Recent Comments

    வைன்ஸ்ரைனும் வைரமுத்துவும்

    நமக்கும் வந்ததொரு #MeToo mo(ve)ment

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி

    கொஞ்சக் காலம் பேஸ்புக்கில் புழுதி கிளப்பிய தமிழ்நாட்டு #MeToo இப்போது அடங்கிப் போய் விட்டது.

    தலை(க்கறுப்பு)மறைவாகி, அஞ்ஞாதவாசம் போய் அடக்கி வாசித்த வைரமுத்து ட்விட்டரில் புத்தாண்டு வாழ்த்துச் சொன்னதாக செய்தி வந்தது.

    புற்றுக்குள்ளால் வெளியே வரும் பாம்பு தலையை எட்டிப் பார்த்து நோட்டம் விடுவது போல!

    Coast seems to be clear.

    யாருமே அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை.

    கொஞ்ச நாளில் ஆண்டாளின் காமக்கவிதைகள் 2.0 வை எதிர்பார்க்கலாம்!

    அல்லது 'இளநீர் குடித்தவர்கள் கோபுரங்களில் சல்லாபிக்க...

    கோம்பை சூப்பியவனை குடிசைக்குள் சிறை வைத்த கொடுமை' என்ற கவிதையை!

    கவிதைக்குப் பொய்யழகு!

    ஆனால், கவிஞனே பொய்யன் என்றான பின்னால் பிறகென்ன?

    வைரமுத்துவைக் கூப்பிட்டு கனடாவில் காலில் விழுந்தவர்களைக் கண்டு, இதெல்லாவற்றுக்கும் முன்னால் தாயகம் முனியோடு எப்போதோ பேசும் போது, 'வைரமுத்துவின் கண்கள் ஒரு பொய்யனுக்குரியவை' என்றேன்!

    'அதே!' என்றார்.

    வழமையில் வேண்டப்பட்ட விளம்பரதாரர்களுக்காக விழுந்தடித்தும், வன்னிசார் நோட்டுப் புலிகளுக்குப் பயந்தடித்தும், எழுத்து தர்மத்தை விற்பவர்கள் இந்த சர்ச்சைகளின் போது எழுத்தாயுதங்களை மெளனிக்கச் செய்தபோது, கள்ளிக்காட்டு கருநாகத்திற்கு மகுடி ஊத மாமா வேலை பார்த்திருப்பார்களோ என்ற சந்தேகமும் வந்தது.

    பாவம், பிரபஞ்சன்!

    வெகுசனப் பிரபலமாக இருந்திருந்தால் இப்படி அவமானப்பட்டு மனம் நொந்திருக்கத் தேவையில்லை.

    ரோமாபுரி ராணிகள், பாக்தாத் பேரழகிகள் மாதிரி, கனடியக் கனவுக்கன்னிகள் பற்றி பயணக் கட்டுரை எழுதியிருக்கக்கூடும்!

    கனடாவில் ஊருக்குள் இந்த 'மீடியா ஊடகவியலாளர்கள்' பற்றி எக்கச்சக்கமான #TheyToo கதைகள் உலவி வருவது எல்லாரும் கேள்விப்பட்டவையே! தமிழக சினிமா, டிவி  பிரபலங்களை அழைப்பதே கனடாவில் கோட் போட்ட புதுப்பணக்காரர்கள் ரசித்துச் சுவைப்பதற்காகத் தான் என்ற அரசல் புரசலான கிசுகிசுக்கள் வேறு! இவற்றையெல்லாம் கிண்டியெடுக்க Investigative journalism இங்கே இல்லாவிட்டாலும், பார்ட்டிகளில் நாலு பியரைக் கொடுத்து வாயைக் கிண்டினால் போகிறது... வாந்தியெடுப்பார்கள்!

    பிரபலம் அடைந்த பல பெண்கள் தாங்கள் பிரபலம் அடைய பாலியல் லஞ்சம் கொடுக்க வேண்டி வந்ததாகவும், கொடுக்காததால் பிரபலம் அடைய முடியாதபடிக்கு பழிவாங்கப்பட்டதாகவும் வந்த கதைகளின் பின்னால்...

    கலைத் துறையில் பெரும்புகழைச் சாதிக்க துடித்துக் கொண்டிருந்த கியூறியஸின் கனவுகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்ட அந்த #MeToo கண்ணீர்க் கதையை உங்களுக்குச் சொல்லியாக வேண்டும்.

