Recent Comments

    ஆடு நனையுது என்று அழும் புலன் பெயர்ந்த ஓநாய்கள்!

    தமிழ்க் கைதிகள் விவகாரம் ஒரு Tragicomedy ('துன்பியல் நகைச்சுவைச் சம்பவம்!?') லெவலுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் தேசியத் தலைவர் வெள்ளைக் கொடி ஏற்றியதிலிருந்து, இராணுவத்தினரால் புலிகள் எனக் கைது செய்யப்பட்டவர்களின் நிலை இன்று இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளினதும் புலன் பெயர்ந்த தமிழுணர்வாளர்களினதும் பந்தாட்டமாக மாறியிருக்கிறது. இன்றைக்கு இந்த சிறைக்கைதிகள் பற்றி புலன் பெயர்ந்தவர்களுக்கு திடீரென்று முளைத்த அக்கறை தான் கொஞ்சம் இடிக்கிறது. இது வரை காலத்தில் இந்தக் கைதிகள் ஏன் இராணுவத்தினரிடம் மாட்டுப்பட வேண்டி வந்தது என்ற அடிமுடிக் கேள்வியை எல்லோரும் மிகக் கவனமாகத் தவிர்த்துக் கொண்டு, வெறும் நோயின் குறிகளுக்கு மருந்து பூசும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். இந்தக் கைதிகளை வைத்து அரசியல் நடத்தவே கூட்டமைப்பு உட்பட்ட அரசியல்வாதிகளும் புலன் பெயர்ந்தவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். தன்னை நம்பி விடுதலைக்கென வாழ்வை ஒப்படைத்தவர்களையும், கடைசி நேரத்தில் பலி கொடுக்க இழுத்து வந்தவர்களையும் நட்டாற்றில் (நடுக்கடலில்?) விட்டு விட்டு, வெள்ளைக்கொடி தூக்கிய அந்த தீர்க்கதரிசி மாவீரன் பற்றி எவருக்கும் பேச விருப்பமில்லை. நிலைமை கட்டுக்கு மீறிய நிலையில், 'சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் ஆயுதங்களை மெளனிக்கச் செய்கிறோம்' என்று ஒரு வார்த்தையை, கடைசி வரை தொடர்பில் இருந்து சர்வதேச ஊடகங்கள் மூலமாகச் சொல்லியிருந்தால், இன்றைக்கு தலைவர் முதல் இந்த கைதிகள் வரைக்கும் உயிரோடு இருந்திருப்பார்கள். தன்னை நம்பியவர்கள் எக்கேடு கெட்டாலும் கெட்டுப் போகட்டும் என எதிரியிடம் கை விட்டு விட்டு, அமெரிக்கக் கப்பல் வந்து தன்னையும் முக்கியஸ்தர்களையும் காப்பாற்றும் என்று நம்பி இறுதி வரைக்கும் இரகசியப் பேச்சுவார்த்தை நடத்திய ஒருவரைப் பற்றிப் பேசாமல் இந்தப் புலன் பெயர்ந்தவர்கள் கூட்டமைப்பைத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இன்று சிறையில் வாடுவதற்கு என்ன கூட்டமைப்பா காரணம்? அந்த தீர்க்கதரிசியின் வழிநடத்தலால், கடைசியில் புலிகளின் முக்கிய தளபதிகள், முக்கியஸ்தர்கள் எல்லாம் சரணடைந்தும், மக்களோடு மக்களாய் முகாம்களில் இருந்த புலிகள் மக்களால் காட்டிக் கொடுக்கப்பட்டும், கைதிகளாகும் அவல நிலையே வந்தது. இராணுவ முற்றுகைக்குள்ளும், புலிகளின் இரும்புப் பிடிக்குள்ளும் சிக்கிய நிலையில் தப்பியோட முயன்ற மக்களை புலிகள் சுட்டுக் கொன்ற போது, 'மக்கள் எங்களுடனேயே இருக்க விரும்புகிறார்கள்' என்று சொன்ன நடேசன் கடைசியில் வெள்ளைக் கொடியோடு வந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். அதை யுத்தக் குற்றம் என்று துள்ளிக் குதித்தவர்கள் அதற்கு முன்னால், நடேசனிடம் புலிகள் மக்களைச் சுட்ட யுத்தக்குற்றம் பற்றிக் கேட்டதேயில்லை. அருட்தந்தை பிரான்சிஸ் மைக்கேல் ஜோசப் அடிகளாருடன் சேர்ந்து