Recent Comments

    பிரமாண்டங்கள் பற்றிய பிரமிப்பு

    MSVஜோர்ஜ் இ.குருஷ்சேவ்

    சாமத்திய வீடு, கலியாண வீடு, அற்கோம், பணச்சடங்குகளில் முழங்கித் தள்ளும் சவுண்ட் சேர்விஸ்களினதும், வைரவர் வேள்விக்கு ஐஸ்கிரீம் விற்க வரும் வானில் உள்ள, பாட்டே விளங்காத சிறிய 'மணிக் கோண்'களினதும், வீட்டில் இல்லாமல் (வாங்கப் பணம் இல்லாததால் தான்!)... பஸ்ஸிற்கு காத்திருக்கும் இலங்கையரின் தேனீர்க் கடையிலும், சைக்கிளில் போகுமிடமெல்லாம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே போவதற்கு வசதியாய், வீட்டுக்கு வீடு இருந்த வானொலிப் பெட்டிகளில் இருந்து, கிடுகு வேலிகளைப் பிரித்துக் கொண்டும் வரும் இலங்கை வானொலியினதும் புண்ணியத்தில் தமிழக சினிமாப் பாடல்கள் கேட்ட காலங்களில் எல்லாம் பொங்கும் பூம்புனலாய் எங்கள் உள்ளத்தை நிறைத்தது எம்.எஸ்.வியின் பாடல்கள் தானே. சினிமா இசை என்பதை நாட்டார் பாட்டு கணக்கில் எங்கள் எல்லாரையும் முணுமுணுக்க வைத்தவர் அவர். அந்த நேரத்தில் கட்டுரைக்கே மெட்டமைக்கக் கூடிய இன்னொரு மேதையான கே.வி.மகாதேவன் இருந்தாலும், விவரம் தெரிந்த காலத்தில் நமக்குத் தெரிந்தது எம்.எஸ்.வி தான். ராமமூர்த்தியுடனான பிரிவெல்லாம் பின்னர் தான் தெரிய வந்தது. அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்றிருந்த கண்ணன் குழுவினரில் ட்ரம் வாசித்த நேசம் தியாகராவை 'விஸ்வநாதனின் மாணவன்' என்றே விளம்பரம் செய்வார்கள். அவர் விஸ்வநாதனின் குழுவில் ட்ரம் வாசித்திருக்கக் கூடும். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என பாடல்களை நாங்கள் இணைத்து உருவகித்து, காதல் தவிப்பிலும், 'காத்திருந்தவன் பெண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போன' துயரத்திலும் நொந்த எங்கள் இதயத்து ரணங்களைக் குணமாக்கியது அவரது பாடல்கள் தானே. 'உண்ணவென்று உணவை வைத்தால் தன் முகத்தைக் காட்டும்' 'பாவாடை தாவணியில் பார்த்த உருவங்களை' நினைந்து நினைந்து நெஞ்சம் உருகி 'அவள் பறந்து போனாளே' என்று பாடினால், பக்கத்திலிருப்பவன் 'போனால் போகட்டும், போடா' என்று பாட வசதியாக காதலின் சகல பரிமாணங்களுக்கும் பாட்டுத் தந்த கண்ணதாசனோடு கூட்டணி வைத்த கோமான் தானே அவர். காதல் பண்ணவும் தோல்வியின் துயரத்திலிருந்து மீளவும், பட்டுத் தெளிந்து தத்துவம் பேசவும் என அவர் தந்த பாடல்கள் எத்தனை ஆயிரம்? பின்னே என்ன! சரோஜாதேவிக்கும், சாவித்திருக்கும், கே.ஆர்.