    *

    ஒவ்வொரு குளிர்காலத்திற்கும் கியூறியஸ்க்கு 'நரி வெருட்டும்!'

    குட்டிக் கியூறியஸ் எதையாவது ஏடாகூடமாகச் செய்து போட்டுடைத்தால், ஆச்சி எப்போதுமே 'உவனுக்கு நரி வெருட்டுது!' என்பது வழமை!

    பின்னாளில் 'புலி வெருட்டுகளுக்கு' எல்லாம் இந்த பனங்காட்டு நரி அஞ்சியதில்லை என்பது இன்னொரு புராணம்.

    கியூறியஸ் கோடை காலம் முழுவதும் ஊரு வியந்து, பாரு செழிக்க, ஏரு பூட்டி, நீரு பாய்ச்சி, வீட்டுக்குப் பின்னால் உள்ள தோட்டத்தில் உலகத்தில் இல்லாத மரக்கறிகளை வளர்ப்பது பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வரலாறு.

    அது முடிந்த பின்னால் குளிர் தொடங்க பகல் குறைந்து மாலையில் வேகமாக இருளத் தொடங்கும். வேலை முடிந்து வந்த பின்னால் செய்வதற்கு எதுவும் இல்லாததால், ஒவ்வொரு வருடமும் ரொறன்ரோ கல்விச் சபை நடத்தும் மாலை நேர வகுப்புகளுக்கு பதிவு செய்து கண்டதும் கற்பது இந்தக் கல்லாநிதியின் வழக்கம்.

    வழமையான 'ஆங்கிலம் கற்பு' தேவை இந்த மாஜி ஆங்கில ஆசிரியனுக்கு இல்லாததால், கீபோர்ட் போன்ற இசைக்கருவிகள், ட்ஜெம்பே (Djembe)என்ற ஆபிரிக்க மேளம், இலத்திரனியல், வருமானவரி பத்திரம் நிரப்புதல், மட்பாண்டம் செய்தல் (ஏன் எற்கு என்றெல்லாம் கேட்கக் கூடாது!), சினிமா தயாரிப்பு, கணக்கியல், இரும்பு ஒட்டும் வெல்டிங் என்றெல்லாம் சம்பந்தமில்லாதவற்றை வருடம் தோறும் கற்பது வழக்கம்.

    இம்முறையும் இந்தக் குளிர்காலத்தில் எதைக் கற்கலாம் என்று நரியை வெருட்ட விட, தமிழ்க்கலை ஒன்றைக் கற்கலாமே என்று நரி மதியுரைத்தது!

    அது எது என்பதெல்லாம் உங்களுக்கு இப்போதைக்கு அவசியம் இல்லை என்றாலும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அது பரதநாட்டியம் இல்லை என்பது மட்டும் தற்போதைக்கு இருக்கட்டும்.

    நாட்டியம் கற்றுக் கொண்டு பவர்ஸ்டார், சுப்பர்ஸ்டார் மாதிரி உலகநாயகன் ஆகும் நோக்கம் எதுவும் நமக்கில்லை.

    அப்பாடா! ஒரு மாதிரி அரசியல் வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்தாயிற்று.

    எனவே, அந்தக் கலையைக் கற்பதற்கு 'நாடவேண்டிய ஒரே' ஆசிரியரைத் தேட தமிழ் மகள்/ன் நிர்வாக வர்த்தக கையேட்டை புரட்டினால்... ஹ்ம்... பெரிதாக இல்லை!

    'நண்பி' ஒருவரைக் கேட்க, 'அட, விஜய தசமிக்கு உங்க தமிழ்ப் பேப்பரில விளம்பரம் போடுவினம்' என்று பதில் வந்தது.

    பிறகென்ன, வெள்ளி தோறும் கடைகளுக்குப் போய், தங்களுடைய மரண அறிவித்தல் வந்திருக்கிறதா என்று முதியவர்கள் செக் பண்ணி, 'அப்பாடா' என்று வாழ்வைத் தொடர்வதற்காக பத்திரிகைகளை அள்ளிப் போவதற்கு முன்னால், போட்டி போட்டு கிள்ளி வந்தால்...

    ஒரு ஆசிரியனும் சில ஆசிரியைகளும் போட்ட விளம்பரங்களை...

    ஒவ்வொரு வாரமும் வரும் 'தமிழ்ப் பத்திரிகை அலுவலகத்தில் வேலைக்கு' கொத்தடிமை தேவை உட்பட்ட விளம்பர வைக்கோல் போருக்குள் ஊசி மாதிரித் தேடிக் கண்டுபிடிக்க...

    ஆசிரியனின் விளம்பரம் 'வகுப்புகள் பழைய புலிகளின் கோட்டையில்' என்றது.

    அங்கே போய் கற்றால் மாவீரர் தினத்தில் தண்டத்திற்கு அரங்கேற வேண்டி வரலாம் என்பதால் அந்த option out!

    டீச்சர்மாருக்கு ஈமெயிலினால்... ஒருவர் மட்டுமே பதில் இறுத்தார். தான் அதைக் கற்பிப்பதில்லை!

    பிறகென்ன சிகைக்கு விளம்பரம், ஈமெயில் விலாசம் போட்டீர்களாக்கும் என்று கேட்கலாம் என்றால் அதுவே #MeToo குற்றச்சாட்டாகி விடும்.

    விளம்பரக் கையேட்டின் தடிப்பைப் பார்த்தே தமிழ் பிஸ்னஸ்கள் பல்கிப் பெருகி பொங்கிப் பிரவகிப்பதாக புல்லரிக்கும் 'தமிழேண்டா!' பிரமிப்பாளருக்கு எல்லாம், 'ஆரும் கோல் பண்ணினால் நேரம் இருந்தால் செய்வம்' என்று பலர், லெட்டர்ஹெட் சங்கங்கள் மாதிரி, பிஸ்னஸ் கார்ட் (விசிட்டிங் கார்ட்!) வர்த்தகங்கள் வைத்திருப்பது தெரியாது.

    கியூறியஸின் கதைக்கும் ஸ்டைல், அதுவும் பெண்களுடன் கதைப்பது, குழப்பகரமானது என்று அபிதகுஜாம்பாள் அடிக்கடி எச்சரிப்பதால்... ('என்னக்கா, உங்கட அவர்?' இதெல்லாம் பிறகு வரும்!)

    நண்பியிடமே நம்பரைக் கொடுத்து தகவல் அறியும்படி சொல்ல...

    அவரும் சிரமம் பாராமல் போன் அடித்து, 'ஓகேயாம்!' என்று பச்சைக் கொடி காட்டினார். 'அவ பெரிய விசாரணை. ஆருக்கு? மகளுக்கோ?' 'விஜயதசமி நல்ல நாளாம், நாளைக்கு வரட்டாம்!'

    அட, சிம்பிளான விசயம். போய் கொஞ்ச நாளைக்கு கற்று, டீச்சருக்கு வைக்க  வேண்டியதை வைச்சா... திறமையும் அறிவும் இருக்கோ, இல்லையோ, கெதியா அரங்கேற்றுவா தானே, பிறகென்ன நீங்களே ஆசிரியராகி உழைக்கலாம் என்று உங்களுக்கு யோசனை வந்திருக்கும்.

    அதை விட, 'அதுக்கு இதுக்கு எண்டு சொல்லி காசு புடுங்குவினம்' என்று தமிழரை விளங்கியவர்கள் எச்சரிக்கவும் கூடும்.

    கலையைக் கற்று கலாசாரத்தைக் காக்கும் கனவு காணும் வாழ்க்கை கலைந்து போன கண்ணீர்க் கோலம்...

    *

    Harvey Weinstein ஹொலிவூட் காட்டின் சிங்கராஜா! முடி சூடா மன்னன்!

    ஹொலிவூட்டின் பெரிய ஸ்டுடியோக்களே ஆக்கிரமித்திருந்த ஒஸ்கார் விருதுகளை தன்னுடைய சுதந்திரமான மிராமாக்ஸ் தயாரிப்பு நிறுவனம் (independent movie house Miramax) மூலமாக அள்ளுவதை ஒரு கலையாக்கிக் கொண்டவர்.

    பெரும் ஸ்டுடியோக்கள் கவனிக்காமல் விட்ட படங்களை தேடிப்பிடித்து, திட்டமிட்டு சந்தைப்படுத்தி, ஒஸ்கார் விருது காலத்தில் ஹொலிவூட், லொஸ் ஏன்ஜலஸ் பத்திரிகைகளில் பெரும் விளம்பரம் போட்டு, வாக்களிக்கும் உறுப்பினர்களுக்கு படத்தின் பிரதிகளை அனுப்பி, ஊடகங்களைக் கைக்குள் போட்டு ஊதிப் பெருப்பித்து, தன்னுடைய படங்கள் பரிசுக்கு முன்மொழியப்பட்டதும் அதை வைத்து இன்னும் படத்தை ஓட்டி...

