Recent Comments

    திமிங்கலங்களின் கரையொதுங்கலும் அலைப் பரிசோதனையும்

    கடலில் வாழும் திமிங்கலங்கள், டொல்பின்கள் தங்களுக்குள் உரையாடவும், தங்களது இரைகளையும், தங்களை இரையாக்கக் கூடியவற்றையும் அறிந்து கொள்ள Biosonar எனப்படும் அலைகளை அனுப்பி அவை தெறித்து வருவதை உணர்திறன் கொண்டு அறிகின்றன. Sound Navigation And Ranging  என்பதன் சுருக்கமே சோனார் எனப்படுகிறது. (லேசர் என்பது Light Amplification by Stimulated Emission of Radiation இன் சுருக்கம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?) கடலில் நீருக்குள்ளால் இந்த அலைகளை அனுப்பி தெறித்து வருபவற்றை உணர்ந்து, பகைவர்களின் நீர்மூழ்கிகளை அறிந்து கொள்ள கடற்படைக் கப்பல்கள், குறிப்பாக நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்த அலைகளை அனுப்பி தகவல் பரிமாறுகின்றன. மீன்பிடிக்கப்பல்கள் கூட இந்த அலைகளை அனுப்பி அது தெறித்து வரும் அளவை அளவிட்டு, அப்பகுதியில் உள்ள மீன்களின் தொகையைக் கணக்கிட முடியும். ஆனால் தொழில் நுட்பம் மூலமாக அனுப்பப்படும் அலைகள் டொல்பின்கள், திமிங்கலங்களின் உணர்திறனைக் குழப்புவதால் இவை கரையொதுங்குகின்றன என்ற சந்தேகம் நீண்ட நாட்களாக உண்டு. பெரும் சமுத்திரங்களில் வல்லரசுகள் தங்கள் இந்த அலைப் பரிசோதனைகளை நடத்தும் போது இந்த நிகழ்வு நடப்பதாக நம்பப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டுக் கரைகளில் ஒதுங்கும் திமிங்கிலங்கள் கூட, அந்தப் பகுதிகளில் நடத்தப்படும் Sonar அலைப்பரிசோதனை காரணமாக இருக்கலாம். எழுந்தமானத்திற்கு கூடங்குளம் அணு உலையைக் காரணம் காட்டுவது பொருத்தமானதாகப் படவில்லை. காரணம், புக்கிஷிமா அணு உலை வெடிப்பில் எவ்வளவோ கதிரியக்க நீர் வெளியேறியிருக்கிறது. அதன் பாதிப்பு வட அமெரிக்காவின் மேற்குப் புறங்கள் வரை வந்து சேர்ந்திருக்கிறது. இவ்வாறாக திமிங்கலங்கள் கரையொதுங்கியதாக பெரிய தகவல்கள் இல்லை. அணு உலைகளின் பாதிப்பு வேறு விதமானது. ஆனால் வெளியேற்றப்படும் கொதிநீரைக் காரணம் காட்டுவது கூடப் பொருத்தமானது இல்லை. இங்கே ரொறன்ரோவுக்கு அருகில் உள்ள அணு உலைகளால் ஏரிக்குள் ஏராளமான கொதிநீர் வெளியேறுகிறது. ஏரிக்குள் திமிங்கலங்கள் இல்லை என்பது தெரியும். ஆனால் அதனால் ஏரியில் உள்ள உயிரினங்கள் பெரிதாக அழிந்ததாகத் தெரியவில்லை. எனவே சும்மா முகப்புத்தகத்தில் கண்டதைப் பகிர்ந்து கொள்ளாமல் கொஞ்சம் மற்றப் பக்கங்களையும் பார்ப்பது நல்லது.

    Postad



    You must be logged in to post a comment Login