விஜயாவுக்கும், புரட்சித்தலைவிக்கும், பானுமதிக்கும் வாத்யாரும், நடிகர் திலகமும், காதல் மன்னனும் பாடிய பாடல்களை நம்ம ரேஞ்ச் கனவுக் கன்னிகளுக்கு பாடியிருந்தால்... தியாகராஜ பாகவதரைப் பார்த்த மாதிரிப் பார்த்திருப்பார்கள். நம்ம காதலெல்லாம் கனவாகவே இருந்ததற்கு காரணம் இதுவாக இருந்திருக்குமோ? நமது முன்னோர்கள் பாகவதர், சின்னப்பா ரசிகர்களாக இருந்ததால், அதிலும் நமக்கு நல்ல பரிச்சயம் உண்டு. இன்றைக்கும் சீனியர் ஹோம் 'சந்திர பிம்ப வதன' மலர்,(ந்த), சரோசாக் கிழவிகளை மையலுக்குள்ளாக்கும் அந்தப் பாடல்களை பாடி நம்மால் வலையில் வீழ்த்த முடியும். திலகங்கள், மன்னர்கள் அலைகள் ஓய்ந்து, அவர்களின் பெல்பொட்டம்களை கமலும், ரஜனியும், நாங்களும் வரித்துக் கொள்ள, வாத்யார் குத்தகைக்கு எடுத்திருந்த கிராமத்தில் பாரதிராஜாவோடு இளையராஜா அத்துமீறிக் குடியேற.. டிஎம்எஸ் சகாப்தம் முடிந்து ஜேசுதாஸ், பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் என புதிய குரல்கள் ஆக்கிரமிக்க... 'பதினாறு வயதினிலே' தலைமுறை மாற்றம் தவிர்க்க முடியாதபடிக்கு வந்து சேர்ந்தது. இரு தலைமுறைகளுக்கும் இடையில் தொங்கிக் கொண்டிருந்த பாலச்சந்தரின் படங்களில், சாம்பிராணிப் புகையில் திணறும் வள்ளுவர் சிலைக்கு அகர முதல என்று கடவுள் வாழ்த்துப் பாடிய எம்.எஸ்.வி, அந்தப் படங்களில் ஜேசுதாஸ்க்கும், வாணி ஜெயராமுக்கும் கொடுத்த தனிப்பாடல்கள் இன்றைக்கும் என்னை அவர்களின் ரசிகர்களாக வைத்திருக்கின்றன. விளம்பரத்தில் கட்டாயமாய் தன் பெயரைப் போட வைத்த மாஸ்ட்ரோ இசைஞானி, பின்னால் வந்த புயல், சூறாவளி எல்லாம் தங்கள் ம(து)ரக் குரல்களால் எங்களை ஆக்கிரமிக்க முன்னால், சொல்லத்தான் நினைக்கிறேன் என்றெல்லாம் பாடத் தொடங்கிய இசையமைப்பாளர் அவர். (அதற்கு முன்னர் கண்டசாலாவாக இருக்கலாம்.) அதிலும் பாடல்களில் அவரின் அனாவசியமான இழுப்பு, இசைஞானிகளுக்கே முடியாத, அவருக்கே உரித்தான ரேட்மார்க்! புதிய தலைமுறையுடன் தர்மிஷ்டரின் திறந்த பொருளாதாரத்தால் வந்திறங்கிய ஜப்பான் தொலைக்காட்சி, ஸ்டீரியோக்களுடன் ரசனை மாற, நாங்களும் இளையராஜா பக்கமாய் ஒதுங்க... ராஜாவின் இசைப்புயலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் மெல்லிசை மன்னர் மெதுவாக ஓரம் கட்டப்பட்டார். காற்றடிக்கும்போது கரகரக்கும் மத்திய அலை போய், ஸ்டீரியோ இசையில் பாட்டுக் கேட்க, இப்போ றெக்கோர்டிங் பார்கள் மட்டுமல்ல, கோப்பி பார்கள் வேறு. நாய் குலைப்புகளுக்கு நடுவில் கேட்ட வானொலிப் பாடல்கள் இப்போது, நவீன சந்தையின் றெக்கோர்டிங் பார்களிலும், சவுதிக்குப் போய் வந்து, ஹிப்பித் தலை, பெல்பொட்டம், கையில் சுமந்த கசட் என பெண்கள் பாடசாலை முடியும் நேரங்களில் பஸ் நிலையத்தில் வலம் வந்த 'டூப்' கமலஹாசன்கள் கொண்டு வந்திறக்கிய டூ இன் வண்களிலும் என சினிமாப் பாடல்களில் துல்லியம் கொஞ்சம் கூடியது. (வேலைக்குப் போகத் தொடங்கிய அண்ணன் புண்ணியத்தில் ஒரு உபாலியின் சன்யோ யுனிக் ரேடியோவும், பின்னால் ஈராக் போன மைத்துனர் புண்ணியத்தில் ஒரு பனசோனிக் டூ இன் வண்ணும் வந்து சேர்ந்தது. பாடசாலை நண்பனுக்கு லண்டன் அக்கா கொண்டு வந்து கொடுத்த பொனி எம் கசட்டை நெற்றிக் கண் பார்வைகளுக்குள், 'உவன் உதை உடைக்கப் போறான்!', பல தடவை திருப்பித் திருப்பிக் கேட்டு ரசிக்க முடிந்தது!) டியூசன் முடிந்து போகும் சரக்குகளை விட்டுக் கலைக்க நெஞ்சு நோக சைக்கிள் மிதிக்கும் போது, மனதில் ஹம் பண்ண தேவையான பாட்டுகளை இளையராஜா சப்ளை பண்ண, மெல்லிசை மன்னர் நெஞ்சில் நிறைந்தவைகளில் மட்டுமே வலம் வரத் தொடங்கினார். கே.எஸ்.ராஜா குரலில் வானலையை நிறைத்த இசைச்செல்வம் இளையராஜாவின் தேட்டம்! இருந்தாலும், இத்தனை ஞானிகளும் புயல்களும் வந்தாலும் ஐம்பது ஆண்டுகள் கழிந்தும் நெஞ்சில் நிறைந்திருக்கக் கூடிய பாடல்களை இன்று வரைக்கும் தர முடியாமலே இருக்கிறார்கள். அவர் இசையமைத்த சோகப் பாடல்கள், தத்துவப் பாடல்கள் போல இவர்களால் இசையமைக்கவே முடியவில்லை. ஓரம் போ முதல் ஓ போடு வரைக்கும் இந்த மண்டாமாரி நாதாரிகள் ஹிட் கொடுத்தாலும், அவற்றின் ஆயுள் அடுத்த ஹிட் வரைக்கும் தான். பாரம்பரிய இசையின் ராகங்களின் அடிப்படையில் அமைந்த அந்த அன்றைய பாடல்களுக்கும், ராகம் இல்லாமல் வெறும் வசனங்களைப் பாட்டாக்கும் இன்றைய ஜில்மால் விளையாட்டுக்களுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். 'நெஞ்சம் மறப்பதில்லை' இன்றும் ஏற்படுத்தும் உணர்வை எங்களை ஒரு காலத்தில் அடித்துத் துவைத்த 'என்னடி மீனாட்சி'யால் முடிவதில்லை. இது அந்தக் காலங்களில் வளர்ந்த நம்மைப் போன்ற எல்லாருக்குமே கிடைக்கக் கூடிய அனுபவம். நமக்கு என்று தனித்த அனுபவம் இல்லை. ஆனால் விஸ்வநாதனுக்கும் நமக்குமான ஒரு 'இது'க்கான காரணமே வேறு. தீப்பெட்டி சைஸ் பிளாக் அன்ட் வைட் டிவியில் ரூபவாகினியும், குளிர் காலங்களில் மட்டும் தெளிவாக தூரத்திலிருந்து வரும் தூரதர்ஷனும் காண்பதற்கு நியு விக்ரேர்ஸ், கஸ்தூரியால் ரோட்டில் இருந்த ரேடியோஸ்பதியில் எல்லாம் மொய்த்து நின்ற சனக் கூட்டத்தைக் கண்டதுண்டு. அதெல்லாம் பார்த்து வீட்டிற்குப் போனால் அடி விழும்! பனையுயர வெள்ளித்திரையில் வந்த சினிமா தந்த பிரமாண்டம் இந்த சின்னத்திரையை விடப் பெரியது. பனையைக் கடந்த விண்வெளியில் அதன் நட்சத்திரங்களும் பெரியவை தானே. அந்தப் பிரமாண்டங்கள் பற்றிய பிரமிப்பு உடைந்து போனதற்கு விஸ்வநாதன் காரணம் என்பது தான் அந்த 'இது'. பிரபலங்கள் பற்றியும் பிரமாண்டங்கள் பற்றியும் பலருக்குமே பிரமிப்பு உண்டு. அதிலும் சினிமாப் பிரபலங்கள் என்றதுமே அவர்கள் நாங்கள் கற்பனையில் வாழ நினைக்கும் ஒரு வாழ்வினை நிஜமாகவே வாழ்கின்றார்கள் என்ற பிரமையை ஊடகங்கள் ஏற்படுத்தி