சரணடைந்த முக்கிய தலைவர்களும் மற்றவர்களும் என புலிகளின் தளபதிகள், முக்கியஸ்தர்கள் அனைவரும் இன்று வரைக்கும் எங்கே என்று தெரியாத நிலை. அவர்கள் சித்திரவதை விசாரணைகளுக்குட்பட்ட வீடியோக்கள் வெளிவந்த போது துள்ளிக் குதித்தவர்கள் இன்று வரைக்கும் 'இதோ, அவர்கள் உயிரோடு உங்கள் கைகளில் இருந்ததற்கான வீடியோ ஆதாரம் இருக்கிறது. அவர்களை வெளியே காட்டு, அவர்களை அரசியல் கைதிகளாக அங்கீகரி' என்று கோரிக்கை விடுத்ததில்லை. (எப்போ வந்த பாலச்சந்திரனின் குண்டுகளால் சல்லடை போடப்பட்ட படத்தைப் பார்த்து மெளனமாக இருந்து விட்டு, பின்னர் உயிரோடு இருந்த படம் வந்ததும் கொதித்தெழுந்தவர்கள் இவர்கள்!) இதில் முக்கியமான காரணம், இவர்கள் 'புனிதப் போராளிகள், எதிரிகளிடம் சரணடையாமல் குப்பி கடிப்பார்கள்' என்று நம்பியவர்கள் வெள்ளைக்கொடியோடு சரணடைந்த கோபம் மட்டும் தான். எதிரியின் கையில் அகப்படாமல், தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டு வீரம் படைக்காமல் கோழையாகி விட்டார்கள், 'புலிகளை உயிரோடு பிடிக்க முடியாது' என்ற மாயை உடைந்து விட்டதே, அவர்களின் படத்தை வைத்து மாவீரர் தின களியாட்ட விழாக்களில் பணம் புரட்ட முடியாதே என்பது தான் புலன் பெயர்ந்து பத்திரமாக குடும்பம் நடத்தும் மாவீரர்களின் கோபம். கடைசி நேரத்திலும், தடுப்பு முகாம்களிலும் வைத்துக் கைது செய்யப்பட்டவர்கள் எல்லோருமே இன்றைக்கு சிறைக்குள் இல்லை. அது இன்னொரு துயரம். பணவசதி படைத்தவர்கள், வெளிநாட்டு உறவுத் தொடர்புள்ளவர்கள் பலர் அரசாங்கத்துடன் இணைந்தால் துரோகிகளாக்கப்பட்ட இயக்கங்கள் மூலமாக வெளியில் எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்குப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். இவர்களில் பலர் புலிகளில் உயர்மட்டத்தவர்கள். அப்போதெல்லாம் இந்த சிங்கள அரசின் கைக்கூலிகள் இவர்களுக்கு துரோகிகளாகத் தெரிந்ததில்லை. இந்தக் கைக்கூலிகளுக்கு தாங்கள் கைக்கூலி கொடுத்து அவர்களை வெளியே எடுத்தவர்கள் பலர். தமிழ்ச்செல்வனின் மனைவி. பிள்ளைகளை வெளியில் கொண்டு போவதற்கு கருணா உதவி செய்ததாக வந்த செய்தியைக் கேட்டு முறுகிக் கொண்டு திரிந்தவர்கள் பலர். பின்னால் கே.பியும் உதவி செய்தார் என தகவல்கள் வந்தன. பின்னர் கொழும்பு சிறைகளில் உள்ள பல புலிகளை அவர்களின் வெளிநாட்டு உறவுகளும் பணவசதியுள்ள உறவுகளும் கோத்தபாயா வரைக்கும் பணம் செலுத்தி வெளியே கொண்டு வந்த கதைகள் உண்டு. அவ்வாறான தொடர்புகளிலிருந்து கிடைத்த தகவல்படி, அந்த முன்னாள் போராளிகளை விடுவிக்க இவர்கள் சென்ற போது, மற்றக் கைதிகள் 'எங்களையும் வெளியில எடுங்கோ, எங்களுக்கு ஒருத்தரும் இல்லை. நாங்களும் போராடத் தானே போனனாங்கள்' என்று கூக்குரல் இடுவார்களாம். இப்படியெல்லாம் மிகவும் மேல் மட்டத் தொடர்புகள் ஊடாக பலர் வெளியில் எடுக்கப்பட்டார்கள். இனிமேல் புலிகள் தலையெடுக்க முடியாது என்பது முடிவாகத் தெரிந்த அரசு தரப்பினர், இதை வைத்து தமிழர்களின் பணத்தை உறுஞ்சுவதற்காக எடுத்த நடவடிக்கை இது. தற்போதும், புலிகள் மீண்டும் தலையெடுப்பார்கள் என்று பாவ்லா