Recent Comments

    இந்த அநியாயத்தைக் கேட்பார் யாருமே இல்லையா?

    Thosai பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி

    வார இறுதி வந்தால், வேலைக்குப் போகும் போது தலையைச் சுத்தி மூக்கைத் தொடுவது போலப் போய், எதிர்காலக் கனடியப் பிரதமர் கொத்து ரொட்டி அடித்த வரலாற்றுப் பெருமை மிக்க தமிழர் வாழும் பிரதேசத்தில் உள்ள தமிழ் மகன் நிர்வாகத்தில் இயங்கும் வியாபார நிலையம் ஒன்றில் காலை உணவாய் இரண்டு டொலருக்கு இரண்டு தோசை, இரண்டு இட்லியுடன் இலவச இணைப்பாய் வரும் வடையுடன், போனசாக வரும் டீயை வாங்கி வந்து, இரண்டு நாளும் சாப்பிடுவதில் நமக்கு ஒரு குஷி. நம்மைப் போலவே மலிவு சாப்பாட்டுக்கு அலையும் சாப்பாட்டு ராமன்களும் சீதைகளும் சிறிமா காலத்து பாண் கியூவை ஞாபகப்படுத்தி வரிசையாய் நிற்பார்கள். அந்த வரிசையில் நிற்பவர்களை விட அதிகமாக, உள்ளே வேலை செய்பவர்கள் இருந்தாலும் வரிசை மெதுவடை போல மெதுவாகத் தான் நகரும். கல்லாவின் முன்நின்றுதான் எதை வாங்குவது என்று சீரிய சிந்தனை செய்யும் தமிழரின் பாரம்பரியம் ஒருபுறம். தரும் சம்பளத்திற்கு அளவாக மெதுவாக சட்டப்படி வேலை செய்யும் பணியாள்கள் மறுபுறம். (சட்டப்படி சம்பளம் கொடுத்தால் பல தமிழ்மகன் நிர்வாக தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட வேண்டி வரலாம்!) நமது முறை வந்ததும் சத்தமாகவே 'தோசை, இட்லி combo, டீ' என்று மற்றவர்கள் பற்றிக் கவலையில்லாமல் ஓடர் கொடுத்து மீண்டும் அழுத்தமாய் ஒரு 'டீ'. காரணம் இருக்கிறது. பவ்வியமாக மெதுவாகப் பேசும் நமது பழக்கத்தை விளங்காமல், ஓடர் கொடுத்ததிற்கு மாறாகவே இந்த Fast Food Outlet களில் ஏதோவெல்லாம் கிடைக்கும். சட்டப்படி குறைந்த பட்சச் சம்பளத்திற்கு வந்து அழும் பணியாட்களைத் திட்டி என்ன செய்வது என்ற பரிதாபத்தில் விழுங்கித் தொலைத்தல் வழக்கமாகி விட்டது. வீட்டுக்காரியும் 'நீ கதைக்கிறது தங்களுக்கு விளங்குதில்லை' என்று தன் நண்பிகள் குற்றம் கூறுவதாக அடிக்கடி சொல்லிக் கொள்வாள். அந்நியப் பெண்களிடமும், மாற்றான் மனைவிகளிடமும் வழியும் பழக்கம் நமக்கில்லை! இந்த சுவாரஷ்யமான கதைகள் இன்னொரு முறைக்கு. ஒரு தடவை டீ கேட்க, கோப்பி வந்தது. அது தான் அந்த அழுத்தமான இரண்டாவது 'டீ!'