Recent Comments

    கொல்ல வரும் விலங்கையும்…

    மைத்திரியை கொலை செய்ய முயன்று கைதாகி தற்போது மன்னிப்புப் பெற்ற கரும்புலி சிவராசா புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட செந்தூரனின் குடும்பத்தினரைச் சந்தித்தார் என்று செய்தி வந்திருக்கிறது. முன்னம் ஒரு காலத்தில் புலிகள் செய்த கைதிகள் பரிமாற்றத்தின் போது அருணா விடுதலையாகி வந்திருந்தார். புலிகளின் ஆரம்ப கால உறுப்பினராக இருந்த ஒருவரின் தகவல்படி, விடுவிக்கப்படும் வரைக்கும் புலிகளுக்கு அது அருணா என்று தெரியாதாம். கைது செய்யப்பட்ட அருணாவும் தன்னை யாரென்று அடையாளம் காட்டவில்லை. விடுவிக்கப்பட்ட அருணாவை பிரபாகரன் தன்னருகில் அண்டவே விடவில்லை. காரணம், சிங்கள அரசு தன்னைக் கொல்வதற்காக அவரைப் பயிற்றுவித்து அனுப்பியிருக்கிறது என்ற சந்தேகம்! இதனால் மனம் உடைந்த அருணா மன அழுத்தத்திற்கு உள்ளாகி, கிட்டத்தட்ட மனநோய் நிலையிலையே கந்தன் கருணை வீட்டில் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்களைப் படுகொலை செய்தார் என்று கூறப்பட்டது. இன்றைக்கு இந்த கரும்புலி வெளியே வந்திருக்கிறார். இந்தச் சந்திப்பும் இவ்வாறான ஒரு கறையிலிருந்து தன்னை விடுவிப்பதற்கான முயற்சியாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. வழமை போல, 'அவங்கள் சும்மா காரணமில்லாமல் விடுறாங்களே?' என்ற வியாக்கியானத்துடன், ஊரில் இன்னமும் புலிக் கனவுடன் இருப்போரும், புலன் பெயர்ந்த முகப்புத்தக மாவீரர்களும் இவரை புலனாய்வுப் பிரிவின் கையாளாகவே சித்தரிப்பார்கள். ஏற்கனவே புனர்வாழ்வுக்கு உள்ளாகி வெளியே வந்த புலி உறுப்பினர்களுக்கு நடந்த அதே வரவேற்பு எமது சமூகத்தில் இவருக்கும் கிடைக்கும்! ஒரு புறத்தில் புலனாய்வுப் பிரிவு என்ற வியாக்கியானம். மறுபுறத்தில் அவரோடு சேர்ந்து கொண்டால், புலி என்று தங்களையும் பிடித்துக் கொண்டு போய் விடுவார்களோ என்று பயம். கடைசியில், தங்கள் உயிரை தியாகம் செய்யப் போனவர்கள் எல்லாம் சமூகத்தில் தீண்டத்தகாவதர்களாக, வாழ்வைத் தொலைத்தவர்களாக இருக்க வேண்டும் என்பது எங்கள் சமூகத்து விதி. முன்னாள் போராளியின் இறுதிக்கிரியைக்குப் பணம் இல்லாத நிலை என்பது பற்றி எத்தனை புலி ஆதரவாளர்கள் குமுறி எழுந்தார்கள்? இங்கே பணத்தைச் சுருட்டிய போலிப் புலிகளை எத்தனை பேர் கேள்வி கேட்டார்கள்? சும்மா மொட்டையாக பற்றைக்கு கல் எறியாமல், இவர்கள் நேரடியாகவே இந்த அயோக்கியர்களை, பகிரங்கமாக அவர்களின் பெயர்களைச் சொல்லி, கேட்டிருக்க முடியும். அதெல்லாம் கேட்க முடியாத இவர்களால், கூட்டமைப்புக்கு சொம்பு தூக்கும் கதையும், காட்டியும் கூட்டியும் கொடுக்கும் கதையும் பேச முடியும்! தன்னுடைய உயிரை தியாகம் செய்வது ஈழத்திற்கான படிக்கல் என்று நம்பிப் போய் மாட்டுப்பட்ட ஒரு போராளியை, ஊரிலிருந்து துப்பாக்கி ஏந்தப் பயந்து தப்பியோடி வந்து இணையத்தில் போராட்டம் நடத்தும் மாவீரர்கள் புலனாய்வுப் பிரிவின் கையாள் என்னும் கேலிக் கூத்து எங்கள் சமூகத்திற்கு மட்டும் உரியது. அந்தத் தியாகத்தை அகதி மனுக் கோரிக்கைக்கும், மாவீரர் தின கொத்து ரொட்டி விற்பனைக்கும் பயன்படுத்த முடியும் இவர்களால் வேறு என்ன தான் செய்ய முடியும்? பிரபாகரனோடு ஆரம்பத்தில் இருந்த அருணாவை பிரபாகரன் தன்னைக் கொலை செய்யக் கூடும் என்று சந்தேகம் கொண்டு சேர்த்துக் கொள்ளாமல் இருந்தார். தன்னைக் கொலை செய்ய வந்து கையும் மெய்யுமாகப் பிடிபட்ட ஒருவரை மைத்திரி விடுவிக்கிறார். மைத்திரி தமிழ் மக்களின் விமோசனம், நம்பிக்கை நட்சத்திரம் என்பது நமது வாதம் இல்லை. ஆனால், தவறானது நடக்கும் போது வாயே திறக்காமல் ஊமையாக இருப்பவர்கள், சரியானது நடக்கும் போது ஏன் சந்தேகம் கொண்டு வியாக்கியானங்களைக் கற்பித்து துள்ளிக் குதிக்கிறார்கள் என்பது தான் நமது கேள்வி!

    Postad



    You must be logged in to post a comment Login