காட்டுவதற்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களே இவர்கள். இயக்கத்தில் தலைமையைத் தவிர வேறு எவரும் முடிவுகள் எடுக்க முடியாத நிலையில், கட்டளைகளை நிறைவேற்றுவதை மட்டுமே செயற்பாடாய் கொண்டு, அதை நிறைவேற்றாத பட்சத்தில் வதை முகாமில் சித்திரவதைக்குள்ளாகும் நிலைக்குள் இருந்தவர்களை பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் அரசு தடுத்து வைத்திருக்கிறது. இதை விட மோசமான குற்றங்களைப் புரிந்த ஜே.வி.பியினர் பொதுமன்னிப்புப் பெற்று இன்றைய அரசியலில் உயர் மட்டங்களில் கூட உள்ளார்கள். இப்போது கடைசியாக மிஞ்சி இருப்பவர்கள் வெளியில் வருவதற்கு இரகசியமாக பணத்தை இறைக்க வசதிகள் எதுவுமே இல்லாதவர்கள். அதனால் தான் இன்றைக்கு பிணை வழங்கப்பட்ட போதும், அவர்களைக் கையேற்க யாரும் இல்லாததால் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கைதிகளில் முக்கியமானவர் தமிழினி. இவருக்குக் கூட இவரின் மேல் சிங்கள வழக்கறிஞர் ஒருவர் இரக்கப்பட்டு பணம் வாங்காமல் ஆஜராகியே வெளியில் வர முடிந்தது. தமிழ்ச்சட்டத்தரணி பிரச்சனைப் பட்டதற்கு புலன் பெயர்ந்தவர்களின் அழுத்தம் காரணம். சயனைட் குடித்து மாவீரர்கள் ஆகவில்லை என்பதற்காக புலன் பெயர்ந்தவர்களால் கை கழுவி விடப்பட்டவர்கள் மீது இன்றைக்கு இவர்களின் அக்கறையின் நோக்கம்... இவர்களை வைத்து அரசாங்கத்தைக் குற்றம் சாட்ட முடியும் என்பதையும் விட, இத்தனை நாட்களுக்குள் வெளியே எடுப்போம் என்று உறுதிமொழி அளித்த கூட்டமைப்பை கூண்டில் ஏற்றுவது தான். இன்றைக்கு இந்தக் கைதிகளை பிணையெடுக்க ஆளில்லை என்றதும், அதற்கும் கூட்டமைப்பைக் குற்றம் சாட்டவே இவர்கள் முனைகிறார்கள். இதுவரை நாளில் புலன் பெயர்ந்தவர்கள் மட்டத்தில் இந்த கைதிகளை விடுவிப்பதற்கான சட்ட முயற்சிகள் எதுவும் அமைப்பு ரீதியாக முன்னெடுக்கப்படவில்லை. நாடு கடந்த அரசாங்கம் உட்பட! நாராயணனுக்கு எறிந்து செருப்பை இழந்த தொப்புள் கொடி உறவு பிரபாகரனுக்கு சட்ட உதவிக்குப் பணம் தேவை என்றால் அள்ளிக் கொடுக்க இன்றைக்கும் தயாராக இருக்கும் கூட்டம், போராட்டத்தினால் தங்கள் வாழ்வை இழந்த இந்த போராளிகளுக்கு பணம் சேர்த்து எந்த சட்ட முயற்சியிலும் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. போராட்டத்திற்கு எனச் சேர்க்கப்பட்ட பணம் இன்று யார் யாரை எல்லாம் கோடீஸ்வரர்கள் ஆக்கியிருக்கிறது. அவர்கள் யார் என்பது இவர்கள் எல்லோருக்குமே தெரியும். சுமந்திரனைக் கேள்வி கேட்கும் காடையர் கூட்டத்திற்கு இந்த சமூக விரோதிகளை ஏன் கேள்வி கேட்க முடியாமல் இருக்கிறது? அவ்வப்போது போராட்டத்திற்கு சேர்க்கப்பட்ட பணத்தை மக்களிடம் கையளிக்க வேண்டும் என்று மொட்டை நோட்டீஸ் விடுவதைத் தவிர இவர்கள் எதுவுமே செய்யவில்லை. தங்கள் வாழ்வை தியாகம் செய்தவர்கள் பிணையில் வர பணம் இல்லாமல் மீண்டும் சிறைக்குச் செல்ல, அவர்களை வைத்து பணத்தைச் சுருட்டிய சமூக விரோதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதா என்று கேட்டு, இவ்வாறு திருடப்பட்ட பணத்தைப் பெற்று இவர்களால் அந்த கைதிகளுக்கு உதவியிருக்க முடியாதா? சுமந்திரனைக் கேள்வி கேட்க வரிந்து