Recent Comments

    கே.ஏ.குணசேகரன் : கலைத்துவமும் தலித்துவமும்

    Kunasekaran க.கலாமோகன்

    இன்று எனது நண்பர் திரு கே.ஏ . குணசேகரனின் (கரு.அழ.குணசேகரன்) மறைவை அறிந்தேன். இது இந்திய நாடகக் கலைக்கு நிச்சயமாகப் பெரிய இழப்பாக இருக்கும். நிறையத் தொடர்புகள் அவருடன் இல்லாதபோதும் நிச்சயமாக அவரை நண்பர் எனச் சொல்லலாம் என நினைக்கின்றேன். நட்பு அவரது வாழ்வுக்கும், கலைக்கும் இலக்கணமாக இருந்தது. இந்திய நாடகக் கலைகளில் மிகப்பெரிய வேந்தராக இருந்த அவர், இந்தத் துணைக் கண்டத்தின் சமூக நெருக்கடிகளைக் கண்டித்தவர், அவைகளுக்கு எதிராகத் தனது பேனாவைத் தூக்கியவர், தலித் இலக்கணத்தைத் தனது படைப்புகளில் காட்டியவர். 2014 (2)சில ஆண்டுகளின் முன்னர் தமிழ்நாடு சென்றபோது எனது நண்பியும், சமூக சமத்துவப்படை கட்சியின் தலைவியும், முனைவருமான ப.சிவகாமி ஒழுங்குபண்ணியிருந்தார் எமது பாண்டிச்சேரித் தினங்களை. அது அங்கேயுள்ள மிகவும் பிரதான பல்கலைக்கழகத்தில். செல்லுமுன் எனது இனிய நண்பர் எஸ்.பொன்னுத்துரையை சந்திக்கச் சென்றேன். அவர் பேராசிரியர் ரவிக்குமாருடன் இருந்தார்.அவருடன் நண்பர் குணசேகரம் மீது விசாரித்தேன். உடனடியாகவே அவர் குணசேகரனுக்குப் போன் செய்து என்னிடம் தந்தார். சில கணங்கள் நலன்களை விசாரித்தோம். நாங்கள் பல்கலைக்கழகத்துக்குச் சென்றது மாலை நேரத்தில். அது மிகவும் அழகியதும், அமைதியானதும், கலைத்துவமானதுமாக இருந்தது. இதுதான் நாடகக் கலையின் வரலாற்றைப் படிப்பதற்காக இந்தியாவில் உள்ள ஒரேயோர் பல்கலைக்கழகம். இந்த நாடகத்துறைப் பிரிவின் தலைவராக இருந்தார் கே.ஏ . குணசேகரன் .2014 (3) இந்த மாலையில் எங்களை அன்புடன் அங்கு வரவேற்ற மிகவும் சிறப்பான தலித் ஆய்வாளர் அன்புசெல்வம், நாம் குணசேகனை நாளை சந்திப்போம் எனச் சொன்னார். மறுநாள் காலையில் எங்களை எழுப்பியது எமது இனிய நண்பரே. மிகவும் அன்பாக வரவேற்றார். அவரது முகத்தைப் பார்ப்பதும், மொழியைக் கேட்பதும் விருப்பமானது. படைப்பாளிகளை எப்போதும் கௌரவித்தல் அவரது ஈடுபாடு எனச் சொல்லலாம். நண்பர் குணசேகரன் மிகவும் சிறியவர், அறிவில் பெரியவர், ஆபிரிக்க சில நாடுகளின் மனிதர்களைப்போல பெரிதும் கறுப்பானவர், மிகவும் அழகானவர்.. அவரது விழிகள் அமைதியானவை, ஆளுமையான அவதானிப்புகளைக் கொண்டவை. இவரது துறை பெரியது, நாடக உலகு அவருக்கு உரித்து. வேறு மொழிகள் பேசும் பட்டப்படிப்பு ஆய்வாளர்களும் அவரிடம் படிக்க வருவதுண்டு. இந்த ஆய்வாளர்கள் அவரிடம் படித்ததைச் சில நிமிடங்கள் கண்டேன். படித்தவர்கள் பின்பு இவரிடம் படிப்பதை மிகவும் அறிவானதாகவும் ஆழமானதாகவும் சொன்னார்கள். அந்த நாள்களில் நான் சில இலங்கைத் தமிழ்ப் பெண்களையும், ஓர் இலங்கைத தமிழ் ஆணையும் அவரது படிப்புச் சாலையில் சந்தித்தேன். நாம் மதுரைக்குப் போகும் திகதி பாண்டிச்சேரியில் இருந்தபோதுதான் நெருங்கியது. அங்கிருந்து அந்த நகருக்குச் செல்வது சுலபம். ஓர் பின்னேரம் நாம் பேராசியருக்கு எமது மதுரை போகும் திட்டத்தைச் சொன்னோம். உடனடியாக அவர் எங்களைத் தமது வீட்டுக்கு அழைத்தார். அவர் அழைத்த தினம் நாம் மதுரை போகும் தினமாக இருந்தது. எத்தனை மணிக்கு பஸ் என்று கேட்டார். இரவு என்றோம். எமது வீட்டுக்கு வந்துவிட்டு மதுரை செல்லலாம் என்றார். நாம் அவரது வீட்டை வந்தடைந்தோம். அழகான கலைவீடு. நிறையப் படங்கள் அவரது வாழ்வின் செழுமையைக் காட்டின. ஓர் டிவி அமைதியான சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. மருத்துவரும், பேராசிரியையுமான அவரது மனைவி ரேவதி எங்களை மிகவும் அன்புடன் விசாரித்தார். நிறைய சாப்பாடுகளை எமக்கு வழங்குவதில் அவருக்கு விருப்பம் இருந்தது. பின் சில நாய்கள்…. இந்த நாய்கள் இனிதானவை… இவைகளை எமது சின்ன மகள்கள் விரும்பினர். நேரம் குறைவானது…. ஆனால் நண்பர் குணசேகரனின் இல்லம் நிறைவானது. எம்மைத் தமது வீட்டின் பின் பக்கம் அழைத்துச் சென்றார். அங்கே குருவிகள் பாதுகாப்பு. ஆம், இவர் நாடகப் பாதுகாப்பாளனுமல்லன், 2014 (5)இனிய கீதங்களின் பாதுகாப்பாளனுமாக. இவரது தமிழ்க் கீதங்கள் செழிவானவை. இந்த சிறிய மணித்தியாலங்கள் எனது வாழ்வின் மிகப் பெரும் பதிவுகளில் ஒன்று. இது அவருடனான கடைசிச் சந்திப்பாக இருக்கும் என நான் அப்போது நினைக்கவில்லை. “தோழர் கே.