Recent Comments

    ஒன்பதாம் நம்பர் படுத்தும் பாடு

    number9பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி

    ஈழத்தமிழர்களின் சிந்தனையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களை தன்னுடைய கருத்துக்களின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, முழு இனத்தையுமே தன்னைப் பின் தொடர வைத்தவர் யார் என்று கேட்டால், நீங்கள் எல்லோருமே சொல்வீர்கள், அது எங்கள் மேதகு தேசியத் தலைவர் அவர்கள் தான் என்று. கியூறியஸ்க்குத் தான் ஊரோடு ஒத்தோடும் பழக்கமோ, கும்பலோடு கோவிந்தா போடும் பழக்கமோ இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

    அது தேசியத் தலைவர் அல்ல, பண்டிட் சேதுராமன்!

    முழு ஈழத்தமிழ் இனத்தையுமே கண்மூடித்தனமான விசுவாசத்துடன் தன்னைப் பின்தொடர வைத்த பெருமை பண்டிட் சேதுராமனுக்குத் தான் உண்டு.

    உங்களில் பலருக்கும் அவரைத் தெரிந்திருக்க நியாயமில்லை. இன்று பிள்ளைக்கோ, கடைக்கோ பெயர் வைப்பதாயின் ஈழத்தமிழன் முதலில் அணுகுவது எண் சோதிடரைத் தான். இந்த எண் சோதிடர்கள் எல்லாம் நிபுணர்களானது, இந்த பண்டிட் எழுதிய எண் சோதிடப் புத்தகத்தை வைத்துத் தான்.

    எழுபதுகளில் வந்த இந்தப் புத்தகம் ஈழத்தமிழர்களிடம் இதுவரை பல்லாயிரக்கணக்கான பிரதிகள் போய்ச் சேர்ந்திருக்கின்றன. போட்டோக்கொப்பி தான்! பின்னே என்ன தமிழன் அந்த விலைக்குப் புத்தகம் வாங்கியா படிப்பான்? அப்படி வாங்க வைப்பதாயின் நீங்கள் வெளியீட்டு விழா நடத்தி, பணச்சடங்கு வைத்தால் தான் உண்டு.

    தமிழ் புத்தக வரலாற்றிலேயே அதிகம் போட்டோக்கொப்பி எடுக்கப்பட்ட புத்தகம் என்ற பெருமை அதற்குத் தான் உண்டு. இப்படியாகத்தானே அந்தப் புத்தகத்தைப் படித்த பலரும் அதில் நிபுணர்கள் ஆகி விட்டனர். இன்றைக்கும், நாற்பத்தைந்து வரைக்கும் கன்னி கழியாமல் இருக்கும் எந்த ஆடவனிடமும் போய், ஒரு பெண் இருக்கிறாள் என்று சொன்னால் முதல் கேட்பான், என்ன நம்பர் என்று தான். அதற்குப் பின்னால் தான் சாதி என்ன என்ற கேள்வி இருக்கும்.

    'ஆறாம் நம்பரோ, அட அவள் எல்லாரோடையும் நல்லா மூவ் பண்ணுவாள், பிறகு ஆரோடையும் ஓடிப் போனால்...' அண்ணாச்சி காலம் பூராக கன்னியாகவே இருப்பதற்கு இந்த பண்டிட்ஜி தான் காரணம்.

    இன்ன திகதியில் பிறந்தால் இன்ன இயல்பு இருக்கும் என்ற முழுமையான விசுவாசத்தோடு நம்புகிற ஒரு சமயப் புத்தகமாகத் தான் இந்த சேதுராமனின் எண் சோதிடம் மாறியிருக்கிறது.

    எண் சோதிடம் என்பது ஒன்றும் சேதுராமன் கண்டுபிடித்தது அல்ல. மகாபாரதத்தில் ஒரு பஞ்சபாண்டவன் சோதிடன் என்றும், அவனுக்கு எண் சோதிடம் தெரியும் என்றும் கூறப்படுகிறது. அவனும் தேசியத் தலைவர் மாதிரி அதிட்ட தேதி பார்த்துத் தான் தாக்குதல்கள்... சே... யுத்தம் செய்ய திகதி குறித்தான்.