    ஒஸ்கார் பரிசுகள் ஒன்றும் திறமைக்கானவை அல்ல என்பதை நிருபித்தவர். பல படங்கள், நடிகர்களுக்கு பரிசு கிடைத்ததற்கான காரணம் அவரே என்று சொல்லலாம்.

    1966 முதல் 2016 வரை ஒஸ்கார் விருது பெற்றவர்கள் தங்கள் நன்றியுரையில் 34 தடவைகள் வைன்ஸ்ரைனுக்கு நன்றி சொல்லியிருக்கிறார்கள்... கடவுளுக்கு நன்றி சொல்லப்பட்டதும் அத்தனை தடவைகள்தான். (இந்தக் காலத்திற்குள் இந்த இருவரையும் விட, அதிகமாக நன்றி சொல்லப்பட்டவர் 'ஹொலிவூட்டின் மணிரத்தினம்'(!?) ஸ்டீவன் ஸ்பீல்பேர்க் ஒருவர் மட்டும் தான்)

    முக்கிய பிரபலமான விருதுகளில் தான் இந்தக் குளறுபடி. தொழில் நுட்பத்திற்கான, சிறந்த பிறமொழிப் படத்திற்கான விருதுகள் ஓரளவு திறமைக்கானவையே!

    ஸ்டுடியோக்களின் முதலீடுகள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப்படங்களையும், பிறமொழிப்படங்களையும் திரையிட்டாலும், அவற்றில் மாற்றங்களைச் செய்யுமாறு இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் வற்புறுத்தி மிரட்டி வந்தவர்.

    ஜப்பானியப்படமான Princess Mononoke ஐ அமெரிக்காவில் திரையிடுவதற்கு மாற்றங்களைச் செய்ய வற்புறுத்திய போது, அப்படத்தின் தயாரிப்பாளர் இவருக்கு ஒரு சமுராய் வாளை தபாலில் அனுப்பி, 'No cuts!' என்று செய்தி அனுப்பியிருந்தார். கடைசியில் வெட்டுக் கொத்துதல் எதுவும் இன்றிப் படம் வந்தது!

    ஜப்பானிய சமுராய் வாளை வீசினால் எது ஒட்ட நறுக்கப்படும் என்று தெரிந்திருக்கும்! அதிலும் அவர் ஏற்கனவே சுன்னத் செய்யப்பட்ட யூதர்!

    வழமை போல, அரசியல் செல்வாக்கிற்காக ஜனநாயகக் கட்சிக்கான ஆதரவாளராக ஹொலிவூட் பிரபலங்களிடம் பணம் திரட்டிக் கொடுப்பவர்.

    ஆனால், இவரின் காமச்சேஷ்டைகள் எல்லாருக்கும் தெரிந்த, வெளியே பேசப்படாத இரகசியம்.

    தன்னுடைய செல்வாக்கைக் காட்டி, பெண்களை இணங்க வைத்து, மறுத்தவர்களை சந்தர்ப்பங்களை மறுத்து பழி வாங்கி, பலரை வல்லுறவும் செய்து செய்த அட்டகாசம்... ஆனால் யாருமே அதைப் பற்றி பகிரங்கமாக பேச முயற்சிக்கவில்லை.

    பயம்!

    வைன்ஸ்டைனின் சேஷ்டைகள் பற்றி Ronan Farrow  நியூ யோர்க்கர் சஞ்சிகையில் எழுதியதுடன் இவரது சாம்ராஜ்யம் சரிந்தது.