ஏ . குணசேகரன் - பாடும் போதெல்லாம் உணர்வின் அழுத்தத்தில் அவர் குரல் உடையும். அது இசையை சேதாரப்படுத்தாது.இங்கும் உடைந்த வாழ்க்கைப் பாடலாகிறது.ஒரு விடுதலை வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் வேட்கையோடு.” என கவிஞர் இன்குலாப் எழுதியுள்ளார் குணசேகரனின் கவிதைப் புத்தகமான “புதுதடம்" பின் குறிப்பில். இந்த நூலில் “நான் என்றும் எனது தலித் அடையாளத்தை மாற்றிக் கொள்ள விரும்பியதே இல்லை.” என்று பேராசிரியர் தனது வாழ்வுத் தத்துவத்தைத் தருகின்றார். எப்போதும் தலித் மீதான கருத்துகளை வைப்பதும், தன்னைத் தலித் என்பதை அடையாளப்படுத்தும் கலாசாரம் அவரிடம் இருந்தது. புகலிடத்தின் இலக்கிய வாழ்வில் நிறைய அவதானிப்புகளை வைத்தவர் திரு. குணசேகரம். இரண்டு தடவைகள் பிரான்சுக்கு வந்த வேளைகளில் அவர் எனது வீட்டிற்கு வந்துள்ளார். ஆம்! அவர் எமது வீட்டில் பாடிய பாடல்கள் கணீரமானவை. ஓர் புகலிடக் கூட்டத்தில் அவர் நாகரீகம் இல்லாமல் விமர்சிக்கப்பட்டதால் அவரை அங்கிருந்து சில இலக்கிய நண்பர்கள் வெளியேற வைத்தனர். “வடு”, இவரது வாழ்க்கை வரலாறு. இதனைக் “காலச்சுவடு” வெளியிட்டிருக்கின்றது. தமிழில் வந்த தலித் படைப்பாளியின் சிறப்பான வாழ்வுப் பதிவு எனச் சொல்லலாம். இந்தப் புத்தகம் Orient BlackSwan பதிப்பாளர் ஆங்கிலத்தில் The Scar எனும் தலைப்பில் குணசேகரத்தாலும் கோடாம்பாரியாலும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. “வடு”, தமிழில் இவரின் வாழ்வை இவரது மொழியால், பலருக்கு விளங்க வைக்கும் காத்திரமான புத்தகம் எனலாம். இவர் சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். “அழகி" “பாரதி” படங்கள் குறிப்பிடத்தக்கன. இவைகளில் அவரது பாத்திரம் மிகவும் காத்திரமானது. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில், “உங்களது புது எழுத்துகள் மீது சொல்லமுடியுமா?” எனக் கேட்டேன். “காவிய எழுத்துகள் மீள் வாசிப்புக்கு உள்ளாகுதலும், அவைகளது அடிப்படைக் கருத்துகளைக் காணுதலும் அவசியம்” என்ற பின்னர் தனது காவிய எழுத்து நிலைகளைச் சில கணங்கள் சொன்னார். தமிழின் காவிய இலக்கியத் “தெளிவுரை”கள் தோதானதில்லாமலும், அவைகள் காவியங்களின் எதிர்ப்புத் தெளிவுரைகள் எனத் தோன்றியது என்பதை அவரது மொழிகள் எனக்குக் காட்டின. ஆம்! இந்த எதிர்ப்புத் தெளிவுரைகள்தாம் தமிழ்க் காவியங்களுக்குப் “புத்துரை” எழுதும் துணிச்சலை அவருக்கு ஊட்டியது. அதனது விளைவாக எழுந்ததே “பதிற்றுப் பத்து, மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும், முனைவர், கரு.அழ. குணசேகரன்.” இவரினது இந்த ஆய்வு “உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்” வெளியிட்டது. இவரது ஆய்வுத் தமிழின் அழகை அறிய இந்தப் புத்தகம் பெரிதாகக் கொள்ளப்படலாம். இந்த நூலின் எழுத்து கவித்துவமானது. இவரது மறைவு தமிழ் நாடக உலகிற்கு ஓர் பேரிழப்பு. இப்போதும் இவரது அழகிய சிரிப்பு என் முன் வருகின்றது. எளிமையைத் தனது வாழ்வில் எங்கும் காட்டிய மேதை. இவருக்கு எமது அஞ்சலிகள். (படங்கள்: க.கலாமோகன்)

    Postad



    You must be logged in to post a comment Login