    ஏற்கனவே பல்வேறு பண்டைய கலாசாரங்களில் பாவிக்கப் பட்டிருந்தாலும், மேற்குலகில் செய்ரோ எனப்படும் ஐரிஷ்காரர் மூலமாக இது புகழ் பெற்றது. செய்ரோ இந்தியா சென்று சோதிடர்களுடன் தங்கி சோதிடத்தைக் கற்று, ஐரோப்பாவிலும் ஹொலிவூட்டிலும் பிரபலங்களுக்கு கைரேகை, சோதிடம் பார்த்தவர். இவர் எண் சோதிடம் பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். இவரது முறைப்படி, ஆங்கில எண் சோதிடத்தில் ஆங்கில அகர வரிசைக்கு ஒன்றிலிருந்து இலக்கமிடத் தொடங்கி, ஒன்பதை அடைந்ததும் மீண்டும் ஒன்றிலிருந்து தொடங்கியே எழுத்துக்களுக்கு இலக்கம் இடப்பட்டது.

    சில எண்களினதும் திகதிகளினதும் அதிஷ்டத்தன்மை என்பதில் பல்வேறு ஐதீகங்கள் உள்ளன. 13ம் இலக்கம் துரதிஷ்டமானது என்பது மேற்கத்திய நம்பிக்கை. 13 இலக்க மாடிகளும் வீடுகளும் விரும்பத் தகாதன. அப்போலோ 13 ல் நடந்த விபத்துப் பற்றி பலரும் எண் சோதிடத்தையே உதாரணம் காட்டுவர். 13ம் திகதி வெள்ளிக்கிழமையில் வந்தால், தொலைக்காட்சி செய்தியில் அதைப் பற்றி ஆய்வே வரும். 666 என்பது பைபிளில் சாத்தானைக் குறிப்பது என்றும் அமெரிக்காவில் உள்ள 66ம் இலக்க பெருந்தெருவின் அதிகம் விபத்து நடக்க சாத்தான் காரணம் என்றும் நம்புவோர் உள்ளனர். இலக்கம் 7 அதிட்டத்தோடு சம்பந்தப்படுத்தப்பட்டது. சீனர்களுக்கு இலக்கம் நான்கைக் குறிக்கும் சொல் தான் மரணத்தையும் குறிப்பதால் அதை அவர்கள் தவிர்ப்பர். எட்டு அவர்களுக்கு அதிட்ட எண்.

    பிரேமதாசாவும் எண் சோதிடம் பார்த்து, சிறிலங்காவை ஷ்றி லங்காவாக்கப் போய் ஒரு வாரத்திற்குள் குண்டு வெடிப்பில் இறந்தார். பிரச்சனை என்னவெனில் சேதுராமனும் சீனர்களும் மற்ற எல்லா வகை எண் சோதிடர்களும் அதிட்ட எண், துரதிஷ்ட எண் எது என்பதில் ஒரே கருத்தோடு இல்லை.

    சேதுராமன் இராணுவத்தில் பணி புரிந்தவர். தனக்கு அம்மாள் அருள் கிடைத்தே இந்த வித்தையைக் கண்டறிந்ததாகத் தான் தெரிவிக்கிறார். இவர் ஆங்கில எழுத்துக்களுக்கு வழங்கிய இலக்கங்கள் வித்தியாசமானவை. அருள் கொடுத்த அம்மாள் சில நேரம் ஆங்கில அம்மாளாக இருக்கக் கூடும். அதனால் தான் தமிழ் எழுத்துக்களுக்கு அம்மாள் இலக்கமும் பலனும் கொடுக்கவில்லை.

    பிறந்த திகதியும், அதன் மாத வருடக் கூட்டுத் தொகையும், பெயரில் உள்ள எழுத்துக்களுக்கான இலக்கங்களின் கூட்டுத் தொகையும் மனிதர்களின் இயல்புக்கான காரணங்கள் என்றும் பெயரை மாற்றுவதன் மூலம் துன்பங்கள் நீங்கி இன்பமும் செல்வமும் பெருகும் என்பது தான் சேதுராமனின் தத்துவம். அங்கே தொடங்கியது தான் இந்த புதிய தலையிடி.

    இதில் உண்மை, பொய் எது என்பது பற்றி கியூறியஸ்க்கு பிரச்சனை இல்லை. ஆனால் இந்த புதிய வேதாகமத்தை முழுமையாக விசுவசித்து நடத்தும் கூத்துத் தான் தாங்க முடியவில்லை.

    சேதுராமன் சொன்னது பெயரை மாற்றும்படிதான். அதற்காக ஆங்கிலத்தை மாற்றும்படி சொன்னதில்லை. ஆனால் மூலைக்கு மூலை கிளம்பிய சோதிடக் கலாநிதிகள் ஆங்கிலத்திலேயே கை வைக்கத் தொடங்கி விட்டார்கள்.

