Recent Comments

    கண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சூரியதேவா!

    tears(எங்கள் நாளாந்த வாழ்வில் நடக்கும் அல்லது அவதானிக்கும் விடயங்கள் எங்களது மனதில் நெருடல்களை, உளைச்சல்களை ஏற்படுத்தும். சிந்தனையைக் கிளறும். யாருக்காவது சொல்ல வேண்டும் போலிருக்கும். நேற்று முதல் நடந்த சில விடயங்கள்... யாருக்காவது சொல்ல வேண்டும் போலிருக்கிறது.) நேற்று தமிழர் நிர்வாக நிறுவனம் ஒன்றிற்குப் போக வேண்டியிருந்ததால், நமது தொழில் நிறுவனத்தை ஒரு மணி நேரம் முன்னதாக மூட வேண்டியிருந்தது. தமிழர் நிர்வாக நிறுவனம் என்றால்... வேறென்ன? கடன் வசூலிப்புத் தான். நம் தலைவிதி. செய்து கொடுத்த வேலைக்குத் தர வேண்டிய பணம். மூன்று வாரங்களுக்கு மேல். இன்று போய் நாளை வா தான்! இன்றைக்கு ஆறு மணிக்கு முன்னதாக வாங்காவிட்டால், பணம் கிடைக்க வாரங்கள் எடுக்கலாம். அதற்காக, நமது வியாபாரத்தை ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக மூட வேண்டிய நிலை! நம்ம பிழைப்பு அப்படி! (இந்த விடயம் பற்றியும், இதற்கு முன்னால் நேற்று சந்தித்தவர்கள் பற்றியும் இன்னொரு தடவை எழுதுவேன்!) உள்ளே போய் 'உள்ளேன் ஐயா, அம்மா' என்று வருகையை அறிவித்த பின்னால், 'வரவேற்பு' பெற்று காத்திருக்கையில், அங்கே சேவை பெறக் காத்திருப்போருக்காய் காத்திருந்த ஒரு தமிழ்ப் பத்திரிகை. கண்டதும் கற்க... எட்டித் தூக்கினேன். ஈழ விடுதலைக்கான தூண்கள் தாங்களே எனவும், அதை விமர்சிப்போரைக் கீழ்த்தரமாகத் திட்டியும் எழுதி வரும் பத்திரிகைகளில் ஒன்று. ஆனால் யாருக்கும் தெரியாமல், இலங்கை போய், படைத்தரப்பு வாகனங்களிலேயே ஊர் போய், வீட்டில் குடியிருந்தோரைக் கிளப்பி, வேறு யாருக்கோ விற்று... மீண்டும் வந்து தமிழ்த் தேசியம் பேசல்! ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்ற அறமே இல்லாத பிறவி! தமிழ்த் தேசியம் பேசுகிறது. கேட்க ஊரில் பல பேர்! பத்திரிகையைத் திறந்தால், நம்ம ராசி! கஜேந்திரகுமார் சிரித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு வாக்களிக்கும்படி அவரது இலக்கமும் புள்ளடியும். இலங்கையில் நடக்கும் தேர்தலுக்கு கனடாப் பத்திரிகையில் விளம்பரம். ஒருவேளை தேர்தல் விதிமுறைகளை இலங்கைத் தேர்தல் ஆணையாளர் கனடாவில் அமுல்படுத்த முடியாதபடிக்கு தமிழனின் மூளை வேலை செய்கிறதோ? ஏன் கூட்டமைப்புக்கு வாக்களிக்கக் கூடாது என்று விலாவாரியான விளக்கங்களுடன்... அதிமூளைசாலிகள் குறைந்தது விளம்பரத்துக்கு 200 டொலராவது செலவிட்டிருப்பார்கள். பணம் கொடுக்காமல் விளம்பரம் வந்திருக்காது. காரணம், பணம் கொடுக்காத விளம்பரதாரர்களின் விபரம் அம்பலப்படுத்தப்படும் என்று அந்தப் பத்திரிகையில் முன்பு அறிவித்தல் வந்திருந்தது. இதைப்படித்து, ஊரிலிருந்து நடுச்சாமத்தில் நித்திரையைக் குழப்பி, பணம் கேட்டு, தொல்லைபேசி தரும் தொப்புள் கொடி உறவுகளுக்கு, 'நீ கஜேந்திரகுமாரை பாராளுமன்றம் அனுப்பினால் தான் காசு அனுப்புவேன்' என்று கனடியத் தமிழுணர்வாளர்கள் சொல்வார்கள் என்ற நம்பிக்கையாக இருக்கலாம். புரவிக் கூட்டணிக்கு பணம் சேர்த்து, இங்கிருந்து தொகையாக அனுப்பியவர்கள் பற்றி நேற்றுக் காலை தான் நண்பர் ஒருவர் சொன்னார். தங்களை ஈழ அரசியலில் மட்டுமன்றி, கனடிய அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்திகள் என்ற