விடுகின்றன. பணம், புகழ், பால் உறவு என பலரும் கொண்டிருக்கும் கனவுகளை அனுபவிக்கக் கூடிய வாழ்வாகத் தான் இவை பற்றிய அபிப்பிராயங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. நாங்கள் ஏணி வைத்தாலும் எட்ட முடியாதவர்களாக, குறைகளே இல்லாத முழுமையான மனிதர்களாக, இந்த பிரமாண்டங்கள் சிருஷ்டிக்கப்படுகின்றன. அவர்களும் நம்மைப் போன்ற சாதாரண இரத்தமும் சதையும் கொண்ட சாதாரண மனிதர்கள், நம்மைப் போன்றே பலங்களும் பலவீனங்களும் கொண்டவர்கள், நிறைவுகளும் குறைபாடுகளும் உடையவர்கள் என்ற எண்ணம் எங்களுக்குள் வருவதில்லை. அந்தப் பிரமாண்டங்கள் ஏற்படுத்தும் பிரமிப்பு அப்படி! பொம்மை, பேசும் படம், பிலிமாலயாவில் குன்னக்குடி மாதிரி, பட்டை விபூதியும், சந்தனமும், நெஞ்சு மயிர் தெரிய விட்ட வெள்ளைச் சேட்டுடனும் கண்ட விஸ்வநாதன் என் கற்பனையில் ஒரு ஆஜானுபாகு போன்ற தோற்றம் உடையவராக இருந்தார். 25 வருடங்களுக்கு முன்பாக, புலன் பெயர்ந்த தமிழர்கள் சிறிமா காலத்துப் பாண் மாதிரி தட்டுப்பாடாகி, நாம் வாழ்ந்த வெலஸ்லியில் விலாசம் காட்டிய ஓரிரண்டு கன்னிகளுக்காக நமது அப்பார்ட்மென்ட் கட்டடத் தொகுதி வாழ் தமிழ் பிரமச்சாரிகள் மாலை நேரங்களில் பல்கனியில் சத்தமாய் தமிழ் பாட்டுப் போட்டு அவர்களை காதல் வலையில் வீழ்த்த பகீரதப் பிரயத்தனம் செய்த காலை, நம்மையெல்லாம் இசை வெள்ளத்தில் ஆழ்த்த விஸ்வநாதன் குழு வருகை தந்தது. அப்போது ஊடகம் என்று தாயகம் மட்டும் தான் இருந்தது. (உலகத்தமிழர் தவிர!). வரவழைத்தவர் மாற்றுக் கட்சிக்காரர் என்பதால் விளம்பரம் தாயகத்தில் தான். பாலசுப்பிரமணியம், ஈஸ்வரியுடன் இடிகரை முருகேசு, ட்ரம்மர் சிவமணி போன்ற தமிழ்ச் சினிமாவின் பிரபலங்கள் றையர்சன் கல்லூரி அரங்கில் நிகழ்ச்சி நடத்த வருகை தருகிறார்கள். (இடிகரை முருகேசு ரேஞ்சும் நம்மவர்களுக்குப் பிரபலம் தான்!) மூவாயிரம் பேர் வரை அரங்கம் நிறைந்திருக்க, ஒரே இசை வெள்ளம் தான். எம்.எஸ்.விக்கு ஈஸ்வரி மேல் இருந்த 'விசேட அன்பு' காரணமாக, நாங்கள் எல்லாம் தேவைக்கு அதிகமாய் 'எலந்தப் பழம்' சாப்பிட வேண்டியதாயிற்று. (அந்த 'விசேட அன்பு' பற்றி கதைகள் உண்டு!) நாங்கள் எதிர்பார்த்திருந்த பாடகர்களை விட, அவருக்கே சான்ஸ் அதிகம் வழங்கப்பட்டது. (பின்னர் இன்னொரு தடவை சிறிநிவாஸ், ஜெயச்சந்திரனைப் பார்க்கப் போன போதும், இலந்தைப் பழம் தான்! எம்.எஸ்.