    நம்மாட்கள் பெயரைச் சரியாக்க முடியாவிட்டால் அதனோடு வரும் ஆங்கில வார்த்தைகளையே மாற்றுகிறார்கள். கடைக்குப் பெயர் வைக்கும்போது வைரவர் மீற் மார்க்கட் என்ற பெயராயின் ஆட்டிறைச்சி வாங்குவோரின் ஒரே தெரிவாக இருக்க வேண்டுமாயின், வைரவரின் பெயரை நீங்கள் மாற்றலாம். மீற் மார்க்கட்டில் கை வைக்க முடியாது. ஆனால் நம்மாளுகள் ஆங்கிலச் சொற்களையே மாற்றப் போக, கடைக்கு வரும் அடுத்த இனத்தவர் தலையைச் சொறிய வேண்டி ஏற்படுகிறது. (வைரவர் ஆட்டிறைச்சி மீட் மார்க்கட்டுக்கான முழுமையான காப்புரிமமும் கியூறியஸ்க்கே உரியது. பெயரில் எழுத்துக்களை மாற்றி போட்டோக் கொப்பி மோசடி செய்ய முயல்வோர், கனடிய நீதிமன்றங்களில் எண் சோதிடம் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதை இத்தால் அறியக் கடவீர்!)

    ஆனால் சில கடைகளைப் பார்க்கும் போது, பெயர் மாற்றத்திற்கு எண் சோதிடம் காரணமில்லை என்பது தெரியும். அண்ணாச்சி கடை பெயரில் கடன் வாங்கி வங்குரோத்தா(க்)கி, தற்போது அதே கடையை அதே பெயரில் வேறு எழுத்துக்களுடன் கொண்டு வந்திருக்கிறார் என்பது புலனாகும்.

    இந்த எண் சோதிடம் தமிழ்நாட்டில் பெரிதாக கைக்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை. ஆளாளுக்குப் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர் தான் வைக்கிறார்கள். ஈழத்திலும் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால் புலன் பெயர்ந்த தமிழன் தான் இதைப் படாத பாடு படுத்துகிறான்.

    பிறந்த திகதி ஒன்பதாக இருந்தால் சாதனை படைப்பான் என்பதற்காக, தாயின் வயிற்றைக் கிழித்து பிள்ளையை ஒன்பதாம் திகதி பிறக்க வைக்கலாமா என்று யோசித்தவர்களும் உண்டு. ஊசி போட்டு வேகமாக்கலாமா என்று டாக்டர்களை விசாரித்தவர்களும் உண்டு. 'என்னடா, இவள் சொல்லச் சொல்ல முக்குறாள் இல்லை' என்று மனைவியைத் திட்டியவர்களும் உண்டு.

    சரி, பிள்ளை தான் பிறந்து விட்டது. அதன் பின்னால் பெயர் வைக்கும் படலம் ஆரம்பமானதும் தான் தொடங்கும் கூத்து. நிபந்தனைகள் ஒவ்வொன்றாக வரும். பெயர் இன்ன எழுத்தில் தான் தொடங்க வேண்டும் என்று சாத்திரியார் சொல்வார். இத்தனை எழுத்தில் இருக்க வேண்டும் என்று நிபந்தனை வரும். பிறந்த தேதி, கூட்டெண் எல்லாம் பார்த்து, பெயர் வைக்கத் தொடங்க இந்த விதிமுறைகளுக்குள் அடங்கும் எந்தத் தமிழ்ப் பெயரும் கிடைக்காது.

    அதற்குள் பிள்ளைகளுக்குப் பெயர் ஷன், ஷா, ஜன், ஜா என்றான விகுதிகளில் முடிய வேண்டும் என்ற பாஷனும் சேர்ந்ததும், தொல்லை தொடங்கும். பிள்ளைகளுக்கு எந்த விதமான காரண, காரியமும் இல்லாத, எந்த அர்த்தமும் இல்லாத பெயர்கள் தோன்றும்.

    இதெல்லாம் இந்த ஒன்பதாம் நம்பர் படுத்தும் பாடு. பிறந்த தேதி என்னவோ, அதன் பலன் என்னவோ, ஒன்பதாம் நம்பரில் பெயர் வைத்தால் சகல துன்பங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் செல்வங்களும் புகழும் நிறைந்து பிள்ளைகள் எல்லாம் சாதனை படைக்கும் என்ற எண்ணம்.

    சும்மா போங்கய்யா, கியூறியஸ் கூட ஒன்பதாம் நம்பர் தான். என்னத்தை அப்படிக் கிழிச்சிருக்கிறான்? ஏதோ கேட்டையில் பிறந்தவன் கோட்டையைப் பிடிப்பான் என்ற கதை மாதிரி! கடைசியில் ஒற்றைக் கொம்பில் தான் முடிந்தது!

