Recent Comments

    Kaci Kullmann Five: நோபெல் சமாதானத்தின் மறைவு

      க.கலாமோகன்

    எமது பத்திரிகை வாசிப்புகளுள் செய்தித்துவம் எப்படி உள்ளது என்பது எனது பத்திரிகைத் தொழில் அனுபவத்தில் தெரிந்தது, இப்போதும் தெரிகின்றது பத்திரிகைகள் வாசிப்பால். பல பத்திரிகைகளை வாசிக்காமல் எவை செய்திகள் என்பதைத் தெரியமுடியாது. ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு கட்சிகள், மதங்கள், குழுக்கள் போல. ஓர் நாட்டில் 10 தினப்பத்திரிகைகள் வருகின்றன. இந்தப் பத்தினது பக்கங்களிலும் தமக்கு உரிய செய்திகளே வருகின்றன எனலாம். இந்தத் “தமக்கு உரிய"வைகள் இவர்களது கட்சிகளது, சுய லாபங்களது ஆதரவையே காட்டும். அரசியலின் நிர்ணயிப்புகள் பலவேளைகளில் செய்தித்துவத்துக்கு எதிராக இருந்தாலும், இந்த நிர்ணயிப்புகளுக்கு இடைஞ்சல் தரும் செய்திகள் மறைக்கப்படக்கூடாது.

    அண்மையில் நான் The New York Times பத்திரிகையை வாசித்தபோதுதான் Kaci Kullmann Five வினது மரணம் மீது அறிந்தேன். நோபல் பரிசுகளில் எனக்கு விருப்பம் இல்லாதது ஒரு பக்கம். மறு பக்கமோ இவரது மரணம் செய்தித்துவம் வாய்ந்தது. இந்த அழகிய பெண் 1951 இல் பிறந்து 2017 இல் 65 வயதாகியபோது மார்புப் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். அரசியலில் தோய்ந்து மந்திரியாக இருந்தபின்னர் தனிப்பட்ட தொழிலில் இருந்த இவர் நோர்வேயின் பழைய பிரதமர் Thorbjørn Jagland இருந்த நோபல் சமாதானக் கமிட்டியில் 2003 ஆம் ஆண்டு தலைவி ஆனார். அமெரிக்காவின் பிரபல சஞ்சிகையான Forbes, இவர் உலகில் உள்ள பிரபலமான பெண்களில் ஒருவராகக் கருதியுள்ளது.

    2003 ஆம் ஆண்டிலிருந்து தனது மரணத்தின் வரை சமாதான நோபல் பரிசை வழங்கிய Kaci Kullmann Five மீது “சமாதானம்” பற்றியும் எழுதலாம். இப்போது செய்தி மீது எழுதுதல் என்பது எனக்கு அவசியமாக்கப்படுகின்றது. The New York Times இனை வாசித்துவிட்டு The Guardian பத்திரிகையை விழிகளால் தட்டினேன். அங்கும் நோபல் சமாதானக் கமிட்டியினது தலைவியின் மரணம் மீது ஏதும் இல்லை. எப்படி இந்தச் சேதி இல்லை எனக் கேட்டவாறு Le Monde, Le Figaro, Libération….. எனும் பிரெஞ்சுப் பத்திரிகைகளைத் தட்டினேன். அவைகளில் இந்த மறைவுச் சேதி இல்லை. தமிழ்ப் பத்திரிகளில் இந்தச் செய்தியே இல்லை.

    எமது உலகச் செய்தித்துவம் மோசமான போக்குகளையே தனக்குள் வைத்துள்ளது. ஒருவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு கிடைத்தவுடன் அனைத்துப் பத்திரிகைகளும் இந்த செய்தியைத்தான் எழுதும். இந்தப் பரிசினை வழங்கும் உரிமையை எடுத்த Kaci Kullmann Five வினது மரணம் மீது செய்திகள் நிறைய இல்லை. இவர் மீது மட்டுமல்ல செய்திகளை அழிக்கும் கலையில் விண்ணர்களாக உள்ளன நிறையப் பத்திரிகைகள். முதலாளித்துவத்தின் காப்பாளர்களாகப் பத்திரிகைகள் வந்துகொண்டிருப்பது மனிதத்தின் அடிப்படை உரிமைகளை மெது மெதுவாக அழிக்கும் . எது எப்படியோ நமக்குத் தேவையானவை பத்திரிகைகள். எந்தப் பத்திரிகையை வாசித்தல் என்பதைத் தெரிவு செய்தல் வாசிப்பாளனுக்குச் சிக்கலைத் தரும்.

    ஓர் செய்திகளின் தளமாக உலகம் உள்ளது. அரசியல் அதிகாரத்துக்கான செய்திகளை எழுதும் சில பத்திரிகைகள் நெருக்கடிகளைக் காண்கின்றன. ஆனால் செய்தி உரிமைகளை அழிக்கத் துடிக்கும் போக்குகள் முதலாளித்துவ நாடுகளில் மேல் எழுவதை இப்போது காணலாம். அமெரிக்காவின் Donald Trump ஜனநாயகத்தின் எதிரிகளாகப் பத்திரிகைகள்தாம் உள்ளன எனக் குறிப்பிடுகின்றார். இந்தக் குறிப்பு அடக்குமுறைதான் இவரது ஆட்சியின் உச்சம் என்பதை விளக்குகின்றது.

    Kaci Kullmann Five மீதான குறிப்பு சிறு குறிப்பு எழுதுவதுதான் என் திட்டம். இவர் நினைவால் செய்தித்துவம் மீதான சிறு குறிப்புகளை எழுதியுள்ளேன். இவருக்கு அஞ்சலிகள்.

    Save

    Postad



    You must be logged in to post a comment Login