    இதுவரை காலமும் தன் மீதான குற்றச்சாட்டுகளை பெரும் சட்டத்தரணிகள் உதவியுடன் மிரட்டியும், இஸ்ரேலிய தனியார் உளவு நிறுவனம் ஒன்றை (Black Cube) வாடகைக்கு அமர்த்தி  தன் மீது குற்றம் சாட்டியவர்கள் பற்றித் தகவல் திரட்டி பயமுறுத்தியும் செய்த அட்டகாசத்திற்கான முடிவுக்கான நேரம் வந்தது. இவருக்குப் பயந்து NBC தொலைக்காட்சி இந்த குற்றச்சாட்டுகளை வெளிக்கொணர்வதற்கு தயங்கியிருந்தது. பின்னர் நியூ யோர்க்கரும் நியூ யோர்க் ரைம்ஸும் வைன்ஸ்ரைன் பற்றிய குற்றச்சாட்டுகளை வெளிக்கொணர்ந்து Investigative Journalism  ற்காக புலிட்சர் பரிசைப் பகிர்ந்திருந்தன.

    தற்போது மொத்தம் 78 பெண்கள் வைன்ஸ்ரைன் மீது பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார்கள்.

    வைன்ஸ்ரைன் ஹொலிவூட்டின் ராஜா சிங்கம்னா, வைரமுத்து கோட்டை, கோடம்பாக்கத்து சிங்கங்கள் விழுங்கி ஏப்பம் விட்டதில் மிஞ்சின எலும்புகளை நக்கும் குள்ளநரி!

    கியூறியஸ் ட்விட்டரில் இல்லாதிருந்தாலும், ட்வீட் பண்ண வேண்டும் போலிருந்தது இப்படி!

    "So, at last they found out that the emperor had no clothes!"

    #Harvey#Weinstein

    (படம் பற்றி பேச வேண்டும் என்று அழைத்து விட்டு, நிர்வாணமாய் நின்றபடி நடிகைகளை தனக்கு மசாஜ் செய்யும்படி கேட்பாராம் இந்த சக்கரவர்த்தி)

    ட்விட்டரில் இருந்திருந்தால், கியூறியஸ் வைன்ஸ்ரைன் புண்ணியத்தில் உலகப் புகழே அடைந்திருக்கக் கூடும்!

    தற்போது கைது செய்யப்பட்டு பிணையில் விசாரணைக்காய் காத்திருக்கிறார்.  வாழ்க்கை சிறைவாசத்திலும் முடியலாம்!

    *

    வைன்ஸ்டைனை மண் கவ்வச் செய்த  ரோனான் பரோ இயக்குனர் Woody Allen, நடிகை Mia Farrow வின் ஒரே மகன்.

    நடிகை மியா பரோ பல பிள்ளைகளைத் தத்தெடுத்து வளர்த்தவர். அதில் தத்தெடுத்த கொரிய இன மகளை வூடி அலன் திருமணம் செய்திருக்கிறார். இதுவே பெரும் சர்ச்சையாகியிருந்தது.

    மியா பரோ நடிகரும் பாடகருமான Frank Sinatra வின் முன்னாள் மனைவி. ரோனான் பரோ 'சில நேரம்' பிராங் சினாட்ராவின் மகனாக இருக்கலாம் என்று தாய் மியா பரோ ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

    தனது தந்தை தனது வளர்ப்புச் சகோதரியைத் திருமணம் செய்தது, அவரை தனக்கு தந்தையாகவும் மச்சானாகவும் ஆக்கி விட்டது என்று கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ரோனான் சொல்கிறார்.

    இதைவிட, மியாவின் இன்னொரு மகளும் தன்னுடன் தன் தந்தை தவறாக நடந்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இப்போது 16 வயது பாஷன் மொடல் ஒருவர் தன்னுடன் வூடி அலன் தொடர்பு வைத்திருந்ததாக நீண்ட காலம் கழித்து  தகவல் வெளியிட்டிருந்தார். (குற்றச்சாட்டாக அல்ல!)

    மைனர் பெண்களுடன் தொடர்பு கொண்ட குற்றச்சாட்டு வூடி மீது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    பல பிரபல நடிகர்கள் இனிமேல் வூடியின் படங்களில் நடிக்க மாட்டோம் என்று பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார்கள்

    இவ்வாறாகத் தானே  வைன்ஸ்டைன் விவகாரத்துடன் பெண்கள் மீதான பாலியல் வன்முறை பற்றிய விழிப்புணர்ச்சியை தூண்டிய #MeToo இயக்கம் ஆரம்பித்தது. தங்களுக்கும் இது நடந்தது என்பதை எந்தப் பயமும் என்றி வெளியே சொல்வதற்கான துணிச்சலைக் கொடுத்த Hashtag அது!