. ஏனோதானே என்று எந்த வித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் 'தெண்டத் தேள்வைக்காக' காசை வாங்கி நமது கையில் பையைத் தள்ளும் பணியாட்களுக்குள், உரிமையாளர்களுக்கு உறவான பெண்ணின் கள்ளமில்லாத சிரிப்பு நம்மைக் கவர்ந்த ஒன்று! ஆனால் நீண்ட காலமாக மனதை உறுத்திய விடயம், இரண்டு டொலர்களுக்கு மேலாக அறவிடும் பத்துச் சதம். நமது பக்கமாய் தெரியும் திரையில் வரி பத்துச் சதம் என்று விழும். நமது அறிவுக்கு எட்டிய வகையில் ஒன்ராறியோவில் நான்கு டொலர்களுக்கு உட்பட்ட தயாரிக்கப்பட்ட உணவுகளுக்கு வரி கிடையாது. அதிலும் மாநில, சமஷ்டி வரிகள் இணைக்கப்பட்ட பின்னால் வரி அறவிடக் கூடாது தானே என்பது நமது எண்ணம். இதை முகத்தில் அடித்தால் போலக் கேட்க வேண்டும் என்று தோன்றினாலும், அது குறித்த வாதப் பிரதிவாதங்களால் பின்னால் நிற்பவர்களின் திட்டுக்கு ஆளாக நேரிடலாம் என்ற பயம். (பத்துச் சதத்துக்கு வந்து சண்டை பிடிக்கிறார்!). பக்கத்துக் கடையில் உடன் மீனும் உடன் ஆட்டிறைச்சிக்கும் போய் இன்னொரு கியூவில் நிற்கத் தானே போகிறார்கள்! தமிழர்களின் நலன் கருதி அவர்களுக்குச் சேவை செய்வதற்காக அதிகாலை ஆறுமணிக்கே கடையைத் திறந்து இந்த மலிவு விலைச் சாப்பாட்டை நம்மைப் போன்ற அன்னக்காவடிகள் அதிகமாய் பயன்படுத்தியதாலோ, அல்லது யாராவது விண்ணர்கள் அதை வாங்கிக் கொண்டு போய் கொஞ்சம் லாபம் வைத்து விற்கிறார்களோ, ஐந்து Combo க்களுக்கு மேல் வாங்கினால் இரண்டரை டொலர்கள் என்று எச்சரிக்கை வேறு. வழமையில் அதிகமாய் வாங்கினால் மலிவாகக் கிடைக்கும் உலகில்... இது தமிழ் மகன் தமிழ் மக்களுக்குச் சேவை செய்ய தொடங்கிய நிறுவனம்! இந்தச் சலுகையும் அதிகாலை ஆறு மணியிலிருந்து பத்து மணி வரைக்கும் தான். இது மூலக் கதை. பக்கக் கதை இப்போ... நம்ம வீட்டுக்கு அருகில் ஒரு உணவகம். அதற்கு ஒரு தனியான வரலாறு இருக்கிறது. அடிக்கடி கை மாறும். கொஞ்ச நாளைக்கு கடையை மூடி புது வடிவம் எடுக்கும் போது... பின்னுக்கு பிலாப்பழத்தோடு நின்றவர் நினைவு தான் வரும். ஏற்கனவே நிர்வாகத்திலிருந்த தமிழர் முடியாமல் இன்னொரு தமிழரின் தலையில் கட்ட... அவர் கொஞ்ச நாளைக்கு மல்லுக்கட்டுவார்... அடுத்த நிர்வாகத் தமிழன் 'அம்பிடும் வரைக்கும்!'. இப்போது புதிய நிர்வாகம் கையில் எடுத்திருக்கிறது. இந்தக் கடைக்கு அருகில் வெதுப்பகம் வேறு! அதைவிட இன்னொரு பலசரக்குக் கடையில் வாடகை போன்ற இன்னோரன்ன அநாவசிய செலவுகள் இல்லாமலும், மின்சாரச் செலவில்லாத வாடகை வீட்டில் இருந்து சமூக உதவிப் பணம் எடுத்துக் கொண்டே பக்கமாய் மேலதிக வருமானம் தேடுவோர் 'வீட்டில் வைத்து தயாரிக்கப்படும்' ஹோம் மேட் உணவுகளை தமிழ்ப் பத்திரிகைகள் வைத்தது போல வைத்து, பின்னேரம் வந்து மீதியையும் விற்ற