கட்டிக் கொண்ட போன இவர்களால், இந்த திருடர்களின் வீடுகள், வியாபார நிலையங்கள் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்ய முடியாதா? இலங்கைத் தூதுவரகங்களுக்கு முன்னால் நின்று ஆர்ப்பாட்டம் செய்து, இங்குள்ள ஊடகங்களினதும் அரசுகளினதும் கவனத்தைத் திருப்பியிருக்க முடியாதா? முடியும். ஆனால் அவர்களின் நோக்கம் இந்தக் கைதிகளின் விடுதலை அல்ல. அந்தக் கைதிகளைப் பகடைக்காய்களாக வைத்து இலங்கை அரசையும், கூட்டமைப்பையும் குற்றம் சாட்டுவது மட்டுமே. அதையும் இலங்கைக்குப் போக வசதியாக, முகப்புத்தகத்தில் முகம் காட்டாமாலும், ஆர்ப்பாட்டங்களுக்குத் தொப்பியோடும் வந்து மாவீரர் விளையாட்டுக் காட்டுவதற்கே இவர்கள் முனைந்து கொண்டு நிற்கிறார்கள். இவர்கள் உண்மையாகவே அந்த கைதிகளின் விடுதலையில் அக்கறை உள்ளவர்கள் என்றால், கூட்டமைப்பை நம்பவோ எதிர்பார்க்கவோ தேவையில்லை. இவர்களின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரமான சட்டத்தரணி கஜேந்திரகுமார், 'நீ சட்டத்தரணி என்றால் நான் நீதிபதி' என்று சுமந்திரனுக்கே சவால் விட்டதாக இவர்கள் புல்லரிக்கும் நீதிபதி விக்னேஸ்வரனின் உதவியுடன் பாரிய அளவில் இந்த கைதிகளின் விடுதலைக்கான சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்கட்டும். (அதுசரி, கைதிகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் தான் பிணையெடுக்க வேண்டும் என்று இருக்கிறதா? கஜேந்திரனும் விக்னேஸ்வரனும் எங்கே போனார்கள்?) அந்த நடவடிக்கைக்கு பணம் தேவை என்று இங்கே போராட்டத்தைப் பணத்தைச் சுருட்டியவர்களைப் பகிரங்கப்படுத்தி, அவர்களிடம் பணத்தைக் கேட்கட்டும். அந்தப் பணத்தைக் கொண்டு, அந்தக் கைதிகளை பிணையில் எடுக்கட்டும். சும்மா அரசாங்கம் நிபந்தனையில்லாமல் விடுவிக்க வேண்டும், ஜனாதிபதி பொதுமன்னிப்பு கொடுக்க வேண்டும், உறுதியளித்த கூட்டமைப்பு பதில் சொல்ல வேண்டும் என்றெல்லாம் கதை விடாமல், இந்த சட்ட முயற்சிகளில் தொடங்கட்டும்! அதன் மூலம் அந்நிய நாடுகளில் வந்தேறிகளாக இருந்து கொண்டு, கருத்துச் சுதந்திரத்தினதும் பரிமாற்றத்தினதும் நெறிமுறைகளை அறியாமல், அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுக்கும் காண்டுமிராண்டிகளாகவும் காடையர்களாகவும் இல்லாமல், பகுத்தறிவும் மனித நேயமும் உள்ள மனிதர்களாக தங்களை நிருபிக்கலாம். அதன் பின்னால் இவர்கள் அந்தக் கைதிகள் மீது கொண்ட அக்கறையின் நேர்மையை நாங்கள் கண்டு கொள்ளலாம். (கூட்டமைப்பு வழங்கிய உறுதி மொழியை நியாயப்படுத்துவதோ, கூட்டமைப்பின் அரசியலையோ, செயற்பாடுகளையோ நியாயப்படுத்துவதோ இங்கே நோக்கமில்லை. கூட்டமைப்புக்கும் நமக்கும் எந்த பந்தமும் கிடையாது. அங்கு மக்கள் பெரும்பான்மையாகத் தெரிந்தெடுத்தவர்களை, தாங்கள் பணம் கட்டிய குதிரைகளால் வெல்ல முடியாமல் போனதை ஏற்றுக் கொள்ள முடியாத கொதிப்பில், கேட்பவர்கள் எல்லாம் கேனயர்கள் என்ற நினைப்பில் கூட்டமைப்பை குற்றம் சாட்டிக் கொண்டிருப்பவர்களைக் கண்டு பொறுக்க முடியாமல் போனதன் விளைவுகளே இவையெல்லாம்!)

    Postad



    You must be logged in to post a comment Login