    இதைத் தொடர்ந்து பல பெண்கள் துணிச்சலாக தங்களுக்கு நடந்தவற்றைக் கூற பல பிரபலங்களின் தலைகள் உருண்டன. அதில் Bill Cosby முக்கியமானவர். தொலைக்காட்சியில் பிரபலமான நகைச்சுவைத் தொடரின் நடிகரான இவர் பெண்களுக்கு பானங்களில் மயக்க மருந்தைக் கொடுத்து பால்வன்முறை செய்த குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டன.

    *

    நண்பர் ஒருவர் சமீபத்தில் பேசும் போது நீண்ட காலத்திற்கு முன்னர் தமிழ் அமைச்சர் ஒருவர் தனது அலுவலகத்திலேயே பெண்களை மிரட்டி வல்லுறவு கொண்டதையும், தன் குடும்பத்தினருக்கு தெரிந்த பெண் ஒருவருக்கு அலுப்புக் கொடுக்க, அந்தப் பெண்ணின் கண்ணீர் கதையை அறிந்து அதை தனது நண்பரான பத்திரிகை நிருபர் மூலமாக பிரபல பத்திரிகை ஒன்றில் கிசுகிசுவாக்கியதில் பத்திரிகை நிருபருக்கு வந்த மிரட்டல் பற்றியும் கூறியிருந்தார்.

    (ஊகூம்... அது யார் எவர் என்பது பற்றி இன்வெஸ்டிகேட் பண்ண... எந்தப் பார்ட்டியில் எத்தனை பியர் தந்தாலும் கியூறியஸ் இதையெல்லாம் வாந்தியெடுக்க மாட்டான்!)

    இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் மீதும் இந்தக் குற்றச்சாட்டுகள் முன்னரும் இப்போதும் இருக்கின்றன. பாலியல் லஞ்சம் கேட்டார் என்று பேஸ்புக்கில் அடிக்கடி காணக் கிடக்கிறது.

    யாழ் பல்கலைக்கழகத்தில் இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி குட்டித்தம்பி நட்சத்திரன் கதை கதையாய் சொல்வான் பேஸ்புக்கில்!

    தமிழ்நாட்டில் நிலைமை வேறு.

    மனைவி, துணைவி, இணைவி, கொபசெ, உடன்பிறவாச் சகோதரி என்று இவற்றையெல்லாம் உத்தியோகபூர்வமாக லைசன்ஸ் பெற்ற, சமூக அங்கீகாரம் பெற்ற உறவுகளாக்கி விடலாம் என்பது மட்டுமன்றி, வீட்டுக் கட்டிலில் மட்டுமல்ல, அரச கட்டிலிலும் ஏற்றலாம்.

    தாங்களாகவே முடிவு செய்யும் வயதுடைய ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் (Consenting adults) ஏற்படும் உறவுகளில் யாரும் தலையிட முடியாது.

    ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் அதைப் பயன்படுத்தி தங்களுக்கு கீழ் உள்ளவர்களை தங்கள் இச்சைகளுக்குப் பயன்படுத்துவது எங்குமே நடந்து கொண்டு தான் இருக்கிறது. Position of authority, Position of Trust இரண்டு நிலைகளிலும் பாதிக்கப்படுபவரின் சம்மதம் குற்றத்தை நியாயப்படுத்தாது. முக்கியமாக வயது குறைந்தவர்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு சம்மதம் என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது.

    அதிகாரத்தை வைத்து தொடர்ந்து வேலையில் நீடிப்பதற்கோ, பதவி உயர்வு பெறுவதற்கோ, வெறும் சலுகைகளைப் பெறுவதற்கோ தங்கள் இச்சைகளைத் தீர்ப்பதை நிபந்தனையாக்கி பாலியல் லஞ்சம் கேட்கும் செயற்பாடுகள் தற்போது பல நாடுகளிலும் குற்றமாக்கப்பட்டுக் கொண்டு வருகிறது.

    ஆனால், விரும்பியும் பலனை எதிர்பார்த்தும் தொடங்கித் தொடர்ந்த உறவுகள் கசந்தும் பயன் கிடைக்காமலும் போக, பழி வாங்கும் உணர்வு மேலிட்டு எழும் குற்றச்சாட்டுகளும் இல்லாமல் இல்லை. அது உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் நம்பகத் தன்மையை கேள்விக்குரியதாகவே மாற்றும்.

