Recent Comments

    மண் மீட்புக்கு பணத்தைக் கொட்டாதீர்கள்!

    soilஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து!(4)

    கொட்டும் பனி முடிந்து கொழுத்தும் வெயில் தொடங்கும்போது, கொல்லைப்புறமாய் கொத்த ஆரம்பிப்பீர்கள். ஒரே சேறும் சகதியுமாய் இருத்தல் கண்டு, அட, இந்த நிலத்திற்குப் பசளை வேண்டுமே என்ற எண்ணம் வரும். வீட்டில் வாரம் தோறும் வந்து விழும் விளம்பரங்களில் எல்லாம், கண்டு கேட்டறியாத வகையில் குப்பையைப் பையில் அடைத்து விற்பார்கள். இங்கே குப்பைகளைப் போய் பைகளில், பால் போல, லீட்டர் கணக்கில் அடைத்து விற்கிறார்களே, மாட்டு வண்டில் இருந்திருந்தால், ஊரிலிருந்து வண்டில் கணக்கில் கொண்டு வந்து இறக்கியிருக்கலாம் என்று நினைத்திருப்பீர்கள். பல்வேறு பெயர்களில் பல்வேறு ரகங்கள் இருந்தாலும், கண்ணைக் கவரும் குப்பைப் பைகள் 99 சதம் மலிவு விற்பனை என்றதும்... ரொப் சொயில் என்றால் 'உயர்தரமான மண், ரொப்பான சாமான், மணியாய் மலிவாய் போட்டிருக்கிறான்' என்ற நினைப்பில், வண்டில் எதற்கு? என்று வண்டியில் ஏற்றி வந்திருப்பீர்கள். ஏதோ உரம் போட்ட கணக்கில், அங்குமிங்குமாய் விசிறி விட்டு, நாற்று நட்டுக் காத்திருந்தால்... நெல்லுக் கூட வெளஞ்சிருக்கும் என்றால்... தோட்டம் நிறையப் புல் தான் முளைத்திருக்கும். இதென்னடா, துன்பத்தை விலை கொடுத்து வாங்கி விட்டேனோ என்ற எண்ணம் தலைதூக்கும். கனடியக் கடைகளில் பைகளில் அடைத்து விற்கும் குப்பைகள் எல்லாம் ஒரே ரகத்தினவை அல்ல. இதில் ரொப் சொயில் என்பது அடிக்கடி மலிவு விற்பனையில் கிடைப்பது. வருடத்தில் பாதிக்கு மேல், தாவரங்கள் இலையுதிர்த்து உறக்கம் செல்லும் கனடாவில், விழுகின்ற இலைகளும், இறக்கின்ற தண்டுகளும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் உக்கி, மண் மேல் தேங்கி, பசளையாய் இருக்கிறது. தற்போதைய வயல்கள் எல்லாம் ஆதிக்குடிகள் காலத்தில் காடுகளாய் இருந்தவை. வந்தேறு குடிகள் காடு வெட்டிக் களனியாக்கி அந்தப் பசளை நிறைந்த நிலத்தில் பயிர்செய்து வரும் காலை, வந்தேறு அகதிகள் வந்து, நெற்றி வேர்வை சிந்தாமல் வீடு வாங்க, வயல் நிலங்கள் எல்லாம் வீடுகளாகி விட்டன. ஒன்ராறியோவின் முதல் தர விவசாய நிலங்கள் எல்லாம் வீடுகளாகி விட்டன. தமிழர்கள் வீடு வாங்கிக் கொண்டு போகிற போக்கில், சிம்கோ ஏரிக்கும் அப்பால், ஹட்சன் விரிகுடா வரையான துருவப் பகுதியில் தேமதுரத் தமிழோசை ஒலிக்கும் போலிருக்கிறது. இந்த வயல் நிலங்களில் வீடுகள் கட்டப்படும்போது, அவர்கள் செய்யும் முதல் வேலை, பசளை நிறைந்த மேல் பகுதி மண்ணைச் சீவி எடுப்பது தான். அடுத்த மட்டத்துக் களிமண் வரை சீவி, புல் பதிப்பதற்கு அளவாக கொஞ்சம் பசளை மண்ணை விட்டு... சீவிய மண் பைகளில் அடைத்து, கடைகளில் மலிவு விற்பனையாகும். மேல் பகுதி மண் என்பதால் தான் ரொப் சொயில். உயர்தரமான மண் என்பதால் அல்ல. எங்கள் வளவு மண்ணை நாங்கள் பணம் கொடுத்து, பைகளில் வாங்கி