விக்கு ஈஸ்வரியின் 'எலந்தப் பழம்' மீது அப்படி நாட்டமோ என்னவோ?) நாங்கள் கீபோர்டிலேயே வாசிக்கச் சிரமப்படும் 'என்னடி ராக்கம்மா'வை தபேலாவில் இசைத்துப் பெயர் வாங்கினார் தபேலா பிரசாத். நல்ல காலம், அந்த நேரம் 'எங்கே உங்கள் கரகோஷம்?' புகழ் ஊடகவியலாளர்கள் இருக்கவில்லை. அடுத்த பாடலை விஸ்வநாதனே சொல்ல, மிகவும் சிம்பிளாக நிகழ்வு நடந்தேறியது. நிகழ்வு முடிந்ததும், தாயகம் கோஷ்டி சிவமணி, தபேலா பிரசாத், இடிகரை முருகேசு எல்லோரையும் தாயகம் கூட்டுப் படைத் தலைமையகத்துக்கு அழைத்து வந்தது. (நமது அப்பார்ட்மென்ட்தான்!) பிறகென்ன? ஒரே பார்ட்டியும் பேட்டியும் தான்! சிவமணி நாகலாந்தில் உள்ள தனது காதலிக்கு போன் பண்ண வேண்டும் என்றார். இடிகரை முருகேசு, நல்ல முஸ்பாத்தியில் தன்னுடைய பேட்டியை முன் பக்கத்தில் போட வேண்டும் என்று விடாப்படியாக நின்றார். ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாட்டில் குதிரை நடக்கும் சத்தம் இரண்டு சிரட்டைகளில் அவர் செய்த கை வண்ணம்! வஞ்சகம் இல்லாமல் எல்லாருடைய கருத்துக்களையும் கேட்டு தாயகத்தில் பிரசுரித்தோம். தங்களுக்கு வாழ்வு தருபவர்களின் மனம் நோகக் கூடாது, அதனால் தங்கள் வாய்ப்புகள் போய் விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் தங்கள் எஜமான்களின் மனம் கோணாதபடிக்கு நடந்து கொள்வது போல, புகழ்ந்தார்கள். அவர்களைப் புகழ்ந்தது பேட்டி மூலமாக அவர்களுக்குத் தெரியட்டும் என்ற எண்ணமாக இருக்கலாம். திறமை இருந்தாலும் தன்னம்பிக்கை அதிகம் வர முடியாதபடிக்கு அவர்களின் வாழ்வு அவர்களைக் கட்டிப் போட்டிருக்கிறது. இப்போது வந்தால், அவர்களின் ஊடகச் சந்திப்புக்கே ஊடகவியலாளர்கள் என்று சொல்லி குறைந்தது ஒரு மூவாயிரம் பேர் வருவார்கள். தப்பாமல் 'கனடிய தமிழ் ரசிகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?' என்று மறக்காமல் கேள்வியும் கேட்பார்கள். கேட்கின்ற கேள்விகளைக் கேட்டால், மேசைக்கு கீழ் ஒளிக்க வேண்டும் போல இருக்கும். இதற்குள் நிகழ்ச்சிக்கு முன்னால், விஸ்வநாதனைப் பேட்டி கண்டு தாயகத்தில் பிரசுரிக்க வேண்டும் என்று அழைத்திருந்தார்கள். தற்போது ஹோட்டல் வாசம் கேட்கும் பிரபலங்களுக்கு முன்னால் இவர்கள் தனியார் வீடுகளிலேயே தங்கியிருந்தார்கள். வேறு வேறு பிரபலங்கள் வந்த போது, மற்றவர்களை அனுப்பியதுண்டு. இந்த ரகப் பிரபலங்களில் எல்லாம் பெரிதாக ஆர்வம் இல்லை. ஆனால் அந்தத் தடவை நானே போக வேண்டியதாயிற்று. பெரியதொரு பிரபலம். பிலிமாலயா படத்து கணக்கில் எதிர்பார்த்தால், நம் ஊரில் கடை வைத்திருந்த காசிப்பிள்ளையர் போல, கட்டையாய் சிறிய மனிதராய் இருந்தார். கண்டதும் கை கூப்பி வணக்கம் தெரிவித்தார். பெரிதாகப் பேட்டி என்று கேள்விகள் கேட்காமலேயே, தன்னுடைய சிறிய வயது அனுபவங்கள் முதல் தன் முழு வாழ்வைப் பற்றியுமே சொல்லிக் கொண்டிருந்தார். சில நேரம், தமிழ் நாட்டு விகடன், குமுதம் ரேஞ்சில் என்னை நினைத்திருக்கக் கூடும். 