னர் கூட்டணியின் உண்மை ரூபத்தைக் கண்டு கொண்ட போது, அதைக் கண்டித்து சுதந்திரன், ஈழநாடு பத்திரிகைகளில் முழுப்பக்க கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இலங்கையின் விடுதலையின் ஆரம்ப காலங்களில் வெளியிடப்பட்ட மனிதன் சஞ்சிகையுடன் சம்பந்தப்பட்டிருந்த விமலதாசனுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட காலத்தில், மலையகத்தில் சிவனு லட்சுமணன் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அதற்கு எதிராக வெளியிடப்பட்ட சுவரொட்டிகளை நகரமெங்கும் ஓட்டுவதற்கான பொறுப்பை ஏற்று தன் பங்களிப்பை வளங்கியிருந்தார். தன் சகோதரிகள் சுவரொட்டிகளை எழுதித் தர, தாயார் காய்ச்சித் தந்த பசையுடன் அச்சுவரொட்டிகளை ஒட்டியது பற்றி அவர் ஒரு தடவை குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் விமலதாசனின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு மனிதம் இதழ்களை தொகுத்து வழங்கியுமிருந்தார். கவிதைகள், விமர்சனங்கள், அரசியல் கட்டுரைகள், சர்வதேச அரசியல் விவகாரங்கள் என்று பல்வேறு துறைகளில் தன் திறமையை வெளிக்காட்டிய இவர் பிரான்ஸ் நாட்டில் நீண்ட காலமாக வசித்து வந்தார். இவர் முதன் முதலாக ஈழமுரசு என்ற இதழை 81 நவம்பர் முதல் தொடர்ச்சியாக வெளியிட்டார். புலம் பெயர்ந்த நாடுகளில் முதலில் வெளிவந்த சஞ்சிகைகளில் இது முதன்மையானது. பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்கழகத்திடம் இந்த இதழுக்கான வாழ்த்துச் செய்தி கேட்ட போது, அதற்கு பதிலாக தாங்கள் 'எரிமலை' என்ற சஞ்சிகையை அவர்கள் வெளியிட்டனர். பின்னர் அந்த அமைப்பு புலிகளின் முகவர் அமைப்பானது குறிப்பிடத்தக்கது. பிரான்சில் இருந்த போது இலங்கையின் இனப்பிரச்சனை தொடர்பான பல்வேறு ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் தன்னை ஆட்படுத்திக் கொண்ட இவர் சிறந்த மேடைப் பேச்சாளரும் கூட. எழுத்துக்களில் மட்டுமன்றி, இவரது பேச்சுக்களிலும் இவரது துணிச்சல் தெளிவாக இருக்கும். சபாலிங்கம் பாரிஸில் கொல்லப்பட்ட போது, துணிச்சலாக பகிரங்கமாகக் குரல் கொடுத்தவர் இவர். தாயகம், உயிர்நிழல் உட்பட்ட பல்வேறு சஞ்சிகைகள், தொகுப்புக்களில் இவரது ஆக்கங்கள் வெளிவந்ததுடன் இவரது பங்களிப்பு நிறைய இருந்தது. பாரிஸில் நடைபெற்ற முதல் தமிழ் நிகழ்ச்சியான சங்கே முழங்கு நிகழ்ச்சியில் இவரது பங்களிப்பு முக்கியமானதொன்று. பாரிஸில் முதலில் தொலைபேசிச் செய்திச் சேவையை ஆரம்பித்த பெருமையும் இவருக்குண்டு. நிக்கரகுவாவில் சான்டினிஸ்டா ஆட்சியிலிருந்த போது அங்கு சென்று அரசியல் பணிகளில் தன்னை ஆட்படுத்திக் கொண்டவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை பருத்தித்துறை மெதடிஸ்த பாடசலையிலும், வடமராட்சி நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்திலும் முடித்துக் கொண்டு பின்னர் யாழ்.மத்திய கல்லூரியில் கல்வி பயின்றவர். இளம் வயதிலேயே சுதந்திரன் பத்திரிகையில் கவிதைகள் எழுதியிருந்தார். சிறுவயதில் அமரர் மு.சிவசிதம்பரத்தின் பிரசாரக் கூட்டம் ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற போது, இவர் முதன் முதலாக உரையாற்றிப் பாராட்டுப் பெற்றிருந்தார். பிரான்சில் சந்திரசேகரம் சூரியகுமாரியைத் திருமணம் செய்த இவருக்கு ஆதித்யன் என்ற மகன் பிறந்தார். யாழ்ப்பாணம், வதிரியைச் சேர்ந்த இவரது தந்தையார் கந்தையா தில்லையம்பலம் முன்னாள் புகையிரத நிலைய அதிபராவர். இவரது தாயார் மகேஸ்வரியுடன் தந்தையார் தற்போது வதிரியில் வசித்து வருகிறார். இவரது மூத்த சகோதரர் விஜயகுமார், இலங்கையிலும் தம்பி குகேந்திரன் பிரான்சிலும் வசித்து வருகின்றனர். இவருக்கு உமா, பவானி என்ற இரு சகோதரிகளும் உள்ளனர்.

    Postad



    You must be logged in to post a comment Login