Recent Comments

    (மர)மண்டைத் தலைவர்கள்

    வீட்டுக்காரியை வைத்தியரிடம் அழைத்துப்போய், காத்திருப்பு அறையில் பொழுது போகாமல், செல்பேசியில் செய்தி வாசிக்க... ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தேசியத் தொலைக்காட்சியில் நேயர்களின் கேள்விகளுக்குப் நேரடிப் பதில் அளித்திருக்கிறார். ஒரு பன்னிரண்டு வயதுப் பிள்ளை கேட்டிருக்கிறது. உக்ரெய்ன் ஜனாதிபதி, துருக்கிய ஜனாதிபதி இரண்டு பேரும் நீரில் மூழ்கினால், யாரை முதலில் காப்பாற்றுவீர்கள்? புட்டினின் பதில்... 'தாங்களாகவே நீரில் மூழ்கி இறக்க வேண்டும் என்று யாரும் விரும்பினால், அவர்களைக் காப்பாற்றுவது முடியாத காரியம்' இந்தப் பெரிய ஜனாதிபதியிடம் இப்படியான கேள்வியா என்று யாரும் தடை செய்யவும் இல்லை. குழந்தைத் தனமான கேள்வி என்று புட்டின் பதில் அளிக்காமல் விடவும் இல்லை. பிரேமதாசா கூட படிப்பறிவில் தேசியத் தலைவர் அளவு தான் இருந்திருப்பார். ஆனால் நல்ல நாவலாசிரியர். சாதாரண மக்களைக் கவரக்கூடிய சிறந்த பேச்சாளர். ஒரு தடவை பி.பி.சி ஆங்கில சேவையில் உலகெங்குமிருந்து கேள்வி கேட்ட நேயர்களுக்குப் பதில் அளித்திருந்தார்... மொழிபெயர்ப்பாளர் உதவியின்றி! தேசியத் தலைவரும் ஒரு தடவை பேட்டி கொடுத்திருந்தார். அந்தப் பேட்டிக்கு முன்னான பந்தாக்களைப் பார்த்தால், ஏதோ ஐ.நா சபையில் உரையாற்றப் போவது மாதிரி இருக்கும். கடைசியில் தமிழில் கேட்ட கேள்விகளுக்கே அவருக்கு பாலசிங்கம் மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டிய நிலை. அதைப் பார்த்து பெருந் துயருற்று, 'அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்' கட்டுரையில் 'தன்னுடைய கருத்தை ஒரு முழுமையான வசனமாகவேனும் ஒப்புவிக்க முடியாத ஒரு மனிதனின் துப்பாக்கிக்குப் பயந்து நாங்கள் எல்லாரும் மெளனமாக இருந்தோம்' என்று எழுதியிருந்தேன். கடந்த வாரம் நண்பர் அஜீவன் அந்த பேட்டியை முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்த சட்டத்தரணி நண்பர் ஒருவர் போன் அடித்தார். 'என்னால ஒரு பத்து நிமிசத்துக்கு மேல பாக்கேலாமல் போச்சுது. நீங்கள் முந்தி எழுதேக்கை, ஏதோ சும்மா எழுதுறியள் எண்டு நினைச்சன், இப்பதான் தெரியுது, இதைப் பாத்திட்டு எழுதியிருக்கிறியள்' என்றார். தலைவர்களுக்கு மண்டையில் போட மட்டும் தெரிந்தால் போதாது. மண்டைக்குள் உள்ளதை மரமண்டைகளுக்கு விளங்கக் கூடியதாக சொல்லவும் தெரிய வேண்டும். புட்டினைக் கேட்ட பிள்ளையை விடக் கேவலமான ஊடகவியல் கூட்டம் தான் தலைவரின் மண்டைக்குள் இருந்த மாதிரி கதை விட்டு புலன் பெயர்ந்த கூட்டத்தை ஏமாற்றிக் கொண்டிருந்தது. கடைசியில் தன்னைப் பற்றிச் சொல்லப்பட்ட பொய் புகழ்ச்சிகளை நம்பி தலைவரும் 'மோசம் போய்' விட்டார். புட்டின் சொன்னது போல, 'தாங்களாகவே நீரில் மூழ்கி இறக்க வேண்டும் என்று யாரும் விரும்பினால், அவர்களைக் காப்பாற்றுவது முடியாத காரியம்' அது மத்தியதரைக் கடலாக இருந்தால் என்ன, கருங்கடலாக இருந்தால் என்ன... நந்திக்கடலாக இருந்தால் என்ன!

    Postad



    You must be logged in to post a comment Login