Recent Comments

    ஒன்ராறியோவில் சம்பளம் அதிகரிக்கிறது

    payraiseஒன்ராறியோவில் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சச் சம்பளத்தின் அளவு அதிகரிக்கிறது. வருகின்ற அக்டோபர் முதல் 25 சதத்தினால் இந்த தொகை அதிகரிப்பதால், இனி மேல் வேலைகளுக்கான குறைந்த பட்சச் சம்பளம் 11.25 டொலர்கள் ஆகிறது. பொப் ரே முதல்வராக இருந்த என்.டி.பி கட்சி ஆட்சியிலிருந்த போது தொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட்டிருந்த பின்னால், கன்சர்வேடிவ் கட்சியின் மைக் ஹரிஸ் ஆட்சியின் போது எந்த வித சம்பள அதிகரிப்புகளும் வழங்கப்படவில்லை. கன்சர்வேட்டிவ் ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளே அமுல்படுத்தப்பட்டிருந்ததால், பல தடவைகள் தொழிலாளர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டங்கள் செய்திருந்தனர். பின்னர் லிபரல் கட்சியின் டால்ட்டன் மக்கின்ரி ஆட்சிக்கு வந்த பின்னால் நீண்ட காலத்தின் பின் சம்பள அதிகரிப்பை அமுலாக்கியிருந்தார். அதற்கும் முதலாளிகள் எதிர்ப்பு அதிகமாய் இருந்ததால் படிப்படியாக இந்த அதிகரிப்பு இடம் பெற்றது. 2003 இலிருந்து இன்று வரைக்கும் லிபரல் ஆட்சியில் ஒன்பது தடவைகள் சம்பள அதிகரிப்பு நிகழ்ந்திருக்கிறது. தற்போதைய லிபரல் அரசு பணவீக்கத்திற்கு தகுந்தது போல சம்பளமும் அதிரிக்கக்கூடியதான சட்டமூலத்தை நிறைவேற்றி யிருந்தது. அதன் பிரகாரமே தற்போதைய அதிகரிப்பு நிகழ்கிறது. புதிய சட்டத்தின்படி வருடாந்தம் பணவீக்க அளவுக்கேற்ப சித்திரை மாதம் அதிகரிப்பு அறிவிக்கப்பட்டு, ஐப்பசி மாதம் சம்பளம் அதிகரிக்கப்படும். தொழிலாளர்களுக்குச் சார்பான இந்த சம்பள அதிகரிப்பு முதலாளிகளின் நலன்களை மட்டுமே கணக்கெடுக்கும் கன்சர்வேட்டிவ் அரசில் சாத்தியமாகுமா என்பது சந்தேகமே. நீண்ட நாட்களுக்கு முன் ஆட்சி செய்த கன்சர்வேட்டிவ் முதல்வர் பில் டேவிஸ்க்குப் பின்னால், முழுச் சமூகத்திற்கும் பயன்படக் கூடிய விடயங்களைச் செய்யும் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சிக்கு வரவேயில்லை. பல வேலை இடங்களில் இந்த சம்பள உயர்வு குறித்து தொழிலாளர்களுக்கு கடிதங்கள் வழங்கப்பட்ட போது, தங்கள் நிறுவனமே தங்கள் உழைப்பை மெச்சி இந்த சம்பள அதிகரிப்பை வழங்குவதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அரசாங்கமே இந்த சம்பள அதிகரிப்பை கட்டாய சட்டமாக்கியிருக்கிறது என்பது பலருக்குத் தெரியவில்லை. ஆயினும் இந்த சம்பள அதிகரிப்பு தமிழ் மகன் நிர்வாக நிறுவனங்களில் கைக்காசுக்கு வேலை செய்வோருக்கு கிடைக்காது என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

    சுவடி ஆவணி-புரட்டாதி 2015

    (சுமந்திரனால் தான் ஐ.நா இன அழிப்பை அங்கீகரிக்கவில்லை என்பது போன்ற பல்வேறு பயனுள்ள விடயங்களைத் தெரிந்த கனடியத் தமிழர்கள் பலர் இவ்வாறான விடயங்களைத் தெரியாதுள்ளனர். உங்கள் உறவுகள் யாராவது இங்கேயிருந்தால் அவர்கள் இந்த விடயங்களை அறிந்து கொள்வதற்காக பகிர்ந்து கொள்ளலாமே!)

    Postad



    You must be logged in to post a comment Login