பணத்தையும் அள்ளிச் செல்லும் வசதி உண்டு. இதற்கு அருகில் பருப்பு வடை எறியும் தூரத்தில் இன்னொரு முழு உணவகம். மறுபுறத்தில் ஒரு நடைபாலத்தைக் கடந்தால், ரொட்டியை எறிந்தால் பறக்கும் தட்டுப் போல போய் விழக்கூடிய தூரத்தில் இன்னொரு உணவகம். இப்படியாக ஒரே தொகுதியில் தமிழர்களின் வாக்குகளை அறவிட, மூன்று கட்சிகளிலும் போட்டியிடும் தமிழன் போல், நம் ஏரியாத் தமிழர்களின் நலன் கருதி ஏகப்பட்ட உணவகங்கள். பிரச்சனை என்னவென்றால்... புதிய கடை தற்போது ஆறு மணிக்கே திறக்கத் தொடங்கி விட்டது. அங்கேயும் இந்த தோசை, இட்லிக் கொம்போ... இலவச இணைப்பான டீ இல்லாமல் இரண்டரை டொலர்களுக்கு! இதைவிட, அறிமுக விலையாக பல உணவுகள் மலிவு விலையில். 'விசேட தள்ளுபடியாம்!'. வீட்டுக்காரிக்குச் சொன்னேன்... அது தீபாவளிக்கு புடைவை விக்கிறவங்கள் அல்லோ தள்ளுபடி விலை போடுறது. சாப்பாட்டுக்கு தள்ளுபடி போட்டதைக் கண்டதில்லையே! வேறு வழியில்லாமல் மற்ற முழு உணவகமும் ஆறு மணிக்கே திறக்க வேண்டிய கட்டாயம். வீட்டுக்காரி அன்றைக்கு அந்த உணவகத்துக்கு போன போது... தங்களிடம் வந்து தங்கள் விலைகளைப் பார்த்து விட்டுப் போய் மலிவாகப் போட்டிருப்பதாக அவர்கள் குறைப்பட்டிருக்கிறார்கள். அத்தோடு அவர்களும் அந்த தோசை, இட்லிக் கொம்போ அறிமுகம்! சனிக்கிழமை காலை வேலைக்குப் போகும் போது, வாங்கி வந்து வீட்டுக்காரி அன்பளித்தாள். ஒரிஜினல் போல சூடாக, பெரிதாக இல்லாமல், குளிரூட்டிக்குள் இருந்து எடுத்துத் தந்தது! ஆனால் பச்சை மிளகாய்ச் சம்பல் ஒரு தனி ருசி தந்தது. எவ்வளவு காசு? விசயம் தெரியாமல் வீட்டுக்காரியிடம் கேட்டேன். ஸ்டொக் பதில் வந்தது. 'சும்மா சாப்பாட்டில கணக்குப் பாக்காதை!' ஒப்பீடு செய்து அதிகளவுப் பயன்பாடு குறித்து ஆய்வு செய்வதற்கான முயற்சி முளையில் கிள்ளி எறிப்பட்டது. சரி... ரொட்டி பறக்கும் தட்டு போல போய் விழும் தூரத்தில் இருந்த உணவகத்திற்கு செல்ல வேண்டி நேர்ந்தது. (இப்படி அடிக்கடி நேருவதால் வீட்டில் சமையல் காட்சி கிடையாது என்றெல்லாம் கண் மூடித்தனமான முடிவுகளுக்கு வர வேண்டாம். அற்புதமாக சமையல் செய்யும் திறமை நமக்குண்டு!) வழமையில் சன சந்தடியோடு சனிக்கிழமைகளில் காணப்படும் கடை வெறிச்சோடிக் கிடந்தது. கடைக்காரர் வீட்டுக்காரியிடம் குறைப்பட்டார். அவை தான் ரொறன்ரோவில தொடக்கத்தில தொடங்கின ஆக்கள். நல்ல சாப்பாடு. இங்க வாற சனமே சொல்லிப் போட்டுப் போகுது... அங்க பார்க்கிங் இல்லாததால தான் உங்களிட்ட வாறம். இல்லாட்டி அங்க போயிடுவம். இப்போது ஊரில