நினைப்பில் திரியும் சிலர் பணம் சேர்த்து அனுப்பினார்கள் என்றார். அதற்குத் தொகையாக அள்ளிக் கொடுத்த கொடை வள்ளல்கள், இப்படியாக நம்மைப் போல வாழ்வதற்கான உழைப்பு நடத்தும் தமிழர்களுக்கு, செய்த வேலைகளுக்கு ஒழுங்காகப் பணம் கொடுக்காதவர்கள் என்பது மட்டும் தெரியும். கடன் வசூலிப்பில் படும் பாடும் அவமானமும் அனுபவித்தால் தான் தெரியும்! சரி, தேர்தல் முடிந்து விட்டது. விளம்பரம் போட்ட இந்த விண்ணர்களின் மூஞ்சிகளை, இந்த வள்ளல்களின் வள்ளல்களை ஒரு தடவை பார்க்க வேண்டும் போலிருந்தது! பத்திரிகையைப் புரட்டினால், தமிழர்களைக் குழப்பும் விக்னேஸ்வரனின் அறிக்கை! தலையங்கம்! புலிக்கு வாலும் கூட்டமைப்புக்குத் தலையும், இரகசியமாய் சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு பின்புறத்தையும் காட்டி பிழைப்பு நீண்ட நாளைக்கு நடக்கும்! அதற்குள் கடன் வசூலிப்புத் தொகை வந்து சேர்ந்தது. புன்சிரிப்பு மாறாமல் வாங்கி வெளியே வந்தேன். * * * காரைத் திருப்பி வீதியைக் கடக்கும் போது ஒருவரைக் கண்டேன். முன்னாள் போராளி. கப்பலில் வந்து மேற்குக் கரை தட்டிய அகதி. புலிகளின் Camouflage எனப்படும் மறைவுரு உடையுடன்! அடிக்கடி இவரை இந்தப் பகுதியில் காண்பதுண்டு. இப்போதும் தன்னை ஒரு போராளியாக நினைத்துக் கொண்டிருப்பவராகவே தெரிவதுண்டு. அவரைப் பற்றிய என் அபிப்பிராயம் அவரைக் காணும் தோற்றத்தில் எழுந்ததே. தமிழர் நிர்வாக உணவகம் ஒன்றில் வேலை செய்கிறார் போலும். அந்த உணவகத்து நிர்வாகத் தமிழ் மகன் ஒரு தடவை நம்ம வீட்டுக்காரிக்கு இவர்கள் பற்றிச் சொல்லியிருந்தார். இவர்களில் சிலருக்கு தான் வேலை வழங்கியதாகவும், அதிர்ச்சிச் சம்பவங்களால் ஏற்பட்ட பாதிப்புக்குள்ளானவர்கள் போல... வெறும் நடைப்பிணங்களாகவே இருப்பதாகவும், சொல்வதைச் செய்யும் இயல்புகள் இல்லாதவர்களாயும் இருப்பது குறித்து குறைப்பட்டிருந்தார். ஊரில் இவர்களோடு சம்பந்தமில்லாத பகுதியிலிருந்து வந்திருந்தாலும், வீட்டுக்காரி பெரும் பரிதாபத்துடனும் அனுதாபத்துடனும் அவர்களின் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார். தோளில் பையுடனும், பெரும்பாலும் அதிரடித் தாக்குதல் உடையுடனும், தலைவரின் டிசைன் புலி இயக்க வரிவடிவம் கிடைக்காததால், அடிக்கடி காண்பதுண்டு. பார்க்கும் போதெல்லாம், வெறித்த பார்வையுடன், விபரமில்லாதவர் போல நடந்து போவார். Post Traumatic Stress இனால் பாதிக்கப்பட்டவர் போலவே தெரியும். எதையோ நம்பியோ, வீட்டிலிருந்து தாய்மாரின் பிடியிலிருந்து பலவந்தமாக இழுக்கப்பட்டோ யுத்தமுனைகளைக் கண்ட இவர், யுத்த முனையில் இறந்திருந்தாலோ, சயனைட் கடித்திருந்தாலோ, இங்கேயுள்ளவர்கள் மாவீரர் தினத்தில் கொழுத்தும் விளக்குகளில் ஒன்று இவருக்கும் உரியதாய் இருந்திருக்கும். உயிர் வாழ்கிறார், வெறுமனே! யாருக்காகப் போராடினாரோ, அவர்கள் யாரும் இப்படியானவர்களைக் கௌரவிப்பதாய் கண்டதில்லை. இவ்வாறு கடைசி யுத்தத்தில் இருந்த பலர் இங்கே உண்டு. கேட்டால், வெளிநாட்டில் உள்ளவர்களைத் திட்டிச் சபிப்பார்கள். அவர் தனது வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார். * * * இவர் போல, வான்கூவரில் வந்திறங்கிய முன்னாள் போராளிகள் உட்பட்ட அகதிகளுக்கு உதவி வழங்க இங்குள்ள ஒரு சட்டத்தரணிப் பிரமுகருக்குப் பணம் வழங்கியதாகவும், அவர் அதில் வரி வசூலித்த பின்னால் தான் அவர்களுக்கு