'அவன் கவிஞன்யா' என்று கண்ணதாசன் பற்றி சொன்னது, ராமமூர்த்தியுடனான பிரிவுக்கான காரணத்தைச் சொல்ல நாசூக்காக மறுத்தது என அந்தப் பேட்டி, எந்தப் பந்தாக்களும் இல்லாமல் ஒரு மனம் விட்டு நடந்த உரையாடல் மாதிரிப் போனது. மிகவும் பிடித்திருந்தது எளிமையும் பணிவும். நாங்கள் மேதை என்று வணங்கக் கூடிய ஒருவர், எந்த வித பந்தாவும், தலைக்கனங்களும் இல்லாமல், பணிவோடு எல்லாவற்றையும் ஆர்வத்தோடு கேட்கும் ஒரு குழந்தைக்கு சொல்வது போல சொல்லிக் கொண்டிருந்தார். (பதவி வரும் போது பணிவும் வர வேண்டும், துணிவும் வர வேண்டும் தோழா!) தொழில் மீதான பக்தி துலாம்பரமாகத் தெரிந்தது. யாரையும் புண்படுத்தக் கூடாது, பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் இருந்த கவனம், கண்ணதாசனுக்கே இருந்திருக்காது. எவ்வளவு தான் பிரபலங்களாக இருந்தாலும், இவர்களும் மற்றவர்களின் தயவுகளில் வாழ வேண்டியவர்கள் தான். அது எம்.ஜி.ஆர் மாதிரி சினிமாவை ஆட்டிப் படைத்தவர்களாகவும் இருக்கலாம். இரத்தம் விற்றுப் படம் பார்க்கும் சாதாரண ரசிகனாகவும் இருக்கலாம். இந்தச் சந்திப்புத் தான் பிரமாண்டங்கள் மீதான பிரமிப்பு முழுமையாக எனக்கு உடைந்து போவதற்கான காரணமாக இருந்திருக்கக் கூடும். அவர்களும் எங்களைப் போன்ற சாதாரண மனிதர்கள் தான் என்ற எண்ணம் வந்த பின்னால் தேசியத் தலைவர் கூட நமக்கு ஒரு பொருட்டாகவே படவில்லை. ஹொலிவூட்டின் மிகப் பெரிய பில்லியன் டொலர் நிறுவனத்தில் தொழிலாளர் போராட்டத்திற்கு தலைமை தாங்கி கோளாறு பண்ணிய போது வந்திறங்கிய நிறுவனத் தலைவரோடு கூட, காலுக்கு மேல் கால் போட்டு, முதற் பெயரை விளித்து எங்கள் பக்க நியாயத்தை எடுத்துரைத்த துணிச்சலை மெச்சியதாலோ என்னவோ, மூன்று தடவை கோளாறு பண்ணியும் என்னை வேலை நீக்கம் செய்யவில்லை. சிலர் சில நேரம் சிலரைப் பார்த்து 'அவர் எவ்வளவு பெரிய ஆள்!' என்று சொல்லும் போது, சிரிப்பாக இருக்கும். அந்தப் 'பெரிய' என்பது மற்றவர்கள் அவர்களுக்கு  வழங்குவதே அன்றி, அவர் எங்களைப் போன்ற சாதாரண மனிதன் தான். ஐயா என்று கை கட்டியும், சேர் என்று பணிந்தும் சேவகம் செய்ய வேண்டிய மண்ணில் பிறந்து வளர்ந்து, இவ்வாறான பிரமாண்டங்கள் பற்றி பிரமை உடைந்து போகக் காரணமாக இருந்தவர்களில் விஸ்வநாதன் முக்கியமானவர் என்பது என் வாழ்வில் மறக்க முடியாதது. அந்தக் கிறுக்குத் தனம் தான், அன்று வந்திருந்த மற்றவர்கள் அவரோடு படம் எடுக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டிய போதும், அவரோடு படம் எடுக்கத் தேவையில்லை என்று என்னை மறுக்க வைத்தது. என்னை யார் என்று தெரியாத பிரபலங்களோடு படம் எடுப்பதில் எனக்கு ஆர்வமில்லை. படம் எடுக்காதது பற்றி... Still, I have no regrets!

    Postad



    You must be logged in to post a comment Login