    இப்படியாகப் பெயர் வைக்கும் கூத்து இங்கே ஒரு இருபத்தைந்து வருடமாகத் தான் நடக்கிறது. இதில் எண் சோதிடப்படி, பெயரைத் திரித்து அதிர்ஷ்டப் பெயரில் தொடங்கப்பட்ட பலசரக்குக் கடை சுப்பர்மார்க்கட்டுகள் எதுவுமே இன்றைக்கு இல்லை. அவ்வப்போது புதிதாக முளைப்பனவும் மழைக் காளான்கள் போலத் தலை மறைவாகின்றன. இதில் எதுவுமே கனடிய சுப்பர்மார்க்கட் தொடர் கணக்கில் வளர்ந்ததாயும் வரலாறு இல்லை.

    நீண்ட நாளைக்கு முன்னால், யாழ்ப்பாணத்தில் ஒரு சிறிய எண் சோதிடப் புத்தகம் வந்தது. எண்பது ரூபாய்க்கு விற்ற சேதுராமன் புத்தகத்தைச் சுருக்கி, வங்கியில் வேலை பார்த்த எண் சோதிடர் ஒருவர் எழுதி மலிவாக விற்றிருந்தார். அவரும் தானும் தனது பெயரை மாற்றியதைப் பற்றியும் எழுதியிருந்தார். பின்னாளில் கனடாவில் உணவகம் ஒன்றில் வேலை செய்த தமிழர் ஒருவர் வேற்றினத்தவரால் தாக்கப்பட்டதாக ஆங்கிலப் பத்திரிகைகளில் செய்தி வந்தது. வந்து சில நாளில் இவர் சமூக உதவிப் பணமும் எடுத்துக் கொண்டு வேலையும் செய்த விவகாரமும் வெளியில் வந்தது.

    கியூறியஸ்க்குப் பலத்த சந்தேகம்... அந்த எண் சோதிட ஆசிரியரும் இந்தத் தமிழரும் ஒரே ஆள் என்பது. இருவருக்கும் ஒரே பெயர் காரணம் மட்டுமல்ல, வேறு பின்னணிகளும் உண்டு. அவரும் பெயரை மாற்றியதால் புகழ் பெற்றாரோ என்னவோ?

    ஆனால், என்னவோ இந்த இருபத்தைந்து வருடங்களாக இங்கே பிறந்து அதிர்ஷ்ட எண் பார்த்துப் பெயர் வைத்த பல இளந்தலைமுறையினர் இன்று பெரும் பணமும் புகழும் பெற்று விளங்குகின்றனர். கிறடிட் காட் மோசடியில் பணமும் பெற்று, அடிக்கடி பொலிசாரால் கைது செய்யப்பட்டு பத்திரிகையில் பெயர் வந்து பிரபலமாகும் அளவுக்கு புகழும் பெற்று விளங்குகின்றனர். இவர்களை உழைக்காமலேயே பொருள் சம்பாதிப்பவர்களாயும், சாதனை எதுவும் படைக்காமலேயே புகழ் பெறுவர்களாயும் ஆக்கியிருப்பது இவர்களை ஈன்றோர் முற்பிறவியில் செய்த தவப்பயனும் எண் சோதிடமும் அன்றி வேறேது.

    அங்கே தேசியத் தலைவரை விசுவசித்த ஒரு தலைமுறை எதிர்காலமே இல்லாமல் யுத்தத்தில் அழிந்தாலும், இங்கே தன்னை நம்பிய இன்னொரு தலைமுறையை செல்வமும் புகழும் நிறைய வைத்த எண் சோதிடத்திற்கும் பண்டிட்டிற்கும் ஈழத்தமிழினம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது.

    எனவே, இனிமேல் மற்றத் தமிழர்களும் சேதுராமன் புத்தகத்தை போட்டோக்கொப்பி அடித்து தங்கள் பிள்ளைகளுக்கு ஒன்பதாம் நம்பரில் பெயரும் வைத்து... அடுத்தடுத்த தலைமுறைகளும் பல்'கலை'யும் கற்று சீரும் சிறப்பும் பேரும் புகழும் பெற்று, பல்லாண்டு காலம் வாழ்ந்து தமிழினத்திற்கு பெருமை சேர்ப்பார்களாக.

    பூபாளம் 20.12.2012

    Save

    Postad



    You must be logged in to post a comment Login