Recent Comments

    கரு.அழ.குணசேகரனின் இரண்டு கவிதைகள்

    (2014, தனது வீட்டில் இருந்து அன்பளிப்பாக இரண்டு புத்தகங்களைத் தந்தார் எனது இனிய நண்பரான குணசேகரன். இதனுள் அடங்குவது இவரது கவிதைத் தொகுப்பான “புதுத்தடம்”. இந்தத் தொகுப்பு இனியது, சீரியஸ் ஆனது. மதுரையிருந்து சென்னைக்குப் பயணமான ரயிலில்தான் நான் முதல் தடவையாக வாசித்தேன். தெளிவான அழகியலமைப்பால் தமிழ் நிலம் காக்கும் மோசமான நோய்களை எங்களுக்குக் காட்டுகின்றார். இந்தத் தொகுப்பு சமூக அநீதிகளுக்கு எதிரானது. பேராசிரியரது ஆய்வு மாணவனாக இருந்து முனைவர் பட்டம் பெற்றுள்ள சிற்பி ஜெயராமன் அனைத்துக் கவிதைகளுக்கும் அழகிய ஓவியங்களை வரைந்துள்ளார். இந்தக் கவிதைகள் அவருக்கான அஞ்சலிக்காக, “தன்னானே பதிப்பகத்"திற்கு நன்றி சொல்லிப் பிரசுரிக்கப்படுகின்றன. க.கலாமோகன்)

    Kunasekarankavithai வெடுக்கு

    அண்மையில் ஊருக்குள் உறைபோட்டகிணறு ஒன்று பெரிதைப் பேசப்படுகிறது ஆழம் அகலம் இருள் வெளிச்சம் வட்டம் உறை தரை தண்ணீர் ஊருக்குள் உறை போட்ட கிணறு ஒன்று பெரிதாய்ப் பேசப்படுகிறது கிணறு வெட்டிய வெட்டியான்கள் எல்லோரும் மாமன்கள் மச்சான்கள் தம்பிகள் அண்ணன்மார்கள் உறவினர்கள் கூட்டம் கூட்டமாய்க் கண்டு வந்தோர் வாய்நிறையப் பேசினர் என் பங்குக்குப் பார்த்துவர ஊருக்குள் சென்றேன் எங்களுக்கில்லாத உறைகெணறு உற்றுப்பார்த்தேன் “வெடுக்கு” வீசியது விருட்டென்று நடந்து சென்றேன் எங்கள் குடியிருப்புக்கு (“வெடுக்கு”- துர்நாற்றம் என பேராசிரியர் இந்தக் கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.)

    kanalகனல்

    ஆண்டைகள் நமக்கு இட்டபணிகளை சட்டெனச் செய்யாது உடல் நோவென ஓய்வு கொள்ளச் சென்றதனால் சடார் சடாரென படார் படாரென உதைகள் கொடுத்தனர் முதுகுகள் தோள்கள் உடல்கள் காலங்காலமாய் சந்ததிகள்பெற்ற தண்டனைகள் மறக்கலாமா காலங்காலமாய் நீ பட்ட துயரங்கள் மறக்கலாமா அந்த ஆலமரத்தில் கம்புகள் செய்து இந்த அரசமரத்தில் பிரம்புகள் செய்து சடார் சடாரென படார் படாரென உதைகள் கொடுத்தனர் உரைகள் அளித்தனர் உன்னுள் ஒளித்து வைத்துள்ள தீக்கங்குகளை நெருப்பாக்கு உன்னுள் புதைத்து வைத்துள்ள ஆத்திரக் கனல்களைக் குறியாக்கு உனது சீரும் குரல்களை உனது வைரத்தோள்களை வீறுகொள்ளச் செய் நீ உறங்கிய காலங்கள் யோசித்த நாட்கள் போதும் புதைக்கப்பட்ட மூதாதைகளின் பெருமூச்சுக் கனல்களை இரவல் வாங்கு இரவைப் பகலாக்கு அதோ! அந்த காடு கரைகளில் வேலிக்காத்தான்கள் காவல் காத்து நின்ற கத்தாழை இதழ்களை கைநிறைய எடுத்துவந்து கட்டையால் அடித்து பஞ்சு பஞ்சாய் மஞ்சி நூல்கள் எடுத்து வெய்யிலிலே காயவைத்து முறுக்கலான கயிறு திரித்து சாட்டை செய்து நீ கொடுத்தாய் வேலைக்கேற்ற கூலி இல்லை ஆளைப்பார்த்துக் கூலி குறைத்தார். கூலியைக் கொறைக்காதீங்க பிள்ளைகுட்டி தாங்காதுங்க கெஞ்சிக்கேட்டவர்க்கு ஆண்டை தந்த பரிசென்ன? சுளீர் சுளீரென பளீர் பளீரென சாட்டையடிபெற்றவர்கள் சாய்ந்தார் மடிந்தார் நீயும் உன் பரம்பரையும் உறங்கிய காலங்கள் யோசித்த நாட்கள் போதும் புதைக்கப்பட்ட மூதாதைகளின் பெருமூச்சுக் கனல்களை இரவல் வாங்கு இரவைப் பகலாக்கு மாடுபோடும் சாணங்களைக் கரைத்து வைத்து சாணிப்பாலைக் குடிக்கச் செய்தார்கள் ஆர்ப்பரித்தார்கள் தீண்டாமைக் கொடுமை செய்தார்கள் விதவிதமாய்த் தண்டனைகள் விதித்து வளர்ந்த கூட்டம் வேரோடும் மண்ணோடும் களைந்தெறிய வேண்டாமா களை நீங்க வேண்டாமா மௌனங்கள் உமக்கு வேண்டாம் கண்ணீர் கதைகள் இனியும் வேண்டாம் உயிர்த்தெழுந்த கதை கேட்டும் உறக்கம் நமக்கு வேண்டாம் புதுமழை பெய்கிறது பருவம் துளிர்கொள்கிறது நிலம் உழுதுபயிர் செய்வோம் புதிய விதை விதைத்திடுவோம் உழைப்பினில் திளைத்திடுவோம் அறுவடைக்குக் காத்திருப்போம் அனைத்தும் நமக்காக்கிடுவோம்

    Postad



    You must be logged in to post a comment Login