இனப்பிரச்சனை இல்லாததால் இனிமேல் கனடாவுக்கு வரும் தமிழர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்காது. இருந்தாலும் இருக்கும் கொஞ்சப் பேருக்கு 'சேவை வழங்க' எக்கச்சக்கமான தமிழ் மகன் நிர்வாகங்கள். ஏற்கனவே ஒருவன் கடையை வைத்திருந்து கொஞ்சம் சனசந்தடியைக் கண்டால் இன்னொரு தமிழனுக்குப் பொறுக்க முடிவதில்லை. தானும் 'அதுக்க வந்து ஓட்டுறதுக்கு' துடிக்கிறான். வெற்றிகரமாக நடக்கும் பல உணவகங்கள் கொஞ்ச நாளில் காணாமல் போவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. சனம் மலிவைப் பார்த்து வந்திறங்குகிறது என்றவுடன் தரத்தைப் பேணும் பழக்கம் குறைகிறது. அதற்குள் சனத்தைப் பார்த்தவுடன் பக்கங்களில் போட்டியாக புதுக்கடைகள் இறங்குகிறது. கடைசியில் ஒருவருமே பயன்படாமல் இலையான் கலைக்கும் நிலை வருகிறது. தமிழன் என்றாலே இது தான் நிலைமை. போராட்டம் என்றால் என்ன! தோசைக்கடை என்றால் என்ன! கொஞ்சம் வெற்றி தலைக்கனத்தை அதிகரிக்கிறது. வெற்றியைக் கண்டு போட்டி அதிகரிக்கிறது. அடுத்தவனை வெட்டி வீழ்த்தும் சிந்தனை அதிகரிக்க... கடைசியில் யாருமே வெற்றி பெற முடியாமல், முழு இனமுமே தோற்றுப் போகிறது. அதெல்லாம் இருக்கட்டும்! இன்றைக்கும் வழமை போல தோசை வாங்கப் போனேன். சனமே இல்லை. ஒருவருடன் ஒரு பணியாள் பிசியாக இருக்க... மற்ற பணியாள் தொலைபேசியில் பிசி! நம்மைக் கவனிக்க நீண்ட நேரத்தின் பின்னால்... உள்ளேயிருந்து வந்த பணியாள்! ஆகா, அரிய சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. சனநடமாட்டம் இல்லை! அந்த எக்ஸ்ட்ரா பத்துச் சத வரியின் பின்னணி பற்றிக் கேட்க வேண்டும்! எப்போதுமே போல, கணக்காக 2 டொலர் பத்துச் சதத்தை கையில் வைத்துக் கொண்டிருக்க... மத்திய வரி 5 வீதம், மாநில வரி 8 வீதம் என்றிருந்தது. ஆனால் பெண் கேட்ட பணம் இரண்டு டொலர் அறுபது சதங்கள். இதென்ன? ஆச்சரியத்தோடு பார்த்தால் விலைப்பட்டியலில் தோசை 2.49 டொலராக விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. என்ன அநியாயம்? (கியூ வரிசை காணாமல் போனதன் மர்மம் புரிந்தது! இனிமேல் நானும் பகிஷ்கரிப்புத் தான்!) அதற்கு ஐந்து வீதம் சமஷ்டி வரி வேறு. வந்து இணையத்தில் தேடினால், நான்கு டொலர்களுக்கு உட்பட்ட உணவுகளுக்கு ஒன்ராறியோ வரி மட்டும் தான் கழிவு. என்னுடைய தோசையில் ஐந்து வீதம் வரி வாங்கி, ஒரு வீதப் பணக்காரர்களுக்கு வரிக்கழிவு வழங்கிய... Harper has to go!

    Postad



    You must be logged in to post a comment Login