மண் மீட்புச் செய்ய வேண்டிய நிலைமை. உங்கள் வீடுகள் புதியதாக இருந்தால், இது தான் கதை. இந்த களி மண்ணில் நீர் தேங்கி நிற்கும். கால் வைக்க சேறாய் புதையும். இதற்குப் பசளை தேவை. எனவே ரொப் சொயில் நல்லது தானா? மலிவு என்றால் நல்லதாகத் தானே இருக்கும் என்று நினைப்பது தானே தமிழ்ப் பண்பாடு. அதில் சத்துக்கள் இருப்பது என்பது உண்மைதான். ஆனால் சத்துக்களுடன் புல் விதைகளும் அல்லவா இருக்கின்றன. மண் போட்ட பின்னால் இதுவரையும் இல்லாத புல் வகைகள் எல்லாம் தோட்டத்தில் முளைக்கும். அதிலும் நம்ம ஊரில் மூக்கிறைச்சி எனப்படும் பரவும் புல் இதில் அதிகம் காணப்படும். சில ஊர்களில் சமைப்பதாகச் சொன்னார்கள். நம் ஊரில் கீரை அதிகம். மாட்டுக்குப் போட்டால் பால் அதிகம் வரும் என்பார்கள். அட, இங்கே வீட்டில் மாடு வளர்க்க முடியாதே? எனவே, 'உயர்தர மண்ணை' மலிவு விலையில் வாங்குவோர் ஜாக்கிரதை! புல் விதை நீக்கிய Sterilized என்று பையில் குறிப்பிட்டிருக்கும். விலை கூடவாயினும், அவற்றையே வாங்குங்கள். இருந்தாலும் அவை கூட நூறு வீதம் களை விதைகள் அற்றவை அல்ல. (செம்பாட்டு மண்ணை இறக்குமதி செய்து பைகளில் அடைத்து விற்க விரும்பும் வர்த்தகப் பிரமுகர்கள் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே ஓரிரு காணித் துண்டுகள் நம் பெயரில் உள்ளன! ரொப் சொயில் என்ன, கழிவு ஓயில் கலந்த தண்ணீர் வரும் வரைக்கும் தோண்டலாம்!) அடுத்து, குப்பை. Compost, இதை நீங்கள் விலை கொடுத்து பைகளில் வாங்கத் தேவையில்லை. ஓசியில் எங்கே, எப்போது, எப்படி அள்ளலாம் என்பது thayagam.com இல் வீட்டுத்தோட்டப் பகுதியில் உள்ள கட்டுரைகளில் காணலாம். சில இடங்களில் கோடை காலம் முழுவதும் சனிக்கிழமைகளில் அள்ளலாம். அத்துடன் உங்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் இடம் பெறும் சுற்றாடல் நாட்களில் அள்ளலாம். அடுத்தது, பாசி. பீற் மொஸ் Peat Moss எனப்படும் காய்ந்து போன பாசி கனடாவில் சில பகுதிகளில் தோண்டி எடுக்கப்படுகிறது. இது தன்னை விட பல மடங்கு அளவு நீரை உறுஞ்சி வைத்திருக்கும். இதனால் தான் தாவரங்களை வேறிடங்களுக்கு பெட்டி கட்டி அனுப்பும்போது, ஈரப்பதனைப் பேண இவற்றுள் மூடி அனுப்புகிறார்கள். மணல் நிலங்களில் நீரைத் தக்க வைக்க இது பயன்படுத்தப்படும். இது அமிலத் தன்மையானது. எனவே பல பயிர்களுக்கு இது ஆகாது. ஆனால் புளூபெரி போன்ற அமில மண்ணில் வளரும் தாவரங்களுக்கு உகந்தது. இந்தப் பாசி மிக மெதுவாக வளர்வதால், தோண்டப்படும் அளவுக்கு மீண்டும் வளர மூவாயிரம் வருடங்கள் எடுக்குமாம். எனவே சுற்றாடலுக்கு இது கூடாது. எனவே இதைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள். அடுத்தது ட்றிப்பிள் மிக்ஸ் எனப்படுவது. இது சற்று விலை கூட. இதில் 'உயர்தர' மண், குப்பை, பாசி மூன்றும் கலக்கப்பட்டிருக்கும். இதில் பல சத்துக்கள் அடங்கியிருக்கும். அத்துடன் நீரைத் தேக்கி