    அதிகாரங்களில் இருப்பவர்கள் மட்டுமல்ல, பெண்கள் மீதான தங்கள் ஆதிக்கம் மூலமாக அவர்களை ஒரு போகப் பொருளாக்கும் கலாசார, சமய, பண்பாட்டு நியாயப்படுத்தல்கள் பல ஆண்களுக்கு அதை ஒரு license to assault என்ற நிலைக்கு கொண்டு வருகிறது.

    தென்னாசியா போன்ற பால் உணர்வைக் குற்றமாக்கி, அடக்கி வைக்கும் பண்பாடுகளில் இந்த வக்கிர உணர்வின் வெளிப்பாடுகள் அதிகம்.

    பெண்கள் தங்களுக்கு அறிமுகமானவர்களால் மட்டுமன்றி, அந்நியர்களாலும் பாதிப்புக்குள்ளாக நேரிடுகிறது.

    இந்தியாவில் பொதுப் போக்குவரத்து நெரிசல்களுக்குள் பெண்களை தொட்டு தங்கள் சிற்றின்ப வேட்கையை தணித்து திருப்தியுறுபவர்களும், யாழ்ப்பாணத்தில் திருவிழா நெரிசலுக்குள் இடிபட அலைபவர்களும் இந்த வகைக்குள் அடங்குகிறார்கள்.

    இந்த வக்கிர உணர்வு வன்முறையாகி, வல்லுறவுகளிலும் கொலைகளிலும் முடியும் அளவுக்கு பால் வரட்சி மற்ற இடங்களை விட, இந்தப் பகுதிகளில் அதிகமாக இருக்கிறது.

    பெண்ணை தெய்வம் என்று போற்றிக் கொண்டே போகப் பொருளாக நினைக்கும் இந்தப் பண்பாட்டுப் போலித்தனத்தால் அந்நியப் பெண்களின் மீது வன்முறை பிரயோகிக்கும் அதே  பிரகிருதிகள் தங்கள் குடும்பப் பெண்கள் மீது மற்றவர்கள் அதே யுக்தியைப் பிரயோகிக்கும் போது மட்டும் பண்பாட்டுக் காவலர்களாக மாறி விடுகிறார்கள்.

    மேற்கு நாடுகளிலேயே வைன்ஸ்டைன் விவகாரத்தை பகிரங்கப்படுத்த இவ்வளவு காலம் எடுத்தது என்றால் எங்கள் நாடுகளில் நிலைமை எப்படியிருக்கும்?

    தன் மீதான பாலியல் குற்றத்தை பெண்கள் இலகுவாக வெளியில் சொல்லி நியாயம் தேடி விட முடிவதில்லை. 'ஆண் சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணீர் கண்ட இடத்தில் கழுவுவதான' நியாயப்படுத்தல் சமூகத்தில் ஊறி விதைக்கப்பட்டிருக்கிறது.

    ஆனால் பெண் அந்தக் குற்றத்தில் பாதிக்கப்பட்டிருந்தவராக இருந்தாலும் அதற்கான விலையை வாழ்நாள் முழுவதும் செலுத்த வேண்டியிருக்கும்.  பெண்கள் மீதான மீறல்களை பெண்ணின் குற்றமாக்குவதற்காக, அவரது ஆடையுடுத்தலையும் திறந்த மனதுடன் பழகும் தன்மையையும் காரணம் காட்டி 'She asked for it' என்று கூசாமல் சொல்பவர்கள் உண்டு. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சாட்டும்  Victim bashing/blaming  மூலம் குற்றவாளி மீதான கவனத்தை திசை திருப்பி தப்பிக்க வைக்க முயல்கிறார்கள்.

    Slut shaming எனப்படும், பெண்களின் உடைகளையும் செயற்பாடுகளையும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை மீறுவதாகக் கூறி குற்றம் சாட்டுவது ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் தான் என்பது தான் துயரம்.

    வைரமுத்து விவகாரத்திலும் இது தான் நடந்தது.

    'அவர் நம்ம கவிஞராச்சே! அவள் ஏதோ வந்தேறி. அவள் என்ன பத்தினியா?' என்ற ரீதியில் இந்தப் பிரச்சனையை அணுகியவர்கள் பலர்.

    இவ்வாறான விழிப்புணர்வை நீர்த்துப் போக முயற்சி  செய்யும் பலருக்கும் தாங்கள் கண்ணாடி வீடுகளுக்குள் இருப்பது புரிவதில்லை.

