Recent Comments

    காரிருளில் ஒரு நம்பிக்கைக் கீற்று!

    RoseRoses need certain climatic conditions to bloom. They need certain temperatures, a certain amount of light, and the right soil and nourishment. Every now and then, a rose will surprise us by blooming in the off-season. • • • என் வீட்டு முற்றத்தில் முள்ளில்லா ரோஜா மரம் ஒன்று உண்டு. (கொல்லைப் புறத்திலும் இன்னொன்று) குழந்தைகள் சிரிக்கும் போது சிவக்கும் கன்னம் போல அசல் ரோஜா நிறத்தில், முதலிரவுப் படுக்கையில் வீசக் கூடிய சுகந்தமான நறுமணத்தோடு (இரவு நேரம் பிறரைப் போலே நம்மையும் கொல்லும் போது, இப்ப இதெல்லாம் நமக்கு ரொம்ப முக்கியம்!) மிகவும் உயரமான Climbing Rose. கோடை காலம் முழுவதும் பூத்துக் குலுங்கும். குளிர் தொடங்கி விட்டது. அதற்குள் ஒரு தடவை உறைபனியும் வந்து, பூக்கன்றுகள் எல்லாம் வெந்து கருகி விட்டன. நம் தெருவில் உள்ள கிழவிகள் எல்லாம் அக்கறையாக அவற்றைத் துப்புரவாக்கி, கொட்டும் பனிக்குத் தயாராகினாலும், இந்தக் குளிரில் இதெல்லாம் நமக்குச் சரி வராது. அடுத்த இலை தளிர் காலம் வரைக்கும் காய்ந்து கருகிய இவையெல்லாம் பனிக்குள் புதைந்தே இருக்கும். Mumஇருந்தாலும், வசந்தம் பிறக்க, வண்ண ஜாலம் காட்டும் Tulip கள் முதல் கடும் பனி கொட்டும் வரை பூக்கக் கூடிய Mums எனப்படும் குளிரைத் தாக்குப் பிடிக்கும் Chrysanthemums, New England Asters என பலவற்றைத் தேடி வந்து நட்டிருக்கிறேன். எனவே பனி கொட்டும் வரைக்கும் முற்றத்தில் ஏதோ ஒரு பூ இருக்கும். ரோஜா நிற கிறிசாந்திமம், நீல ஊதா நிற நியு இங்கிலாந்து அஸ்டர்கள் இரண்டும் ஆங்காங்கே பூத்துத் தொங்குகின்றன. இன்றைக்கு வேலைக்குப் புறப்படும் போது, காருக்கு வரும் போது, இலைகள் எல்லாம் உதிர்ந்து தண்டுகள் மட்டுமே குளிர் காற்றில் இறப்பதற்கு தயாராக இருக்கும் ரோஜாவில் ஒரு பூ... என்னை வா என்று அழைத்தது. மிகவும் ஆச்சரியமாக, நம்பாமல் அருகில் போனால், நமது முள்ளில்லா ரோஜா... முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன். பொன்னைப் போல் நின்று பூ என்னும் தன்னுள்ளம் தன்னை அள்ளித் தந்து கொண்டிருந்தது. கோடை காலம் என்றால் SLR Camera வைத் தூக்கி வந்து சுட்டுத் தள்ளியிருப்பேன். குளிர்! பேசாமல் செல்பேசிக் கமெராவில் தட்டினேன். தனக்கான சூழ்நிலைகள் சரியாக அமையாத நிலையிலும், (Adverse conditions) வழமையான காலத்தைக் கடந்தும் பூத்துக் குலுங்கி என்னை மகிழ்வித்ததன் காரணம்... மேலே ஆங்கிலத்தில் போட்டிருப்பது, என் செல்பேசியில் உள்ள ஜோதிட app ஒன்று நான்கு நாட்களுக்கு முன் என்னுடைய ராசிக்குப் போட்டிருந்த பலன். RoseRoses need certain climatic conditions to bloom. They need certain temperatures, a certain amount of light, and the right soil and nourishment. Every now and then, a rose will surprise us by blooming in the off-season. அதன் தொடர்ச்சியாக... You may think that a special thing you have been hoping for can't happen now because the stars are not aligned and the elements are not perfect for it, but you are in for a surprise. Make the most of it so that you can get something lasting out of it. வாழ்வில் நம்பிக்கை தளர்ந்து போய், எல்லாமே சூனியமாய் இருக்கும் போது, மனம் நம்ப விரும்புகின்றவைகளை நம்புகிறது. எதைச் செய்தாலும், எதிர்பாராத வகையில் எல்லாம் துன்பம் சூழ்ந்து, வெளியேறும் வழிகள் தெரியாமல் திணறிப் போய், 'ஏன் நமக்கெல்லாம் இப்படி?' என்று எந்தத் தெய்வத்திடம் போய் முறையிடுவது என்ற நிலை கிட்டத்தட்ட எல்லாருக்குமே வாழ்வில் அவ்வப்போது வந்திருக்கும். அப்போதெல்லாம் தளராமல் மனதில் நம்பிக்கையை வைத்திருக்க நாங்களெல்லாம் ஏதோ ஒன்றில் நம்பிக்கை வைக்கிறோம். தன்னில், கடவுளில் என ஏதோ ஒன்றில் நம்பிக்கை இல்லாது போனால், துன்பங்களை எதிர்கொள்ள முடியாமல் வேண்டாத முடிவுகளை எடுக்க நேரிடலாம். அப்போதெல்லாம் மனதுக்கு ஆறுதல் தரும் வகையில் ஏதோ ஒன்றைக் காணும் போது, சஞ்சலமடைந்த மனம் ஏதோ வழி வரும் என்ற நம்பிக்கையைக் கொள்கிறது. சூழ்நிலைகள் எங்களுக்குப் பாதகமாக இருந்தாலும் அதையும் மீறி நாங்கள் மலரலாம் என்ற நம்பிக்கையை அந்த ரோஜா இன்று காலையில் தந்தது போல இருந்தது! அதுவும் இந்த 13ம் திகதி, வெள்ளிக்கிழமையில்! Happy Friday, 13th, நண்பர்களே! Never give up hope! You can still bloom in the most adverse and harshest conditions!

    Postad



    You must be logged in to post a comment Login