பணம் கொடுத்தார் என்றும் எங்கோ எவரோ எழுதியிருந்தார்கள். அவர் விரைவில் கனடியப் பெரும் பிரமுகர் ஆகக் கூடும். இதைப் போலத் தான், இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு கஜேந்திரகுமார் முன்னணி மூலமாகப் பணம் அனுப்ப, முழுப்பணமும் கொடுக்கப்படவில்லை என்று அங்கு போய் நேரே நிலைமைகளைப் பார்த்த ஒருவர் குறைப்பட்டார் என முகப்புத்தகப் பதிவும், இல்லை, இல்லை, பணம் தவணைக் கட்டணமாக வழங்கப்படுகிறது என்று நியாயப்படுத்தும் பின்னூட்டமும் வந்திருந்தது. * * * இன்று காலை வங்கிக்குப் போனேன். என் முன்னால் தமிழர். முன்னாள் உலகத்தமிழர் இயக்கப் பிரமுகர். தாயகம் வெளியிட்ட காலத்தில், புலிகளின் மேலிடத்து அறிவுறுத்தலின் பேரில் எங்களைச் சந்தித்த உலகத்தமிழர் இயக்கப் பிரதிநிதிகள் இருவரில் ஒருவர். மற்றவர் ஏற்கனவே இயக்கத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு எவ்வளவோ காலம். எங்களோடு பேசிக் கொண்டிருந்த நேரம் முழுவதும் 'நீங்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறீர்கள்' என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். இவர் பற்றி இவரது பழைய சகாக்கள் சொல்லும்போது, 'என்ன பிரச்சனையென்றாலும், தனக்குப் பிடிக்காவிட்டால், இதை தலைமை ஏற்றுக் கொள்ளாது என்று விட்டுப் போய் விடுவார், மற்றவர்கள் முழுசுவார்கள்' என்பார்கள். தான் ஏதோ பிரபாகரனோடு நேரடித் தொடர்பில் இருந்த மாதிரி! பல வருடங்களுக்கு முன் ஒரு தடவை தாயகம் வினியோகிக்கப் போன போது, யாழ்ப்பாணப் பொருட்கள் இறக்குமதியில் புலிகள் ஏகபோகம் செலுத்திய நாட்களில், கடைகளுக்கு புதுவருடத்திற்கு வாழை இலை வினியோகம் செய்து கொண்டிருந்தார். தன் அலுவல் முடிந்து திரும்பியதும் என்னை அடையாளம் கண்டிருப்பார் போலிருக்கிறது. நாங்கள் இரண்டு பேருமே மொட்டை... இயற்கையும் செயற்கையுமாய்! நான் அலுவல் முடித்து வரும்வரை தனது வாகனத்தில் இருந்து காத்துக் கொண்டிருந்தார். நான் காணாதது போல, என் பாட்டிலேயே வந்து விட்டேன். * * * மனம் பெரிதும் சஞ்சலமாயிருந்தது. போராட்டத்திற்கு எனப் போய், தங்கள் வாழ்வைத் தொலைத்து இன்று நடைப்பிணமாகத் திரியும் அந்தப் போராளிகளைப் பற்றி கவலை கொள்வதா? அந்தப் போராளிகளின் தியாகத்தை வைத்து இங்கே பிழைப்பு நடத்துவோரைப் பார்த்துக் கோபம் கொள்வதா? அங்கு வாழும் மக்களின் மன உணர்வைப் புரிந்து கொள்ளாமல், தங்களின் விருப்பப்படி அங்கே மக்களும் அரசியல்வாதிகளும் ஆடுவார்கள் என்று நினைக்கும் வெத்துவேட்டுகள் பற்றிச் சிரிப்பதா? எங்கள் சமூகம் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் பத்திரிகை ஆரம்பித்து, இன்று கடன் வசூலிப்பில் அலையும் என்னுடைய தலைவிதியை நொந்து கொள்வதா? எங்களை விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறீர்கள் என்று சொன்னவர், எந்த உழைப்பும் இன்றி, போராட்டத்திற்காகச் சேர்க்கப்பட்ட பணத்தைச் சுருட்டி, இன்று பெரிய வியாபார நிறுவனம் ஒன்றுக்கும் சில கட்டடங்களுக்கும் சொந்தக்காரராய் வசதியாக வாழும் நிலையைப் பற்றி வாயே திறக்காமல், எங்களை எல்லாம் 'சிங்களவனிட்ட காசு வாங்கினவங்கள்' என்று வாய் கூசாமல் சொல்லும் எங்கள் இனத்தின் இழிநிலையைக் கண்டு கண்ணீர் வடிப்பதா? கண்ணீர் விட்டோ வளர்த்தோம், சூரியதேவா?

    Postad



    You must be logged in to post a comment Login