Recent Comments

    தலையைச் சுத்தாமல் வீட்டை விற்பனை செய்யுங்கள்

    Housesellingஉங்கள் வீட்டை விற்பதற்கு முகவரைத் தேடிப் பிடிக்கிறீர்கள். அதிலும் அவர் தனது சேவைகளுக்காக அறவிடும் பண வீதம் குறைவாக விளம்பரப்படுத்தியிருந்தால், ஆளை ஒரே அமுக்காக அமுக்கி, அவர் மூலமாக வீட்டை விற்பதற்கு பட்டியலிடக் கூடும். உங்கள் முகவர் வீட்டை விற்பதற்கு அறவிடும் விகிதம் அரசாங்கத்தினாலோ, ஒன்ராறியோ வீடுவிற்பனைக்கான சங்கத்தினாலோ தீர்மானிக்கப்படுவதில்லை. உங்கள் முகவர் உங்கள் வீட்டை விற்பதற்கு உங்களிடம் அறவிடும் பணத்தின் விகிதம் முதல் அவரது சேவைகள் வரைக்கும் நீங்கள் அவருடன் பேரம் பேச முடியும். உங்கள் முகவர் உங்களிடம், குறிப்பிட்ட தொகையாகவோ, உங்களின் வீட்டு விற்பனை விலையின் ஒரு குறிப்பிட்ட வீதத்தையோ, அல்லது இரண்டும் சேர்ந்த ஒரு தொகையையோ அறவிட முடியும். அதை நீங்களும் முகவரும் பேசித் தீர்மானிக்க முடியும். முகவருடன் சேர்ந்து செயற்படும்போது, உங்களிடம் அவர் அறவிடும் தொகை, வீதம், உங்கள் ஒப்பந்தத்தின் முடிவு தேதி, அவர் உங்களுக்கு வழங்கும் சேவைகள், அவருடைய வாடிக்கையாளர் என்ற வகையில் உங்களுக்கான கடமைகள் என்பனவற்றை ஒப்பந்தமாக எழுத்து மூலம் பெற வேண்டும். சட்டப்படி ஒப்பந்தங்களில் இந்த விபரங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதுடன், பின்னர் தவறான புரிந்துணர்வுகள் ஏற்படுவதை தவிர்க்கவும் இது உதவும். உங்கள் முகவர் உங்கள் வீட்டிற்கான விலையை, சுற்றாடலில் உள்ள வீடுகள் விற்கப்பட்ட தொகைகளுடன் ஒப்பிட்டு, நிர்ணயிக்க உதவுவார். அத்துடன், வீட்டின் பெறுமதியை அதிகரிக்க என்ன திருத்த வேலைகள் செய்யப்பட வேண்டும் என்பதை தனது அனுபவம் மூலமாக உங்களுக்குத் தெரியப்படுத்துவார். உங்கள் வீடு எவ்வளவு காலம் உங்கள் முகவரினால் சந்தைப்படுத்தப்பட வேண்டும் என்பதை ஒப்பந்தத்தில் தீர்மானித்துக் கொள்ளலாம். சில வீடுகள் விற்பதற்கு நீண்ட நாட்கள் எடுக்கலாம். ஒப்பந்தம் கைச்சாத்தானால், அந்தக் காலம் வரை நீங்கள் வேறு யார் மூலமாகவும் வீட்டை விற்க முடியாது. உங்கள் வீட்டை விற்க முகவர் எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பார், எங்கே விளம்பரங்கள் செய்வார், திறந்த வீட்டு நிகழ்வுகள் எத்தனையை, எப்போது நிகழ்த்துவார் என்பதை முன்கூட்டியே தீர்மானிப்பது நல்லது. உங்கள் வீட்டை அழகுபடுத்தி, வாங்குவோரைக் கவர்வதற்கு, ஸ்டேஜிங் செய்வதற்கு அவர் வழி செய்யலாம். அல்லது புகைப்படப் பிடிப்பாளர், வீடியோப் படப்பிடிப்பாளர் மூலமாக உங்கள் வீட்டைப் படம் பிடித்து இணையம் மூலமாக விளம்பரம் செய்யலாம். திறந்த வீடுகளில் அச்சிட்ட பிரசுரங்களை வழங்கலாம். இவற்றுக்கான செலவுகளுக்கு யார் பொறுப்பு என்பதை முன்கூட்டியே தீர்மானித்து ஒப்பந்தத்தில் உள்ளடக்குவது நல்லது. சிலநேரம் உங்கள் வீடு விற்க முன்வந்த விலையை விட அதிகமான விலைக்கு விற்கப்படலாம். அப்போது முகவர்கள் தங்கள் கட்டண விகிதத்தை, வீட்டு விலை அதிகரிக்கும்போது, தகுந்த வீதத்தில் குறைக்கலாம். குறைந்த விலைக்கு விற்கும்போது, ஒரு குறிப்பிட்ட வீதமும், அதிக விலைக்கு விற்கும்போது, அதை விட குறைவான வீதத்தையும் அறவிட முடியும். சில நேரம் வீடு விற்கும் முகவரின் நிறுவனமே, வாங்குபவரின் முகவரின் நிறுவனமாகவும் இருந்தால், அந்த விபரம் உங்களுக்கு எழுத்து மூலமாகத் தெரிவிக்கப்பட வேண்டும். அதைக் காரணம் காட்டி, விற்பனைக் கட்டண வீதத்தைக் குறைக்குமாறு நீங்கள் கேட்கலாம். இந்த விடயங்களை முன்கூட்டியே சிந்தித்து, விபரமாக எழுத்து மூலமாக பெற்றுக் கொண்டால், பின்னால் ஏற்படும் சச்சரவுகளையும், திட்டுதல்களையும் (தலையைச் சுத்தி தலையில கட்டிப் போட்டான்!) தவிர்த்துக் கொள்ளலாம்.

    Postad



    You must be logged in to post a comment Login