வைத்திருக்கும் தன்மையும் அதிகம். என்றாலும் பாசி பற்றிச் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள். இது மிகச் சிறிய தோட்டங்களுக்கு போட உகந்தது. அப்புறமாய் பொட்டிங் சொயில், சீட் மிக்ஸ் (Potting Soil, Seed Mix)  எனப்படுவது. இது மண் எதுவுமில்லாத மண். ரொப் சொயில் பாரம் என்பதால் அது இந்தக் கலவையில் சேர்க்கப்படுவதில்லை. சட்டிகளில் வளர்க்கப்படும் தாவரங்களுக்கும், விதைகளை முளைக்கப் போடுவதற்கும் இந்தக் கலவையே பயன்படும். இதில் பாசி, மணல், வேர்மிக்குலைட், பேர்லைட் என்பனவற்றுடன், உக்கிய மரப்பட்டைகள், உக்கிய காளான் என்பனவும் கலக்கப்படும். இது சட்டிகளில் பாரம் குறைவாகவும், நீர் தேங்கி நின்று வேர்களைப் பாதிக்காமல், நீரை அதிகளவில் உறுஞ்சி வைத்திருக்கவும் என பயன்படுத்தப்படுகிறது. இதில் பேர்லைட்Perlite என்பது எரிமலைக் குழம்பு இறுகுவதால் ஏற்படுவது. இதை சூடாக்கும்போது சோளப்பொரி மாதிரி இதன் கனவளவு கூடும். இதனால் மண் இளக்கமடைந்து, நீர் தேங்கி நிற்காமல் வழிந்தோட வைக்கப் பயன்படுவது. வேர்மிக்கியூலைட் Vermiculite இயற்கையில் கிடைக்கும் பாறையை சூடாக்குவதால் பெறப்படுவது. இது மண்ணில் காற்றோட்டத்தை ஏற்படுத்தக் கூடியதாக இடைவெளிகளை ஏற்படுத்தும். இவை விதைகளை முளைக்க வைக்க ஏதுவானவை. இது விலையும் கூட. இதைத் தோட்டத்திற்குப் போடுவதால் பெரிய பயன் ஏதும் இல்லை. சட்டியில் வளர்க்கும் தாவரங்களுக்கு நீங்கள் இரசாயனப் பசளைகள் இட வேண்டும். காரணம் இந்தக் கலவையில் சத்துக்கள் பெரிதாக இல்லை. இந்த வேறுபாடுகளைத் தெரிந்து கொண்டே இந்தப் பைகளை வாங்குங்கள். பை அழகான மரக்கறி, பூப் படங்களுடன் இருக்கிறது என்பதற்காகவோ, மலிவாக இருக்கிறது என்றோ வாங்காதீர்கள். உங்கள் கொல்லைப்புறக் கமத்திற்கு நிறைய அளவு உக்கிய குப்பையைப் போடுங்கள். குப்பை உக்கும்போது பக்ரீறியாக்களின் செயற்பாட்டினால் பெரும் வெப்பம் உண்டாகும். அந்த வெப்பத்தில் பெரும்பாலான களைகளின் விதைகள் அவிந்து விடும். குப்பையைப் போட்டால் மண்ணில் கொத்திக் கலவுங்கள். தாவரங்களுக்கு அடியில் பசளை மாதிரிப் போடாதீர்கள். சில நேரம் வெப்பத்தினால் மரக்கறிகளின் அடிப்பகுதி வெந்து இறக்கவும் நேரிடலாம். ஏற்கனவே மண்ணை மீட்டுத் தருகிறோம் என்றவர்களுக்குப் பணத்தைக் கொடுக்கப் போக, அவர்கள் களை எடுப்பில் மட்டும் கவனத்தைச் செலுத்தி, எங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்கு வழி பண்ணி விட்டுப் போக, இங்கே பலர் அந்தப் பணத்தில் பல வீடுகள், கடைகள் என நிலபுலங்களுக்கு முதலிட்டுப் பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள். எனவே, இனத்தின் மண் மீட்போ, கொல்லைப் புறத்துக்கு மண் மீட்போ, சிந்தித்து விசயங்களைத் தெரிந்து, பணத்தைச் செலவிடுங்கள். வீடு மட்டுமல்ல, நாடும் உருப்படும்! சுவடி சித்திரை 2015

    Postad



    You must be logged in to post a comment Login