    தங்களுடைய பிள்ளைகள், சகோதரிகள், மனைவிகள், காதலிகள் எல்லாம் அந்தப்புரங்களில் இல்லாமல் வீட்டுக்கு வெளியே சென்று நடமாட வேண்டியவர்கள். அவ்வாறான இடங்களில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக வேண்டிய நேரிட்டால், அவர்களும் துணிச்சலாக, சமூகம் பற்றிய கவலையின்றி தங்களுக்கு நடப்பவற்றை வெளியில் சொல்லக் கூடிய சூழ்நிலை வேண்டும். இல்லாவிட்டால், அவர்களுக்கும் வெளியில் சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே வெந்து கொண்டிருக்க வேண்டி நேரிடும்.

    அந்த sexual predator களும் எந்த பயமும் இன்றி மேலும் பல பெண்கள் மீது தங்கள் துன்புறுத்தலைத் தொடரலாம். இதை உணர்ந்து கொள்ளாமல், ஆணைக் காப்பாற்றுவதற்காக பெண்ணைச் சந்தேகம் கொள்வதிலேயே இவர்களின் விசாரணை ஆரம்பிக்கிறது. 'ஏன் இவ்வளவு காலம் எடுத்தது?' என்று கூடக் கேட்டார்கள். இது பலரும் கேட்கும் கேள்வி. இப்போது தான் அதற்கான சூழ்நிலை வந்திருக்கிறது. குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட்டிக்கிறார்கள். தாங்கள் சொல்வதை நம்புகிறார்கள் என்ற சூழ்நிலை வந்திருக்கிறது.

    *

    அட, அத்தனை பேர் கூடியிருந்த சபையில் ஒருத்தியின் சேலையை உருவும்போது...

    சட்டசபையைச் சொல்லவில்லை, அரச சபையை...

    அத்தனை பேரும் வேடிக்கை பார்க்க...

    தாலி கட்டிய கணவன்... ஒன்றல்ல, ஐந்து பேர் பார்த்துக் கொண்டிருக்க..

    எங்கோ ஒருத்தனை நோக்கி அபயக்குரல் எழுப்ப வேண்டிய கட்டாயம் அன்றைக்கே இருந்திருக்கிறதே.

    இப்போது மட்டும் ஓடி வந்தா காத்து விடப் போகிறீர்கள்?

    *

    அதெல்லாம் கிடக்கட்டும்.

    அபிதகுஜாம்பாளின் எச்சரிக்கையையும் மீறி, போன் அடித்து...

    வணக்கம், டீச்சர், உங்களுடைய வகுப்புகள்... என்று தொடங்க...

    'ஆருக்கு?' 'எனக்குத்தான் டீச்சர்?'

    'நான் ஆம்பிளையளுக்குப் படிப்பிக்கிறேலை!'

    'ஓகே, டீச்சர், பிரச்சனையில்லை. நன்றி'

    உரையாடல் இப்படி முடிந்தது.

    சில நாள் கழித்து...

    படுக்கையில் சரிந்திருந்து செல்போனை நோண்டிக் கொண்டிருக்க... 'என்னடா, ஏதோ படிக்கப் போறன் எண்டாய்?' என அபிதகுஜாம்பாள் கேட்க...

    'கேட்டனான், டீச்சர் ஆம்பிளையளுக்குப் படிப்பிக்கிறேலையாம்!'

    'நீ என்ன அவவின்ரை கையைப் பிடிச்சு இழுத்துப் போடுவியாமோ?'

    குற்றத்திற்கு தண்டனை பெறுவதை விட, செய்யாத குற்றத்திற்கு தண்டனை பெறுவது கொடுமையானது.

    ஆனால், செய்யக் கூடும் என்பதற்காகவே, அட்வான்சாகத் தண்டனை தருவது அதைவிடக் கொடுரம்.

    இப்படியாகத் தானே கியூறியஸின் கலையுலகக் கனவுகள் ஒரு அநியாயமான #MeToo குற்றச்சாட்டினால் தகர்ந்து போனது!

    (நல்ல மனம் இருந்தா, யாம் பெற்ற இன்பம் இந்த வையகம் பெற வேண்டும்' என்று எண்ணுகின்ற நல்ல மனம் இருந்தா ஷெயர் பண்ணுங்க..!)

     

    Postad



    You must be logged in to post a comment Login